என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இதற்கான பாராட்டு சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது.
- சான்றிதழை முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோரிடம் வழங்கினார்.
முத்துப்பேட்டை:
இந்தியாவிலேயே சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு மத்திய மண்டல ஐ.ஜி. ஜோசி நிர்மல் குமார் சான்றிதழ் வழங்கினார்.
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கடந்த 2024-ம் ஆண்டிற்கான இந்தியாவில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களின் பணிகளையும் ஆராய்ந்து போலீஸ் நிலையங்களின் வருடாந்திர தர வரிசையில் சிறந்த போலீஸ் நிலையமாக தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தை மத்திய அரசு தேர்வு செய்யப்பட்டு அங்கீகரித்துள்ளது.
இதற்கான பாராட்டு சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது. இதனையொட்டி முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜோசி நிர்மல் குமார், அதற்கான சான்றிதழை முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோரிடம் வழங்கினார்.
அப்போது தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட், முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த், மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிலிப் பிராங்களின் கென்னடி மற்றும் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜோசி நிர்மல் குமார் கூறுகையில்:-
இன்றியமையாத காவல் துறை பணியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அனைத்தையும் முறையாக கையாண்டு, சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் காவல் துறையின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பையும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சேவைக்கான அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத முயற்சிகளுக்கும் நான் மனதார பாராட்டுகிறேன் என்றார்.
- மாணவர்களிடம் தவறாக ஈடுபட்ட ஆசிரியர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளன.
- துறைரீதியான நடவடிக்கைகளை கடுமையாக்க முடிவு.
சென்னை:
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஒருசில ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இதில் பாதிக்கப்படும் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளில் ஒருசிலர்தான் புகார் தெரிவிக்கின்றனர். பாலியல் தொல்லை தொடர்பான புகார்களில் உண்மை இருக்கும் பட்சத்தில் போலீசில் புகார் செய்யப்படுகிறது. அதன்பிறகு போலீசார் கைது செய்கின்றனர்.
இதனால் எந்தெந்த பள்ளிகளில் பாலியல் புகார்கள் உள்ளன. அதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் யார் யார்? என்ற பட்டியலை மாநிலம் முழுவதும் பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பள்ளி மாணவிகளுக்கு, கல்வியை கற்றுத்தரும் ஆசிரியர்களே பாலியல் தொந்தரவு கொடுக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இத்தகைய போக்குகள் சரியானதல்ல.
இதற்கு சரியான நடவடிக்கை எடுத்து இந்த நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கு துறைரீதியான நடவடிக்கைகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது.
இத்தகைய சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அரசாணை (121) 2012-ம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டது. அதில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்டாய ஒய்வு அல்லது பணிநீக்கம் போன்ற கடும் தண்டனைகள் வழங்கப்படும்.
ஆசிரியர்களை பொருத்த வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி 19(2) இதற்கு பொருந்தும். அதேபோல், சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் கல்விச் சான்றி தழ்களை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பன போன்று பல்வேறு அம்சங்கள் உள்ளன. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த அரசாணை முழுமையான செயல்பாட்டுக்கு வர வில்லை.
தற்போது அதை மீண்டும் அமலுக்கு கொண்டு வரு வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மாநிலம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களிடம் தவறான செயல்களில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளன.
அதாவது, ஆசிரியர்கள் மீதான புகார், அதன் உண்மைத்தன்மை, துறைரீதி யான நடவடிக்கை, காவல் துறை நடவடிக்கை, விசாரணைக்குழு அறிக்கை, வழங்கப்பட்ட தண்டனை, நிலுவையில் உள்ளவை, பணியில் இருப்பவர்கள், ஓய்வு பெற்றவர்கள், தவறு நிரூபணமானவர்கள், பொய் புகார்கள் உட்பட அனைத்து விவரங்களும் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி தொடக்கக் கல்வித் துறையில் 80, பள்ளிக்கல்வித் துறையில் 175 என மொத்தம் 255 ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் தவறிழைத்த ஆசிரி யர்கள் மீது அரசாணை 121-ன் படி துறைரீதியாக பணிநீக்கம் போன்ற நட வடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், கல்விச் சான்றிதழ் களும் ரத்து செய்யப்படும்.
