என் மலர்
இந்தியா

தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு: வழக்கறிஞர் மீது அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் ஒப்புதல்
- காலணி வீசிய வழக்கறிஞரின் துணிச்சலை பாராட்டுவதாக கர்நாடக மாநில பாஜக தலைவர் பாஸ்கர் ராவ் பாராட்டினார்.
- வீரத்தின் அடையாளம் இது என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது கடந்த வாரம் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் வைத்து வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அவர் வீசிய காலணி நீதிபதி மீது படவில்லை. ராகேஷ் கிஷோரை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்தனர்.
அண்மையில், கஜுராஹோவில் உள்ள விஷ்ணு கோவிலின் சிலை சீரமைப்புக்கு உத்தரவிட கோரிய மனுவை விசாரித்தபோது, "நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், அவரிடமே பிரார்த்தனை செய்து இதை கேளுங்கள்" என்று கூறி கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததால் மனம் புண்பட்டு இந்தச் செயலைச் செய்ததாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூறினார்.
இதைத்தொடர்ந்து அவரின் உரிமம் பார் கவுன்சிலால் ரத்து செய்யப்பட்டு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஆனால், கடவுள் தான் தன்னை காலணி வீச வைத்தார் என அதன்பின்பும் ராகேஷ் பேட்டி கொடுத்தார். மேலும் அவர் செய்தது சரியே என சிலர் ஆதரவாக பேசினர். காலணி வீசிய வழக்கறிஞரின் துணிச்சலை பாராட்டுவதாக கர்நாடக மாநில பாஜக தலைவர் பாஸ்கர் ராவ் பேசியிருந்தார்.
இதற்கிடையே வழக்கறிஞர் ராகேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வந்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் ராகேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் அமர்வு முன்பாக பேசிய மத்திய அரசின் சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி எறிந்த சம்பவத்தை சிலர் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். வீரத்தின் அடையாளம் இது என பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதை இப்படியே தொடர விடக்கூடாது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.






