என் மலர்
இந்தியா
- 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
- சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான டிஜிபி பிரணாப் குமார் மொஹந்தி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஏடிஜிபி அருண் சக்ரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் தட்சினகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கு பிரசித்திபெற்ற மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது.
கோவில் அருகே, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளின் உடல்கள் புதைக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும் அண்மையில் பகீர் தகவல்கள் வெளியாகின.
இவ்வாறு புதைக்கப்பட்ட பெண்களின் உடல்கள் நிர்வாண நிலையிலும், கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய தூய்மை பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம்(ஜூன்) 3-ந்தேதி புகைப்பட ஆவணங்களுடன் புகார் கடிதம் அனுப்பினார்.
தனது பெயரை வெளியிடாத அந்த தூய்மை பணியாளர் மங்களூரு கோர்ட்டில் ஆஜராகி நீதிபதி முன்பு விளக்கம் அளித்தார். அப்போது அவர் தன்னுடன் சில எலும்புகளையும் கொண்டு வந்தார்.
அவர் கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
குறிப்பாக இந்த கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் நிர்வாகத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக அவர் கூறினார்.சிறப்பு புலனாய்வு குழு
இந்த விவகாரத்தில் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு, தடயவியல் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னாள் ஊழியர் நேத்ராவதி நதி படித்துறைக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் சுட்டிக்காட்டிய இடங்களில் அவர் முன்னிலையில் அகழாய்வு பணிகளை புலனாய்வு குழு மேற்கொண்டது.
அவர் குறிப்பிட்ட முதல் 5 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் எந்த எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் 6 வதாக அவர் குறிப்பிட்ட இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணையில் இது முதல் தடயமாக மாறியுள்ளது.
அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், சாட்சிகளின் பாதுகாப்பு மற்றும் ஆதாரங்களை சிதைக்கக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், தர்மஸ்தலாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான டிஜிபி பிரணாப் குமார் மொஹந்தி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஏடிஜிபி அருண் சக்ரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
- குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், 100 பேர் காயமடைந்தனர்.
- மோடி அரசாங்கம் பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கியது உலகம் நினைவில் வைத்திருக்கும்.
மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்த தேசிய புலனாய்வு முகமை (NIA) நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்தனர். அவர்கள் தங்கள் மதத்திற்காக குறிவைக்கப்பட்டனர். வேண்டுமென்றே மோசமான வழக்கு விசாரணையே விடுதலைக்குக் காரணம்.
குண்டுவெடிப்பு நடந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிமன்றம் அனைத்து குற்றம் சாட்டப்பட்டவர்களையும் ஆதாரங்கள் இல்லாததால் விடுவித்துள்ளது. மும்பை ரெயில் குண்டுவெடிப்புகளில் விடுதலையை நிறுத்தி வைக்குமாறு மோடி மற்றும் பட்னாவிஸ் அரசாங்கங்கள் விரைவாகக் கோரியதைப் போல இந்த தீர்ப்பை மேல்முறையீடு செய்யுமா?
மகாராஷ்டிராவின் மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் இதை வலியறுத்துமா? 6 பேரைக் கொன்றது யார்?
2016 ஆம் ஆண்டில், வழக்கில் அப்போதைய வழக்கறிஞர் ரோகிணி சாலியன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மென்மையாக நடந்து கொள்ளுமாறு NIA தன்னிடம் கேட்டதாகக் கூறியதை நினைவில் கொள்க.
2017 ஆம் ஆண்டில், NIA, பிரக்யாவை விடுதலை செய்ய முயற்சித்தது என்பதை நினைவில் கொள்க. அதே பிரக்யா 2019 ஆம் ஆண்டு பாஜக எம்.பி.யாக மாறினார்.
மாலேகானில் நடந்த சதித்திட்டத்தை கர்கரே கண்டுபிடித்தார். துரதிர்ஷ்டவசமாக 26/11 தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். அவரை சபித்ததாகவும், அவரது மரணம் அவரது சாபத்தின் விளைவாகும் என்றும் பாஜக எம்.பி. கூறினார்.
தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு (ATS) அதிகாரிகள் தங்கள் தவறான விசாரணைக்கு பொறுப்பேற்பார்களா? பதில் நமக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.
மோடி அரசாங்கம் பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கியது உலகம் நினைவில் வைத்திருக்கும்" என்று தெரிவித்தார்.
- இந்த மெகா திட்டத்திற்கு தோராயமாக ரூ. 22,704 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- செனாப் நதியின் நீர் ஓட்டத்தில் அணை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவலைகளைக் காரணம் காட்டி, திட்ட கட்டுமானத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை இந்தியா நிறுத்தியது.
சிந்து நதி ஒப்பந்தத்தின்படி, பியாஸ், ரவி மற்றும் சட்லஜ் நதிகளின் நீரை இந்தியா கட்டுப்படுத்துகிறது, அதே நேரத்தில் சிந்து, செனாப் மற்றும் ஜீலம் நதிகளின் நீரை பாகிஸ்தான் கட்டுப்படுத்துகிறது.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு நோக்கி பாயும் ஆறுகளில் ஒரு பகுதியை இந்தியா தனது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம் என்று ஒப்பந்தம் கூறுகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் மீது தனது மிகப்பெரிய நீர்மின் திட்டமான 1856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சாவல்கோட் நீர்மின் திட்டத்தை கட்ட இந்தியா தயாராகி வருகிறது.
இந்த மெகா திட்டத்திற்கு தோராயமாக ரூ. 22,704 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் 1980களிலேயே தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் பாகிஸ்தானின் எதிர்ப்பு மற்றும் பல்வேறு தொழில்நுட்ப காரணங்கள், நடைமுறை சிக்கல்களால் இந்த திட்டம் 40 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது.
செனாப் நதியின் நீர் ஓட்டத்தில் அணை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவலைகளைக் காரணம் காட்டி, திட்ட கட்டுமானத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் உடன் மோதல் நிலவுவதால் இதை பயன்படுத்தி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
தேசிய நீர்மின் கழகம் (NHPC) இந்த திட்டத்திற்கான டெண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஏலங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 10 ஆகும். இந்த திட்டம் NHPC மற்றும் ஜம்மு காஷ்மீரின் மின் மேம்பாட்டு கழகத்தின் கூட்டு முயற்சியாகும்.
இந்த திட்டம் 847 ஹெக்டேர் வன நிலத்தை அழிக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வன ஆலோசனை குழு, திட்ட கட்டுமானத்திற்காக சுமார் 3000 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வன நிலத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பெங்களூருவைச் சேர்ந்த அவரது ரசிகர்கள் ஏராளமானோர் சர்ச் தெருவில் குவியத் தொடங்கினர்.
- யூனஸ் ஸாரோ போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பெங்களூரு:
ஜெர்மனியை சேர்ந்தவர் யூனஸ் ஸாரோ. இன்ஸ்டாகிராமில் ஏராளமான சாகச வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் 20 மில்லியன் பார்வையாளர்களை வைத்துள்ளார்.
இந்த நிலையில் இவர் பெங்களூரு சர்ச் தெருவில் போக்குவரத்து மற்றும் மக்கள் நிறைந்து காணப்படும் பகுதியில் நேற்று மாலை ஒரு சாகச வீடியோ எடுக்கப் போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த பெங்களூருவைச் சேர்ந்த அவரது ரசிகர்கள் ஏராளமானோர் சர்ச் தெருவில் குவியத் தொடங்கினர்.
இதுபற்றி தெரிய வந்ததும் கப்பன்பார்க் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் யூனஸ் ஸாரோவை அனுமதியின்றி படம் எடுக்க கூடாது என்றும் போக்குவரத்து நிறைந்த பகுதியில் கூட்டத்தை கூட்டுவது சட்டப்படி தவறு என்றும் தெரிவித்தனர். இதையடுத்து யூனஸ் ஸாரோ போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் யூனஸ் ஸாரோவை கைது செய்தனர். பின்னர் அங்கிருந்த கூட்டத்தை கலைத்தனர். கூட்டம் கலைந்து சென்றதும் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 11 பேர் பலியானதை அடுத்து அனுமதியின்றி கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 112 என்ற போலீசாரின் அவசர அழைப்புக்கு வந்த தகவலின் அடிப்படையில் இங்கு விரைந்து வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கப்பட்டது என்றனர்.
