என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா இணைந்து தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக உள்ளார்.
    • விஜய்- பிரசாந்த் கிஷோ சந்திப்புக்கு ஆதவ் அர்ஜூனா ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்.

    தமிழகத்தின் முன்னணி நடிகரான விஜய், 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கடந்த வருடம் புதுக்கட்சியை தொடங்கினார். தற்போது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    மாவட்ட செயலாளர்களை நியமித்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா விஜயை சந்தித்து, த.வெ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். த.வெ.க.-வில் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜூனா நியமிக்கப்பட்டுள்ளார். சி.டி.ஆர். நிர்மல் குமார் என்பரும் விஜய் கட்சியில் இணைந்துள்ளார். இவர் ஐ.டி. பிரிவில் தலைசிறந்தவர்.

    ஆதவ் அர்ஜூனா ஏற்கனவே தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனால் த.வெ.க. கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் பணியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் இந்தியாவின் பிரபலமான தேர்தல் வியூகம் வகுப்பாளரான பிராசாந்த கிஷோர்- விஜய் சந்திப்புக்கு ஆதவ் அர்ஜூனா ஏற்பாடு செய்தாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் இன்று பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி அலுவலகத்தில் விஜயை பிரசாந்த கிஷோர் சந்தித்து பேசினார்.

    அப்போது 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்க பிரசாந்த் கிஷோர் உடன் விஜய் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • மின்னஞ்சல் மூலம் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • உடனடி உதவிக்கு, அருகிலுள்ள நிலையக் கட்டுப்பாட்டாளர்களைத் தொடர்பு கொள்ளவும்.

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ உதவி எண்கள் செயல்படவில்லை என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை மெட்ரோ உதவி எண்கள் தற்காலிகமாக வேலை செய்யவில்லை. மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதுவரை customercare@cmrl.in என்ற மின்னஞ்சல் மூலம் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உடனடி உதவிக்கு, அருகிலுள்ள நிலையக் கட்டுப்பாட்டாளர்களைத் தொடர்பு கொள்ளவும். ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


    • தெலுங்கானா மாநிலத்தில் 30 நாளில் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
    • தமிழக முதலமைச்சருக்கு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதில் அக்கறை இல்லை என்பதே உண்மை.

    சென்னை:

    தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான தேவைகள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை கலந்தாய்வு கூட்டம், சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, புதிய நீதிக் கட்சியின் பொதுச்செயலாளர் கோ.சமரசம், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் பாலு, தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் முத்து ரமேஷ், யாதவ மகாசபை சங்கத்தின் சார்பில் சேது மாதவன், தென்னிந்திய பார்வர்டு தலைவர் திருமாறன், கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், தமிழர் தேசம் கட்சித் தலைவர் கே.கே.எஸ் செல்வக்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, மற்றும் பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார். மாநில அரசுக்கு உரிமை இல்லை என்றும், மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்றும் கூறி வருகிறார். ஆனால் இந்தியாவில் ஒடிசா, பீகார், தெலுங்கானா உள்பட பல மாநிலங்கள் நடத்தி முடித்துள்ளன. இத்தனை மாநிலங்கள் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் நடத்துவதில் என்ன பிரச்சனை. முதலமைச்சர் ஏன் தயங்குகிறார்?

    தெலுங்கானா மாநிலத்தில் 30 நாளில் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக முதலமைச்சருக்கு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதில் அக்கறை இல்லை என்பதே உண்மை. எனவே தான் வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலாவது இதற்கான தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதை வற்புறுத்தவே அனைத்து சமுதாயங்களின் தலைவர்களை உள்ளடக்கிய கூட்டத்தை இன்று நடத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

    தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி சமூக நீதியில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளை ஒன்று திரட்டி சென்னையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். போராட்டத்தை எந்த நாளில் நடத்துவது என்பது பற்றி மற்ற அமைப்புகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • வில்லிவாக்கத்தில் இருந்து மாதவரம் பணிமனையை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • வில்லிவாக்கத்தில் இருந்து இயக்கப்பட்ட மினி பஸ் தடம் எண்கள் எஸ்43, எஸ்44 பயணிகள் வசதிக்காக வழக்கம் போல் வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்தே இயக்கப்படும்.

    அம்பத்தூர்:

    வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து பிராட்வே, அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, அம்பத்தூர், ஆவடி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.

