என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
    • சூரப்பேட்டை, ரெட்ஹில்ஸ் மார்க்கெட் ரோடு, காவாங்கரை, சண்முகபுரம், கதிர்வேடு, புத்தகரம், மெட்ரோவாட்டர் புழல், புழல் சிறை 1 முதல் 3 பகுதி.

    சென்னை:

    சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின்தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சின்மயா நகர்: சாய் நகர், காளியம்மன் கோவில் தெரு, மேற்கு நடேசன் நகர், பச்சையம்மன் கோபில் தெரு, கங்கையம்மன் கோபில் தெரு, இளங்கோ நகர், சாய்பாபா காலனி, ரத்னா நகர், தாராசந்த் நகர், எல் மற்றும் டி காலனி, சிஆர்ஆர் புரம், விநாயகம் அவென்யூ, கம்பர் தெரு, காந்தி தெரு, ராகவேந்திரா காலனி, வாரியார் தெரு, இந்திரா நகர், ராஜீவ் காந்தி தெரு, கண்ணகி தெரு, கிரகலட்சுமி அபார்ட்மென்ட், சஞ்சய் காந்தி நகர், வாயுபுத்ரா தெரு, இளங்கோ நகர் தெற்கு, பாலாம்பால் நகர், தங்கல் தெரு, ரெட்டி தெருவின் ஒரு பகுதி, பள்ளி தெரு, ஜெயின் அபார்ட்மென்ட், கிருஷ்ணா நகர் 4வது தெரு, பாலாஜி நகர், எஸ்பிஐ காலனி 1 முதல் 3 பகுதி, பிஏ காலனி, மேட்டுக்குப்பம், புவனேஸ்வரி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி.

    புழல்: சூரப்பேட்டை, ரெட்ஹில்ஸ் மார்க்கெட் ரோடு, காவாங்கரை, சண்முகபுரம், கதிர்வேடு, புத்தகரம், மெட்ரோவாட்டர் புழல், புழல் சிறை 1 முதல் 3 பகுதி.

    போரூர்: வயர்லெஸ் ஸ்டேஷன் ரோடு, ஆர்.இ.நகர் 5வது தெரு, ஜெய பாரதி நகர், ராமகிருஷ்ணா 1 முதல் 7வது அவென்யூ, ரம்யா நகர், உதயா நகர், குருசாமி நகர், ராஜ ராஜேஸ்வர் நகர், சந்தோஷ் நகர், கோவிந்தராஜ் நகர், காவியா கார்டன், ராமசாமி நகர்.

    காட்டுப்பாக்கம்: அன்னை இந்திரா நகர், புஷ்பா நகர், விஜயலட்சுமி நகர், பாவேந்தர் நகர், ராம் தாஸ் நகர், லட்சுமி நகர், இந்திரா நகர் பகுதி.

    செம்பியம்: காவேரி சாலை 1 முதல் 8வது தெரு, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, பெரம்பூர், கொடுங்கையூர், ஜிஎன்டி சாலை, காந்தி நகர், பிபி சாலை, மாதவரம் பகுதி.

    பல்லாவரம்: பழைய பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், திருசூலம், ராஜாஜி நகர், மல்லிகா நகர், மலகாந்த புரம், பாரதி நகர், பச்சையப்பன் காலனி, கண்டோன்மென்ட் பல்லாவரம், ஜிஎஸ்டி சாலை சுபம் நகர், முத்தமிழ் நகர், மூங்கில் ஏரி, பவானி நகர், பெருமாள் நகர், கிருஷ்ணா நகர் பகுதி, தர்கா சாலை, பல்லவா கார்டன், பி.வி வைத்தியலிங்கம் சாலை, ஈசா பல்லாவரம், ஆபிசர்ஸ் லைன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவுபெற்றது.
    • நாளை பதிவாகும் வாக்குகள் வருகிற 8-ந்தேதி எண்ணப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இத்தேர்தலில் தி.மு.க.வின் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 பேர் போட்டியிடுகின்றனர்.

    இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவுபெற்றது. அதைத்தொடர்ந்து வெளியூர்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தொகுதியை விட்டு வெளியேறினர்.

    இதனைத்தொடர்ந்து, நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள 53 பள்ளிகளுக்கு மட்டும் இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாக்குப்பதிவுக்காக நாளை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை பதிவாகும் வாக்குகள் வருகிற 8-ந்தேதி எண்ணப்படுகிறது.  

    • எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.
    • சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் குறைந்து காணப்பட்டது. மதிய நேரத்தில் குளிர் குறைந்து வெயில் காணப்பட்டது. ஆனால் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரத்தில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    பனிமூட்டத்தால் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில் சேவையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் கடும் பனிமூட்டம் காரணமாக வழக்கமான நேர அட்டவணையைக் காட்டிலும் 15 நிமிடம் வரை தாமதமாக புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    • கிராமப்புற பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கின்ற வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
    • 100 நாட்களுக்கு அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டுமென்றால் ரூபாய் 2.72 லட்சம் கோடி தேவை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க. அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கை கிராமப்புற பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கின்ற வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

    100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் பா.ஜ.க. அரசு உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை. 2021-22-ல் ரூபாய் 98,468 கோடி ஒதுக்கிய நிலையில், 2024-25-ல் ரூபாய் 86,000 கோடி நிதி ஒதுக்கியது. இது மொத்த பட்ஜெட் தொகையில் 1.78 சதவிகிதமாகும்.

    100 நாட்களுக்கு அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டுமென்றால் ரூபாய் 2.72 லட்சம் கோடி தேவை. ஆனால் பட்ஜெட்டில் மொத்தம் ஒதுக்கப்படுகிற தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.18 சதவிகிதம் தான்.

    மக்கள் தொகையில் 70 சதவிகிதம் பேர் வாழ்கிற கிராமப்புற மக்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை உறுதிபடுத்திய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கான நிதியை குறைத்து தேவையற்ற நிபந்தனைகளை விதித்து அத்திட்டத்தை முடக்குகிற பா.ஜ.க. அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ரூ.48.95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
    • மாணவ சமுதாயத்திடம் சாதி பாகுபாடை தூண்டும் விதமாக செயல்பட வேண்டாம் என அண்ணாமலை வலியுறுத்தல்.

    ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    ரூ.48.95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், மாணவ சமுதாயத்திடம் சாதி பாகுபாடை தூண்டும் விதமாக செயல்பட வேண்டாம் எனவும், தேர்தல் அறிக்கையின்படி மாணவர்களின் ஒட்டுமொத்த கல்வி கடன்களையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கல்விக் கடன் ரூ.48.95 கோடி ரத்து என்று அறிவித்துள்ளது திமுக அரசு. ஒவ்வொரு தேர்தலின்போதும், அலங்கார வாக்குறுதியாக, கல்விக் கடன் ரத்து என்று நாடகமாடி ஏமாற்றுவது, திமுகவின் வழக்கம். கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை, தமிழகத்தின் கல்விக் கடன் நிலுவை மொத்தம் ரூ. 16,302 கோடி. இந்த நிலையில் வெறும் ரூ.48.95 கோடியை மட்டும் ரத்து செய்வதால் யாருக்கு என்ன பயன்?

    கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதி எண் 159ல், மாணவர்களின் கல்விக் கடனை தமிழக அரசே திருப்பிச் செலுத்தும் என்று கூறி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. திமுகவின் இந்த வாக்குறுதியை நம்பி, கல்விக் கடனைத் திரும்பச் செலுத்தாமல், கடந்த 2023 ஆம் ஆண்டு, வாராக்கடனாக, ரூ. 4,124 கோடி அறிவிக்கப்பட்டு, அதனால் வழக்குகளைச் சந்தித்தும், சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்காமலும், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம்.