விரைவில் அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு மார்ச் மாதமே இது அமலுக்கு கொண்டுவரப் படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வீரலெட்சுமி, கஸ்தூரி, மாணிக்கம் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
- மற்ற 3 பேரும் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள சின்னவாடியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அறைகள் தரை மட்டமாகின.
பணியில் இருந்த பெண்கள் உள்பட 6 தொழிலாளர்கள் உடல் கருகின. இதில் ராமலெட்சுமி என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த சைமன் டேனியல், வீரலெட்சுமி (35), கஸ்தூரி, மாணிக்கம், முருகேஸ்வரி ஆகியோர் ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டனர். இதில் சைமன் டேனியல் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த நிலையில் வீரலெட்சுமி, கஸ்தூரி, மாணிக்கம் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு சிகிச்சை பலனின்றி வீர லெட்சுமி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மற்ற 3 பேரும் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- நமக்கு எதிரி தி.மு.க. தான்.
- நல்ல கூட்டணியை எடப்பாடியார் அமைப்பார்.
சென்னை:
வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் கள ஆய்வு கூட்டம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு தலைமையில் வில்லிவாக்கம் பாபா நகரில் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி பேசிய தாவது:-
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு தி.மு.க. மைனாரிட்டியாக தான் இருந்தது. அதன் பின் தி.மு.க.வுக்கு ஓட்டு போட மக்கள் தயாராக இல்லை. இப்போது கூட குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் அவர்கள் ஆட்சி அமைத்திருக்கிறார்கள்.
2010ல் அற்புதமான கூட்டணியை புரட்சித் தலைவி அம்மா அமைத்தார். தொடர் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தார். புரட்சித் தலைவி அம்மா மறைவுக்கு பின் எடப்பாடியார் நான்கு வருடம் இரண்டு மாதம் அற்புதமான ஆசி கொடுத்தார்.
திமு.க.வின் நான்கு ஆண்டு ஆட்சியில் ஏதாவது ஒரு திட்டம் வந்திருக்கிறதா? கடுமையான வறட்சி காலத்தில் எடப்பாடியார் முதலமைச்சர் ஆனவுடன் அம்மா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தினார்.
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எங்கு சென்றாலும் தி.மு.க. ஆட்சி எப்போது வீட்டுக்கு போகும். எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக எப்போது வருவார் என பொதுமக்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தியாவிலேயே 7-வது பெரிய கட்சி அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தைரியம் இருந்தால் தனித்து நின்று அ.தி.மு.க.வுடன் போட்டியிட தயாரா? யார் வெல்வார்கள் என்று பார்ப்போம். தைரியம் இருந்தால் இதற்கு தி.மு.க. பதில் சொல்லட்டும் பார்ப்போம்.
புரட்சித் தலைவி அம்மா சாதாரண உறுப்பினர்களை கூட தேர்தலில் போட்டியிட வைத்து எம்.எல்.ஏ., அமைச்சர் என பல்வேறு வாய்ப்புகளை கொடுத்தார்.
சாதாரணமானவர்களுக்கு கூட நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவி கொடுத்த கட்சி அ.தி.மு.க. கூட்டுறவு சங்கத்தில் 2 லட்சம் பேருக்கு மேல் உறுப்பினர்களாக பொறுப்பேற்பதற்கு அம்மா தான் காரணம்.
அம்மா வழியில் எடப்பாடியார் நமக்கு வழி வகுத்துள்ளார். 2026-ல் சட்டமன்ற தேர்தல் வருகிறது. நமக்கு எதிரி தி.மு.க. தான். அதை மனதில் கொண்டு அனைவரும் ஒற்றுமையாக களப் பணியாற்றுங்கள்.
