என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இ.பி.எஸ். பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • அதிமுகவிற்குள் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.

    அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கொண்டுவரப்பட்டது தொடர்பாக கோவை அருகே முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கத்தால் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய செங்கோட்டையன், "அந்த நிகழ்ச்சியை தான் புறக்கணிக்கவில்லை என்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெறாததால் கலந்து கொள்ளவில்லை" என்று பூசி முழுகினார்.

    இதனையடுத்து, "பாராட்டு விழா கட்சி சார்பற்று நடத்தப்பட்ட நிகழ்ச்சி, ஆதலால் அங்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் வைக்கப்படவில்லை" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில், இன்று மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக உட்கட்சி பூசல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜு, "அதிமுகவையோ எடப்பாடி பழனிசாமியையோ செங்கோட்டையன் குறை சொல்லவில்லை. கட்சிக்குள் எந்தவித பிரச்சனையும் இல்லை" என்று தெரிவித்தார். 

    • பேருந்து சீட் பிடிப்பதில் 2 மாணவர்களுக்கு இடையே சண்டை வந்துள்ளது.
    • பேருந்தில் மாணவர்கள் இருவர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள விஸ்டம் மெட்ரிக் பள்ளியில் படிக்கும் 9ஆம் வகுப்பு மாணவர்கல் நேற்று பள்ளி முடிந்து பள்ளி பேருந்தில் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது சீட் பிடிப்பதில் 2 மாணவர்களுக்கு இடையே சண்டை வந்துள்ளது. இதனால் மாணவர்கள் இருவர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

    இந்த தாக்குதலின் போது மயங்கி விழுந்த மாணவன் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விசாரணை சரியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய மறுபிரேத பரிசோதனை செய்வதும், அதனை வீடியோ பதிவு செய்வதும் அவசியம்.
    • உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு வார காலத்திற்குள், இந்த நடவடிக்கைகளை முடித்து மனுதாரரிடம் உடலை ஒப்படைக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடியைச் சேர்ந்த லிங்கசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மர்மமான முறையில் உயிரிழந்த எனது மகன் காளையனின் உடலை மூத்த தடய அறிவியல் மருத்துவர்களைக் கொண்ட குழுவினர் மறு பிரேத பரிசோதனை செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தார்.

    இந்த வழக்கு இன்று நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரரின் மகன் காளையன், மாற்று சமூகத்தை சேர்ந்த வனிதா என்ற பெண்ணுடன் பேசியதால் அவரது உறவினர்கள் காளையனை மிரட்டியதாகவும், இது தொடர்பாக புகார் அளித்த நிலையில், மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் தனது மகனை கொலை செய்து உள்ளனர்.

    இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. மனுதாரர் மகன் உடலை பிரேத பரிசோதனை செய்வது சம்பந்தமாக மனுதாரர் தரப்பினருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என வாதாடினார்.

    பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி , மூத்த தடய அறிவியல் மருத்துவர்களைக் கொண்டு மனுதாரர் மகன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடல் அழுகும் நிலையில் உள்ளது. ஆகவே மறு பிரேத பரிசோதனை செய்வது சாத்தியமில்லை என தெரிவித்தார்.

    விசாரணை முடிவில், மனுதாரர் மகன் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டாலும், அது வீடியோ பதிவு செய்யப்படவில்லை. மனுதாரரிடம் தகவல் தெரிவிக்காமலேயே இது நடைபெற்றுள்ளது. ஆகவே விசாரணை சரியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய மறுபிரேத பரிசோதனை செய்வதும், அதனை வீடியோ பதிவு செய்வதும் அவசியம்.

    ஆகவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் காளையனின் உடல், மறு பிரேத பரிசோதனை செய்யும் நிலையில் உள்ளதா? என்பதை முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு மறு பிரேத பரிசோதனை செய்ய முடியும் என்றால், தகுதி வாய்ந்த மருத்துவ அலுவலர்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும்.

    அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும். இந்த உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு வார காலத்திற்குள், இந்த நடவடிக்கைகளை முடித்து மனுதாரரிடம் உடலை ஒப்படைக்க வேண்டும். அவரும் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

    • கடந்த 5 நாட்களுக்கு பின்பு நேற்று வழக்கமாக பள்ளி தொடங்கப்பட்டது.
    • மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் மருத்துவ குழுவினரால் வழங்கும் முகாம் நடைபெற்றது.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளி மாணவியை அதே பள்ளியில் பணியாற்றிய 3 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து அதில் தொடர்புடையதாக கூறப்பட்ட சின்னசாமி, பிரகாஷ், ஆறுமுகம் ஆகிய 3 ஆசிரியர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த 3 ஆசிரியர்களை பணியிடம் நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தாம்சன் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பள்ளியில் கடந்த 5 நாட்களுக்கு பின்பு நேற்று வழக்கமாக பள்ளி தொடங்கப்பட்டது.