    தற்போது, கடனை வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண முடியாததால் கல்விக் கடனை ரத்து செய்கிறோம் என்று திமுக அரசு காரணம் கூறியிருப்பது நகைப்பிற்குரியது. கல்விக் கடனை ரத்து செய்வோம் என்ற திமுகவின் வாக்குறுதியை நம்பிக் காத்துக்கொண்டிருந்த மாணவ சமுதாயம், ஓடி, ஒளிந்து, தலைமறைவானால்தான் கடனை ரத்து செய்வோம் என்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக.

    நாட்டிலேயே கல்விக் கடன் மிக அதிகமாக நிலுவையில் இருப்பது தமிழகத்தில்தான். இதற்குக் காரணம், இது போன்ற பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, மாணவர்களையும், பெற்றோர்களையும் பலப்பல தேர்தல்களாகத் தொடர்ந்து ஏமாற்றி வருவதுதான். திமுகவின் பொய்களுக்கு, இளைஞர்கள் எதிர்காலம் பாழாக வேண்டுமா?

    உடனடியாக, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதன்படி, தமிழக மாணவர்கள் அனைவரின் ஒட்டுமொத்தக் கல்விக் கடன்களையும் ரத்து செய்து, தமிழக அரசே திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், குறிப்பிட்ட சமூக மாணவர்களுக்கே கல்விக் கடன் ரத்து என்று, மாணவ சமுதாயத்திடம், ஜாதிப் பாகுபாடைத் தூண்டும் விதமாகச் செயல்பட வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்த சம்பவம் அரங்கேறியது.
    • தமிழக மீனவர்களை கைது செய்ததோடு, ஒரு விசைப்படகையும் சிறைபிடித்து சென்றனர்.

    ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்த சம்பவம் அரங்கேறியது.

    ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்ததோடு, ஒரு விசைப்படகையும் சிறைபிடித்து சென்றனர்.

    இந்நிலையில், மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இன்று (3-2-2025) கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று (3-2-2025) கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 02.02.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் இன்று (3-2-2025) இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 27 நாட்களில், 5 வெவ்வேறு சம்பவங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 63 மீனவர்கள் மற்றும் 5 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதையும், கடந்த 2024 ஆம் ஆண்டில் 36 வெவ்வேறு சம்பவங்களில் 530 மீனவர்கள் மற்றும் 71 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது இலங்கை சிறையிலுள்ள 97 மீனவர்களும், கைப்பற்றப்பட்டுள்ள 216 மீன்பிடிப் படகுகளும் மீட்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதையும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

    இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து இதுபோன்று நடைபெற்று வருவது, இந்தச் சிக்கலான பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது என்றும், மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதும், அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவிக்காமல் இருப்பதும், கடலோரப் பகுதியில் வாழும் மீனவ சமுதாயத்தினருக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக கவலையோடு தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், இவ்வாறான தொடர் கைது நடவடிக்கைகளால் நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்கள் அச்சத்துடன் வாழ்வதுடன், பல்வேறு சிரமங்களையும் எதிர்கொள்வதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, நமது இந்திய மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவதை நிறுத்தவும், இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கவும், உடனடியாக உயர்மட்ட தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கல்விக்கடனை வசூலிக்க இயலாத காரணத்தால் தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • ரூ.48.95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிப்பு.

    ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, 1972- 1973 முதல் 2002- 2003 வரையிலான காலங்களில் அனைத்து படிப்புகளுக்கும் வழங்கப்பட்ட கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.

    இதேபோல், 2003- 2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் வழங்கப்பட்ட கல்விக்கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புக்கு வழங்கப்பட்ட கல்விக்கடனை வசூலிக்க இயலாத காரணத்தால் தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    கல்விக்கடன் வழங்கப்பட்ட மாணவர்கள் தொடர்பான ஆவணங்கள் இல்லாததால், நபர்களை அடையாளம் காண முடியாததால் தள்ளுபடி செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    ரூ.48.95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    • உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
    • காலில் காயம் அடைந்த ஹரி வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

    காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

    அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஹரி என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.

    உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது குற்றவாளி ஹரி என்பவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.

    உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

    காலில் காயம் அடைந்த ஹரி வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுனைப் போட்டி நிலவுகிறது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உயிரிழந்ததை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நாளை மறுநாள் ( பிப்ரவரி 5-ம் தேதி) இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 7-ம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

    தி.மு.க. சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முக்கிய எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுனைப் போட்டி நிலவுகிறது.

    கடந்த 20-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதன்படி வேட்பாளர் அறிவிக்கப்பட்டதில் இருந்து தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் வாக்கு வேட்டையை துவங்கின.

    கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல் போன்று எந்த ஒரு ஆர்ப்பாட்டம் இன்றியும், பரபரப்பு இன்றியும் தற்போதைய தேர்தல் களம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.

    • பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரியும் தன்மை கொண்ட பொருட்கள் அங்கு இல்லை என ஆய்வில் தெரியவந்தது.
    • மின் ஒயரில் கசிவு ஏற்பட்டே தீ விபத்து நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

    ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக் அறையில் தீ விபத்து சம்பவத்தில் நாசவேலை எதுவும் இல்லை என டி.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார்.

    மேலும் கூறிய அவர், "தீ விபத்து நடந்த அன்றே வழக்குப்பதிவு செய்து தடயவியல், மின்சார நிபுணர்கள் விரிவான ஆய்வு நடத்தினர்.

    பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரியும் தன்மை கொண்ட பொருட்கள் அங்கு இல்லை என ஆய்வில் தெரியவந்தது.

    மின் ஒயரில் கசிவு ஏற்பட்டே தீ விபத்து நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ''சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடைப் சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் (TNUSRB) கூடுதல் காவல் துறை இயக்குநர் மற்றும் உறுப்பினரான கல்பனா நாயக் ஐபிஎஸ் அவர்களிடமிருந்து 14.08.2024 அன்று தமிழ்நாடு காவல் துறை இயக்குநர்/காவல் படைத் தலைவர் மற்றும் சென்னை நகர காவல் ஆணையர் ஆகியோருக்கு ஒரு கடிதம் பெறப்பட்டது.

    விரிவான விசாரணை

    அதில் சென்னை எழும்பூரில் உள்ள USRB அலுவலகத்தில் உள்ள தனது அறையில் 28.07.2024 அன்று தீ விபத்து ஏற்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் சட்டவிரோத செயல் மற்றும் நாசவேலை நடந்ததாக சந்தேகிப்பதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் கூறினார்.இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தக் கோரி, கடிதம் உடனடியாக சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டது.

    தீ விபத்து மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகள் தொடர்பான உண்மைகள் மற்றும் தெளிவுகள்

    இது தொடர்பாக, சம்பவம் நடந்த அதே நாளில் F2 எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. திருவல்லிக்கேணி துணை காவல் ஆணையர், தடயவியல் நிபுணர்கள், மின்சார வாரியம் (TANGEDCO), தமிழ்நாடு காவல் வீட்டுவசதி கழகம் மற்றும் ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணர்களுடன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விரிவான விசாரணை நடத்தினார்.

    நாசவேலை காரணமில்லை

    இதையடுத்து, வழக்கு சென்னை நகர மத்திய குற்றப்பிரிவுக்கு (CCB) மாற்றப்பட்டது, மேலும் கூடுதல் DCP, CCB-I விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின்போது 31 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன, மேலும் தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய தடயவியல், தீயணைப்பு சேவைகள் மற்றும் மின் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

    தற்போது, நிபுணர் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. செப்பு கம்பிகளில் ஷார்ட் சர்க்யூட் இருப்பதற்கான சான்றுகள் காணப்பட்டதாக தடயவியல் நிபுணர்களின் அறிக்கை தெரிவித்துள்ளது. கூடுதலாக, தடயவியல் அறிக்கையில் மெல்லிய அடுக்கு குரோமடோகிராபி மற்றும் வாயு குரோமடோகிராபி அடிப்படையில், பெட்ரோல், டீசல் அல்லது வேறு ஏதேனும் எரியக்கூடிய பொருட்கள் அங்கு கண்டறியப்படவில்லை. அவை இந்த தீ விபத்தில் சம்பந்தப்படவில்லை என்று கூறியுள்ளது.

