என் மலர்
இந்தியா

டெல்லியில் காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு - பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
- பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில், இம்மாதம் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 4 நாட்கள் மாநாடு நடக்கிறது.
- ‘வலிமையான ஜனநாயக அமைப்புகளை பராமரிப்பதில் சபாநாயகர்களின் பங்கு’ என்ற சிறப்பு கருத்தரங்கும் நடைபெறும்.
புதுடெல்லி:
கடந்த 1969-ம் ஆண்டு, காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் சபைத்தலைவர்கள் அமைப்பு தொடங்கப்பட்டது. அந்த அமைப்பில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இதன் மாநாடு, ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்களை ஒன்றிணைப்பதுதான் இதன் நோக்கம் ஆகும்.
இந்நிலையில், நடப்பாண்டில், காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் சபைத்தலைவர்கள் மாநாடு டெல்லியில் நடக்கிறது. இதை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நடத்துகிறார்.
பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில், இம்மாதம் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 4 நாட்கள் மாநாடு நடக்கிறது.
15-ந் தேதி, இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது.
பாராளுமன்றங்களின் செயல்பாட்டில் செயற்கை நுண்ணறிவு, சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதுதான் மாநாட்டின் நோக்கமாக இருக்கும் என்று ஓம் பிர்லா கடந்த ஆண்டு தெரிவித்தார்.
அதன்படி, மாநாட்டில், 'பாராளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு', சமூக வலைத்தளங்கள் மற்றும் பாராளுமன்றவாதிகளில் அவற்றின் தாக்கம்', 'பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு, சுகாதாரம்' ஆகிய தலைப்புகளில் தனித்தனி அமர்வுகள் நடக்கின்றன.
'வலிமையான ஜனநாயக அமைப்புகளை பராமரிப்பதில் சபாநாயகர்களின் பங்கு' என்ற சிறப்பு கருத்தரங்கும் நடைபெறும்.






