என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யாத உள்துறை மந்திரி அனிதாவை சஸ்பெண்டு செய்ய வேண்டும்.
    • துணை முதல்வர் பவன் கல்யாண் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    ஆந்திராவில் ஜனசேனா கட்சி எம்.எல்.ஏ. அரவ ஸ்ரீதர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் மந்திரி நடிகை ரோஜா தலைமையில் நகரியில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஜனசேனை என்றால் காமக்கொடூரன்களின் சேனை. கேரக்டர் இல்லாதவர்கள் அரசியல் செய்கிறார்கள். இது போன்ற தலைவர்களின் ஆட்சியில் மக்களுக்கு மரியாதை கிடைக்காது.

    பெண்களுக்கு அநியாயம் நடந்தால் நீதி கிடைக்காது. ரெயில்வே கோடூரில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதுவரை அந்த எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யாத உள்துறை மந்திரி அனிதாவை சஸ்பெண்டு செய்ய வேண்டும்.

    துணை முதல்வர் பவன் கல்யாண் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்தப் பெண் அனைத்து ஆதாரங்களையும் வீடியோ, ஆடியோ உடன் காட்டிய பிறகும் கூட விசாரணைக்காக 3 பேருடன் கூடிய ஒரு கமிட்டியை நியமிப்பதாக ஜனசேனா கட்சி அறிவித்துள்ளது வெட்கக்கேடு.

    தேர்தலுக்கு முன் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் 30 ஆயிரம் பெண்கள் நாடு கடத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களை மீட்டு கொண்டு வருவோம் என்று சொன்ன பவன் கல்யாண் ஒரு பெண்ணையாவது இதுவரை கொண்டு வந்தாரா. அவரது கட்சி எம்எல்ஏக்கள் தான் பெண்கள் மீது வன்கொடுமை போன்ற அராஜகம் செய்து வருகிறார்கள். அந்தப் பெண்ணுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. நோயாளிகளிடம் சேகரிக்கப்பட்ட ரத்தத்தை வாங்கினார்.
    • ரத்தம் அடங்கிய பாட்டிலை பிரிட்ஜில் வைத்து பராமரித்தார்.

    ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் போய வசுந்தரா (வயது 34). இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு டாக்டரும் காதலித்து வந்தனர். ஆனால் இந்த காதல், திருமணம் வரை செல்லாமல், இடையிலேயே முறிந்தது.

    அந்த டாக்டர், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அப்பெண்ணும் ஒரு டாக்டர்தான். கர்னூலில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    ஆனால், தனது முன்னாள் காதலரை வேறு ஒரு பெண் திருமணம் செய்ததை போய வசுந்தராவால் ஜீரணிக்க முடியவில்லை. பொறாமை அடைந்த அவர், முன்னாள் காதலரை பழிவாங்கவும், தம்பதிகளை பிரிக்கவும் திட்டமிட்டார்.

    அதற்காக முன்னாள் காதலரின் மனைவிக்கு எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை செலுத்த திட்டமிட்டார். அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. நோயாளிகளிடம் சேகரிக்கப்பட்ட ரத்தத்தை வாங்கினார். ஆராய்ச்சிக்கு தேவைப்படுவதாக பொய் சொல்லி, அதை பெற்றார்.

    அந்த ரத்தம் அடங்கிய பாட்டிலை பிரிட்ஜில் வைத்து பராமரித்தார்.

    சம்பவத்தன்று, போய வசுந்தராவின் முன்னாள் காதலரின் மனைவி, கல்லூரியில் பணி முடிந்து, மதிய உணவுக்காக வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, தனக்கு தெரிந்த நர்ஸ் காங்கே ஜோதி (40) என்பவரின் 2 மகன்களை மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்று, பெண் டாக்டரின் ஸ்கூட்டர் மீது மோதச் செய்தார்.

    அவர் நினைத்ததுபோல், பெண் டாக்டர் கீழே விழுந்து காயம் அடைந்தார். உடனே அவருக்கு உதவுவதுபோல் போய வசுந்தரா நெருங்கினார். ஒரு ஆட்டோவை வரவழைத்தார்.

    ஆட்டோவில் பெண் டாக்டரை ஏற்றியபோது அவருக்கு எச்.ஐ.வி. கலந்த ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தினார். பெண் டாக்டர் கத்தி கூச்சலிட்டார். அதற்குள் போய வசுந்தரா அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இதுபற்றி அவரின் முன்னாள் காதலரான டாக்டர், கர்னூல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    போய வசுந்தரா, நர்ஸ் காங்கே ஜோதி, அவரின் 2 மகன்கள் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    • பிரியாணி சாப்பிட்ட சிவநாகராஜு மயக்கமடைந்ததும், மாதுரி தனது காதலன் கோபியை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
    • கொலைக்குப் பிறகு மாதுரி சடலத்தின் அருகில் அமர்ந்து ஆபாசப் படங்களைப் பார்த்ததாக வெளியான சில செய்திகள் பொய்யானவை.