    பெண் ஏடிஜிபி உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை. எனவே, இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த தீ விபத்தில் வேண்டுமென்றே தீ வைப்பு எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. கல்பனா நாயக்கின் உயிருக்கு எந்தவொரு திட்டமிடப்பட்ட அச்சுறுத்தலும் இல்லை.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • என்ன தான் நடக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில்? என்றார்.
    • காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை தேவை.

    ராணிப்பேட்டை காவல்நிலையத்தின் மீது காவல் நிலையம் கூட பாதுகாப்பான இடம் இல்லை" என்ற நிலைக்கு சட்டம் ஒழுங்கு- இ.பி.எஸ் குற்றச்சாட்டு- Law and order situation has reached a point where even the police station is not a safe place - EPS allegesபெட்ரோல் குண்டு வீச்சு நடந்த சம்பவம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    என்ன தான் நடக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில்?

    ஒரு ஏடிஜிபி, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதாக சொல்வதும், காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதும் தான் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா?

    நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், இப்படி ஒரு தறிகெட்ட ஆட்சி நடத்திவிட்டு, "சட்டம் ஒழுங்கை சிறப்பாக தான் நடத்தி வருகிறேன்" என்று வாய் கூசாமல் பச்சைப்பொய் பேச

    மு.க.ஸ்டாலின் வெட்கமாக இல்லையா?

    "காவல் நிலையம் கூட பாதுகாப்பான இடம் இல்லை" என்ற நிலைக்கு சட்டம் ஒழுங்கைப் படுபாதாளத்திற்கு தள்ளிவிட்ட ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    உடனடியாக காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    • தமிழ்நாட்டில் கொடூரமான குற்றங்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது.
    • குற்றங்கள் தொடர்பாக புலன் விசாரணை செய்வதும், குற்றங்களைத் தடுப்பதும் வேறு வேறானவை.

    ராணிப்பேட்டை காவல்நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடந்த சம்பவம் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கான சாட்சி என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.

    தமிழ்நாட்டில் கொடூரமான குற்றங்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. எந்தக் குற்றம் நடந்தாலும் அது தொடர்பாக யாரையாவது கைது செய்து கணக்குக் காட்டுவதையும், அதையே அரசின் சாதனையாக காட்டிக் கொள்வதையும் தான் திராவிட மாடல் அரசு வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய நாடகங்களின் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது.

    குற்றங்கள் தொடர்பாக புலன் விசாரணை செய்வதும், குற்றங்களைத் தடுப்பதும் வேறு வேறானவை. குற்றங்களைத் தடுப்பது தான் காவல்துறையின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும். காவல் நிலையத்தின் மீதே பெட்ரோல் குண்டு வீசலாம் என்ற துணிச்சல் குற்றவாளிகளுக்கு வருகிறது என்றால் தமிழக காவல்துறை மீதான அச்சம் போய்விட்டது என்று தான் பொருள். தமிழக காவல்துறை கடந்த நான்காண்டுகளாக ஆளுங்கட்சியினரின் கைப்பாவையாக மாறியிருப்பதும், மக்களைக் காக்கத் தவறி விட்டதும் தான் இதற்கு காரணம் ஆகும்.

    ஸ்காட்லாந்துயார்டு காவல்துறைக்கு இணையானதாக கூறப்பட்ட தமிழக காவல்துறையின் வீழ்ச்சிக்கு திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இனியாவது இழந்த பெருமையை மீட்டெடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    ×