என் மலர்
டெல்லி
- பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் மும்பையில் நாளை தொடங்குகிறது.
- இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
புதுடெல்லி:
பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கி 17-ம் தேதி வரை நவி மும்பையிலும், ஜனவரி 19-ம் தேதி முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை வதோதராவிலும் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான ஜுலான் கோஸ்வாமி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஹர்மன்பிரீத் கவுர், இந்திய பெண்கள் கிரிக்கெட்டுக்கும், டபிள்யூ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் செய்துள்ள சாதனைகள் மகத்தானது.
முதல் முறையாக இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்தார்.
அவரது தலைமையில் மும்பை அணி 2 முறை மகுடம் சூடியுள்ளது.
ஒரு கேப்டனாக அவரது சாதனையை யாராலும் நெருங்க முடியாது. மேலும் பல பட்டங்களை அவர் வென்று தருவார்.
ஹர்மன்பிரீத் கவுரால் இன்னும் 4-5 ஆண்டுகள் விளையாட முடியுமென நம்புகிறேன் என தெரிவித்தார்.
- தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இதையடுத்து எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தலைநகர் டெல்லி சென்றார்.
புதுடெல்லி:
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர். இதன்பின், எடப்பாடி பழனிசாமி- அன்புமணி இடையே நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், தலைநகர் டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை மந்திரி அமித் ஷாவைச் சந்தித்தார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏற்கனவே டெல்லி சென்றுள்ள நிலையில் பழனிசாமியும் சென்றுள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில், கூட்டணியில் மேலும் சிலரை இணைப்பது குறித்து அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
- கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி சனிக்கிழமை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ந்தேதி ஜனாதிபதி திரவு பதி முர்மு உரையுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் பிப்ரவரி 1-ந்தேதி காலை 11 மணிக்கு மத்திய பட் ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 2017-ம் ஆண்டில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலங்களும், பங்கு சந்தைகளும் மூடப்பட்டிருக்கும். அது மட்டுமின்றி அன்று குரு ரவிதாஸ் ஜெயந்தி தினமாகும்.
இதனால் இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் ஆகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே பிப்ரவரி 1-ந்தேதி 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பாராளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு இன்று முடிவு செய்கிறது.
பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் ஆகுமா? அல்லது 2-ந்தேதிக்கு மாற்றப்படுமா? என்பது தெரிய வரும்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி சனிக்கிழமை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 1999-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருநாள் முன்னதாக பிப்ரவரி 27-ந்தேதி யஸ்வந்த் சின்கா பட் ஜெட்டை தாக்கல் செய்தார். மாலை 5 மணிக்கு பதிலாக 11 மணிக்கு பட் ஜெட் உரை வாசிக்கப்பட்டது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ந்தேதி ஜனாதிபதி திரவு பதி முர்மு உரையுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நாள் 29-ந்தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகள் விடுமுறை நாட்களாகும்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு 3 வாரங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். அதை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.
2-வது கட்ட அமர்வு 4 வாரங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கிரிமினல்கள், நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்கள், தற்போது விரக்தியடைந்துள்ளனர்.
- அவர்களுடைய தீய திட்டம் ஒன்றன்பின் ஒன்றாக தகர்க்கப்பட்டு வருகின்றன.
2020 டெல்லி வன்முறை சதி வழக்கில் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது. இதனைத்தொடர்ந்து டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியானது. கோஷம் எழுப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டெல்லி மாநில அமைச்சர் கபில் மிஸ்ரா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லி மாநில சட்டத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா கூறுகையில் "பாம்புகள் நசுக்கப்படுகின்றன. பாம்பு குட்டிங்கள் அலறுகின்றன. கிரிமினல்கள், நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்கள், தற்போது விரக்தியடைந்துள்ளனர்.
ஏனென்றால், அவர்களுடைய தீய திட்டம் ஒன்றன்பின் ஒன்றாக தகர்க்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற கிரிமினல்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.
- SIR தொடங்கியதிலிருந்து, அச்சத்தின் காரணமாகப் பலர் உயிரிழந்துள்ளனர்.
- மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுடெல்லி:
மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது. இதற்கு மேற்கு வங்க மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்.