    அப்பகுதியில் வில்லிவாக்கத்தில் இருந்து மாதவரம் பணிமனையை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சாலையின் ஒரு புறம் இருந்த வீடு மற்றும் கடைகள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்க பணிகளும் மெட்ரோ ரெயில் பணிகளும் நடைபெறுவதால் அந்த வழியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.

    இதனால் வில்லிவாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் மேற்கு மாட வீதி வழியாக வில்லிவாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    இதைத்தொடர்ந்து மெட்ரோ ரெயில் பணிகள் முடியும் வரை வில்லிவாக்கம் பஸ்நிலையம் தற்காலிகமாக ஐ.சி.எப். ரெயில்வே முன்பதிவு மையத்தை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் மாற்றப்பட்டுள்ளது. இதனால் வில்லிவாக்கத்தில் இருந்து செல்லும் பஸ்கள் தற்போது ஐ.சி.எப். பஸ்நிலையத்தில் இருந்து புதிய ஆவடி சாலைவழியாக சென்று நாதமுனி வழியாக வில்லிவாக்கம் வந்து மீண்டும் வழக்கமான வழித்தடத்திலேயே செல்லும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற உள்ளதால் இந்த பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட 7 வழித்தடங்களின் 63 பஸ்கள் தற்காலிகமாக நேற்று முதல் ஐ.சி.எப். பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.

    அதன்படி தடம் எண். 20, 27டி, 23வி ஆகிய பஸ்கள் ஐ.சி.எப். பஸ் நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டு புதிய ஆவடி சாலை வழியாக நாதமுனி சென்று 'யூ டர்ன்' எடுத்து வில்லிவாக்கம் (கல்பனா) பஸ் நிறுத்தம் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்திலேயே இயக்கப்படும்.

    வில்லிவாக்கத்தில் இருந்து இயக்கப்பட்ட மினி பஸ் தடம் எண்கள் எஸ்43, எஸ்44 பயணிகள் வசதிக்காக வழக்கம் போல் வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்தே இயக்கப்படும். தடம் எண்.22 வில்லிவாக்கம் வரை இயக்கப்பட்ட பஸ் வழித்தடம் நீட்டிக்கப்பட்டு கொரட்டூர் வரையும், தடம் எண். 63 திருவேற்காடு முதல் வில்லிவாக்கம் வரை இயக்கப்பட்ட பஸ் தடம் நீட்டிக்கப்பட்டு ஐ.சி.எப். வரை இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
    • திருமண விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    திருப்போரூர்:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக அருண்ராஜ் உள்ளார். இவர் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சமுத்திரபாண்டியனின் மகன் ஆவார்.

    இவருக்கும் அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனின் நெருங்கிய உறவினரான மேகநாதன் - ஜெயந்தி தம்பதியரின் மகளான டாக்டர். கவுசிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து இன்று காலை திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில் உற்சவ மண்டபத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ்-டாக்டர் கவுசிகா திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. திருமணத்தையொட்டி திருப்போரூர் முருகன் கோவில் உற்சவர் மண்டபத்தில் பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    திருமண விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் இரு வீட்டார் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அரசுதுறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

    கலெக்டர் அருண்ராஜ்-டாக்டர் கவுசிகா திருமண வரவேற்பு விழா வருகிற 14-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மாலை சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் மையத்தில் நடைபெற உள்ளது. திருமணத்தையொட்டி திருப்போரூர் முருகன் கோவிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று முகூர்த்த நாள் என்பதால் கோவில் வளாகத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இதனால் கோவில் வளாகம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    • பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
    • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது.

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

    மேலும் பஸ் மற்றும் ரெயில்களிலும் வந்து குவிந்து வருவதால் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது.

    பழனி தண்டாயுதபாணி கோவிலில் நாளை தைப்பூச திருவிழா நடைபெவுள்ள நிலையில் சிறப்பு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி, மதுரை- பழனி இடையே நாளை மற்றும் நாளை மறுநாள் இரு நாட்களும் சிறப்பு ரெயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிறப்பு ரெயில் 2 நாட்களும் மதுரையில் இருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு பழனி சென்றடைகிறது.

    மறுமார்க்கத்தில் சிறப்பு ரெயில் பழனியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மதுரை சென்றடைகிறது.

    • 6 மாத காலத்திற்குள் பட்டா வழங்கச் சொல்லி இருக்கிறார்கள்.
    • மொத்தம் 86,271 பேருக்கு பட்டா வழங்க இருக்கிறோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு 2021-ம் ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 3 முறை முழுமையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது.