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சிலுவுரு கிராமத்தை சேர்ந்தவர் லோகம் சிவநாகராஜு.

    சிவநாகராஜுவின் மனைவி லட்சுமி மாதுரி, கோபி என்பவருடன் தகாத உறவில் இருந்துள்ளார்.

    இதற்கு தடையாக இருந்த கணவனை கொல்ல திட்டமிட்ட மாதுரி கடந்த ஜனவரி 18 இரவு உணவாகப் பிரியாணியைத் தயார் செய்து, அதில் 20 தூக்க மாத்திரைகளைப் பொடித்துக் கலந்து தனது கணவருக்குக் கொடுத்துள்ளார்.

    பிரியாணி சாப்பிட்ட சிவநாகராஜு மயக்கமடைந்ததும், மாதுரி தனது காதலன் கோபியை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

    இருவரும் சேர்ந்து தலையணையால் சிவநாகராஜுவின் முகத்தை அழுத்தி மூச்சுத்திணறச் செய்து அவரைக் கொலை செய்தனர்.

    கொலையைச் செய்த பிறகு, தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறவினர்களிடமும் அக்கம் பக்கத்தினரிடமும் மாதுரி நாடகமாடியுள்ளார்.

    சிவநாகராஜுவின் உடலில் காயங்கள் மற்றும் இரத்தக் கறைகளைக் கண்ட உறவினர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு போலீசில் புகார் அளித்தனர்.

    பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் மூச்சுத்திணறச் செய்து கொல்லப்பட்டது உறுதியானது.

    கொலைக்குப் பிறகு மாதுரி சடலத்தின் அருகில் அமர்ந்து ஆபாசப் படங்களைப் பார்த்ததாக வெளியான சில செய்திகள் வெளியான நிலையில் அவற்றை மாவட்ட எஸ்.பி மறுத்துள்ளார்.

    மனைவி லட்சுமி மாதுரி மற்றும் அவரது காதலன் கோபி ஆகிய இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

    • மஞ்சூர் ஆலம் ஒரு வங்கதேசத்தவர் என முத்திரை குத்தி இந்துத்துவா கும்பல் திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்துள்ளதாக அவரது சகோதரர் குற்றம்சாட்டினார்.
    • பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை பெங்காலி தொழிலாளர்கள் குறிவைக்கப்படுகின்றனர்.

    மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி மஞ்சூர் ஆலம் லஷ்கர் (32). இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திராவில் வேலை செய்து வந்தார்.

    பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கோமரோலு பகுதியில் வேலை செய்து வந்த அவரை வங்கதேசத்தவர் என்று கூறி அங்கிருந்த கும்பல் மிரட்டி வந்ததாக தெரிகிறது. 

    இந்நிலையில் மஞ்சூர் ஆலத்தை அந்த கும்பல் கடந்த செவ்வாய்க்கிழமை கடத்தியுள்ளது. அவரது குடும்பத்தினரை அழைத்து மஞ்சூரை விடுவிக்க ரூ.25,000 பணம் கேட்டுள்ளது.

    மஞ்சூரின் குடும்பத்தினர் பயந்துபோய் ஆன்லைன் மூலம் ரூ.6,000 செலுத்தியுள்ளனர். ஆனால், புதன்கிழமை இரவு மஞ்சூர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

    மஞ்சூர் ஆலம் மீது திருட்டுப் பட்டம் கட்டி, அவர் ஒரு வங்கதேசத்தவர் என முத்திரை குத்தி இந்துத்துவா கும்பல் திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்துள்ளதாக அவரது சகோதரரும் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகருமான கியாசுதீன் லஷ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

    பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை பெங்காலி தொழிலாளர்கள் குறிவைக்கப்படுவதாகத் திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் மேற்கு வங்க அரசு தலையிட்டு முறையான விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மஞ்சூர் ஆலம் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.  

    • பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து எதிரே வந்த லாரி மீது மோதியது.
    • பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து மற்ற பயணிகள் பாதுகாப்பாக வெளியேறினர்.