    இதில் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வருகை தந்தனர். முன்னதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கலெக்டர் தினேஷ்குமார் நேரில் சந்தித்தபோது கோரிக்கை வைத்தனர்.

    அந்த கோரிக்கையில் பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும். இதில் தொடர்புடைய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்தனர்.

    இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் 12 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கும் பணி தொடங்கியது. மேலும் மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் மருத்துவ குழுவினரால் வழங்கும் முகாம் நடைபெற்றது. கிராமத்தில் மற்றும் பள்ளி வளாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • நெற்கதிர்கள் அரிசியாக்கப்பட்டு வேதாரண்யேஸ்வரருக்கு நிவேத்தியம் செய்யப்படும்.

    வேதாரண்யம்:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள குன்னலூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    அங்கிருந்து வரும் நெல்லை கொண்டு தினமும் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரருக்கு நிவேத்தியம் செய்யப்படுகிறது. இங்கு விளைந்த அறுவடை செய்து முதல் நெல்லை தைப்பூசத்தன்று அங்கிருந்து நெல் கோட்டையாக கட்டி சுவாமிக்கு அளிக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, இந்த ஆண்டு தைப்பூச தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கோட்டையாக கட்டி நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

    முன்னதாக களஞ்சியம் விநாயகர் கோவிலின் முன்வைத்து சிவகுமார் குருக்கள் சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர், மேள தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வேதாரண்யம் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    தொடர்ந்து, வேதாரண்யேஸ்வரர் சன்னதியின் முன்பு வைக்கப்பட்டு, நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர்கள் வழங்கப்பட்டது.

    பின்னர், அந்த நெற்கதிர்கள் அரைத்து அரிசியாக்கப்பட்டு இன்று வேதாரண்யேஸ்வரருக்கு நடக்கும் 2-ம் கால பூஜையில் நிவேத்தியம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    நெல் கோட்டை ஊர்வலத்தின் போது வேதாரண்யம் கோவில் நிர்வாகத்தினர், யாழ்பாணம் வரணி ஆதீனம், செவ்வந்தி நாத பண்டாரசந்நிதி, இளையவர் சபேசன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

    • இன்று வரை வணிகரீதியிலான மின்னுற்பத்தி தொடங்கப்படவில்லை.
    • குறைந்தது 75% சொந்தமாக மின் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதத்தில் மாலை நேரத்தில் சுமார் 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்பற்றாக்குறை நிலவுவதாகவும், ஏப்ரல் மாதத்தில் இது 4,697 மெகாவாட்டாக அதிகரிக்கும் என்றும் மத்திய மின்சார ஆணையத்தின் அறிக்கையில்தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    மின்பற்றாக்குறையை சமாளிக்க சில நேரங்களில் ஒரு யூனிட் ரூ.20 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டியிருக்கும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இன்றைய நிலையில் அனைத்து ஆதாரங்களில் இருந்தும் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 15,646 மெகாவாட்டாகவும். அதே நேரத்தில் மாலை மற்றும் இரவு நேர மின் தேவை 18,600 ஆக இருப்பதாகவும் மத்திய மின்சார ஆணையம் தெரிவித்திருக்கிறது.

    ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச மின் தேவை 23,135 மெகாவாட்டாக இருக்கும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. பகல் நேரங்களில் சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் நிலைமையை சமாளித்து விட முடியும் என்றாலும், மாலை நேர மின் தேவையை சமாளிக்க தனியாரிடமிருந்து தான் மின்சாரத்தை வாங்கியாக வேண்டும்.

    சில நேரங்களில் ஒரு யூனிட் ரூ.20 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டியிருக்கும் என்றும், கோடைக்காலத்தில் மின்சாரத்தின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல்மின் நிலையங்களில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கான உற்பத்திச் செலவு ரூ.6-க்கும் குறைவாகவே இருக்கும் நிலையில் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டியிருப்பது மிகவும் கவலையளிப்பதாகவும் அந்த அதிகாரி கூறியிருப்பதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் பா.ம.க.வும் பல ஆண்டுகளாக கூறி வருகிறது.

    ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் தேவையில் குறைந்தது 75% சொந்தமாக உற்பத்தி செய்யப்பட வேண்டும். மீதமுள்ள மின்சாரம் மத்தியத் தொகுப்பில் இருந்து பெறப்பட வேண்டும். அப்போது தான் மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க முடியும்.

