என் மலர்
டெல்லி
- மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என சோனியா காந்தி அறிவித்தார்.
- இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறையும் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், உடல்நலத்தை கருத்தில் கொண்டு மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தார். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிட்டார். அவருக்கு போதுமான எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருந்ததால் போட்டியின்றி தேர்வானார்.
இந்த நிலையில் இன்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெக்தீப் தன்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சோனியா காந்தியுடன் மேலும் பலர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உடன் இருந்தனர்.
- உலகின் நடந்த பல்வேறு சம்பவங்கள் பாபா வாங்கா கணித்தது போலவே நடந்துள்ளது.
- ஐரோப்பாவில் பயங்கரவாத செயல்பாடுகள் குறித்தும் பாபா வாங்கா எச்சரித்துள்ளார்.
புதுடெல்லி:
பல்கேரியாவை சேர்ந்தவர் மூதாட்டி பாபா வாங்கா. இவர் 1996-ம் ஆண்டு தனது 85 வயதில் இறந்து விட்டார். இவருக்கு 12 வயது இருக்கும்போதே பல்கேரியாவில் ஏற்பட்ட பெரும் புயல், வெள்ளத்தில் பாபாவாங்காவின் கண்களில் மின்னல் தாக்கி அவருக்கு பார்வை பறி போனது.
அந்த நொடியில் அவருக்கு எதிர்கால காட்சிகள் மனதில் வருவதாக அவர் குறிப்பிட்டதோடு, எதிர்காலத்தில் எந்த வருடத்தில் என்ன நடக்கும் என்பது இவருக்கு தினமும் காட்சிகளாக வந்துள்ளது. அதை கணிப்புகளாக எழுதிய பாபா வாங்கா இந்த சக்தி தனக்கு கடவுள் கொடுத்தது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 5079-ம் ஆண்டு உலகம் அழியும் என்றும், அதுவரையிலான கணிப்புகளை இவர் எழுதி வைத்து விட்டு மரணமடைந்தார்.
இந்நிலையில் உலகின் நடந்த பல்வேறு சம்பவங்கள் இவர் கணித்தது போலவே நடந்துள்ளது. உதாரணமாக அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், செர்னோபில் பேரழிவு, ஜப்பான் சுனாமி, அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றது உள்பட பல்வேறு சம்பவங்களை இவர் துல்லியமாக கணித்து இருந்தாராம்.
இந்நிலையில் 2024-ம் ஆண்டு கடுமையான வானிலை மாற்றங்கள் மற்றும் பேரழிவு ஏற்படலாம் என பாபா வாங்கா கணித்துள்ளார். சமீபத்தில் வெளியான அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில், உலகளாவிய வெப்ப அலைகள் 67 சதவீதம் அடிக்கடி நிகழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வெப்ப அலைகளின் அதிகபட்ச வெப்பநிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டதை விட அதிகரித்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 2024-ல் கடும் வெப்ப அலைகளுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே அறிவியல் ஆய்வுகளில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவும் பாபா வாங்காவின் கணிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1996-ம் ஆண்டு அவர் இறக்கும்போது இணைய சேவை ஆரம்ப நிலையில் இருந்தது. ஆனால் 2024-ம் ஆண்டு சைபர் தாக்குதல்கள் பெருமளவு நடைபெறும் என்பதை அவர் கணித்திருந்தார். இதுவும் அவரது குறிப்பிடத்தக்க கணிப்புகளில் ஒன்றாக உள்ளது. கடந்த 12 மாதங்களில் ஆப்பிள், நெட்டா மற்றும் எக்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் இணைய பாதுகாப்பு மீறல் பிரச்சனைகளை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
2024-ம் ஆண்டில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி, உலக பொருளாதார சக்தியின் மாற்றங்கள், அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பிரச்சனைகள் மற்றும் அதிகரித்து வரும் கடன் பிரச்சனைகள் ஆகியவற்றையும் பாபா வாங்கா முன்னரே கணித்து கூறியுள்ளார்.