    ஆந்திராவின் நெல்லூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஐதராபாத் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி சொகுசுப் பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    நந்தியால் மாவட்டத்தில் ஸ்ரீவெல்லாமெட்டா அருகே தனியார் பேருந்து அதி வேகத்தில் சென்று கொண்டிருந்த போது பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் உயிருடன் எரிந்தனர். பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து மற்ற பயணிகள் பாதுகாப்பாக வெளியேறினர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

    • ஆம்புலன்ஸ் நெரிசலில் சிக்கி, முன்னோக்கி செல்ல முடியாமல் தவித்தது.
    • காவல்துறை மற்றும் உயர்மட்ட அதிகாரிகள், பவானியின் இந்த அர்ப்பணிப்பு உணர்வைப் பாராட்டி கவுரவித்துள்ளனர்.

    ஆந்திர மாநிலம், ரங்கம்பேட்டை காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணியாற்றி வருபவர் ஜெயா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது விடுமுறை நாளில், கைக்குழந்தையுடன் காக்கிநாடா- சாமர்லகோட்டா சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தார்.

    அப்போது, அந்தச் சாலையில் எதிர்பாராத விதமாக மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தன.

    இந்தநிலையில், அந்த வழியாக வந்த இரு ஆம்புலன்ஸ்கள் நெரிசலில் சிக்கி, முன்னோக்கி செல்ல முடியாமல் தவித்தன. சைரன் ஒலித்தும் வாகனங்கள் நகர முடியாத சூழல் நிலவியது.

    இதை கவனித்த ஜெயா, தான் பணியில் இல்லை என்பதை பொருட்படுத்தாமல், கையில் தனது கைக்குழந்தையை ஏந்தியபடியே உடனடியாக களத்தில் இறங்கினார்.

    சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை, ஒரு கையில் குழந்தையை வைத்துக்கொண்டு, மறு கையால் போக்குவரத்தைச் சீர்செய்தார்.

    வாகனங்களை லாவகமாக அப்புறப்படுத்தி, ஆம்புலன்ஸ் செல்ல தனி வழியை ஏற்படுத்திக் கொடுத்தார். அவரது இந்தச் செயலால் ஆம்புலன்ஸ்கள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடிந்தது.

    இந்தக் காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச காவல்துறை மற்றும் உயர்மட்ட அதிகாரிகள், ஜெயாவின் இந்த அர்ப்பணிப்பு உணர்வைப் பாராட்டி கவுரவித்துள்ளனர்.

    ஜெயாவின் இந்த நெகிழ்ச்சியான செயல், சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

    • சேவல் பந்தயத்தில் கலந்து கொண்டவர்கள் நல்ல நேரம் ஜாதகம் பார்த்த பிறகு தங்களது சேவல்களை பந்தயத்திற்கு விட்டனர்.
    • சேவல்களின் கால்களில் கூர்மையான கத்தி கட்டப்பட்டு சேவல்கள் ஆக்ரோஷமாக ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன.

    சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சேவல் பந்தயம் களைகட்டியது.

    ஆந்திராவில் மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, டாக்டர் அம்பேத்கர் கோனசீமா, கிருஷ்ணா, போலவரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சேவல் பந்தயம் நடந்தது.

    பந்தயங்களில் கலந்து கொண்ட சேவல்கள் மீது பார்வையாளர்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பந்தயம் கட்டினர்.

    ஆந்திராவில் சேவல் பந்தயத்திற்கு மாநில அரசு தடை விதித்து இருந்தாலும் அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் பந்தயத்தை தொடங்கி வைப்பதால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    பந்தயத்தில் வெற்றி பெறும் சேவல் உரிமையாளர்களுக்கு கார்கள், பைக்குகள், தங்கம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.

    கிருஷ்ணா மாவட்டத்தில் பந்தயம் கட்டும் பணத்தை எந்திரங்கள் மூலம் எண்ணப்பட்டது. சேவல் பந்தயத்தில் கலந்து கொண்டவர்கள் நல்ல நேரம் ஜாதகம் பார்த்த பிறகு தங்களது சேவல்களை பந்தயத்திற்கு விட்டனர்.

    சேவல்களின் கால்களில் கூர்மையான கத்தி கட்டப்பட்டு சேவல்கள் ஆக்ரோஷமாக ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன. கத்தி வெட்டுப்பட்டு சில பந்தய சேவல்கள் சம்பவ இடத்திலேயே இறந்தன.

