என் மலர்
இந்தியா

ரஷிய எண்ணெய் கொள்முதல் நிறுத்தப்பட்டதா?.. டிரம்ப் கருத்துக்கு மத்திய அரசு விளக்கம்!
- எங்கள் இறக்குமதி கொள்கைகள் இந்த நோக்கத்தால் முழுமையாக வழிநடத்தப்படுகின்றன.
- தற்போதைய (டிரம்ப்) நிர்வாகம் இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளது.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதாக இந்திய பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில் இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்சவால் வெளியிட்ட அறிக்கையில்,
"இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு. நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது எங்கள் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது.
நிலையான எரிபொருள் விலை மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பாதுகாப்புத் தன்மை ஆகிய இரண்டும் தான் இந்தியாவின் எரிசக்தி கொள்கை.
எங்கள் இறக்குமதி கொள்கைகள் இந்த நோக்கத்தால் முழுமையாக வழிநடத்தப்படுகின்றன.
அமெரிக்காவுடனும், பல ஆண்டுகளாக எங்கள் எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த முயன்று வருகிறோம்.
இது கடந்த பத்தாண்டுகளில் சீராக முன்னேறி வருகிறது. தற்போதைய (டிரம்ப்) நிர்வாகம் இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சர்வதேச தடைகள் இருந்தபோதிலும் ரஷிய எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






