என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி மிகவும் பலவீனப்படுத்தி வருகிறார்- டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு
- சட்ட விதியை அ.தி.மு.க. தொண்டர்கள் எல்லோரையும் கேட்டுத்தான் மாற்றினாரா?
- 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யும் போது தொகுதி மக்களிடம் கேட்டு தான் தகுதி நீக்கம் செய்தாரா?
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியின் இல்ல விழாவிற்கு வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி. வி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய டிசம்பர் 31-ந்தேதி வரை உள்ளது. அதற்குள் கூட்டணி குறித்து அறிவிக்க வேண்டும் என்று சட்டம் ஏதும் போட்டிருக்கிறீர்களா? கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளனர். உறுதியான பின்பு கூட்டணி குறித்து தெரிவிப்பேன்.
துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் அது எடப்பாடி பழனிசாமிக்கு தான் கொடுக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். 2017-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை அவர் செய்த துரோகங்களுக்கு ஆண்டவன் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார். வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் மூலம் அவரது துரோகத்திற்கு இறுதி தீர்ப்பு எழுதப்படும்.
2017-ம் ஆண்டு தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எடப்பாடிக்கு ஆதரவாக இருந்து அவரை முதல்வராகிய 18 எம்.எல்.ஏ.க்கள் இவரால் ஜெயித்தவர்கள் அல்ல. இவருடைய அடையாளத்தால் அவர்கள் ஜெயிக்கவில்லை. ஆனால் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யும் போது தொகுதி மக்களிடம் கேட்டு தான் தகுதி நீக்கம் செய்தாரா?
அதேபோல் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டுவந்த சட்ட விதிகளை எல்லாம் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு தன்னை சுற்றி சில கைத்தடிகளை வைத்துக்கொண்டார். சட்ட விதியை அ.தி.மு.க. தொண்டர்கள் எல்லோரையும் கேட்டுத்தான் மாற்றினாரா? இன்றைக்கு அ.தி.மு.க என்ற கட்சியை இல்லாமல் செய்து இரட்டை இலை சின்னம் கையில் இருக்கிறது என்ற அகம்பாவம், ஆணவம், பதவி வெறியில் பேசிக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
அ.தி.மு.க.வை இன்று எடப்பாடி பழனிசாமி மிகவும் பலவீனப்படுத்தி ஒரு வட்டார கட்சியாகவும் குடும்ப கட்சியாகவும் மாற்றி வருகிறார். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை என்றார்.






