என் மலர்tooltip icon

    டெல்லி

    • சுமார் 650 வணிகத் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்
    • முழு உலகமும் பாதுகாப்பு அச்சுறுத்தலைச் சந்திக்கும்.

    டெல்லியில் நடைபெறும் 18 ஆவது ஆசிய ஆசிய-பசிபிக் வணிக மாநாட்டில் கலந்துகொள்ள ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்திறங்கிய அதிபர் ஓலாஃப் பிரதமர் மோடியை சந்தித்து உரையாற்றினார்.

     

    ஜெர்மானிய வணிகத்திற்கான இந்த ஆசிய பசிபிக் மாநாட்டில் ஜெர்மனி, இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த சுமார் 650 வணிகத் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டைப் பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஓலாஃப் இணைந்து தொடங்கி வைத்து உரையாற்றினர்.

    மாநாட்டில் பேசிய மோடி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி, பசுமை ஆகிய துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு அதிகரித்து உள்ளது. ஜெர்மன் தொழில்நுட்பம் இந்திய திறமையுடன் இணையும் போது, உலகத்திற்குச் சிறந்த எதிர்காலத்தை அளிக்கும்.

    உலகில் பதற்றம், குழப்பம் மற்றும் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. இதுபோன்ற தீவிர பிரச்சனைகளுக்கு மத்தியிலும் நமது பொருளாதார ஒத்துழைப்பு மேம்பட வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் சர்வதேச தொழிலதிபர்கள் பங்கேற்க வேண்டும் என்று பேசினார்.

     

    ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் பேசுகையில், உக்ரைனுக்கு எதிரான மிருத மிருகத்தனமான ரஷியா வெற்றி பெற கூடாது. அவ்வாறு ரஷியா வென்றால் ஐரோப்பாவின் எல்லைத் தாண்டியும் அதன் விளைவுகள் இருக்கும். முழு உலகமும் பாதுகாப்பு அச்சுறுத்தலைச் சந்திக்கும். ஏற்கனவே மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு நம்மால் ஒருங்கிணைந்து இதுவரை ஒரு தீர்வை ஏற்படுத்த முடியவில்லை என்பது நமது இயலாமையின் வெளிப்படுத்துகிறது என்று பேசினார்.  

    • என்ஜினீயரிங் படிப்புக்கான நுழைவு தேர்வு முறையை அரசு மாற்றியமைத்தது.
    • உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்பேரில் அரசு உயர் அதிகாரம் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததையடுத்து தேர்வு முறையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

    தேர்வு முறை நேர்மையாக நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை மத்திய அரசு ஜூன் 22-ந் தேதி அமைத்தது. சுப்ரீம் கோர்ட் குழுவிற்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியது. செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அதன் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டு கொண்டது.

    இதற்கிடையே என்ஜினீயரிங் படிப்புக்கான நுழைவு தேர்வு முறையை அரசு மாற்றியமைத்தது. இதனால் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு முறையில் மாற்றம் வருமா என்பதை அறிய மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    இந்த நிலையில் உயர் அதிகாரம் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கைக்காக காத்திருப்பதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் நீட் தேர்வு முறையில் மாற்றங்களை பற்றி விவாதிப்பதற்கு நடத்தப்பட்ட கூட்டத்தின் தகவல்களை சுகாதார ஆர்வலர் விவேக் பாண்டே தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தார்.

    அவருக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் அளித்த பதிலில் தேடப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. நீங்கள் விரும்பியபடி, இந்த தகவலை உங்களுக்கு வழங்க முடியாது என்று கூறியிருந்தது.

    இதை தொடர்ந்து பாண்டே மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

    அதில் நீட் 2024 மற்றும் 2025 தேர்வுகள் தொடர்பாக ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களின் விபரங்களை கேட்டிருந்தார்.

    இந்த கேள்விக்கு பதில் அளித்த அரசு இந்திய உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்பேரில் அரசு உயர் அதிகாரம் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது.

    அதன் அறிக்கை கிடைக்க இன்னும் காத்திருக்க வேண்டும் என்று பதில் அளித்துள்ளது.

    இது தொடர்பாக டாக்டர் பாண்டே கூறியிருப்பதாவது:-

    நீட் நுழைவு தேர்வில் மாணவர்களால் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியுமா என்பதை புரிந்து கொள்ளவும், தெளிவுப்படுத்தவும் ஆகஸ்டு மாதம் முதல் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை.