    கிழக்கு வாதவரி மாவட்டம், வெங்கட்ராமய்யா பகுதியில் நேற்று நடந்த சேவல் சந்தையில் குடிவாடா பிரபாகர் மற்றும் ராஜமுந்தி ரமேஷ் சேவல்கள் மோதிக்கொண்டன. இதில் ராஜமுந்திரி ரமேஷின் சேவல் வெற்றி பெற்றது. அவருக்கு ரூ.1.53 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

    நேற்று ஒரே நாளில் தெலுங்கு மாநிலங்களில் நடந்த சேவல் பந்தயத்தில் ரூ .100 கோடிக்கு மேல் பந்தயம் நடந்ததாக பந்தைய போட்டியாளர்கள் தெரிவித்தனர்.

    • உணவு அடுக்கி வைத்து இருந்த அறையில் கண்ணை கட்டிய துணியை அவிழ்த்து விட்டனர்.
    • பல்வேறு இடங்களில் புதுமாப்பிள்ளைகளுக்கு 100-க்கும் மேற்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டன.

    ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் நர்சிப்பட்டினம், சாந்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவரது மனைவி கலாவதி. இவர்களின் மகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    மருமகனுக்கு பல்வேறு வகையான உணவுகளை சமைத்து பரிமாற கலாவதி முடிவு செய்தார். அதன்படி நேற்று ஆடு, கோழி, முட்டை, மீன்கள், இனிப்பு வகைகள், கார வகைகள் என 290 வகையான உணவுகளை சமைத்து அறை முழுவதும் பரப்பி வைத்திருந்தனர். மருமகனுக்கு பிரமிப்பு ஏற்படுத்துவதற்காக அவரது கண்ணை துணியில் கட்டி அழைத்து வந்தனர்.

    உணவு அடுக்கி வைத்து இருந்த அறையில் கண்ணை கட்டிய துணியை அவிழ்த்து விட்டனர். 290 வகையான உணவு வகைகளை கண்ட மருமகன் என்ன செய்வது என்று தெரியாமல் அசந்து போனார். இதேபோல் பல்வேறு இடங்களில் புதுமாப்பிள்ளைகளுக்கு 100-க்கும் மேற்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டன. 

    • வரும் 12-ம் தேதி காலை 10 மணி 17 நிமிடங்களுக்கு பி.எஸ்.எல்.வி சி-62 விண்ணில் ஏவப்பட உள்ளது.
    • பி.எஸ்.எல்.வி சி 62 மூலம் விவசாயம், ராணுவம் மற்றும் தட்பவெப்ப நிலைகள் அறியமுடியும் என்றார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வரும் 12-ம் தேதி பி.எஸ்.எல்.வி சி-62 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

    இதையடுத்து இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் 3 விஞ்ஞானிகள் இன்று காலை ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர். அப்போது பி.எஸ்.எல்.வி சி-62 விண்கல மாதிரியை ஏழுமலையான் காலடியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    சாமி தரிசனத்திற்கு பின் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:

    கடந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி சி-61 தோல்வியடைந்தது.

    வரும் 12-ம் தேதி காலை 10 மணி 17 நிமிடங்களுக்கு பி.எஸ்.எல்.வி சி-62 விண்ணில் ஏவப்பட உள்ளது.

    இந்த விண்கலம் வெற்றிகரமாக ஏவவேண்டும் என்பதற்காக ஏழுமலையானை தரிசனம் செய்தோம்.

    பி.எஸ்.எல்.வி சி 62 மூலம் விவசாயம், ராணுவம் மற்றும் தட்பவெப்ப நிலைகள் அறியமுடியும்.

    இந்த ஆண்டு இறுதியில் குலசேகரபட்டினத்தில் இருந்து விண்கலங்களை விண்ணில் செலுத்த தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.

    2027-ம் ஆண்டு சூரியனை ஆய்வுசெய்ய செயற்கைக்கோளை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும்.

    அதற்கு முன் 3 முறை ஆளில்லாத விண்கலங்களை சூரியனை ஆய்வுசெய்ய அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

    இந்த ஆண்டில் முதல்முறையாக இமாதம் 12-ம் தேதி இஸ்ரோ விண்கலத்தை விண்ணில் செலுத்த உள்ளது.

    இதன்மூலம் இதுவரை பல்வேறு வெளிநாடுகளின் 442 விண்கலங்களை விண்ணில் செலுத்திய பெருமை இஸ்ரோவுக்கு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

    • கடலில் கலக்கும் தண்ணீருக்கான இரண்டு மாநிலங்களுக்கு இடையே சர்ச்சைக்கான தேவை என்ன?.
    • சிலர் தண்ணீரை விரும்புவதில்லை. சர்ச்சைகளை விரும்புகிறார்கள்.