இந்த ஆண்டு லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் தொடர்ச்சியான பண வீக்கத்துடன் போராடி வருகின்றனர். மந்தமான உள்நாட்டு நுகர்வு காரணமாக 2023-ம் ஆண்டின் இறுதி காலாண்டில் ஜப்பான் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. சீனாவும் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இவை யாவும் பாபா வாங்காவின் கணிப்புகளை மெய்யாக்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதே போல ஐரோப்பாவில் பயங்கரவாத செயல்பாடுகள் குறித்தும் பாபா வாங்கா எச்சரித்துள்ளார். அதோடு முக்கிய நாடு ஒன்று உயிரியல் ஆயுதங்களை சோதனை அல்லது தாக்குதலுக்கு பயன்படுத்தும் என்றும், 2024-ம் ஆண்டு தொடர்பாக பாபா வாங்கா கணித்துள்ளார். அவரது கணிப்பின்படி 5079-ம் ஆண்டில் உலகம் அழியும் என்று கூறப்படுவதால் அவரது கணிப்புகள் 5079-ல் நின்று விடும் என்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்தது
- இந்த வழக்கில் பணம் எதுவும் மீட்கப்படவில்லை. ஆனால் நீங்கள் சஞ்சய் சிங்கை 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள் - உச்ச நீதிமன்றம்
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து 2023-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரது ஜாமின் மனுவை ஏப்ரல் 2-ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, இந்த வழக்கில் பணம் எதுவும் மீட்கப்படவில்லை. ஆனால் நீங்கள் சஞ்சய் சிங்கை 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள். அவருக்கு காவல் தேவையா? இல்லையா? என்பது குறித்து எங்களுக்குத் தெரிய வேண்டும் என்று அமலாக்கத்துறையிடம் நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.
சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பதில் அளித்தது. இதனையடுத்து சஞ்சய் சிங்கிற்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.
இதனையடுத்து, இன்று சஞ்சய் சிங், டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் அவரை வரவேற்றனர்.
திகார் சிறைக்கு வெளியே ஆம் ஆத்மி கட்சியினர் இடையே பேசிய அவர், "இது கொண்டாடுவதற்கான நேரம் அல்ல மாறாக போராட வேண்டிய நேரம். நமது கட்சியின் மூத்த தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், சத்யேந்தர் ஜெயின் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு விரைவில் அவர்கள் வெளியே வருவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் விடுவிக்கப்படும் வரை, நாம் கொண்டாட மாட்டோம், நாம் தொடர்ந்து போராடுவோம்" என்று தெரிவித்தார்.
- மக்களவை தேர்தல் நடைபெறும்போது சம வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
- தேர்தலை காரணம் காட்டி யாரும் தப்பிக்க முடியாது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தனது கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "முதல்வரின் கைது மக்களவை தேர்தல் நடைபெறும்போது சம வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படை கோட்பாடுக்கு எதிரானது. அமலாக்கத் துறையின் நடவடிக்கை நியாயம் அல்ல" என குறிப்பிட்டார்.
அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் "டெல்லி முதல்வர் கைதில் எவ்வித சட்ட விரோதமும் இல்லை. போதுமான ஆதாரங்கள் இருந்ததன் அடிப்படையிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
அரசியலில் இருப்பவர் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு கொலை செய்தால் அவரை கைது செய்யாமல் இருக்க முடியுமா? முறைகேட்டில் கெஜ்ரிவாலின் தொடர்பை விசாரணையின் முடிவில்தான் தெரிந்துகொள்ள முடியும்.
தேர்தலை காரணம் காட்டி யாரும் தப்பிக்க முடியாது" என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா, மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடால் ஓத்திவைத்தார்.
- தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
- தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்ள இருந்தார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 2 வாரங்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
4 முனை போட்டி இருந்த போதிலும், பிரதான கட்சிகளின் கூட்டணியே அதிக அளவில் பேசப்படுகிறது. அந்தந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
வடநாட்டு தலைவர்களும் தமிழ்நாட்டில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
அதன்படி, நாளை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 3.45 மணிக்கு மதுரை வரும் அமித்ஷா அங்கிருந்த ஹெலிகாப்டரில் தேனி செல்ல இருந்தார்..
தொடர்ந்து, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்ள இருந்தார்.
இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் திடீரென தனது தமிழக பயணத்தை அமித்ஷா ரத்து செய்துள்ளார்.
மேலும், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக தேர்தல் பிரசாரம் எப்போது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- தைவான் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது.
இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 730 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலநடுக்கம் சீனா, ஹாங்காங், ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது.
இந்நிலையில், தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தைவானில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் விஜேந்தர் சிங் பாஜகவில் இணைந்தார்.
- 2019 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்ட விஜேந்தர் சிங் தோல்வி அடைந்தார்
2008 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் அவர் பாஜக கட்சியில் இணைந்தார்.
2019 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். தற்போது தேர்தலில் காங்கிரசில் சீட் மறுக்கப்பட்டதால், அவர் பாஜகவில் இணைந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
- மத்திய மந்திரிகள் இருவர் உள்பட 12 பேர் இன்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றனர்.
- மாநிலங்களவை எம்.பி.யான எல்.முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக எல். முருகன் உள்ளார். இவரது மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் மொத்தம் 12 பேர் இன்று மாநிலங்களை எம்.பி.யாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
ஏழு மத்திய அமைச்சர்கள் உள்பட 49 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 5 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.
இந்த காலியிடங்களுக்கான தேர்தல் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளது. 91 வயதாகும் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர் மீண்டும் போட்டியிடவில்லை. தற்போது ராஜஸ்தானில் இருந்து சோனியா காந்தி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எல். முருகன் நீலகிரி தொகுதியில் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தெற்காசியாவின் வளர்ச்சி 2024-ல் 6.0 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.
- வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்குவதன் மூலம் மக்களின் நுகர்வை அதிகரிக்க முடியும்.
புதுடெல்லி:
இந்திய பொருளாதாரம் 2023-2024-ம் நிதி ஆண்டில் 7.5 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று உலக வங்கி கணித்துள்ளது. அதே நேரம் தெற்காசியாவின் வளர்ச்சி 2024-ல் 6.0 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையின்படி, தெற்காசியா அடுத்த 2 வருடங்களுக்கு உலகின் மிக வேகமாக வளரும் பிராந்தியமாக இருக்கும் என்றும், 2025-ல் வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்காசியாவிற்கான உலக வங்கியின் துணைத்தலைவர் மார்ட்டில் ரைசர் கூறுகையில், வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்குவதன் மூலம் மக்களின் நுகர்வை அதிகரிக்க முடியும். எனவே வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உற்பத்தி துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். நிலம், தொழிலாளர், முதலீடு உள்ளிட்டவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உந்துதலாக அமையும் என்றார்.
- கெஜ்ரிவாலுக்கு ஏதாவது நடந்தால் நாடு மட்டுமல்ல, கடவுள் கூட அவர்களை மன்னிக்க மாட்டார் என்று டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்தார்.
- வீட்டில் சமைத்த உணவை சாப்பிட கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை பாதிக்கப்பட்டு 4½ கிலோ எடை குறைந்துள்ளதாக ஆம்ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி மந்திரி அதிஷி இன்று காலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கடுமையான நீரிழிவு நோயாளி. அவருக்கு உடல் நலக்குறைவு இருந்த போதிலும் 24 மணி நேரமும் தேசத்திற்கு சேவை செய்ய உழைத்தார். அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து தற்போது 4½ கிலோ உடல் எடை குறைந்துள்ளார்.