- பெரும்பாலான சிலைகள் சென்னை கொசப்பேட்டையில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.
- 10 அடிக்கு மிகாமலேயே விநாயகர் சிலைகளை தயாரித்து வருவதாக சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை:
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 27-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் லட்சக்கணக்கான விநாயகர் சிலைகள் அன்றைய தினம் பூஜைக்காக வைக்கப்படுகின்றன. சென்னையில் மட்டும் பல்லாயிரக்கணக்கான சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது.
சென்னையில் வைக்கப்படும் பெரிய விநாயகர் சிலைகள் வாலாஜாபாத், கடலூர் உள்ளிட்ட இடங்களில் தயாரிக்கப்பட்டு அங்கிருந்தே கொண்டு வரப்படுகின்றன. இவைகளில் பெரும்பாலான சிலைகள் சென்னை கொசப்பேட்டையில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.
இது தொடர்பாக விநாயகர் சிலைகளை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள சத்திய நாராயணன் என்பவர் கூறும்போது, முதல்கட்டமாக வாலாஜாபாத்தில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் விற்பனைக்கு வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
கொசப்பேட்டையில் சாலையில் வைத்தே சிலைகளை விற்பனை செய்வதால், வெயில், மழையால் பாதிக்காத வகையில் பிரத்யேகமான பெரிய கவர் போட்டே மூடி வைப்பதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இது தவிர எண்ணூர் மற்றும் எர்ணாவூரிலும் விநாயகர் சிலைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சென்னை மாநகரில் பல இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள், பல்வேறு பாகங்களாக எடுத்து வரப்பட்டு மேற்கண்ட இடங்களில் வைத்தே இறுதி வடிவம் பெறுகின்றன.
எண்ணூர், எர்ணாவூர் ஆகிய 2 இடங்களிலும் 800-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளின் பாகங்களை ஒன்று சேர்த்து வர்ணம் பூசும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் வழிமுறைகளை கடைபிடித்து 10 அடிக்கு மிகாமலேயே விநாயகர் சிலைகளை தயாரித்து வருவதாக சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
- மருத்துச் சேவைகள் மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த ஆலோசனைகள் சிறப்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு வழங்கப்பட உள்ளன.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2021-ம் ஆண்டு நமது திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற உன்னதமான நோக்கத்தை நமது திட்டங்கள் வழியாகச் செயல்வடிவத்தில் கொண்டுவந்து, தமிழ்நாட்டை அனைத்துத் துறையிலும் முன்னேறிய மாநிலமாக உயர்த்திக் காட்டியிருக்கிறோம்.
அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்டத்து வளர்ச்சி, அனைத்துச் சமூக வளர்ச்சி என்ற அடிப்படையில், ஒவ்வொரு மனிதரின் தேவைகள், கோரிக்கைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைச் செய்து தரும் வகையில், அனைத்துத் திட்டங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 ஆகிய திட்டங்களைத் தொடர்ந்து, மருத்துவச் சேவைகளைக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ணத்தைச் செயல்வடிவமாக்க, பல்வேறு ஆய்வுக் கூட்டங்களுக்குப் பிறகு, ஒரு திட்டத்தை உருவாக்கினோம்.
அதனடிப்படையில், மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர், கடந்த 21.04.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், "உயர் மருத்துவ சேவைகள் வழங்க ரூ.12.78 கோடி செலவில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்" என்று அறிவித்தார். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, எதிர்வரும் ஆகஸ்ட் 2-ஆம் நாளன்று "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாம்களை, சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்க உள்ளேன்.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள இந்தச் சிறப்பு மருத்துவ முகாம்களில் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1164 முகாம்களும், ஒரு மண்டலத்திற்கு ஒருமுகாம் வீதம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்கள் வீதம் மக்கள்தொகை 10 லட்சத்திற்குக் குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும் என மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன.
