என் மலர்
டெல்லி
- பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக இன்று போலந்து செல்கிறார்.
- இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி உக்ரைனுக்கு ரெயிலில் செல்கிறார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் போலந்தில் பயணம் மேற்கொள்கிறார். இதன் மூலம் கடந்த 45 ஆண்டுகளில் போலந்து செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார்.
போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க், அதிபர் ஆண்ட்ரெஜ் டூடா ஆகியோரைச் சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அங்கு வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களைச் சந்தித்து பிரதமர் மோடி உரையாடுகிறார்.
போலந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, அங்கிருந்து ரெயில் மூலம் வரும் 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார்.
ரஷிய போர் தொடங்கியதற்கு பின் முதல்முறையாக அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் செல்கிறார்.
இதற்காக பிரதமர் மோடி போலந்தில் இருந்து சொகுசு ரெயில் மூலம் உக்ரைன் செல்கிறார். சுமார் 10 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் தன்மயா லால் கூறுகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இந்த வார இறுதியில் உக்ரைனுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். இது ஒரு முக்கிய மற்றும் வரலாற்றுப் பயணமாகும். 30 ஆண்டுக்கு மேலாக இந்திய பிரதமர் ஒருவர் உக்ரைனுக்குச் செல்வது இதுவே முதல் முறை என தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாநிலங்களவை இடைத்தேர்தல் செப்டம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது.
- இதில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் 9 மாநிலங்களில் 12 மாநிலங்களவை எம்பி பதவிகள் காலியாக உள்ளன. இங்கு செப்டம்பர் 3ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மாநிலங்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது.
அதன்படி, ராஜஸ்தானில் இருந்து மத்திய மந்திரி ரவ்னீத்சிங் பிட்டு, மத்திய பிரதேசத்தில் இருந்து ஜார்ஜ் குரியன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
ஒடிசாவில் இருந்து பிஜூ ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் தலைவர் மம்தா மொகந்தா, அரியானாவில் இருந்து காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் தலைவர் கிரண் சவுத்ரி ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பீகாரில் மனன் குமார் மிஸ்ரா, மகாராஷ்டிராவில் தைர்யஷீல் பாட்டீலும், திரிபுராவில் ராஜீவ் பட்டாச்சார்ஜி, அசாமில் மிஷன் ரஞ்சன் தாஸ், முன்னாள் மத்திய மந்திரி ராமேஸ்வர் டெலி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- பெண் டாக்டர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
- இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் மீது மேற்கு வங்காள அரசு தனது பலத்தைக் காட்ட வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் கண்டித்தது.
இந்த நிலையில், பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு டெல்லி உயர்நீதிமன்ற பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பார் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்ட அவசர கூட்டத்தில், அதன் செயற்குழு, இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்தது.
மேலும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் நடவடிக்கைகளை செயல்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தியது. நீதியை உறுதி செய்வதற்காக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு போனோ சார்பான சட்ட உதவிகளை வழங்கவும் முடிவு செய்தது.
ஒற்றுமை மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் கவுரவிக்கும் வகையில், ஆகஸ்ட் 21, 2024 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்ற பார் கவுன்சில் உறுப்பினர்கள் வெள்ளை நிற ரிப்பன் பேண்டுகளை அணிய வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.
- சிறந்த வங்கியாளராக ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
- இவருக்கு ஏ பிளஸ் கிரேடு கொடுக்கப்பட்டு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
அமெரிக்காவில் செயல்பட்டு வருவது குளோபல் பைனான்ஸ் இதழ். இது ஆண்டுதோறும் சிறப்பாகச் செயல்படும் மத்திய வங்கி கவர்னர்களை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பொருளாதார வளர்ச்சி இலக்குகள் மற்றும் வட்டி விகித மேலாண்மை போன்ற பல்வேறு காரணிகளை மையப்படுத்தித் தரப்படுத்தி வருகின்றன.
இந்த சூழல்களில் சிறப்பாக கையாண்ட வங்கியாளர்கள் கிரேடிங் முறையில் வரிசைப்படுத்தப்படுகின்றனர். இதில் ஏ முதல் எப் வரை கிரேடிங் பிரிவுகள் உள்ளன.
இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான சிறந்த வங்கியாளராக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். சென்ட்ரல் பேங்கர் ரிப்போர்ட் கார்டில் இவருக்கு ஏ பிளஸ் கிரேடு கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டும் இந்த விருதுக்கு சக்தி காந்த தாஸ் அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி தனது சமூக வலைத்தளத்தில், குளோபல் பைனான்ஸ் சென்ட்ரல் பேங்கர் ரிப்போர்ட் கார்டு 2024-ல் கவர்னர் சக்திகாந்த தாஸ் ஏ பிளஸ் என மதிப்பிடப்பட்டுள்ளார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என பதிவிட்டுள்ளது.
- மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் இந்தியா வந்துள்ளார்.
- அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுடெல்லி:
இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையை அடுத்து, இந்திய தொழிலாளர்கள் மலேசியாவுக்கு செல்வதை எளிதாக்குவது, மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைப்பது உள்ளிட்ட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாங்கள் பரஸ்பர ஒத்துழைப்புக்கான அனைத்து துறைகள் குறித்தும் விரிவாக விவாதித்தோம். இருதரப்பு வர்த்தகம் நிலையான முன்னேற்றம் அடைந்து வருவதை நாங்கள் கவனித்தோம்.
இந்தியாவிற்கும், மலேசியாவிற்கும் இடையிலான வர்த்தகத்தை இப்போது இந்திய ரூபாய் மற்றும் மலேசிய ரிங்கிட்களில் செயலாக்க முடியும்.
மலேசியாவில் ஆயுர்வேத இருக்கை ஒன்று அமைக்கப்படுகிறது. இது தவிர, மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து சிறப்பு நடவடிக்கைகளிலும் ஒத்துழைத்த பிரதமர் அன்வர் மற்றும் அவரது குழுவினருக்கு முழுமனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
2025-ம் ஆண்டில் ஆசியான் அமைப்பின் வெற்றிகரமான தலைமைப் பொறுப்புக்கு இந்தியா முழு ஆதரவையும் அளிக்கும்.
அனைத்து சர்ச்சைகளுக்கும் அமைதியான முறையில் தீர்வு காணவேண்டும் என்பதற்காக குரல் கொடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
- நர்சிங் மாணவி தங்கும் விடுதியில் உயிரிழந்து கிடந்தார்.
- இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
டெல்லியின் நியூ அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 22 வயது நர்சிங் மாணவி மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு அழைப்பு வந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அறையின் உள்ளே பூட்டப்பட்டிருப்பதை கண்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
அப்போது நர்சிங் மாணவி படுக்கையில் உயிரிழந்து கிடந்தார். அப்போது பக்கத்திலிருந்து சீலிங் பேனில் 2 ட்ரிப்ஸ் பாக்கெட் தொங்கவிடப்பட்டு அவளது கையில் ஊசி சொருகி ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு இருந்துள்ளது.
இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை.
தங்கும் விடுதியில் நர்சிங் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு பட்டியலிட்டிருந்தது.
- செந்தில் பாலாஜி மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் மீண்டும் ஒத்திவைத்தது.
புதுடெல்லி:
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி மீதான 3 வழக்குகள் மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், வழக்கை விசாரித்த நீதிபதிகள் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு பட்டியலிட்டு உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
- சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
- டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டது.
புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
இதற்கிடையே, அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும், சி.பி.ஐ. வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் கெஜ்ரிவால் இன்று டெல்லி கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா, அவரின் நீதிமன்ற காவலை வரும் 27-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
- நேரடி பணிநியமன முறையில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- நேரடி பணிநியமன முறைக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற யு.பி.எஸ்.சி.யில் தேர்ச்சி பெற்றவர்களையும், குரூப் ஏ சேவை அதிகாரிகள் மூலமே நிரப்பப்பட்டு வந்தன.
ஆனால், கடந்த 2018-ம் ஆண்டு முதல் நேரடி பணிநியமனம் என அரசுப்பணியில் அல்லாத துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு மத்திய அமைச்சகத்தின் முக்கிய பதவிகளில் நியமனம் செய்யும் முறையை பா.ஜ.க. அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே, நேரடி பணிநியமன முறையில் மத்திய அமைச்சகங்களில் காலியாகவுள்ள 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள்/துணைச் செயலாளர்கள் பதவிகளை நிரப்புவதற்கான விளம்பரத்தை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி யு.பி.எஸ்.சி., தலைவருக்கு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் எழுதியுள்ள கடிதத்தில்,மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறையை ரத்துசெய்ய வேண்டும். நேரடி நியமனத்தால் சமூகநீதி பாதிக்கப்படக் கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியுடன் இருக்கிறார். வேலைவாய்ப்புகளில் சமூக நீதியை நிலைநாட்ட இடஒதுக்கீடு அவசியம் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என தெரிவித்தார்.
- அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் மீது மேற்கு வங்காள அரசு தனது பலத்தைக் காட்ட வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் கண்டித்தது.
- இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுெமாத்த டாக்டர்கள் பிரச்சினையாகும்.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள R.G கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்த்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கானது இன்று உச்சநீதிமன்றத்தில் டவழக்கு தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் மீது மேற்கு வங்காள அரசு தனது பலத்தைக் காட்ட வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் கண்டித்தது.
டாக்டர்களின் பாதுகாப்பைக் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். இந்தியா முழுவதிலும் மருத்துவரின் பாதுகாப்பு குறித்து முறையான பிரச்சினை எழுப்புவதால் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பெண்கள் வேலைக்கு செல்ல முடியாவிட்டால், வேலை நிலைமைகளில் பாதுகாப்பு இல்லை என்றால் அவர்களுக்கு சமத்துவத்தை மறுக்கிறோம் என்று அர்த்தமாகிவிடும்.
பணிபுரியும் இடங்களில் டாக்டர்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு உரியதாகவே இருக்கிறது. இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுெமாத்த டாக்டர்கள் பிரச்சினையாகும். பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும்.
பெரும்பாலான இளம் டாக்டர்கள் 36 மணி நேரம் வேலை செய்கிறார்கள். பாதுகாப்பான வேலை நிலைமைகளை உறுதிப் படுத்த தேசிய நெறி முறையை உருவாக்க வேண்டும்.
இதற்காக 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழுவை நாங்கள் அமைக்கிறோம். இக்குழுவினர் நாடு முழுவதும் டாக்டர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் பின்பற்றப் பட வேண்டிய வழிமுறைகள் குறித்து பரிந்துரைப்பார்கள். இந்த குழு 3 வாரத்துக்குள் தனது இடைக்கால அறிக் கையை சமர்பிக்க வேண்டும். இறுதி அறிக்கையை 2 மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் பணியை தொடருமாறு கேட்டுக்கொள்கிறோம். மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டி இருக்கிறது.
டாக்டர்களை பாதுகாக்க மாநிலத்தில் சட்டங்கள் உள்ளன. ஆனால் அவை முறையாக பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை. டாக்டர்களுக்கு கழிவறை வசதி இல்லை. டாக்டர்கள் நீண்ட நேரம் பணி முடித்து வீடு திரும்புவதற்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. ஆஸ்பத்திரிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் முறையாக இல்லை.
ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கண்டறியும் ஸ்கிரீனிங் எந்திரமும் இல்லை. பெண் டாக்டர் கொலை வழக்கு தொடர்பாக மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் போய்விட்டது. இதற்காக பொறுப்பேற்று அந்த மாநில போலீஸ் டி.ஜி.பி.யை பதவி நீக்கம் செய்ய வேண்டும். போராட்டம் நடத்து மருத்துவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வன்முறை நிகழ்ந்தபோது விமானம் நிலையம், மருத்துவமனைகள நொறுக்கப்பட்டுள்ளன. இனியும் இப்படி நடக்கக் கூடாது.
இந்த வழக்கில் விசாரணை நிலையை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். வருகிற 22-ந் தேதிக்குள் (வியாழக் கிழமை) சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதேபோல மேற்கு வங்காள அரசும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.
- பிரியங்கா தனது அண்ணணை திருமணம் செய்து கொள்ளும்படி பல முறை கூறியிருந்தார்.
- ராகுலின் திருமணம் பற்றிய ரகசியம் உடையவில்லை.
புதுடெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல்காந்தி 50 வயதை கடந்து விட்டார். ஆனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க தாய் சோனியா முயற்சித்தும் முடியவில்லை. இது ஒரு விவசாயிகளுடன் நடந்த உரையாடலின்போது வெளிப்பட்டது.
அதாவது சோனிப்பட்டை சேர்ந்த விவசாய பெண்களை தங்கள் இல்லத்துக்கு அழைத்து சோனியா குடும்பம் விருந்து கொடுத்தது. அந்த விருந்து நிகழ்ச்சியில் சோனியாவுடன் ராகுல், பிரியங்கா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
சாதாரணமாக உரையாடிய அந்த பெண்கள் சோனியாவிடம் 'ராகுலை திருமணம் செய்து கொள்ள சொல்லுங்கள்' என்றனர். அதை கேட்டதும், நான் சொல்லாமல் இல்லை. நீங்கள் பெண்ணை தேடி சொல்லுங்கள் என்றார்.
