என் மலர்
டெல்லி
- கராகஸ் நகரில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
- இதனால் வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார்.
வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரில் நேற்று சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, வெனிசுலா அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாகவும், வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெனிசுலாவில் சமீபத்திய அரசியல் பதட்டங்கள் மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளால் இந்தியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
வெனிசுலாவில் உள்ள இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும், கராகஸில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும், அவசரத் தொடர்பு எண்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது.
- MGNREGA அறக்கட்டளை இல்லை. இது சட்டப்பூர்வ உத்தரவாதம்.
- கோடிக்கணக்கான ஏழை மக்கள் தங்களுடைய சொந்த கிராமத்தில் வேலை பெற்றனர்.
மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை திரும்பப் பெற்று, VB GRAM G என்ற பெயரில் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் மீதான தாக்குதல், கோடிக்கணக்கான மக்கள் மீதான தாக்குதல் என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி தெளிவாக, சந்தேகமின்றி VB GRAM G சட்டத்தை திரும்ப பெற வேண்டும், உரிமை அடிப்படையிலான MGNREGA சட்டத்தை திரும்ப கொண்டு வர வேண்டும், வேலைக்கான உரிமை மற்றும் பஞ்சாயத்திற்கான உரிமையை மீண்டும் வழங்குதல் ஆகிய 3 கோரிக்கைகளை முன் வைக்கிறது. இதனால்தான் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை காப்போம் என்ற தேசிய அளவிலான போராட்டத்தை ஜனவரி 10 முதல் பிப்ரவரி 25-ந்தேதி வரை நடத்துகிறோம்.
MGNREGA அறக்கட்டளை இல்லை. இது சட்டப்பூர்வ உத்தரவாதம். கோடிக்கணக்கான ஏழை மக்கள் தங்களுடைய சொந்த கிராமத்தில் வேலை பெற்றனர்.
MGNREGA திட்டம் பசி மற்றும் துயர இடம்பெயர்வைக் குறைத்தது, கிராமப்புற ஊதியத்தை உயர்த்தியது மற்றும் பெண்களின் பொருளாதார கண்ணியத்தை வலுப்படுத்தியது. VB GRAM G இந்த உரிமையை அகற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடுகளுக்கு வரம்பு நிர்ணயிக்கப்படும், எனவே நெருக்கடியான காலங்களில் கூட, பணம் தீர்ந்ததும் பணிகள் முடிவடையும். மேலும், நிதியையும் பணிகளையும் மத்திய அரசே தீர்மானிக்கும். இது கிராம சபைகளையும் பஞ்சாயத்துகளையும் பொருத்தமற்ற நிலைக்குத் தள்ளிவிடும்.
MGNREGA-ஐ தாக்குவது கோடிக்கணக்கான தொழிலாளர்களையும் அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளையும் தாக்குவது போன்றது. ஒவ்வொரு பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை அமைதியாகவும் உறுதியாகவும் நாங்கள் எதிர்ப்போம்.
இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.
- இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார்.
- வேலுநாச்சியாரின் தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும்.
ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார்.
காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார்.
நல்லாட்சி மற்றும் கலாச்சார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டெல்லியில் புத்தர் தொடர்பான மாபெரும் சர்வதேச கண்காட்சி இன்று தொடங்குகிறது.
- பிரதமர் மோடி இந்தக் கண்காட்சியை இன்று காலை திறந்து வைக்கிறார்.
புதுடெல்லி:
புத்தர் தொடர்பான புனித பிப்ரஹ்வா நினைவுச் சின்னங்களின் 'ஒளியும் தாமரையும்: ஞானம் பெற்றவரின் நினைவுச் சின்னங்கள்' என்ற மாபெரும் சர்வதேசக் கண்காட்சி டெல்லியில் இன்று தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கண்காட்சியை இன்று காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
வரலாறு, கலாசாரம் மற்றும் பகவான் புத்தரின் கொள்கைகள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு மிகச் சிறப்பான நாள்.
புத்தரின் உன்னதமான சிந்தனைகளை மேலும் பிரபலப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு இணங்க அமைந்துள்ளது.
இது நமது இளைஞர்களுக்கும் நமது செழுமையான கலாசாரத்திற்கும் இடையிலான பிணைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கான ஒரு முயற்சி. இந்த நினைவுச் சின்னங்களைத் தாயகம் கொண்டுவர உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
- நியூயார்க் மேயர் மம்தானி உமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
- நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி நேற்று பதவியேற்றார். நியூயார்க் நகரின் முதல் முஸ்லீம் மேயரான அவர் திருக்குர்ஆன் மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றார். மேயர் தேர்தலில் மம்தானியை டிரம்ப் கடுமையாக எதிர்த்தது அறிந்ததே.