SIR அச்சம், துன்புறுத்தல் மற்றும் நிர்வாகத் தன்னிச்சையான செயல்களைத் தூண்டிவிட்டு, உயிரிழப்புகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளது என குற்றம்சாட்டும் மம்தா பானர்ஜி, இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தில் தன்னிச்சையான தன்மை மற்றும் நடைமுறை முறைகேடுகள் இருக்கிறது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ'பிரையன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மாநிலத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறை தொடங்கப்பட்டதில் இருந்து தேர்தல் ஆணையம் முறையான எழுத்துப்பூர்வ அறிவுறுத்தல்களை வழங்குவதற்குப் பதிலாக, "முறைசாரா மற்றும் சட்டத்திற்குப் புறம்பான சேனல்கள்" மூலம், வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் வீடியோ மாநாடுகளின்போது தெரிவிக்கப்படும் வாய்மொழி வழிமுறைகள் மூலம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக, கேலிக்குரிய முறையில் செயல்படவோ அல்லது சட்டத்தை மீறவோ முடியாது. சட்டப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட மற்றும் தற்காலிக அல்லது முறைசாரா வழிமுறைகளுடன் நடைமுறைகளை அமைக்கவோ முடியாது என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
- அங்கீகரிக்கப்படாத நீரேற்று திட்டங்களை கர்நாடகம் தங்களது பாசனத்துக்காக செயல்படுத்தக்கூடாது என்று வற்புறுத்தினர்.
- தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46-வது கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிசம்பர் மாதத்துக்கு 7.35 டி.எம்.சி. தண்ணீரை தமிழக அதிகாரிகள் கேட்டனர். மேலும் அங்கீகரிக்கப்படாத நீரேற்று திட்டங்களை கர்நாடகம் தங்களது பாசனத்துக்காக செயல்படுத்தக்கூடாது என்றும் வற்புறுத்தினர்.
இந்தநிலையில் ஆணையத்தின் 47-வது கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் உள்ள மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
- மற்ற 5 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
- விசாரணைக்கு முந்தைய சிறை காலத்தை தண்டனையாக கருத முடியாது என நேற்றைய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமின் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமின் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.
சமீபத்தில் தனது சகோதரியின் திருமணத்திற்காக அவருக்கு 14 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. ஜாமின் காலம் முடிந்து கடந்த டிசம்பர் 29 காலித் சிறை திரும்பினார்.
இந்நிலையில், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
அதே சமயம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குல்ஃபிஷா ஃபாத்திமா, மீரா ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகிய 5 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது குறித்து உமர் காலித் உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியவற்றை குறித்து அவரது தோழி பானோஜ்யோத்ஸ்னா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "எனக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்றாலும், மற்றவர்களுக்குக் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது சிறையே எனது வாழ்க்கை ஆகிவிட்டது. மற்றவர்கள் விடுதலை ஆவதைப் பார்க்கும்போது நான் மிகவும் நிம்மதியாக உணர்கிறேன்" என உமர் காலித் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவருக்கு வழங்கப்படும் விசாரணைக்கு முந்தைய சிறை காலத்தை தண்டனையாக கருத முடியாது என நேற்றைய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, விசாரணையே இல்லாமல், குற்றம் நிரூபிக்கப்டாமல் கடந்த 5 ஆண்டுகளாக உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் சிறையில் வைக்கப்பட்டிருப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதே அதற்கு அர்த்தம்.
- நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களில் விளம்பரங்களுக்கு ஆன செலவே மட்டும்தான் இந்த ரூ. 4.76 கோடி.
- மின்னணு, சமூக ஊடங்கங்கள், விளம்பர பலகைகள், போஸ்டர்கள் ஆகியவற்றை சேர்த்தால் மொத்தத் தொகை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும்.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017ம் ஆண்டில் மத்திய பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
8 வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைத்து அறிவிக்கப்பட்டது. அதாவது, கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி, 5% மற்றும் 18% அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வரி முறை அமலுக்கு வந்தது. அத்தியாவசிய பொருட்கள் பல 5% அடுக்கில் கொண்டுவரப்பட்டது.
இந்த ஜிஎஸ்டி சீர்த்திருத்தத்தை 'ஜிஎஸ்டி பச்சத் உற்சவ்' - 'ஜிஎஸ்டி சேமிப்பு திருவிழா' என்ற பெயரில் மத்திய பாஜக அரசு நாடு விளம்பரப்படுத்தியது.