அப்போது இதுபற்றி பதிலளித்த ராகுல் 'அது நடக்கும்' என்றார். பிரியங்காவும் தனது அண்ணணை திருமணம் செய்து கொள்ளும்படி பல முறை கூறியிருந்தார். ஆனாலும் ராகுலின் திருமணம் பற்றிய ரகசியம் உடையவில்லை.
உண்மையிலேயே அவர் திருமணம் செய்து கொள்வாரா? பிரம்மச்சாரியாகவே இருந்து விடுவாரா? ஒரு வேளை திருமணம் செய்தால் மணப்பெண் யார்? என்ற கேள்வி கட்சியினர் மட்டுமின்றி எல்லா தரப்பிலும் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ராகுல் திருமணம் செய்து கொள்ளப்போகும் தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
மணப்பெண் பெயர் பிரணிதி ஷிண்டே. மகாராஷ்ட்ரா மாநில முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் மகள்.
மகாராஷ்ட்ராவில் தேர்தல் முடிந்து யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி. ராகுல்-பிரணிதி திருமணம் உறுதி என சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
பிரணிதி தற்போது எம்.பி.யாக இருக்கிறார். ராகுல் நடைபயணத்தின்போது இருவரும் கைகளை பற்றியபடி நடந்து சென்ற புகைப்படம். அதன்பிறகு பாராளுமன்ற வளாகத்தில் இருவரும் பேசிக்கொண்டு சென்ற படம் ஆகியவை வைரலாக பரவுகிறது.
இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருவதும் காங்கிரசார் தான். விரைவில் ராகுல் புது மாப்பிள்ளை ஆகப்போகிறார் என்ற தகவல் காங்கிரசாரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. பலர் வாழ்த்து சொல்லவும் தொடங்கி விட்டார்கள்.
- இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நேற்று முன் தினம் வழக்குப் பதிவு செய்தது.
- இந்த சம்பவத்தைத் தற்கொலையாக மாற்ற கல்லூரி முதல்வர் முயன்றுள்ளார்.
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள R.G கர் மருத்துவக்கால்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நேற்று முன் தினம் வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கானது இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் நீதிபதிகள் காவல்துறை மீது அரசு மீதும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
'பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுப் பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்ட 3 மணி நேரம் கழித்தே போலீசாரால் எப்.ஐஆர் பதியப்பட்டுள்ளது. இந்த தாமதத்துக்கு காரணம் என்ன?
இந்த சம்பவத்தைத் தற்கொலையாக மாற்ற கல்லூரி முதல்வர் முயன்றுள்ளார். தற்கொலை நாடகமாட ஏற்பாடு செய்து ஜோடித்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது. டாக்டரின் உடலை பார்க்க அவரது பெற்றோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?
கல்லூரி முதல்வர் என்ன செய்து கொண்டு இருந்தார். முதல் தகவல் அறிக்கையில் கல்லூரி முதல்வர் பெயர் இடம் பெறாதது ஏன்?
ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரிக்குள் ஆயிரக்கணக்கான கும்பல் எப்படி நுழைந்தது? போலீஸ் என்ன செய்து கொண்டு இருந்தது. போலீசாருக்கு தெரியாமல் 7 ஆயிரம் பேர் கொண்ட கும்பல் மருத்துவமனைக்குள் எப்படி நுழைய முடியும்?
டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மேற்கு வங்காள அரசு தவறிவிட்டது. பெண் டாக்டரின் பெயர் ஊடகங்கள் முழுவதும் வெளியிடப்படுவது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவதை சட்டம் தடை செய்கிறது. உயிரை இழந்த மருத்துவருக்கு இப்படித்தான் கவுரவம் வழங்குகிறோமா?
பெண்ணின் அடையாளம் வெளியே தெரிந்தது எப்படி? பெண் டாக்டர் வழக்கில் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு இன்னொரு கற்பழிப்பு சம்பவத்துக்காகக் காத்திருக்க முடியாது.
இந்த வழக்கில் விசாரணை நிலையை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். வருகிற 22-ந் தேதிக்குள் (வியாழக் கிழமை) சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதேபோல மேற்கு வங்காள அரசும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 பேர் கொண்ட குழுவை உருவாக்கி உத்தரவிட்டனர்.






