என் மலர்tooltip icon

    டெல்லி

    • விமான விபத்து குறித்து புலனாய்வுப் பணியாகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது.
    • உயிரிழந்த விமானி சுமித் சபர்வாலின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    கடந்த ஜூன் 12 ஆம் தேதி, அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் AI 171, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.

    விபத்தில், 230 பயணிகளில் 229 பேர், பணியாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் விமானம் மோதியதில் மேலும் 19 பேர் உயிரிழந்தனர். ஒரு பயணி மட்டுமே அதிசயமாக உயிர் தப்பினார்.

    இன்ஜினுக்கு எரிபொருள் அனுப்பும் ஸ்விட்ச் பழுது காரணமாக எரிபொருள் விநியோகம் நின்று விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் விமானி இன்ஜினுக்கு எரிபொருள் அனுப்பும் ஸ்விட்சை வேண்டுமென்றே ஆஃப் செய்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

    விமான விபத்து குறித்து புலனாய்வுப் பணியாகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த விமானி சுமித் சபர்வாலின் தந்தை, இந்திய விமானிகள் கூட்டமைப்பு (FIP) உடன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், "விமான விபத்து குறித்து நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில், சுயாதீன விமானப் போக்குவரத்து நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்" என்று கோரியுள்ளார்.

    மேலும், விமான விபத்து குறித்த புலனாய்வுப் பணியாகத்தின் (AAIB) முதற்கட்ட அறிக்கை "பாரபட்சமாகவும் குறைபாடுகளுடனும் உள்ளது என்றும் விமான விபத்துக்கு விமானி தான் காரணம் என்றும் கூறுகிறது. ஆகவே விமான விபத்து குறித்து புலனாய்வுப் பணியாகத்தால் (AAIB) நடைபெற்று வரும் விசாரணையை முடித்து வைக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • கலைஞர் பல்கலை. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
    • சட்டசபையில் இயற்றி அனுப்பி வைக்கும் மசோதாக்களை ஆளுநர் கையாளும் விதம் அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக உள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு சட்டசபையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதா மாநில ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    வழக்கமான நடைமுறையின்படி, ஆளுநர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவோ அல்லது விளக்கத்திற்காக திருப்பி அனுப்பவோ வேண்டும். ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் வகையில் அனுப்பி வைத்தார். இதற்கு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    ஆளுநரின் இந்த முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ஆளுநரின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது என அறிவிக்க வேண்டும் என்றும் அதேவேளையில், தமிழ்நாடு சட்டசபையில் இயற்றி அனுப்பி வைக்கும் மசோதாக்களை ஆளுநர் கையாளும் விதம் அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக உள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

    கலைஞர் பல்கலை. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாட்டு விளையாட்டு பல்கலை. மசோதா வழக்கையும் சேர்த்து விசாரிக்க தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் ஹரிஷ்குமார் முறையீடு செய்தார். 2 வழக்குகளும் நாளை விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி உறுதி அளித்தார்.

    இதையடுத்து தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு எதிராக தாக்கல் செய்துள்ள இரண்டு மனுக்களும் நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

    • காலணி வீசிய வழக்கறிஞரின் துணிச்சலை பாராட்டுவதாக கர்நாடக மாநில பாஜக தலைவர் பாஸ்கர் ராவ் பாராட்டினார்.
    • வீரத்தின் அடையாளம் இது என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது கடந்த வாரம் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் வைத்து வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    அவர் வீசிய காலணி நீதிபதி மீது படவில்லை. ராகேஷ் கிஷோரை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்தனர்.

    அண்மையில், கஜுராஹோவில் உள்ள விஷ்ணு கோவிலின் சிலை சீரமைப்புக்கு உத்தரவிட கோரிய மனுவை விசாரித்தபோது, "நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், அவரிடமே பிரார்த்தனை செய்து இதை கேளுங்கள்" என்று கூறி கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததால் மனம் புண்பட்டு இந்தச் செயலைச் செய்ததாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து அவரின் உரிமம் பார் கவுன்சிலால் ரத்து செய்யப்பட்டு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    ஆனால், கடவுள் தான் தன்னை காலணி வீச வைத்தார் என அதன்பின்பும் ராகேஷ் பேட்டி கொடுத்தார். மேலும் அவர் செய்தது சரியே என சிலர் ஆதரவாக பேசினர். காலணி வீசிய வழக்கறிஞரின் துணிச்சலை பாராட்டுவதாக கர்நாடக மாநில பாஜக தலைவர் பாஸ்கர் ராவ் பேசியிருந்தார்.

    இதற்கிடையே வழக்கறிஞர் ராகேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வந்தது.

    இந்நிலையில் இதுதொடர்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் ராகேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி ஒப்புதல் அளித்துள்ளார்.