நம்மை வெல்ல யாரும் கிடையாது. யார் என்ன செய்தாலும் 2026-ல் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வருவதை யாராலும் தடுக்க முடியாது. நல்ல கூட்டணியை எடப்பாடியார் அமைப்பார். அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஒகேனக்கல் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது.
- நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தருமபுரி:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 700 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை அளவு குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 500 கனஅடியாக குறைந்து வந்தது.
காவிரி ஆற்றில் மூழ்கி கிடந்த பாறைகள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. பல்வேறு இடங்களில் பறந்து விரிந்த காவிரி ஆறு நீரின்றி கருங்கல் பாறைகளாகவும், சிறு, சிறு ஓடைகளாகவும் காட்சியளிக்கிறது. ஒகேனக்கல் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- நேற்று சவரன் ரூ.64,480 என்ற புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை.
சென்னை:
தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 'கிடுகிடு'வென உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. ரூ.60 ஆயிரத்தை தொட்டுவிடுமோ? என்று நினைத்ததெல்லாம் மாறி இப்போது ரூ.65 ஆயிரத்தையும் தொட்டுவிடுமோ? என நினைக்க வைத்துவிட்டது. இதனை தொடர்ந்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.920 உயர்ந்தது. நேற்று சவரன் ரூ.64,480 என்ற புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,940-க்கும் சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,520-க்கும் விற்பனையாகிறது.

கடந்த ஏழு நாட்களாக வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
11-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480
10-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840
09-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,560
08-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,560
07-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,440
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
11-02-2025- ஒரு கிராம் ரூ.107
10-02-2025- ஒரு கிராம் ரூ.107
09-02-2025- ஒரு கிராம் ரூ.107
08-02-2025- ஒரு கிராம் ரூ.107
07-02-2025- ஒரு கிராம் ரூ.107
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் தனது சேவையை தொடங்கியது.
- வருகிற 15-ந்தேதி வரை முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறை முகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை இந்தியா-இலங்கை இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால் வடகிழக்கு பருவமழை மற்றும் பல்வேறு காரணங்களால் அதே மாதம் 23-ந்தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர், 'சுபம்' என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்தது. தொடர்ந்து, கடந்த ஆண்டு (2024) ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் தனது சேவையை தொடங்கியது.
இந்த கப்பல் வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்பட்டு வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கப்பல் போக்குவரத்து இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன்படி, இனி செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்களும் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இன்று இயக்கப்பட இருந்த கப்பல் தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான தேதி பின்னர் அறிக்கப்படும் என கப்பல் நிறுவனம் அறிவித்து உள்ளது.
இதன் காரணமாக வருகிற 15-ந்தேதி வரை முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு கப்பலில் பயணிக்கலாம் என உற்சாகத்துடன் காத்திருந்த பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
- ஜம்மு-காஷ்மீர் மற்றும் அசாம் மாநிலத்தில் 65.9 சதவீத பேரும், ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- புதுச்சேரியில் 55.1 சதவீத பேரும் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் ரத்தசோகை பிரச்சனை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ரத்தசோகை நோய் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகளவில் ஏற்படுகிறது. குறிப்பாக மகப்பேறு காலகட்டத்தில் பெண்களுக்கு ரத்தசோகை குறைபாடு அதிகமாக காணப்படுகிறது. பருவம் அடைதல், மாதவிடாய், பிரசவ நேரங்களில் பெண்கள் உடலில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறுகிறது. இதனால் பெண்கள் இயல்பாகவே ரத்தசோகைக்கு ஆளாகும் நிலை உள்ளது. ஆனால் ஆண்கள் மற்றும் குழந்தைகளைப் பொறுத்தவரை ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மட்டுமே ரத்தசோகை நோய் ஏற்படுகிறது.