இது மிகவும் கவலை அளிக்கிறது. அவரது உடல் நிலையை பா.ஜனதா ஆபத்தில் ஆழ்த்துகிறது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏதாவது நடந்தால் நாடு மட்டுமல்ல, கடவுள் கூட அவர்களை மன்னிக்க மாட்டார் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால் நலமாக இருப்பதாகவும், கடந்த 1-ந்தேதி சிறையில் அடைக்கப்பட்ட போது 55 கிலோ எடை இருந்ததாகவும், தற்போதும் இருப்பதாகவும் ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறும் போது, வீட்டில் சமைத்த உணவை சாப்பிட கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை அவரது சர்க்கரை அளவு குறைந்தது. அவருக்கு சர்க்கரை அளவு தொடர்ந்து ஏற்ற-இறக்கத்துடன் இருந்தததால் திகார் சிறை டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்தார். தற்போது அவரது ரத்த சர்க்கரை அளவு சாதாரணமாக உள்ளது. அவர் யோகா செய்தார் என்றனர்.
- ஓட்டல் ஒன்றையும் இருவரும் கூட்டாக தொடங்கி நடத்தி வந்துள்ளனர்.
- போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் பலருக்கு சம்மன் அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு உணவு பொருட்களை ஏற்றுமதி செய்வதாக ஏமாற்றி ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இப்படி போதைப்பொருள் கடத்தலில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் ஜாபர் சாதிக் சுருட்டி இருப்பது பற்றி தெரிய வந்ததால் இதன் பின்னணி பற்றி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முழுமையாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இயக்குனர் அமீர் அவரோடு சேர்ந்து 'இறைவன் மிகப்பெரியவன்' என்கிற திரைப்படம் ஒன்றையும் தயாரித்து வந்தார். இந்த படத்தின் தயாரிப்பாளராக ஜாபர் சாதிக்கும் இயக்குனராக அமீரும் இருந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஓட்டல் ஒன்றையும் இருவரும் கூட்டாக தொடங்கி நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் தான் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி அதிகாரிகளிடம் பிடிபட்டார். இதனால் இயக்குனர் அமீருக்கும், ஜாபர் சாதிக்குக்கும் எந்த மாதிரியான தொடர்புகள் இருந்தன? என்பது பற்றி இயக்குனர் அமீரிடம் டெல்லியில் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.
இதற்காக சம்மன் அனுப்பி இயக்குனர் அமீரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேரில் வரவழைத்திருந்தனர். டெல்லியில் உள்ள போதைப்பொருள் அலுவலகத்துக்கு நேற்று காலை 10 மணி அளவில் அமீர் சென்று இருந்தார்.
ஆனால் அதிகாரிகள் அவரை 11.30 மணி அளவிலேயே விசாரணைக்காக அழைத்தனர். இதன் பின்னர் அமீரிடம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள். இரவு 10.20 மணிக்கு அமீரிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்தது.
இதன் மூலம் 11 மணி நேரம் விசாரணை நடத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளனர்.
ஜாபர் சாதிக்குடன் ஏற்பட்டிருந்த பழக்கம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த இயக்குனர் அமீர், சினிமா வட்டாரத்தில் மற்றவர்களுடன் பழகியது போலவே ஜாபர் சாதிக்குடன் பழகி வந்ததாகவும், போதைப்பொருள் கடத்தலில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அடுத்த கட்டமாக எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது? என்பது பற்றிய ஆலோசனையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இயக்குனர் அமீரிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறும்போது, அமீர் மீது கைது நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அமீர் சென்னை திரும்பியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் பலருக்கு சம்மன் அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சினிமா மற்றும் அரசியலில் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ள அதிகாரிகள், ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.
- தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் தேர்தல் ஆணைய மறுஆய்வு கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு, கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
புதுடெல்லி:
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் தேர்தல் ஆணைய மறுஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், சுக்பீர்சிங் சந்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு, கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 5 மாநிலங்களை சேர்ந்த 8 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் 12 போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியானது. அவர்கள் தங்களது இளைய அதிகாரியிடம் உடனடியாக பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாற்றப்பட்டவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிக்க, ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பட்டியலை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவும் அந்தந்த மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.