    மேலும் இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் அமர்வு முன்பாக பேசிய மத்திய அரசின் சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி எறிந்த சம்பவத்தை சிலர் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். வீரத்தின் அடையாளம் இது என பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதை இப்படியே தொடர விடக்கூடாது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • எங்கள் இறக்குமதி கொள்கைகள் இந்த நோக்கத்தால் முழுமையாக வழிநடத்தப்படுகின்றன.
    • தற்போதைய (டிரம்ப்) நிர்வாகம் இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளது.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதாக இந்திய பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில் இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்சவால் வெளியிட்ட அறிக்கையில், 

    "இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு. நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது எங்கள் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது.

    நிலையான எரிபொருள் விலை மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பாதுகாப்புத் தன்மை ஆகிய இரண்டும் தான் இந்தியாவின் எரிசக்தி கொள்கை.

    எங்கள் இறக்குமதி கொள்கைகள் இந்த நோக்கத்தால் முழுமையாக வழிநடத்தப்படுகின்றன.

    அமெரிக்காவுடனும், பல ஆண்டுகளாக எங்கள் எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த முயன்று வருகிறோம்.

    இது கடந்த பத்தாண்டுகளில் சீராக முன்னேறி வருகிறது. தற்போதைய (டிரம்ப்) நிர்வாகம் இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    முன்னதாக சர்வதேச தடைகள் இருந்தபோதிலும் ரஷிய எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
    • இன்று நடந்த ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் தோல்வி அடைந்தது.

    புதுடெல்லி:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காவது கட்டமாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.

    இன்று நடந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ், தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.

    இறுதியில், 45-45 என புள்ளிகள் எடுத்ததால் டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.

    இதில் பெங்கால் வாரியர்ஸ் அணி 7-5 என்ற கணக்கில் திரில் வெற்றி பெற்றது.

    • 219 கடத்தல்காரர்களை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் பிடித்துள்ளனர்.
    • 10 கிலோவுக்கும் அதிகமான உயர் ரக வெடி பொருட்கள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

    இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் சமீப காலமாக அடிக்கடி எல்லை தாண்டி வரும் டிரோன்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதையடுத்து பஞ்சாப் உள்ளிட்ட பாகிஸ்தானையொட்டி உள்ள மாநிலங்களின் 553 கிலோ மீட்டர் தூரத்துக்கு எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.

    எல்லைப்பகுதிகள் விரிவுபடுத்தப்பட்டு பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடத்தல் காரர்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தரை மற்றும் வான்வழி மூலம் நவீன கருவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டது.

    இந்த நடவடிக்கைகளால் இந்த ஆண்டு இதுவரை பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி இந்திய எல்லைக்குள் வந்த 200 டிரோன்கள் இடைமறிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் டிரோன்கள் மூலம் அனுப்பப்பட்ட போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக எல்லைப்பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு இதுவரை இல்லாத வகையில் 16 பாகிஸ்தானியர்கள் உள்பட 219 கடத்தல்காரர்களை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் பிடித்துள்ளனர்.

    பாகிஸ்தானில் இருந்து வந்த 200 டிரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 287 கிலோ ஹெராயின், 13 கிலோ மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள்,174 ஆயுதங்கள், 12 கையெறி குண்டுகள், 10 கிலோவுக்கும் அதிகமான உயர் ரக வெடி பொருட்கள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. எல்லை தாண்டிய குற்றங்களில் ஈடுபட்ட 203 இந்திய கடத்தல் காரர்கள் மற்றும் 16 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இதன் மூலம் பாகிஸ்தான் ஊடுருவல் காரர்கள் தடுக்கப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஆண்டு (2024) 294 டிரோன்கள் மற்றும் 294 கிலோ போதைப்பொருட்கள் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 30 பாகிஸ்தானியர்கள் உள்பட 191 கடத்தல் காரர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டு கடத்தல் காரர்களின் கைது எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    • ஒவ்வொருமுறை வெளிநாடு செல்லும் போதும் விசாரணை நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும்
    • கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

    கடந்த 2007-ம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ். மீடியா குழுமம், ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி பெற வெளிநாட்டு முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்ததில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோர் மீது சி.பி.ஐ. கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    இந்நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியது டெல்லி உயர்நீதிமன்றம்

    ஒவ்வொருமுறை வெளிநாடு செல்லும் போதும் விசாரணை நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகளுக்கு தளர்வு கேட்டு கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்

    மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் வெளிநாடு செல்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிநாட்டில் என்ன செய்யப் போகிறார் என்ற தகவல்களை மட்டும் விசாரணை நீதிமன்றத்தில் வழங்கினால் போதும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • வாட்ஸ்-அப் பயன்பாடு என்பது மனிதனின் அடிப்படை உரிமையில்லை.
    • பெண் மருத்துவருக்கு அறிவுறுத்தி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

    பெண் மருத்துவர் ஒருவர் தனது வாட்ஸ்-அப் அக்கவுண்ட் பிளாக் செய்யப்பட்டு தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அதனை நீக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், வாட்ஸ்-அப் பயன்பாடு என்பது மனிதனின் அடிப்படை உரிமையில்லை எனவும் அதற்கு பதிலாக நமது உள்நாட்டு தயாரிப்பான Zoho-வின் அரட்டை செயலியை பயன்படுத்தும்படியும் பெண் மருத்துவருக்கு அறிவுறுத்தி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

    உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் வாட்ஸ்-அப் பயனாளர்களும் சற்று யோசிக்க தொடங்கியுள்ளனர்.