    ஆனால், தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழாக உள்ளது. தமிழ்நாட்டின் இப்போதைய மின் தேவை 18,600 மெகாவாட்டாக இருக்கும் நிலையில், தமிழகத்தின் அனல் மின்நிலையங்களின் உற்பத்தித் திறன் வெறும் 4320 மெகாவாட் மட்டும் தான். அதிலும் இன்று காலை 2619 மெகாவாட் அளவுக்கு தான் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.

    தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் 2100 மெகாவாட் அளவுக்கு மட்டும் தான் அனல் மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் ஒரே ஒரு அனல் மின் திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை.

    வடசென்னை மூன்றாம் நிலை அனல் மின்நிலையம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில் இன்று வரை வணிகரீதியிலான மின்னுற்பத்தி தொடங்கப்படவில்லை.

    தமிழ்நாட்டில் சுமார் 17,000 மெகாவாட் அளவுக்கு அனல் மின் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 5700 மெகாவாட் அளவுக்கான அனல் மின் திட்டங்களுக்கான அடிப்படைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இந்த திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்பட்டால் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்படாது. ஆனால், தங்களின் சுயநலனுக்காக அப்படி ஒரு நிலை உருவாவதை ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.

    ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.6-க்கும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும் எனும் நிலையில், ரூ.20-க்கும் அதிக விலை கொடுத்து வாங்குவதை ஏற்க முடியாது. இதேநிலை நீடித்தால் எத்தனை முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க முடியாது.

    எனவே நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மின்னுற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒகேனக்கலுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
    • ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 700 கனஅடி வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    காவிரி ஆற்றில் மூழ்கி கிடந்த பாறைகள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. பல்வேறு இடங்களில் பறந்து விரிந்த காவிரி ஆறு நீரின்றி கருங்கல் பாறைகளாகவும், சிறு, சிறு ஓடைகளாகவும் காட்சியளிக்கிறது. ஒகேனக்கல் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • ஆழித்தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது.
    • ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை மிக்கது.

    திருவாரூர்:

    திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வ தோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திகழ்கிறது.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலின் ஆழித்தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை மிக்கது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர தேரோட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 7-ந்தேதி (ஆயில்ய நட்சத்திரத்தன்று) நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பங்குனி உத்திர திருவிழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    முன்னதாக கோவிலில் உள்ள ருண விமோசனர் சன்னதியின் அருகில் உள்ள கல் தூணிற்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து, சிவவாத்தியங்கள் முழங்க திருஞானசம்பந்தர் புறப்பாடு நடைபெற்று, தேரடியில் உள்ள ஆழித்தேர் அருகில் வைக்கப்பட்ட 5 பனஞ் சப்பைகளுக்கு பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் மாலை மற்றும் மாவிலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர், பூஜை செய்யப்பட்ட பனஞ் சப்பைகள் விநாயகர், முருகன், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. அதிக உயரமுள்ள பனஞ்சப்பை ஆழித்தேர் எனப்படும் தியாகராஜர் தேரில் வைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • தைப்பூசத்திருவிழா தேரோட்டம் மாலை நடைபெறுகிறது.
    • பக்தர்கள் குவிந்ததால் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    பழனி:

    பழனியில் இன்று தைப்பூசத்திருவிழா தேரோட்டம் மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கடந்த 3 நாட்களாக அதிக அளவில் வந்தவண்ணம் உள்ளனர்.

    எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் 3 நாட்களுக்கு இலவச தரிசனம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பழனி நகரில் 3 நாட்களுக்கு இலவச பஸ் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.

    மேலும் தைப்பூசத்தை முன்னிட்டு திண்டுக்கல்-கோவை, பழனி-மதுரை இடையே சிறப்பு ரெயில் சேவையும் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் பாதயாத்திரை பக்தர்கள் மட்டுமின்றி அரசு, தனியார் பஸ்கள் மூலமாகவும், சொந்த வாகனங்கள் மூலமாகவும், ரெயில்கள் மூலமாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர்.

    இன்று மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் பழனியில் திரண்டதால் நகரமே திக்குமுக்காடியது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் வெயிலில் காத்துக்கிடந்தனர்.

    இதனால் கைக்குழந்தைகள் உள்பட பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்து மருத்துவ முகாம் நடைபெறும் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். கூட்டத்தில் சிக்கியவர்களை ஒழுங்குபடுத்துவதிலும், தாமதம் ஏற்பட்டது.

