என் மலர்tooltip icon

    இந்தியா

    • பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது.
    • கடந்த ஒரு வார புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை சூறாவளி காற்றால் பொதுமக்கள், மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் டிட்வா புயல் சென்னை அருகே மையம் கொண்டிருந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பரவலாக சாரல் மழை பெய்தது. ராமநாதபுரம் நகர், பரமக்குடி, சாயல்குடி, மண்டபம், தங்கச்சிமடம், ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    ராமேசுவரத்தில் இன்று காலை 6 மணிக்கு திடீரென கனமழை பெய்தது. 10 மணி வரை நீடித்த மழையால் முக்கிய சாலைகள், அரசு மருத்துவமனை முன்பு தண்ணீர் தேங்கியது. பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் அவதியடைந்தனர்.

    மேலும் நேற்று கடல் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயல் காரணமாக சூறாவளி காற்று வீசியது. இதனால் பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது.

    இதன் காரணமாக 8-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம், பாம்பன் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த ஒரு வார புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.5 கோடி கணக்கில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் மத்திய அரசு ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பியது.
    • அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு ஆய்வு செய்த பிறகு பாதிப்பு விவரங்கள் தெரியவரும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் இன்று உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு பேரணியை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தஞ்சையில் எப்போதெல்லாம் மழையால் பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக ஓடிவந்து ஆய்வு செய்து நிவாரணம் அளிப்பதில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெய்த அடை மழை காலத்தில் துணை முதலமைச்சர் விரைந்து வந்து பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தினால் தான் கொள்முதல் செய்ய முடியும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் மத்திய அரசு ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பியது.

    அந்தக் குழுவினரும் ஆய்வு செய்து அதன் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தனர். ஆனால் ஈரப்பதம் தளர்வு செய்ய முடியாது என மத்திய அரசு கூறியது. இதிலிருந்தே மத்திய பா.ஜ.க அரசு தமிழக விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருவது தெளிவாக தெரிகிறது.

    தற்போது பெய்த தொடர் மழையால் ஆங்காங்கே மழை சேதம் இருக்கிறது. இதுகுறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு ஆய்வு செய்த பிறகு பாதிப்பு விவரங்கள் தெரியவரும். அதன் அறிக்கைகள் முதலமைச்சரிடம் சமர்ப்பித்த பிறகு அவர் உரிய நடவடிக்கையை மேற்கொள்வார் என்றார்.

    • த.வெ.க. தரப்பில், ’வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் அங்கன்வாடி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
    • அது தொடர்பான விவரங்களையும் நாங்கள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வைத்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக த.வெ.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது த.வெ.க. தரப்பில், 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் அங்கன்வாடி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இது தொடர்பாக எங்களுடைய மனுவில் நாங்கள் தகவல்களை எடுத்துரைத்து உள்ளோம். ஏற்கனவே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அது தொடர்பான விவரங்களையும் நாங்கள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வைத்துள்ளோம்' என்று தெரிவிக்கப்பட்டது.

    அப்போது தலைமை நீதிபதி, 'அங்கன்வாடி ஊழியர்கள் விவகாரம் தொடர்பாக இந்த மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்களை விசாரிக்கிறோம்' என தெரிவித்து வழக்கை 4-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    வருகிற 4-ந்தேதி தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்குகள் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

    • கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அர்ஜுனன் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார்.

    கோபி:

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று இரவு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நல்லகவுண்டன் பாளையம் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

    இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்துக்கு கோபி அருகே உள்ள கொண்டையம்பாளையத்தை சேர்ந்த அ.தி.மு.க தொண்டரான அர்ஜுனன் (43) என்பவரும் வந்திருந்தார். அவர் கூட்டம் நடந்த இடத்தின் அருகே உள்ள கோபி -சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேச்சை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

    அப்போது அர்ஜுனன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அர்ஜுனன் பரிதாபமாக இறந்தார்.

    மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அர்ஜுனன் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இறந்த அர்ஜுனன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலம் எடப்பாடியில் இருந்து கார் மூலமாக கோபிசெட்டிபாளையம் வந்தார். பின்னர் அவர் நேரடியாக கோபி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அர்ஜுனன் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் அர்ஜுனன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி மாவட்ட கட்சி சார்பாக ரூ.10 லட்சத்திற்கான வரைவோலையை வழங்கினார். கட்சி தலைமை சார்பாக மேலும் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார்.

    அப்போது முன்னாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • சட்ட விதியை அ.தி.மு.க. தொண்டர்கள் எல்லோரையும் கேட்டுத்தான் மாற்றினாரா?
    • 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யும் போது தொகுதி மக்களிடம் கேட்டு தான் தகுதி நீக்கம் செய்தாரா?