இம்முகாம்கள் சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரக பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்பட உள்ளன. 40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இம்முகாம்களில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன. உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிக்கல்வி துறை, உயர்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரி வளாகங்களில் இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இம்முகாம்களில் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் அனைத்துப் பயனாளிகளுக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முழுமையான ரத்த அணுக்களின் எண்ணிக்கை, இரத்த சர்க்கரை, சிறுநீரகச் செயல்பாட்டு பரிசோதனைகள் (யூரியா, கிரயாட்டினின்) செய்யப்பட்டு, மருத்துவ முகாமிலேயே பயனாளிகளின் பரிசோதனை விவரங்கள் அவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக உடனடியாக தெரிவிக்கப்படும்.
அனைத்துப் பயனாளிகளுக்கும் கண், காது, மூக்கு (ம) தொண்டை மற்றும் பல் மருத்துவச் சேவைகள் வழங்கப்படவுள்ளது. மேலும், பொது மருத்துவ நிபுணரின் அறிவுறுத்தலின்படி எக்ஸ்-ரே, எக்கோகார்டியோகிராம், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் (ம) மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளன.
இம்முகாமில் பங்கு கொள்ளும் பயனாளர்களுக்குக் கீழ்க்கண்ட மருத்துச் சேவைகள் மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த ஆலோசனைகள் சிறப்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு வழங்கப்பட உள்ளன.
பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், இயன்முறை மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு நோய் மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம் பரிசோதனைகள் மற்றும் மருத்துவச் சேவைகள் மட்டுமின்றி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகாரச் சான்றிதழ் இம்முகாமிலேயே வழங்கப்பட உள்ளன. இம்முகாம்களின் விரிவான தரவுத் தொகுப்பு, தொடர் கண்காணிப்பு மற்றும் பின்தொடர் சிகிச்சை நடவடிக்கைகள், நவீன சுகாதார மேலாண்மைத் தகவல் முறைமை வாயிலாகக் கண்காணிக்கப்பட உள்ளன.
ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு, பெண்களுக்கான கருப்பை வாய்ப்புற்று (ம) மார்பக புற்றுநோய் ஆகியவற்றை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவச் சேவைகள் நவீன சுகாதார மேலாண்மைத் தகவல் முறைமை மூலம் கண்காணிக்கப்படும் இம்முழு உடல்பரிசோதனை முகாமானது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக உயர்தரமான மருத்துவச் சேவைகள் பொதுமக்களுக்கு அவர்கள் வாழுமிடங்களுக்கு அருகிலேயே கிடைக்க இருக்கின்றன.
இந்த முகாமை அனைத்து பொதுமக்களும், குறிப்பாக "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் நடத்தப்படும் முதற்கட்ட பரிசோதனையின் அடிப்படையில் மருத்துவ நிபுணர்களின் விரிவான பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் இந்த முகாமில் அவசியம் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பொதுமக்கள் பலர் ‘செயலி’ மூலம் கட்சியி்ல் ஆர்வமுடன் சேர தொடங்கினர்.
- கட்சியில் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினர்.
சென்னை:
த.வெ.க.வில் 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் பல்வேறு வசதிகளுடன் 'மை டி.வி.கே.' செயலி உருவாக்கப்பட்டது. பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியை கட்சி தலைவர் விஜய் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
செயலி மூலம் 1 நொடிக்கு 18 ஆயிரம் உறுப்பினர்கள் சேர வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பூத் நிர்வாகிகளை விஜய் நேரடியாக கண்காணித்து அறிவுரை வழங்கவும் வசதிகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
முதல் 15 நாட்களுக்கு கட்சியில் உள்ள பூத் முகவர்கள், நிர்வாகிகள் இணைவதற்கும் 15 நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் இணையவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
செயலி மூலம் புதிதாக த.வெ.க.வில் இணைவதற்கு பொதுமக்களிடையே தீவிர ஆர்வம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று முதல் பொதுமக்களும் இணைந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள் பலர் 'செயலி' மூலம் கட்சியி்ல் ஆர்வமுடன் சேர தொடங்கினர். நேற்று முதல் இன்று காலை வரை சுமார் 3 லட்சம் பேர் த.வெ.க.வில் இணைந்து உள்ளனர்.