    கடைசி நிமிட மாற்றங்கள் மாணவர்களுக்கு தேவையற்ற அழுத்தத்தை கொடுக்கும் என்றார்.

    • பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் காப்பீட்டு நிறுவனம் மேல்முறையீடு செய்தது.
    • பள்ளி சான்றிதழ் அடிப்படையில், இறந்தவரின் வயது 45 தான் என்று அவர்கள் கூறினர்.

    புதுடெல்லி:

    கடந்த 2015-ம் ஆண்டு, அரியானா மாநிலம் ரோதக்கை சேர்ந்த ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    அவரது மரணத்துக்கு இழப்பீடு கோரி, ரோதக்கில் உள்ள மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு தீர்ப்பாயத்தில் அவருடைய குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.

    பள்ளி சான்றிதழ் அடிப்படையில், இறந்தவரின் வயது 45 என்று கணக்கிட்ட தீர்ப்பாயம், அவருடைய குடும்பத்துக்கு ரூ.19 லட்சத்து 35 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

    அதை எதிர்த்து பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் காப்பீட்டு நிறுவனம் மேல்முறையீடு செய்தது. ஆதார் அட்டை அடிப்படையில் கணக்கிட்டால், இறந்தவரின் வயது 47 என்று கூறிய ஐகோர்ட்டு, இழப்பீட்டு தொகையை ரூ.9 லட்சத்து 22 ஆயிரமாக குறைத்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து, இறந்த நபரின் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். பள்ளி சான்றிதழ் அடிப்படையில், இறந்தவரின் வயது 45 தான் என்று அவர்கள் கூறினர்.

    இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சய் கரோல், உஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தனர்.

    நீதிபதிகள் கூறியதாவது:-

    2015-ம் ஆண்டின், சிறார் நீதி சட்டத்தின் 94-வது பிரிவின்படி, பள்ளி சான்றிதழில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதி அடிப்படையில்தான் வயது தீர்மானிக்கப்பட வேண்டும்.

    ஆதார் அட்டை வழங்கும் தனித்துவ அடையாள ஆணையம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், ''ஆதார் அட்டையை அடையாளத்தை உறுதிப்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், பிறந்த தேதிக்கு அது ஆதாரம் அல்ல'' என்று கூறியுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவை சுட்டிக்காட்டி இத்தகவலை தெரிவித்துள்ளது.

    எனவே, வயதை தீர்மானிக்க ஆதார் அட்டை முறையான ஆவணம் அல்ல. மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    • தீபாவளிக்காக 7,000 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவித்தார்.
    • கடந்த ஆண்டு தீபாவளி, சாத் பூஜையின்போது 4,500 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    தீபாவளி பண்டிகை மற்றும் சாத் பூஜையை முன்னிட்டு நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    நாள்தோறும் கூடுதலாக 2 லட்சம் பயணிகள் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் நாட்டின் கிழக்குப் பகுதிகளுக்கு ஏராளமான பயணிகள் பயணம் செய்வதால், வடக்கு ரெயில்வே கணிசமான எண்ணிக்கையிலான ரெயில்களை இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 7,000 சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்துள்ளோம் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சிறப்பு ரெயில்களைத் தவிர, பயணத்திற்கான கூடுதல் திறனை உருவாக்க ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் அதிகரிக்கப்படுகின்றன என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு தீபாவளி மற்றும் சாத் பூஜையின்போது மக்கள் கூட்டத்தை சமாளிக்க 4,500 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிக்காலம் நவம்பர் 10ம் தேதியுடன் முடிவடைகிறது.
    • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நவம்பர் 11ம் தேதி சஞ்சீவ் கன்னா பொறுப்பேற்க உள்ளார்.

    உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நவம்பர் 11ம் தேதி சஞ்சீவ் கன்னா பொறுப்பேற்க உள்ளார்.

    தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிக்காலம் நவம்பர் 10ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அடுத்தாண்டு மே மாதம் 13ம் தேதி வரை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • YouWeCan பவுண்டேசன் என்ற பெயரில் யுவராஜ் சிங் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.
    • டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனம் [என்ஜிஓ] சர்சசை ஒன்றில் சிக்கியுள்ளது. YouWeCan பவுண்டேசன் என்ற பெயரில் யுவராஜ் சிங் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மூலம் டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் மார்பக புற்றுநோய் குறித்த விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    அந்த விளம்பரத்தில் கையில் 2 ஆரஞ்சு பழங்களுடன் சேலை அணிந்த பெண் ஒருவர் பேருந்தில் நின்றுகொண்டிருக்கும் சித்திரம் உள்ளது. அவருக்கு அருகே கூடை நிறைய ஆரஞ்சு பழங்களுடன் முதிய பெண் ஒருவர் அமர்ந்திருக்கிறார். 'மாதத்துக்கு ஒரு முறை உங்களின் ஆரஞ்சுகளை பரிசோதனை செய்யுங்கள்' என்று அந்த போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது. இங்கு பெண்களின் மார்பங்கள் ஆரஞ்சுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.