    • டெல்லியில் பசுமை பட்டாசுகளை விற்கவும் உச்ச நீதிமன்றம் அனுமதி.
    • பசுமை பட்டாசுகள் தயாரிப்பை கண்காணிப்பு குழு உறுதி செய்ய வேண்டும்

    டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கபட்டுள்ளது. டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டது.

    மேலும், டெல்லியில் எந்த வகையான பட்டாசுகளை தயாரிப்பதும், சேமிப்பதும், விற்பனை செய்வதும், ஆன்லைன் டெலிவரி செய்வதும் மற்றும் வெடிப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 4 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை கொண்டாடும் விதமாக தடையை தளர்த்தலாம் என மத்திய அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு இணங்க உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    டெல்லியில் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் அக்டோபர் 21 ஆம் தேதி வரை மட்டும் பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம் பசுமை பட்டாசுகளை விற்கவும் அனுமதி அளித்துள்ளது.

    பசுமை பட்டாசுகள் தயாரிப்பை கண்காணிப்பு குழு உறுதி செய்ய வேண்டும் என்றும் டெல்லியில் மாலை 6 - இரவு 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

    உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் டெல்லி மக்களும், பட்டாசு விற்பனையாளர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • சம்பவம் குறித்து தீயணைப்புத்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    டெல்லியில் உள்ள மங்கலபுரி பகுதியிலுள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் இன்று திடீரென்று வாலிபர் ஒருவர் மருத்துவமனையின் மாடியில் இருந்து குதிக்க முயற்சி செய்துள்ளார். இதனை கண்ட மருத்துவர்கள் மற்றும் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

    பரப்பரப்பான இந்த சூழலில் அந்த வாலிபரிடம் கீழே இறங்குமாறு வேண்டுகோள் வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனிடையே, இச்சம்பவம் குறித்து தீயணைப்புத்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது தகுந்த நேரத்திற்குள் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினரால் அந்த வாலிபர் பத்திரமாக காப்பாற்றப்பட்டார். மேலும், அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவரா ? அல்லது எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வாலிபரின் இந்த தீடீர் தற்கொலை முயற்சியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அவர் மருத்துவமனையின் மாடியில் இருந்து கீழே குதிக்க முயற்சி செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.



    • கூரியர் அல்லது வணிக சரக்குகளைப் போல அல்லாமல், தபால் சேவை பொருட்களுக்கு கூடுதல் அடிப்படை அல்லது தயாரிப்பு சார்ந்த வரிகள் எதுவும் விதிக்கப்படுவதில்லை.
    • இந்த சாதகமான வரி அமைப்பு ஏற்றுமதியாளர்களுக்கான ஒட்டுமொத்த செலவுச் சுமையை கணிசமாக குறைக்கிறது.

    புதுடெல்லி:

    இந்திய தபால் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய தபால் துறை இன்று முதல் அமெரிக்காவுக்கான அனைத்து வகை சர்வதேச தபால் சேவைகளையும் மீண்டும் தொடங்குகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

    அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி, புதிய கட்டண விதியின் கீழ் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் தபால் ஏற்றுமதிகளுக்கான அறிவிக்கப்பட்ட சரக்கு வரி மதிப்பில் 50 சதவீத சலுகையில் அனுப்ப முடியும்.

    கூரியர் அல்லது வணிக சரக்குகளைப் போல அல்லாமல், தபால் சேவை பொருட்களுக்கு கூடுதல் அடிப்படை அல்லது தயாரிப்பு சார்ந்த வரிகள் எதுவும் விதிக்கப்படுவதில்லை. இந்த சாதகமான வரி அமைப்பு ஏற்றுமதியாளர்களுக்கான ஒட்டுமொத்த செலவுச் சுமையை கணிசமாக குறைக்கிறது. இதனால் இந்த அஞ்சல் சேவையில் சிறுகுறு தொழில் செய்பவர்கள், கைவினைஞர்கள், சிறு வணிகர்கள் மற்றும் மின் வணிக ஏற்றுமதியாளர்கள் மிகவும் மலிவு விலையில் ஏற்றுமதி செய்து தொழில் வளர்ச்சியை பெருக்கிக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    கடந்த ஆகஸ்டு 25-ந்தேதிக்கு பின்னர், அமெரிக்காவுக்கு இந்திய தபால் துறையின் தபால், ஆவணங்கள் தவிர்த்த இதர சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. புதிய வரி விகிதம் மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்காக இந்த சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • இன்று நடந்த முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

    புதுடெல்லி:

    12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் புதுடெல்லியில் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், இன்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே குஜராத் வீரர்கள் சிறப்பாக ஆடினர்.

    இறுதியில், குஜராத் அணி 40-32 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    ×