கட்சியில் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினர். த.வெ.க. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து பொதுமக்களுக்கு மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி நேர்மையான முறையில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கட்சி தலைவர் விஜய் உத்தரவின் பேரில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வலியுறுத்தி வருகிறார்.
- பிரக்யா, துறவறம் ஏற்று உலக உடைமைகளை துறந்ததால் அவரிடம் சொந்தமாக மோட்டார் சைக்கிள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
- இந்த வழக்கில் பகவான் எனக்காகப் போராடினார்.
மகாராஷ்டிராவில் 2008 செப்டம்பர் 29 அன்று மாலேகானின் பிக்கூ சௌக் மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர், முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது என்று குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், சிறப்பு புலனாய்வு நீதிமன்றம் (NIA ) இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டனர்.
குண்டுவெடிப்பு ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் பிரக்யா சிங் உடையது என நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது என்றும் குண்டுவெடிப்புக்கு 2 வருடங்கள் முன் பிரக்யா துறவறம் ஏற்று உலக உடைமைகளை துறந்ததால் அவரிடம் சொந்தமாக மோட்டார் சைக்கிள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை என NIA நீதிமன்றம் தீர்ப்பில் சுட்டிக் காட்டியது.
குண்டுவெடிப்பில் பலியான 6 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.2 லட்சமும் காயமடைந்த அனைவருக்கும் ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் வழக்கிலிருந்து விடுதலையான பிரக்யா சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "நான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதில் இருந்து என் வாழ்க்கையை சீரழிக்கும் வகையில் சித்திரவதை செய்யப்பட்டேன்.
17 ஆண்டுகள் துறவற வாழ்க்கை நடத்திய பிறகு மக்கள் என்னை பயங்கரவாதியாகக் கருதினர். நான் துறவியாக இருந்ததால் மட்டுமே உயிர் பிழைத்தேன். இந்த வழக்கில் பகவான் எனக்காகப் போராடினார்.
குறைந்த பட்சம் இந்த நீதிமன்றமாவது என் வாதத்தைக் கேட்டது. காவியை பயங்கரவாதி என்று அழைத்தவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். இந்த வழக்கில் வெற்றி பெற்றது நான் அல்ல, காவி தான். இது இந்துத்துவாவின் வெற்றி" என்று பிரக்யா கூறினார்.
- செட்டிலாக 6 மாதம் டைம் வேண்டும் என கவின் தெரிவித்ததால் அப்பா கேட்டபோது காதலிக்கவில்லை என தெரிவித்தேன்.
- சுர்ஜித் கவினை தொடர்பு கொண்டு பெண் கேட்க வாருங்கள் என அழைத்தான்.
நெல்லையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் காதலி சுபாஷினி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
* கவினும் நானும் உயிருக்கு உயிராக காதலித்தோம்.
* காதலிக்கிறாயா என எனது அப்பா கேட்டார். அப்போது இல்லை என கூறிவிட்டேன்.
* செட்டிலாக 6 மாதம் டைம் வேண்டும் என கவின் தெரிவித்ததால் அப்பா கேட்டபோது காதலிக்கவில்லை என தெரிவித்தேன்.
* அப்பாகிட்ட சுர்ஜித் இந்த தகவலை சொல்லிவிட்டான். அப்பா என்னிடம் கேட்டார்.
* சகோதரர் சுர்ஜித்துக்கு காதல் விவகாரம் தெரிந்ததால் தந்தையிடம் கூறிவிட்டார், அவர் கேட்டபோது காதலிக்கவில்லை என தெரிவித்தேன்.
* சுர்ஜித் கவினை தொடர்பு கொண்டு பெண் கேட்க வாருங்கள் என அழைத்தான்.