    ஆற்று நீர் பங்கீடு தொடர்பாக தெலுங்கானாவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடர்ந்து பிஆர்எஸ் கட்சி மீது குற்றம்சாட்டி வருகிறது. மேலும், ஆந்திராவுடன் இணைந்திருந்தபோதும் கூட அநீதி இழைக்கப்பட்டது எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ராயலசீமா நீர்ப்பாசன திட்டம் குறித்து குற்றம்சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில், நதி நீர் தொடர்பாக ஆந்தியா- தெலுங்கானா இடையே சர்ச்சை தேவையில்லை என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

    கடலில் கலக்கும் தண்ணீருக்கான இரண்டு மாநிலங்களுக்கு இடையே சர்ச்சைக்கான தேவை என்ன?. சிலர் தண்ணீரை விரும்புவதில்லை. சர்ச்சைகளை விரும்புகிறார்கள். போலாவரம் திட்டம் நிறைவடைந்ததும் தெலுங்கான நீரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    முந்தைய ஒய்.எஸ்.ஆர்.சி.பி. அரசாங்கத்தின் போது செய்யப்பட்ட 'தவறுகள்' சரிசெய்யப்பட்டுவிட்டன. வருவாய் தொடர்பான சர்ச்சைகளை தீர்க்க கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆனது. சிலர் பொய்களைப் பரப்பி வருகிறார்கள். தவறுகளைச் செய்துவிட்டு, பழியை மற்றவர்கள் மீது சுமத்த முயற்சிக்கிறார்கள்.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    • தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தரநிலைகளுக்கு முழுமையாக இணங்கி செயல்படுத்தப்பட்டது.
    • வருகிற 11-ந்தேதிக்குள் மேலும் 2 கின்னஸ் உலக சாதனைகள் படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநிலத்தில் பெங்களூரு-கடப்பா-விஜயவாடா நெடுஞ்சாலை வழித்தடத்தில் 24 மணி நேரத்தில் 28.95 கி.மீ தூரத்திற்கு சாலை அமைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஆந்திர முதலமைச்ர் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    ஆந்திராவில் உள்ள பெங்களூரு-கடப்பா-விஜயவாடா பொருளாதார வழித்தடத்தில் (என்.எச்.544ஜி) 24 மணி நேரத்திற்குள் தொடர்ச்சியாக 28.95 கிலோமீட்டர் தூரத்திற்கு 10,675 மெட்ரிக் டன் கான்கிரீட் சாலை அமைத்து 2 கின்னஸ் உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.

    இந்த அசாதாரண சாதனை, இந்திய அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை, மத்திய மந்திரி நிதின் கட்கரியின் கீழ் உலகத் தரம் வாய்ந்த நெடுஞ்சாலை உள்கட்டமைப்புக்கு அளிக்கப்படும் தொடர்ச்சியான உந்துதல், மற்றும் பொறியாளர்கள், தொழிலாளர்கள்,களக் குழுக்களின் சிறப்பான அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.

    இது கடுமையான தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தரநிலைகளுக்கு முழுமையாக இணங்கி செயல்படுத்தப்பட்டது.

    ஆந்திராவில் உள்ள இந்த முக்கிய வழித்தடத்தின் தொகுப்புகள் 2 மற்றும் 3-ல், வருகிற 11-ந்தேதிக்குள் மேலும் 2 கின்னஸ் உலக சாதனைகள் படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கு எங்களின் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இந்தியா கட்டமைக்கிறது. ஆந்திரப் பிரதேசம் சாதிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 துணை செயற்கைக்கோள்களும் ராக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
    • சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ வருகிற 12-ந்தேதி பி.எஸ்.எல்.வி-சி 62 ராக்கெட் விண்ணில் ஏவ உள்ளது.

    இதுதொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பி.எஸ்.எல்.வி-சி62 திட்டத்தின் ராக்கெட்டை வருகிற 12-ந்தேதி காலை 10:17 மணிக்கு ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த ஏவுதலை ஏவுதல் காட்சிக் கூடத்தில் இருந்து பொதுமக்கள் பார்க்க ஆன்லைனில் lvg.shar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட் மூலம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) உருவாக்கப்பட்ட மேம்பட்ட புவி கண் காணிப்பு-ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் செயற்கைக் கோளான இ.ஒ.எஸ்-என்1 (அன்வேஷா ) விண்ணில் ஏவப்படுகிறது. இது பட மெடுக்கும் செயற்கைக் கோள் ஆகும்.

    மேலும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட் ரேட்டர் என்ற சிறிய செயற்கைக்கோள் மற்றும் இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெ ரிக்கா முழுவதும் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 துணை செயற்கைக்கோள்களும் ராக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

    ×