    இப்போது 2025- 2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்தில் சட்டசபை கூட உள்ள நிலையில் பட்ஜெட்டை இறுதி செய்யும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் கூடியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

    தலைமைச் செயலாளர் முருகானந்தம் அமைச்சரவையில் விவாதிக்கப்பட வேண்டிய விசயங்களை பட்டியலிட்டார். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு விசயமாக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது.

    சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நிருபர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

    சென்னையை சுற்றியிருக்கிற பெல்ட் ஏரியா என்று சொல்லக் கூடிய சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் 32 கிலோ மீட்டரில் குடியிருப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட நெடுங்காலமாக குடியிருப்பவர்கள் பட்டா பெற முடியாமல் சிரமப்படுவதும், அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்ய முடியாமல் இருப்பதும் நமது முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றதின் விளைவாக இன்றைக்கு அமைச்சரவை கூட்டத்தில் சென்னையை சுற்றி இருக்கிற 4 மாவட்டங்களில் உள்ள பெல்ட் ஏரியா மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து உள்ளார்கள்.

    அதன் பேரில் பட்டா இல்லாமல் ஆட்சேபனையற்ற புறம்போக்குகளில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்கும் பணிகளை 6 மாத காலத்தில் முடித்துக் கொடுக்கச் சொல்லி உள்ளார்கள்.

    இதன்படி சென்னையில் மட்டும் 29187 பேர் பட்டா இல்லாமல் ஆட்சேபனையற்ற புறம்போக்குகளில் குடியிருக்கிறார்கள். அவர்களுக்கு 6 மாத காலத்திற்குள் பட்டா வழங்கச் சொல்லி இருக்கிறார்கள்.

    இந்த பெல்ட் ஏரியா சட்டம் 1962-ல் வந்தது. 62-ல் இருந்து 2025 வரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. இன்றைக்கு முதலமைச்சர் மிகத் தெளிவாக ஒரு முடிவு எடுத்து 6 மாத காலத்துக்குள் பட்டா வழங்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார்.

    இதற்காக மாவட்ட அளவில் ஒரு குழுவும், சென்னையில் மாநில அளவில் ஒரு குழுவும் அமைத்து உடனடியாக அந்த பணிகளை துவங்க உத்தரவிட்டுள்ளார். அந்த பணிகளை செய்ய உள்ளோம்.

    சென்னையை சுற்றி இருக்கிற 4 மாவட்ட மக்களுக்கும் இது மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைய இருக்கிறது.

    அதேபோல மற்ற மாநகராட்சிகளான மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட ஏனைய மாநகராட்சிகளில், இதேபோல பிரச்சனை இருக்கிறது.

    அங்கே இருப்பவர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகரில் இருக்கிற மற்ற பகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 57,084 பேருக்கு பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளார். மொத்தம் 86,271 பேருக்கு பட்டா வழங்க இருக்கிறோம்.

    இன்னும் விடுபட்டவர்கள் மனு கொடுத்தால் அதையும் பரிசீலிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அமைச்சரவை கூட்டத்தில் தமிழக பட்ஜெட் சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

    • திருப்பரங்குன்றம் சமண மத நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாகும்.
    • திருப்பரங்குன்றம் மலையை பிறர் உரிமை கொண்டாடுவது ஏற்கத்தக்கது அல்ல.

    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டில் விழுப்புரம் ஸ்வஸ்தி லட்சுமி சேன சுவாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் சமணர் நினைவுச்சின்னங்கள் பல உள்ளன. திருப்பரங்குன்றம் கோவில் சமண சமயத்திற்கான பல கட்டமைப்புகளை கொண்டுள்ளது. ஆனால் தற்போது திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது என பல இந்து அமைப்புகள் கூறிவருகின்றன.

    திருப்பரங்குன்றம் மலையிலும், அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் உள்ள தமிழ்-பிராமி எழுத்துக்கள், அவை சமண காலத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதிபடுத்துகிறது.

    திருப்பரங்குன்றம் சமண மத நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாகும். திருப்பரங்குன்றம் மலையின் ஒரே இடத்தில் பாறையின் சுமார் 1 அடி உயரத்தில் இரண்டு சமண பாறைகள் செதுக்கப்பட்டுள்ளன.