நாடு முழுவதும் மத்திய அரசு 15-49 வயது பெண்களிடம் ரத்தசோகை பாதிப்பு தொடர்பாக ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதன்படி, இந்தியாவில் அதிகப்படியாக, லடாக் யூனியன் பிரதேசத்தில் 92.8 சதவீதம் பேரும், மேற்கு வங்காளத்தில் 71.4 சதவீத பேரும், திரிபுராவில் 67.2 பேரும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் அசாம் மாநிலத்தில் 65.9 சதவீத பேரும், ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறைந்தபட்சமாக லட்சத்தீவுகளில் 25.8 சதவீத பேரும், நாகாலாந்தில் 28.9 சதவீத பேரும், மணிப்பூரில் 29.4 சதவீத பேரும், மிசோரம் மாநிலத்தில் 34.8 பேருக்கும் ரத்தசோகை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 53.4 சதவீத பேரும், புதுச்சேரியில் 55.1 சதவீத பேரும் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பை மத்திய சுகாதாரத்துறை 2019-2021 காலகட்டத்தில் எடுத்துள்ளது. இதன்படி, இந்தியாவில் அதிக ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு 22-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறும்போது, "ஏறத்தாழ 50 சதவீத ரத்தசோகை நோய் பாதிப்பு இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது. மற்றவை வைட்டமின் ஏ, வைட்டமின் பி12 உள்ளிட்ட ஊட்டச்சத்து குறைபாட்டால் வருகிறது" என்றார்.
- உயிரிழந்தவர்கள் என்.எல்.சி.ஊழியராக இருந்த முத்துக்குமார், மனைவி தேவி, மகன் பிரவீன் என கூறப்படுகிறது.
- சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அஜீஸ் நகர் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள குளத்தில் தாய், மகன் உடல் மிதந்தது. குளத்துக்கு அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் என்.எல்.சி.ஊழியராக இருந்த முத்துக்குமார், மனைவி தேவி, மகன் பிரவீன் என கூறப்படுகிறது.
மனைவி, மகனை கொன்று முத்துக்குமார் தற்கொலையா செய்துகொண்டாரா? இவர்களின் மரணத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.
- அரசு கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் அடுத்தகட்டமாக தீவிர போராட்டங்களை நடத்துவோம் என்றும் ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.
சென்னை:
அரசு ஊழியர், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை முக்கியமாக கொண்டு அரசிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டத்தை முன்னெடுத்தும் வருகின்றனர்.
இதற்கிடையே சமீபத்தில் அரசு, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டமும், புதிய ஓய்வூதிய திட்டமும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு இணையாக இல்லை என்று கூறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தை வலுப்படுத்த தொடங்கி உள்ளனர்.
அதன்படி, அரசு ஊழியர்களில் சிலர் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை அதாவது விடிய, விடிய பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னையில் சேப்பாக்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் அரசுப் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பிலும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 14-ந் தேதி (அதாவது நாளை மறுநாள்) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.
மேலும், வருகிற 25-ந் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்தும் அரசு கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் அடுத்தகட்டமாக தீவிர போராட்டங்களை நடத்துவோம் என்றும் ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.
- தண்டவாளத்தில் கற்களை வைத்தது 15 வயது சிறுவன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- சிறுவனை கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
சென்னை திருவொற்றியூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில், கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது தண்டவாளத்தில் கற்களை வைத்தது 15 வயது சிறுவன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிறுவனை கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போ, சிறுவனுக்கு அறிவுரை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்த மாஜிஸ்ட்ரேட், பெற்றோர் குழந்தைகளை கவனிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
- லாரி ஓட்டுநர் பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த இருசக்கர வாகனம் மற்றும் மினி சரக்கு வாகனம் அடுத்தடுத்து மோதிய விபத்துக்குள்ளானது.
- மினி சரக்கு வாகனத்தில் வந்த மற்றொருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
விருதுநகர்:
மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் அருகே அதிகாலையில் வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் அருகே லாரி ஓட்டுநர் சட்டென பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த இருசக்கர வாகனம் மற்றும் மினி சரக்கு வாகனம் அடுத்தடுத்து மோதிய விபத்துக்குள்ளானது. இந்த வாகன விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மினி சரக்கு வாகனத்தில் வந்த மற்றொருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