    பக்தர்களை கயிறு கட்டி ஒவ்வொரு இடமாக நிறுத்தி தரிசனத்துக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பலர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

    பழனிக்கு வருகை தரும் பக்தர்கள் இங்கு கிடைக்கும் முக்கிய பிரசாதமாக பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்வது வழக்கம். அவர்களுக்காக ரூ.20, ரூ.35, ரூ.45 ஆகிய 3 விலைகளில் பஞ்சாமிர்த டப்பாக்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த 2 நாட்களில் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பலருக்கு பஞ்சாமிர்தம் கிடைக்கவில்லை. இதனால் மலைக்கோவில் தேவஸ்தானம், பிரசாத ஸ்டால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுகிறதா? என பக்தர்கள் தேடி அலையும் நிலை ஏற்பட்டது.

    பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து நேற்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், மாவட்ட எஸ்.பி.யுடன் ஆய்வு செய்த நிலையில் இன்று தென்மண்டல ஐ.ஜி. பிரேம் தலைமையிலான குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர்.

    கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் திணறும் நிலையே ஏற்பட்டது.

    பழனியில் தைப்பூசத் திருவிழாவுக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாருக்கு சொந்தமான இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இங்கு கியாஸ் சிலிண்டரில் தீ பற்றியதில் தீ மளமளவென பரவி அருகில் இருந்த ஓட்டல் கடைகளுக்கும் பரவியது.

    தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் கணேசன் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்று தீயை போராடி அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த இடத்தில் இந்த தீ விபத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • முருகப்பெருமான் கோவில்களில் தைப்பூச விழா விமர்சையாக நடைபெற்றது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் இன்று தைப்பூச திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முருகன் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வழிபாடு நடைபெற்றது. இதில் எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து காவடி பூஜை, கந்தர் அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. சிறப்பு பூஜையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் எடப்பாடி அடுத்த வெண்குன்றம் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவில், எடப்பாடி அருள் ஞான பாலமுருகன் சன்னதி, க.புதூர் கந்தசாமி ஆலயம், கவுண்டம்பட்டி குமர வடிவேலர் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகப்பெருமான் கோவில்களில் தைப்பூச விழா விமர்சையாக நடைபெற்றது. 

    • பிற இயக்கங்களின் பிரச்சனைகளில் தலையிடுவது என்னுடைய பழக்கமல்ல.
    • முதலமைச்சர் இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்.

    சென்னை:

    தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை, ஏழுகிணறு பகுதியில் அமைந்துள்ள அருட்பிரகாச வள்ளலார் வசித்த இல்லத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கொடியேற்றி தொடங்கி வைத்து, மக்களுடன் உணவருந்தினார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    இந்த பகுதிக்கு வள்ளலார் நகர் என்று பெயர் சூட்டி, அருகில் இருக்கக்கூடிய பேருந்து நிலையத்திற்கு வள்ளலார் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டியவர் கருணாநிதி. அவர் வழியில் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வள்ளலாருக்கு முப்பெரும் விழா எடுத்து பெருமை சேர்த்துள்ளார்.

    வடலூர் அன்னதான மையத்தில் மரங்களை வெட்டியதற்கு எந்த பக்தர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அரசுக்கு எதிராக இருக்கக்கூடிய சக்திகள் தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    அதில் ஜோதி தரிசனத்தை காண வளர்ந்துவிட்ட கிளைகளைத் தான் ஒழுங்குப்படுத்தி இருந்தோம். மரங்களை வெட்டவில்லை என தெரிவித்துள்ளனர். ஆதாரம் இருந்தால் கொடுங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதங்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்காமல், அவரது குரலான ஜெயக்குமார்தான் பதில் அளித்துள்ளார்.

    பிற இயக்கங்களின் பிரச்சனைகளில் தலையிடுவது என்னுடைய பழக்கமல்ல. முதலமைச்சர் குறுக்கு வழியில் ஆட்சியை ஏற்பதை விரும்பாதவர். அந்தந்த இயக்கங்களின் பிரச்சனைகளை அவர்களே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். அதில் தலையிடுவதை எங்கள் தலைவர் எப்போதும் விரும்பமாட்டார்" என்றார்.

    த.வெ.க. தலைவர் விஜய்யுடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்தது பற்றி அமைச்சர் சேகர்பாபுவுடன் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறும் போது, மக்களின் அன்பை பெற்றவர்கள், மக்களோடு பயணிப்பவர்களுக்கு எதிராக வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் இருக்கும் என்று தெரியவில்லை.

    2026-ம் ஆண்டு தேர்தலிலும் முதலமைச்சர் கூறியதை போல 200-தொகுதிகளையும் தாண்டி உறுதி மிக்க வெற்றியை பெறுவோம். முதலமைச்சர் இரண்டாவது முறையாக மீண்டும்ஆட்சிப் பொறுப்பை ஏற்பார் என்றார்.

    ×