    இந்த மலைகள் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட பதட்டம் காரணமாக, மற்ற மதங்களைச் சேர்ந்த சிலர் இந்த மலைகளில் உள்ள சமணர் குகைகளை சீர்குலைப்பது போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

    இது அவமரியாதை செய்யும் வகையில் உள்ளது. இது சமண மக்களின் மத உணர்வுகளை பாதித்துள்ளது. இந்த சட்ட விரோத செயல்களால் திருப்பரங்குன்றம் பகுதியில் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.

    அதோடு சமண சமயத்தினருக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையை பிறர் உரிமை கொண்டாடுவது ஏற்கத்தக்கது அல்ல.

    ஆகவே திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவித்து, சமண கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிப்பதோடு, திருப்பரங்குன்றம் மலையை மீட்டெடுத்து, பராமரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, விக்டோரியா கவுரி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதோடு, அரசு யாரிடமும் மதபாகுபாட்டை காட்ட விரும்பவில்லை, நல்லிணக்கத்தையே விரும்புகிறது என தெரிவிக்கப்பட்டது.

    மேலும், தமிழக தொல்லியல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், தமிழக தொல்லியல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும், இந்த வழக்கை நிலுவையில் உள்ள அணைத்து வழக்குகளோடு சேர்த்து பட்டியலிடவும் உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • ரூ.25 லட்சத்துக்கான காசோலையை பரிசுத்தொகையாக இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி வாழ்த்தினார்கள்.
    • இந்திய அணி சாம்பியன் கோப்பையை பெறுவதற்கு தன் ஆற்றலால் பெரும் பங்களிப்பைச் செய்த தம்பி சுப்பிரமணிக்கு என் அன்பும், வாழ்த்தும் என்று கூறியுள்ளார்.

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மலேசியாவில் நடைபெற்ற மகளிருக்கான #T20WorldCup-ல் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல, முக்கிய பங்காற்றிய தங்கை தமிழ்நாட்டைச் சேர்ந்த கமாலினிக்கு முதலமைச்சர், நம் திராவிட மாடல் அரசு சார்பில் ரூ.25 லட்சத்துக்கான காசோலையை பரிசுத்தொகையாக இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி வாழ்த்தினார்கள். தங்கை கமாலினியின் சாதனையில் தமிழ்நாடு பெருமை கொள்கிறது. அவர் இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்தி மகிழ்கிறோம்.

    இதேப்போன்று, புது தில்லியில் அண்மையில் நடைபெற்ற முதல் கோ-கோ உலக கோப்பை போட்டியில், ஆடவர் பிரிவில், கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பி வி.சுப்பிரமணிக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ. 25 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கி வாழ்த்தினார்கள்.

    இந்திய அணி சாம்பியன் கோப்பையை பெறுவதற்கு தன் ஆற்றலால் பெரும் பங்களிப்பைச் செய்த தம்பி சுப்பிரமணிக்கு என் அன்பும், வாழ்த்தும் என்று கூறியுள்ளார். 

    • பருத்தி நூலின் அளவைக் குறைத்து விட்டு, விலை குறைவான பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தி ஊழல் செய்திருக்கிறார்கள்.
    • இப்படி ஒரு ஆட்சி நடத்த அசிங்கமாக இல்லையா?

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்,

    பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் இலவச காட்டன் வேட்டி சேலை திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஊழல் செய்து கொண்டிருக்கிறார் அமைச்சர் கமிஷன் காந்தி. கடந்த ஆண்டு, வேட்டி நெசவு செய்யப் பயன்படுத்தப்படும் கிலோ ₹320 வரை விற்கப்படும் பருத்தி நூலைக் குறைவாகவும், அதில் பாதி விலையான ₹160க்கே கிடைக்கும் பாலியஸ்டர் நூலை அதிகமாகவும் வாங்கி வேட்டி தயாரித்து மக்களை ஏமாற்றியதை, தமிழக பாஜக சார்பாக, கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்து, மக்களுக்கு கொடுத்த வேட்டியில் 78 சதவீதம் பாலியஸ்டர், வெறும் 22 சதவீதம் மட்டுமே காட்டன் என்பதைக் கண்டறிந்து, உற்பத்திச் செலவில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்திருப்பதை வெளிப்படுத்தினோம்.

    2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் என்னை சந்தித்து இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விளக்கங்களை கேட்டறிந்தனர். மேலும் அதிகாரிகள் கேட்டதற்கிணங்க. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட வேட்டி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்தில் ஜூலை 13ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது.

    தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், இந்த ஊழல் புகார் தொடர்பாக நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வேட்டியில், வழக்கமாகப் பயன்படுத்தி வந்த பருத்தி நூலின் அளவைக் குறைத்து விட்டு, விலை குறைவான பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தி ஊழல் செய்திருக்கிறார்கள்.

    இதனை அடுத்து, தமிழக அரசு கைத்தறித் துறையின் இயக்குனரான, ஐஏஎஸ் அதிகாரி சண்முகசுந்தரம் அவர்கள், தரப்பரிசோதனையில் தெரிவு செய்யப்படாத சுமார் 20 லட்சம் வேட்டிகளை, அந்தந்த கூட்டுறவு சங்கங்களுக்கே திருப்பி அனுப்பி, அதே எண்ணிக்கையில், நிர்ணயிக்கப்பட்ட தரத்திலான வேட்டிகளை, அரசு கொள்முதல் கிடங்குக்கு அனுப்பி வைக்கக் கூறி கடந்த டிசம்பர் 3, 2024 அன்று குறிப்பாணை அனுப்பியிருக்கிறார்.

    கூட்டுறவு சங்கங்கள் தரமான வேட்டிகளை அனுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மீண்டும், கடந்த 06.02.2025 அன்று, நிர்ணயிக்கப்பட்ட தரத்திலான வேட்டிகளை அரசு கொள்முதல் கிடங்குக்கு அனுப்பவில்லை என்றால், இழப்பீடு நடவடிக்கை எடுப்பதோடு, எதிர்காலத்தில் இந்த சங்கங்களுக்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட மாட்டாது என்பதையும் விரைவுக் குறிப்பாணை மூலம் தெரிவித்திருக்கிறார்.

    ஆனால், கூட்டுறவு சங்கங்கள் என்ற பெயரில் தனது பினாமி நிறுவனங்கள் மூலம் மக்கள் பணத்தை நூதனமாகக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் காந்தி, தான் செய்யும் ஊழலுக்கு, ஐஏஎஸ் அதிகாரி சண்முகசுந்தரம் அவர்கள் தடையாக இருக்கிறார் என்பது தெரிந்ததும், அடுத்த இரண்டு நாட்களில், நேற்று, அவரை கைத்தறித் துறையில் இருந்து பணிமாற்றம் செய்திருக்கிறார்கள்.

    கைத்தறித் துறையில் நடக்கும் மெகா ஊழலைக் கடந்த ஆண்டே கண்டுபிடித்துக் கூறியும், முதலமைச்சர் அவரைத் தொடர்ந்து அதே துறையில் அமைச்சராக நீடிக்கச் செய்கிறார் என்றால் அமைச்சர் செய்யும் ஊழலின் பங்கு, முதலமைச்சருக்கும் செல்கிறது என்பதுதானே பொருள்? தனது பணியை சரியாகச் செய்து, ஊழல் நடப்பதை வெளிக்கொண்டு வந்த அரசு அதிகாரியை இரண்டு நாட்களிலேயே பணிமாற்றம் செய்திருப்பது அதைத்தானே உறுதிப்படுத்துகிறது? இப்படி ஒரு ஆட்சி நடத்த அசிங்கமாக இல்லையா?

    ஒவ்வொரு ஆண்டும், ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகளில் கொள்ளையடிக்கும் அமைச்சர் காந்தி, இனியும் கைத்தறித் துறை அமைச்சராக நீடிக்கக் கூடாது. உடனடியாக அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

    வரும் 2026 ஆம் ஆண்டு, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் திமுகவின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 



    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
    • அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்கள் புகார் அளிக்க அச்சப்பட்டனர்.

    சென்னை:

    தமிழகத்தில் சமீப காலமாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பள்ளி மாணவி ஆசிரியர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை, திருச்சி மாவட்டம் மணப்பாறையில், 4-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை, ஓடும் ரெயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை, திண்டிவனத்தில் கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இதுதொடர்பாக, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது:-

    * புகார் தந்தால் திமுக ஆட்சியில் நடவடிக்கை இருக்கும் என்ற நம்பிக்கை, தைரியம் வந்ததால் தான் அதிக புகார் வருகிறது.

    * பெண்கள் திமுக ஆட்சியில் புகார் அளிக்க தைரியமாக வெளியே வருகின்றனர்.

    * அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்கள் புகார் அளிக்க அச்சப்பட்டனர் என்றார். 

    ×