இந்நிலையில் 2020 டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பான வழக்கில் கைதாகி 5 வருடங்களாக சிறையில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித்துக்கு மம்தானி கைப்பட கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், "அன்புள்ள உமர், கசப்பான அனுபவங்களைப் பற்றியும், அவை நம்மைச் சிதைக்க அனுமதிக்கக் கூடாது என்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன். உங்கள் பெற்றோரைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம்" என்று மம்தானி குறிப்பிட்டுள்ளார்.
உமர் காலிதின் நண்பர் பனோஜ்யோத்ஸ்னா லாஹிரி இந்த கடிதத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் யாரேனும் தலையிட்டால் இந்தியா பொறுத்துக் கொள்ளாது என பாஜக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பஜக தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறுகையில் "இந்திய இறையாண்மைக்கு சவால் ஏற்பட்டால், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 140 கோடி மக்களும் ஒன்றிணைந்து நிற்பார்கள். இந்திய மக்கள் நாட்டின் நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- லோக்பால் அமைப்பு 'BMW 3 Series 330Li' ரக கார்களை வாங்கத் திட்டமிட்டிருந்தது.
- ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் லோக்பால் தலைவராக உள்ளார்.
ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால், சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான 7 சொகுசு பிஎம்டபிள்யூ கார்களை வாங்குவதற்கான சர்ச்சைக்குரிய டெண்டரை ரத்து செய்துள்ளது.
லோக்பால் உடைய தலைவர் மற்றும் அதன் 6 உறுப்பினர்களுகளின் அலுவலக பயன்பாட்டிற்காக மொத்தம் 7 பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை வாங்குவதற்கான டெண்டர் கடந்த 2025 அக்டோபரில் வெளியிடப்பட்டது.
லோக்பால் அமைப்பு 'BMW 3 Series 330Li' ரக கார்களை வாங்கத் திட்டமிட்டிருந்தது. தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் லோக்பால் தலைவராக உள்ளார்.
ஊழலை ஒழிப்பதற்கான ஒரு அமைப்பு, இவ்வளவு பெரிய தொகையில் சொகுசு கார்களை வாங்குவது குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, சொகுசு கார்கள் வாங்கும் முடிவு குறித்துலோக்பால் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன்படி இந்த கொள்முதல் திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
- வெறுப்புக்கும் கும்பல் கொலைகளுக்கும் எதிராகப் பேசிய ஒரு இளைஞரை, 1000 நாட்களுக்கு மேலாக விசாரணையின்றி சிறையில் வைத்திருப்பது ஜனநாயகத்திற்கு அழகல்ல
- CAA சட்டத்தின் கீழ் இலங்கைத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களை போல குடியுரிமை மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் நியூ யார்க் மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி நேற்று பதவியேற்றார்.
நியூ யார்க் நகரின் முதல் முஸ்லீம் மேரியரான அவர் திருக்குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றார். மேயர் தேர்தலில் மம்தானியை டிரம்ப் கடுமையாக எதிர்த்தது அறிந்ததே.
இந்நிலையில் 2020 டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பான வழக்கில் கைதாகி 5 வருடங்களாக சிறையில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித் -க்கு மம்தானி கைப்பட கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், "அன்புள்ள உமர், கசப்பான அனுபவங்களைப் பற்றியும், அவை நம்மைச் சிதைக்க அனுமதிக்கக் கூடாது என்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன்.
உங்கள் பெற்றோரைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம்." என்று மம்தானி குறிப்பிட்டுள்ளார்.
உமர் காலிதின் நண்பர் பனோஜ்யோத்ஸ்னா லாஹிரி இந்த கடிதத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக 2023-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க வருகைக்கு முன்னதாக நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், உமர் காலிதின் சிறைக் குறிப்புகளை மம்தானி வாசித்தார்.
அப்போது அவர், "வெறுப்புக்கும் கும்பல் கொலைகளுக்கும் எதிராகப் பேசிய ஒரு இளைஞரை, 1000 நாட்களுக்கு மேலாக விசாரணையின்றி சிறையில் வைத்திருப்பது ஜனநாயகத்திற்கு அழகல்ல" என்று தெரிவித்திருந்தார்.