இந்நிலையில் இந்த விளம்பரங்களுக்கு செப்டம்பர் 4, 2025 முதல் அக்டோபர் 28, 2025 வரையிலான வெறும் 55 நாட்களில் 4.76 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை மத்திய அரசு செலவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த அஜய் வாசுதேவ் போஸ் என்பவர் தாக்கல் செய்த ஆர்டிஐ விண்ணப்பத்திற்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தகவல் பணியகம் அளித்த பதிலில் இது தெரியவந்துள்ளது.
நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களில் விளம்பரங்களுக்கு ஆன செலவே மட்டும்தான் இந்த ரூ. 4.76 கோடி. அச்சு ஊடக செலவு மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னணு, சமூக ஊடங்கங்கள், விளம்பர பலகைகள், போஸ்டர்கள் ஆகியவற்றை சேர்த்தால் மொத்தத் தொகை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும்.
- இந்தியாவை பிளவுப்படும சக்திகளின் பிரபல முகங்கள் காலித் மற்றும் இமாம்.
- அஃப்சல் குருவில் இருந்து உமர் மற்றும் ஷர்ஜீல் வரை நாட்டின் நலனுக்கு எதிரான கும்பலுக்கு காங்கிரஸ் ஆதரவு.
2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட 15 பேர் மீது கலவரத்திற்கு சதி செய்ததாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமீன் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமீன் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.
சமீபத்தில் தனது சகோதரியின் திருமணத்திற்காக அவருக்கு 14 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் காலம் முடிந்து கடந்த டிசம்பர் 29 காலித் சிறை திரும்பினார்.
இதனிடையே நியூயார்க் நகரின் புதிய மேயராகப் பதவியேற்றுள்ள ஜோஹ்ரான் மம்தானி ஏற்கனவே உமர் காலித்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மேலும், உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்கக் கோரியும், சர்வதேச சட்டங்களின்படி அவருக்கு நியாயமான விசாரணை நடத்த வலியுறுத்தினார்.
இந்நிலையில், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது. அதே சமயம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குல்ஃபிஷா ஃபாத்திமா, மீரா ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகிய 5 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு காங்கிரஸ் முகத்தில் அறையப்பட்ட மிகப்பெரிய அறை என பாஜக தேசிய தலைவர் ஷேசாத் பூனாவாலா தெரிவித்துள்ளா்.
இது தொடர்பாக பூனாவாலா கூறியதாவது:-
இந்தியாவை பிளவுப்படும சக்திகளின் பிரபல முகங்கள் காலித் மற்றும் இமாம். அவர்களைப் பாதுகாப்பதற்காக, காங்கிரஸ் அமைப்பு "அப்பாவி பாதிக்கப்பட்டவர்கள்" என்று சித்தரித்து வந்தது. உச்சநீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது காங்கிரஸ் முகத்தில் அறையப்பட்ட மிகப்பெரிய அறை. ஜாமீன் மறுப்பு மூலம் அவர்கள் மீதான முதல்கட்ட குற்றச்சாட்டுகள் உண்மைதான்.
அஃப்சல் குருவில் இருந்து உமர் மற்றும் ஷர்ஜீல் வரை நாட்டின் நலனுக்கு எதிரான கும்பலுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் மன்னிப்பு கேட்டக வேண்டும்.
இவ்வாறு பூனாவாலா தெரிவித்துள்ளார்.
- பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில், இம்மாதம் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 4 நாட்கள் மாநாடு நடக்கிறது.
- ‘வலிமையான ஜனநாயக அமைப்புகளை பராமரிப்பதில் சபாநாயகர்களின் பங்கு’ என்ற சிறப்பு கருத்தரங்கும் நடைபெறும்.
புதுடெல்லி:
கடந்த 1969-ம் ஆண்டு, காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் சபைத்தலைவர்கள் அமைப்பு தொடங்கப்பட்டது. அந்த அமைப்பில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இதன் மாநாடு, ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்களை ஒன்றிணைப்பதுதான் இதன் நோக்கம் ஆகும்.
இந்நிலையில், நடப்பாண்டில், காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் சபைத்தலைவர்கள் மாநாடு டெல்லியில் நடக்கிறது. இதை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நடத்துகிறார்.
பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில், இம்மாதம் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 4 நாட்கள் மாநாடு நடக்கிறது.
15-ந் தேதி, இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது.