     

    பெண்கள் 25 வயதை எட்டியதில் இருந்து ஒவ்வொரு மாதமும் மார்பக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதே இந்த விளம்பரத்தின் நோக்கம் ஆகும். ஆனால் அதற்காக அவர்கள் கையாண்ட வழிமுறை தவறாக முடிந்துள்ளது.

    இந்த போஸ்டர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் டெல்லி மெட்ரோ சேவை நிர்வாகம் இந்த போஸ்டர்களை நீக்குவதாக அறிவித்துள்ளது.

    • தனிப்பட்ட சார்புகளை பிரதிபலிப்பதன் அவர்களின் நீதி வழங்குதல் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகும்.
    • அவர் என்ன செய்கிறார், என்ன சாப்பிடுகிறார் என்பது முதற்கொண்டு ஊடகங்கள் விளம்பரப்படுத்துகின்றன.

    தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தையே கடுமையாக சிதைத்துவிட்டார் என்று மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே குற்றம்சாட்டியுள்ளார். நீதிபதிகள் தங்கள் மத மற்றும் அரசியல் சார்புகளையும் அதுசார்ந்த செயல்களையும் பொதுவெளியில் பிரதிபலிப்பதன் மூலம் அவர்களின் நீதி வழங்குதல் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகும்.

    அப்படியிருக்கும்போது சந்திரசூட் வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் அரசியல் தலைவராக இருக்கும் பிரதமர் மோடி கலந்துகொள்வது நீதித்துறையில் அரசின் தாக்கம் இருப்பதை புலப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அங்கு ராமர் கோவில் கட்டாலம் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதில் சந்திரசூட்டும் ஒருவர்.

     

    இதைப்பற்றி சமீபத்தில் பேசிய சந்திரசூட் அந்த வழக்கு நடந்த சமயத்தில் சாமி சிலை முன் அமர்ந்து தனக்கு ஒரு வழி கூறும்படி பிரார்த்தித்தேன் எனவும் நம்பிக்கை இருந்தால் நிச்சயம் அவர் வழிகாட்டுவார் எனவும் நிகழ்ச்சி ஒன்றில் பெருமையாக கூறிக்கொண்டார்.

    மத ரீதியாக மிகவும் சர்ச்சைக்குரிய, எளிதில் ஒருவரை புண்படுத்திவிடக்கூடிய இதுபோன்ற விஷயங்களை சந்திரசூட் தெரிவிப்பது அவரது தனிப்பட்ட நமபிக்கை அவரது தீர்ப்பில் பிரதிபலித்துள்ளதாகவே பார்க்க முடிகிறது.

     

    இந்த விவகாரங்களை முன்வைத்தே சந்திரசூட் உச்சநீதிமன்றத்தின் கண்ணியத்தையே சிதைத்துவிட்டதாக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே விமர்சித்திருக்கிருக்கிறார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பேசிய துஷ்யந்த் தவே, "என்னுடைய 46 வருட சட்டப் பணி அனுபவத்தில், பொதுவெளியில் அதிகமாக தெரியக்கூடிய தலைமை நீதிபதியாக சந்திரசூட்டைப் பார்க்கிறேன்.

    அவர் விளம்பரத்தை விரும்புபவராக இருக்கிறார். அவர் என்ன செய்கிறார், என்ன சாப்பிடுகிறார் என்பது முதற்கொண்டு அவரைப் பற்றிய அனைத்தையும் ஊடகங்கள் விளம்பரப்படுத்துகின்றன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் மட்டுமல்லாது உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தையே அவர் சிதைத்திருக்கிறார் என்று துஷ்யந்த் தாவே விமர்சித்துள்ளார்.

    • சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 2 வாரங்களில் மட்டும், சுமார் 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தரா மற்றும் ஆகாச நிறுவனங்களின் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து,பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருவதாக விமான நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

    இந்தியாவில் தொடர் கதையாகி வரும் வெடிகுண்டு மிரட்டலால் விமான நிறுவனங்களுக்கு சுமார் ரூ.1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 2 வாரங்களில் மட்டும், சுமார் 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்களால், விமானத்தில் பயணிக்க அச்சம் ஏற்படுவதாக பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    • அமித் ஷா உடன் உமர் அப்துல்லா சந்திப்பு
    • புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு ஆதரவு என அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு நீக்கியது. அத்துடன் மாநில அந்தஸ்தை ரத்து செய்து மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு-காஷ்மீரையும், லடாக்கையும் யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.

    ஜம்மு-காஷ்மீர் மாநில கட்சிகள் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில்தான் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய மாநாடு கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது உமர் அப்துல்லா முதல்வராக பதவி ஏற்றார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா நேற்று மாலை டெல்லியில் உள்துறை மந்திரியாக அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை சுமார் அரைமணி நேரம் நடைபெற்றுள்ளது. இருவருடைய சந்திப்பு மிகவும் சுமுகமாக சென்றுள்ளது.

    அப்போது புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும். ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான செயல்பாடுகள் தொடங்கப்படும் என அமித் ஷா உமர் அப்துல்லாவுக்கு உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த வாரம் புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநில அந்தஸ்து வழங்க கோரிக்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • பி.டி.உஷாவுக்கும், நிர்வாக குழுவுக்கும் இடையே மோதல் போக்கு.
    • சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    புதுடெல்லி:

    இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி. உஷா உள்ளார். 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த பொறுப்பில் அவர் இருந்து வருகிறார்.

    முன்னாள் தடகள வீராங்கனையான பி.டி.உஷா ஒலிம்பிக் ஒப்பந்தம் தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகைகள் வழங்கியதாகவும், இதனால் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.24 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதை அவர் மறுத்தார். இது தொடர்பாக அவருக்கும் நிர்வாக குழுவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

    இதற்கிடையே பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு இதற்கான இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை (25-ந்தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பி.டி.உஷா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    இதை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இயக்குனர் ஜார்ஜ் மேத்யூ நிர்வாக குழு மற்றும் உறுப்பினர்களுக்கு ஈ-மெயில் மூலம் தெரிவித்துள்ளார்.

    இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக் குழு கூட்டம் நடைபெறும் புதிய தேதி, நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என்றும் அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

    • பாசுமதி அல்லாத அரிசி வகைகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு தடை விதித்தது.
    • டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக 490 டாலர் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

    புதுடெல்லி:

    பாசுமதி அல்லாத அரிசி வகைகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடையை கடந்த மாதம் 28-ந்தேதி நீக்கிய மத்திய அரசு, அரிசிக்கான ஏற்றுமதி வரியையும் ரத்து செய்தது.

    அதேநேரம் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயித்தது. அதாவது டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக 490 டாலர் (சுமார் ரூ.41,200) நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இந்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலை கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கி உள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. அரிசி ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உளளதாகவும் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • மேற்கு வங்கத்தில் விமானம், ரெயில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
    • அதிகனமழை பெய்யும் என்பதால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலாக வலுப்பெற்று, நேற்று டானா புயலாக மாறியது. கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வரும் டானா புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடக்கு ஒடிசா- மேற்கு வங்கம் கடற்பகுதியில் ஒடிசாவின் பிட்டார்கனிகா மற்றும் தமரா பகுதியை ஒட்டிய பூரி- சாகர் தீவு இடையே கரையை கடக்கும். இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரையிலான காலக்கட்டத்தில் கரையை கடக்கும். இந்த தீவிர புயல் காரணமாக 100 முதல் 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இந்த தீவிர புயல் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மேற்கு வங்கத்தில் இன்று மாலை முதல் விமான சேவை ரத்து செய்யப்படுகிறது. சுமார் 190 உள்ளூர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மெட்ரோ ரெயில் சேவையும் நிறுத்தப்படுகின்றன.

    ஒடிசாவிலும் விமான சேவைகள் இன்று மாலை நிறுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 6 மணி நேரப்படி மணிக்கு 15 கி.மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாகவும், ஒடிசாவின் பரதிப்பில் இருந்து தென்கிழக்கே 330 கி.மீட்டர் தூரத்திலும், ஒடிசாவின் தமராவின் தெற்கு-தென்கிழக்கே 360 கி.மீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவின் தெற்கு-தென்கிழக்கு 420 கி.மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.

    ×