மேலும், கடந்த மாதம் உமர் காலிதின் பெற்றோர்கள் அமெரிக்கா சென்றிருந்தபோது, அவர்களை மம்தானி நேரில் சந்தித்துப் பேசினார். அப்போதுதான் இந்தக் கடிதம் கைமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
டெல்லி கலவரம்:
2020 பிப்ரவரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு 2020 செப்டம்பர் முதல் சிறையில் இருக்கும் உமர் காலிதுக்கு, தனது சகோதரியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அண்மையில் 14 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
டெல்லி கலவரம் தொடர்பான சதி வழக்கில்சமூக வலைதளங்களைப் பயன்படுத்தக் கூடாது, சாட்சிகளைச் சந்திக்கக் கூடாது போன்ற பல நிபந்தனைகளுடன் வழங்கப்பட்ட இந்த ஜாமீன் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 29 அவர் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறைக்குத் திரும்பும் முன் உமர் காலித் தனது முகநூல் பக்கத்தில், "14 நாட்கள் சுதந்திரத்திற்குப் பிறகு மீண்டும் திகார் சிறைக்குச் செல்கிறேன். இந்த இருளை நாம் விரைவில் கடப்போம் என்ற நம்பிக்கையும் வலிமையும் நம் இதயங்களில் நிலைத்திருக்கட்டும்" என்று பதிவிட்டிருந்தார்.
சிஏஏ
2019 இல் மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014 டிசம்பர் 31-க்கு முன் இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாத மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்கிறது.
ஆனால், குடியுரிமை வழங்குவதில் இருந்து முஸ்லிம்களை விலக்குவதால், இது பாகுபாடு காட்டுவதாகவும், மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது என்றும் விமர்சிக்கப்பட்டது.
இது நாடு முழுவதும் பெரிய போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இலங்கைத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களை போல குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மனுதாரரின் கணவர் எந்தவொரு சுயாதீனமான முடிவுகளையும் அல்லது நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத கோமா நிலையில் இருக்கிறார்.
- தாயை பாதுகாவலராக நியமிப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அந்த தம்பதியரின் இரு குழந்தைகளும் பிரமாண பத்திரங்களை சமர்ப்பித்து உள்ளனர்.
டெல்லி ஐகோர்ட்டில் ஒரு பெண் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் எனது கணவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால், தொடர்ச்சியாக சுய நினைவற்ற நிலையில்(கோமா) உள்ளார். கணவரின் மருத்துவத் தேவைகளையும் செலவுகளையும் நிர்வகிப்பதற்காக, அவரது அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் கணவருக்கு பாதுகாவலராக என்னை நியமிக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறி இருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி சச்சின் தத்தா விசாரித்து வந்தார்.
நேற்று இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், 'மனுதாரரின் கணவர் எந்தவொரு சுயாதீனமான முடிவுகளையும் அல்லது நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத கோமா நிலையில் இருக்கிறார். மருத்துவ அறிக்கையின் படி, அவர் 100 சதவீதம் மாற்றுத்திறனாளி என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரது நலனுக்காக, ஒரு சட்டப்பூர்வ பாதுகாவலரை நியமிப்பது அவசியமாகிறது.
தாயை பாதுகாவலராக நியமிப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அந்த தம்பதியரின் இரு குழந்தைகளும் பிரமாண பத்திரங்களை சமர்ப்பித்து உள்ளனர்.
எனவே, மனுதாரரின் கணவர் மருத்துவ கோளாறு காரணமாக சுயநினைவற்ற நிலையில் இருப்பதால் அவரது மனைவியை சட்டப்பூர்வ பாதுகாவலராக இந்த கோர்ட்டு நியமிக்கிறது' என கூறி உள்ளார்.
- இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியன்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
- ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 முதல் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை வாயிலாக பரிமாறிக் கொள்ளப்படும்.
புதுடெல்லி:
இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியன்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி இரு நாடுகளுக்கு இடையிலான மோதலின் அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதே இதன் நோக்கம்.
அதன்படி, தங்கள் நாடுகளில் இருக்கும் அணுசக்தி நிலையங்கள் தொடர்பான விவரங்களை இந்தியாவும், பாகிஸ்தானும் ஒவ்வொரு ஆண்டும் பரிமாறிக் கொள்ள வேண்டும். இந்த நடைமுறையானது 1991-ம் ஆண்டு ஜனவரி 27 முதல் அமலுக்கு வந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி இந்தப் பட்டியல் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை மற்றும் தூதரகங்கள் வாயிலாக பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்படும்.
இந்நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் தத்தம் நாடுகளில் உள்ள அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களைப் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் மத்திய வெளியவுறவுத்துறை அமைச்சகமும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகமும் இந்தப் பட்டியல்களை ஒப்படைத்தன. தொடர்ந்து 35-வது ஆண்டாக பரஸ்பரம் பட்டியல் பகிரப்பட்டுள்ளது.