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியின் இல்ல விழாவிற்கு வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி. வி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய டிசம்பர் 31-ந்தேதி வரை உள்ளது. அதற்குள் கூட்டணி குறித்து அறிவிக்க வேண்டும் என்று சட்டம் ஏதும் போட்டிருக்கிறீர்களா? கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளனர். உறுதியான பின்பு கூட்டணி குறித்து தெரிவிப்பேன்.

    துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் அது எடப்பாடி பழனிசாமிக்கு தான் கொடுக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். 2017-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை அவர் செய்த துரோகங்களுக்கு ஆண்டவன் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார். வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் மூலம் அவரது துரோகத்திற்கு இறுதி தீர்ப்பு எழுதப்படும்.

    2017-ம் ஆண்டு தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எடப்பாடிக்கு ஆதரவாக இருந்து அவரை முதல்வராகிய 18 எம்.எல்.ஏ.க்கள் இவரால் ஜெயித்தவர்கள் அல்ல. இவருடைய அடையாளத்தால் அவர்கள் ஜெயிக்கவில்லை. ஆனால் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யும் போது தொகுதி மக்களிடம் கேட்டு தான் தகுதி நீக்கம் செய்தாரா?

    அதேபோல் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டுவந்த சட்ட விதிகளை எல்லாம் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு தன்னை சுற்றி சில கைத்தடிகளை வைத்துக்கொண்டார். சட்ட விதியை அ.தி.மு.க. தொண்டர்கள் எல்லோரையும் கேட்டுத்தான் மாற்றினாரா? இன்றைக்கு அ.தி.மு.க என்ற கட்சியை இல்லாமல் செய்து இரட்டை இலை சின்னம் கையில் இருக்கிறது என்ற அகம்பாவம், ஆணவம், பதவி வெறியில் பேசிக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    அ.தி.மு.க.வை இன்று எடப்பாடி பழனிசாமி மிகவும் பலவீனப்படுத்தி ஒரு வட்டார கட்சியாகவும் குடும்ப கட்சியாகவும் மாற்றி வருகிறார். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை என்றார்.

    • நீர்வரத்து பாதுகாப்பான அளவில் உள்ளதால் 2 நாட்களுக்கு பிறகு இன்று அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோவில் ஆகியவை முக்கிய சுற்றுலாத்தலங்களாக உள்ளது. தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் அருவியில் குளிக்க வருகின்றனர்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அருவிக்கு சென்று குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    இந்நிலையில் இன்று மழைப்பொழிவு குறைந்து பஞ்சலிங்க அருவியின் நீர்வரத்து பாதுகாப்பான அளவில் உள்ளதால் 2 நாட்களுக்கு பிறகு இன்று அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். 

    • பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் தொடங்கியது
    • வருகிற 19-ந் தேதி வரை இந்த பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நடைபெறுகிறது.

    பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் இன்று (டிசம்பர் 1) தொடங்கியது.

    இந்நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்ட நிலையில் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. SIR உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் மீண்டும் முழக்கமிட்ட நிலையில் மக்களவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது

    வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது. விடுமுறை நாட்கள் நீங்கலாக 15 அமா்வுகள் இந்த கூட்டத்தொடரில் இடம்பெற உள்ளன.

    கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடை பெற்ற மழைக்கால கூட்டத் தொட ரில் பீகாா் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களுக்கான விவாதம் குறித்த எதிர்க்கட்சிகளின் அமளியால் பாதிக்கப்பட்டது.

    மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையின் செயல்பாடு 31 சதவீதமாகவும், மேல்-சபையின் செயல்பாடு 39 சதவீதமாகவும் இருந்தது. குளிா்கால கூட்டத்தொடரில் சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, இந்திய உயா் கல்வி ஆணையம் அமைப் பது, பெருநிறுவன சட்டம் மற்றும் பங்குச்சந்தை உள்ளிட்ட 10 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    10 மசோதாக்களில் 4 நிதித்துறை தொடர்புடையவை, 2 சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்புடையவை. கல்வி, எரிசக்தி, போக்குவரத்து துறை, உள்துறை ஆகியவை தொடர்பான தலா ஒரு மசோதாவும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கடந்த 4 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது.
    • செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    டிட்வா புயலானது சென்னையை நெருங்கி வருவதால் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்துவந்த நிலையில் அதிகாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

    கடந்த 4 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

    இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பலத்த காற்றுடன் எழும்பூர், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
    • வேலைக்கு செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    டிட்வா புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நாட்களில் மழை ஏதுமின்றி வானம் மேகமூட்டத்துடனும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது.

    இந்த நிலையில், டிட்வா புயல் வலுவிழந்து கரையை கடப்பதால் மழை தொடர்பான எந்தவித அறிவிப்பும் வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து அறிவிக்கப்படாத நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை விடாது பெய்து வருகிறது.

    பலத்த காற்றுடன் எழும்பூர், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    இதனிடையே, சென்னையில் காற்றழுத்தம் நெருங்க நெருங்க மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது.
    • விடுமுறை நாட்கள் நீங்கலாக 15 அமா்வுகள் இந்த கூட்டத்தொடரில் இடம்பெற உள்ளன.

    பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் இன்று (டிசம்பர் 1) தொடங்கியது. வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது. விடுமுறை நாட்கள் நீங்கலாக 15 அமா்வுகள் இந்த கூட்டத்தொடரில் இடம்பெற உள்ளன.

    12 மாநிலங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.), டெல்லி குண்டு வெடிப்பு, வாக்கு திருட்டு, டெல்லி காற்று மாசு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல் வேறு பிரச்சனைகள் குறித்து அவையில் விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு விவாதிக்க மறுக்கும் என்பதால் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் வாக்காளர் தீவிர திருத்தம் தொடர்பான பிரச்சனையை கிளப்புவார்கள்.

    கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடை பெற்ற மழைக்கால கூட்டத் தொட ரில் பீகாா் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களுக்கான விவாதம் குறித்த எதிர்க்கட்சிகளின் அமளியால் பாதிக்கப்பட்டது. மழைக்கால கூட்டத்தொட ரில் மக்களவையின் செயல்பாடு 31 சதவீதமாகவும், மேல்-சபையின் செயல்பாடு 39 சதவீதமாகவும் இருந்தது. குளிா்கால கூட்டத்தொடரில் சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, இந்திய உயா் கல்வி ஆணையம் அமைப் பது, பெருநிறுவன சட்டம் மற்றும் பங்குச்சந்தை உள்ளிட்ட 10 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    10 மசோதாக்களில் 4 நிதித்துறை தொடர்புடையவை, 2 சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்புடையவை. கல்வி, எரிசக்தி, போக்குவரத்து துறை, உள்துறை ஆகியவை தொடர்பான தலா ஒரு மசோதாவும் அடங்கும்.

    வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாடப்படுவதால் அதன் வரலாறு குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாடலில் இருந்து முக்கிய வரிகள் கடந்த 1937-ம் ஆண்டு நீக்கப்பட்டதே இந்தியாவின் பிரிவினைக்கு காரணம் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி இருந்தார். வந்தே மாதரம் பாடலின் வரலாறு, சுதந்திர இயக்கத்தில் அதன் பங்கு குறித்து இளைஞர்களுக்கு நினைவூட்டுவதற்காக விவாதம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நமது அனைவரது நோக்கமும் இந்திய தேசத்தின் வளர்ச்சியை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும்.
    • தோல்வியை ஜீரணிக்க முடியாத சில கட்சிகள் உள்ளன.

    பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதற்கு முன்னதாக பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * இந்தியா எப்போதும் ஜனநாயகத்தை போற்றும் நாடு.

    * பீகாரில் நடந்து முடிந்து தேர்தல் நாட்டின் ஜனநாயகத்தின் வலிமையை உலகுக்கு கூறியுள்ளது.

    * நமது அனைவரது நோக்கமும் இந்திய தேசத்தின் வளர்ச்சியை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும்.

    * குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும்.

    * இந்த கூட்டத்தொடர், இந்த நாடாளுமன்றம் நாட்டைப் பற்றி என்ன நினைக்கிறது, நாட்டிற்கு என்ன செய்ய விரும்புகிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்க்கட்சிகளும் அதன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அவர்கள் இதுபோன்ற பிரச்சினைகளை, வலுவான பிரச்சினைகளை எழுப்ப வேண்டும்.

    * தோல்வியின் ஏமாற்றத்தை அவர்கள் கடக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, தோல்வியை ஜீரணிக்க முடியாத சில கட்சிகள் உள்ளன. பீகார் முடிவுகள் வந்து இவ்வளவு நாள் கடந்துவிட்டதால், அவர்கள் கொஞ்சம் அமைதியடைந்திருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் நேற்று நான் கேள்விப்பட்டதிலிருந்து, தோல்வி அவர்களை தொந்தரவு செய்ததாகத் தெரிகிறது.

    * விரக்தி மன நிலையில் இருந்து வெளியே வந்து பணியாற்றுமாறு எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்தார். 



    • தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான சூழலே சில நாட்களாக நீடித்து வருகிறது. கடந்த வாரமும் இதே நிலை நீடித்தாலும், வார இறுதிநாளான கடந்த 29-ந்தேதி ஒரு சவரன் 95 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் தங்கம் மீண்டும் உச்சத்திற்கு சென்றது.

    இந்த நிலையில், டிசம்பர் மாத தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,070-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,560 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 196 ரூபாய்க்கும் கிலோவுக்கு நான்காயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    30-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400

    29-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400

    28-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400

    27-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400

    26-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    30-11-2025- ஒரு கிராம் ரூ.192

    29-11-2025- ஒரு கிராம் ரூ.192

    28-11-2025- ஒரு கிராம் ரூ.183

    27-11-2025- ஒரு கிராம் ரூ.180

    26-11-2025- ஒரு கிராம் ரூ.176

    ×