பாராளுமன்றங்களின் செயல்பாட்டில் செயற்கை நுண்ணறிவு, சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதுதான் மாநாட்டின் நோக்கமாக இருக்கும் என்று ஓம் பிர்லா கடந்த ஆண்டு தெரிவித்தார்.
அதன்படி, மாநாட்டில், 'பாராளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு', சமூக வலைத்தளங்கள் மற்றும் பாராளுமன்றவாதிகளில் அவற்றின் தாக்கம்', 'பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு, சுகாதாரம்' ஆகிய தலைப்புகளில் தனித்தனி அமர்வுகள் நடக்கின்றன.
'வலிமையான ஜனநாயக அமைப்புகளை பராமரிப்பதில் சபாநாயகர்களின் பங்கு' என்ற சிறப்பு கருத்தரங்கும் நடைபெறும்.
- தவறான தகவல் மற்றும் பொய்களை பரப்ப வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியை கேட்டுக் கொள்கிறேன்.
- அதற்குப் பதிலாக இந்த திட்டத்தை சிறந்ததாக உருவாக்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை விட, விபி-ஜி ராம் ஜி சட்டம் சிறந்தது எனத் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் இந்த திட்டம் குறித்து தவறான தகவலை பரப்பி வருகிறது என குற்றம்சாட்டினார்.
இது தொர்பாக சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:-
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை காப்போம் பிரசாரத்தை தொடங்க இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது உண்மையில் ஊழலை பாதுகாக்கும் பிரசாரம் ஆகும்.
MGNREGA ஊழலுக்கு இணையான ஒன்றாகிவிட்டது. கிராம சபைகளால் நடத்தப்பட்ட சமூகத் தணிக்கைகளின் கீழ், 10 லட்சத்து 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டன. ஒரே வேலை மீண்டும் மீண்டும் செய்யப்பட்டது. வேலை இயந்திரம் மூலம் செய்யப்பட்டது. கால்வாய்கள் மற்றும் சாலைகளைச் சுத்தம் செய்வதாகக் கூறி பணம் முறைகேடாகப் பெறப்பட்டது.
30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 60 வயதிற்கு மேலானவர்கள். மோடி அரசின் கீழ் 8.48 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியல் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. நிரந்தரச் சொத்துக்கள் உருவாக்கப்பட்டனவா? அந்தப் பணத்தை மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்த முடியுமா?
காங்கிரஸ் ஒரு பொய்களின் தொழிற்சாலை. இப்போது அவர்கள் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காது என்று கூறுகிறார்கள்.
VB-G RAM G திட்டத்தின் கீழ் ஊழியர்களின் நலன் சிறப்பாக பாதுகாக்கப்படும். அடுத்த நிதியாண்டில் 1,51,282 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இதில் மத்திய அரசின் பங்கீடு 95,600 கோடி ரூபாயாக இருக்கும். 125 நாட்கள் வேலைக்கான போதுமான பணம் உள்ளது. இது கிராமங்களின் வளர்ச்சியை உறுதி செய்யும்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை விட விபி-ஜி ராம் ஜி சிறந்த திட்டமாக இருக்கும். தவறான தகவல் மற்றும் பொய்களை பரப்ப வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியை கேட்டுக் கொள்கிறேன். அதற்குப் பதிலாக இந்த திட்டத்தை சிறந்ததாக உருவாக்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
- அமைதியான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்
- காரகாஸில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் உள்ளது மற்றும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும்
வெனிசுலா நாட்டின்மீது திடீர் தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபர் மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா சிறைபிடித்துள்ளது. மேலும் வெனிசுலாவின் எண்ணெய் இருப்பை இனி தாங்கள்தான் நிர்வகிப்போம் எனவும் அறிவித்துள்ளது.
மறுபுறம் வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால், அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அதிகாரமீறலுக்கு உலகின் பலநாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவும் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
"வெனிசுலாவில் அரங்கேறிவரும் சமீபத்திய நிகழ்வுகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. வெனிசுலாவில் மாறிவரும் ஒவ்வொரு நிலையையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வெனிசுலா நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கான தனது ஆதரவை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அமைதியான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், இதன் மூலம் அப்பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முடியும்.
காரகாஸில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் உள்ளது மற்றும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும்." என தெரிவித்துள்ளது.