- விஜய் ஹசாரே டிராபியில் ரோகித், விராட் மீண்டும் வந்தபோது மக்கள் நேரில் வந்து பார்த்தனர்.
- கிரிக்கெட் வீரரை விட விளையாட்டு பெரியது என எப்போதும் கூறுவேன் என்றார் அஸ்வின்.
புதுடெல்லி:
முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசியதாவது:
2027 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டி வடிவம் குறித்து உறுதியாக எதுவும் சொல்ல முடியாது. அதைப் பற்றி நான் கவலைப்படுகிறேன்.
ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இன்னும் ஒரு இடம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், ஆனால் ஒருநாள் போட்டிகளுக்கு இடமில்லை என்று நினைக்கிறேன்.
விஜய் ஹசாரே டிராபியில் ரோகித் மற்றும் விராட் மீண்டும் வந்தபோது மக்கள் நேரில் வந்து பார்த்தார்.
கிரிக்கெட் வீரரை விட விளையாட்டு பெரியது என எப்போதும் கூறுவேன். இவர்கள் ஓய்வு பெறும்போது என்ன நடக்கும்?
ஐ.சி.சி. பிபாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கால்பந்தில் பல லீக்குகள் உள்ளன. ஆனால் பிபா 4 ஆண்டுக்கு ஒருமுறை உலகக் கோப்பையை நடத்துகிறது. உலகக் கோப்பைக்கு மதிப்பு உண்டு.
ஒருநாள் போட்டியை முக்கியமானதாக மாற்ற விரும்பினால், உலகக் கோப்பையை 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும்.
ஒருநாள் தொடருக்குப் பதிலாக, டி20 தொடர்களை விளையாட வேண்டும். இது உள்நாட்டுப் போட்டியில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களைத் தேர்ந்தெடுக்க வாரியத்திற்கு உதவும் என தெரிவித்தார்.
- டிசம்பர் மாதம் 1,74,550 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வசூல் ஆகியுள்ளது.
- இது முந்தைய ஆண்டு டிசம்பரில் வசூலான ஜிஎஸ்டி தொகையை விட 6.1 சதவீதம் அதிகம்.
புதுடெல்லி:
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வந்தது. அன்று முதல் மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
டிசம்பர் மாதம் 1,74,550 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வசூல் ஆகியுள்ளது.
அதில், சிஜிஎஸ்டி 34,289 கோடி, எஸ்ஜிஎஸ்டி 41,368 கோடி, ஐஜிஎஸ்டி 98,394 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது.
இது அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதம் வசூல் ஆன 1.64 லட்சம் கோடியை விட 6.1 சதவீதம் அதிகம் ஆகும்.
2025 -2026 நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 16.5 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 8.6 சதவீதம் அதிகம் ஆகும்.
மேலும் 2024 - 2025 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூலானது 22.08 லட்சம் கோடி ரூபாய் ஆக இருந்தது.
2017-ல் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 1.82 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகியது. வளர்ந்து வரும் பொருளாதார நடவடிக்கை காரணமாக ஆண்டுதோறும் மொத்த ஜிஎஸ்டி வசூலும் அதிகரித்து வருகிறது.
2020- 2021 ல் 11.37 லட்சம் கோடி ரூபாய் ஆக இருந்த மொத்த ஜிஎஸ்டி வசூல் 2023- 24 நிதியாண்டில் 20.18 லட்சம் கோடி ரூபாய் ஆக அதிகரித்தது என தெரிவித்துள்ளது.
- புதிய ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஆற்றலையும், நேர்மறையான மாற்றத்தையும் குறிக்கிறது.
- இது சுய பிரதிபலிப்பு மற்றும் புதிய தீர்மானங்களுக்கான ஒரு வாய்ப்பாகும் என்றார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டன.
புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பானதாகவும், ஏற்றமிகு வாழ்க்கையை அளிப்பதாகவும் அமைய வேண்டும் என அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய குடிமக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:
புத்தாண்டின் மகிழ்ச்சியான தருணத்தில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஆற்றலையும், நேர்மறையான மாற்றத்தையும் குறிக்கிறது.
இது சுய பிரதிபலிப்பு மற்றும் புதிய தீர்மானங்களுக்கான ஒரு வாய்ப்பாகும். இந்த சந்தர்ப்பத்தில், நாட்டின் வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நமது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துவோம்.
2026-ம் ஆண்டு நமது வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டு வந்து, வலுவான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க புதிய ஆற்றலை புகுத்தட்டும் என தெரிவித்துள்ளது.