* உங்கள் திருமணம் முடிந்தால்தான் எனது வாழ்க்கையை திட்டமிட முடியும் எனக்கூறி சுர்ஜித் அழைத்துள்ளான்.
* கவினை தொடர்பு கொண்டு பெண் கேட்க வருமாறு சகோதரர் சுர்ஜித் கூறியது வீட்டிற்கு வந்து பேசும்போது தான் தெரிந்தது.
* அதன்பின்னர் கவினுக்கும் சுர்ஜித்தும் இடையில் என்ன விதமாக பேச்சுவார்த்தை நடந்தது எனத் தெரியவில்லை.
* 28-ந்தேதி மாலையில் தான் அவனை வரச்சொல்லி இருந்தேன். அதற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டது.
* இஷ்டத்திற்கு யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- எனக்கும் கவினுக்கும் என்ன உறவு என்பது பற்றி எனக்கு மட்டும் தான் தெரியும்.
- கவின் கொலையில் தனது தாய், தந்தையை தொடர்புபடுத்த வேண்டாம்.
நெல்லையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் காதலி சுபாஷினி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
* எனக்கும் கவினுக்கும் என்ன உறவு என்பது பற்றி எனக்கு மட்டும் தான் தெரியும்.
* கவின் கொலைக்கும் எனது தாய் - தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
* எனக்கும் கவினுக்கும் இடையிலான உறவு குறித்து தெரியாமல் தவறான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்.
* கவினும் நானும் உண்மையாக காதலித்தோம்.
* கவின் கொலையில் தனது தாய், தந்தையை தொடர்புபடுத்த வேண்டாம்.
* எனது உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- செங்கல்பட்டில் மிகப்பெரிய பஸ் நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது.
- குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
சென்னை:
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.
சென்னை பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் கட்டப்பட்டு வரும் திரு.வி.க. நகர் மற்றும் பெரியார் நகர் புதிய பஸ் நிலையம், சேத்துப்பட்டில் கட்டப்பட்டு வரும் நவீன சலவை கூடத்தில் அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
பஸ் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அந்த வகையில் பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் பஸ் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குத்தம்பாக்கம் பஸ் நிலையம் அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டில் மிகப்பெரிய பஸ் நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது. மகாபலிபுரத்தில் பஸ் நிலையம் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆவடியில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பெரியார் நகர் பஸ் நிலையம், திரு.வி.க.நகர் பஸ் நிலையத்தை செப்டம்பர் முதல் வாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
முடிச்சூர் பஸ் நிலையம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதை விரைவுபடுத்த எங்களது சட்டப் பிரிவிடம் பேசி உள்ளோம். விரைவில் அதற்கு ஒரு முடிவை ஏற்படுத்துவோம்.
ஆம்னி பஸ் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்றுதான் ஆம்னி பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இப்பொழுது அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர மறுக்கிறார்கள். குத்தம்பாக்கம் பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வரும்போது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி ஏற்படும்.
கிளாம்பாக்கம் ரெயில் நிலையப்பணிகளை விரைவுபடுத்த தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் எங்கள் செயலாளர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ரெயில் நிலையத்திற்கான தொகை ரூ.20 கோடி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கியுள்ளது. அந்த பணி விரைவுபடுத்தப்பட்டு, செப்டம்பர் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம் என்று உறுதி அளித்துள்ளார்கள்.
தி.மு.க., கூட்டணி கட்சிகளை நம்பித்தான் தேர்தலை சந்திக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்கிறார். நாங்கள் யாரையாவது கூட்டணிக்கு வருமாறு அழைக்கிறோமா? இல்லை. அவர்களது கூட்டணியில் உள்ள யாரையாவது விமர்சனம் செய்கிறோமா? எடப்பாடி பழனிசாமி மைக்கை பிடித்தாலே கம்யூனிஸ்ட்களை விமர்சனம் செய்வது, வி.சி.க.வை அழைப்பது என்று தேடித்தேடி அழைத்துக் கொண்டிருக்கிறார்.
புலிக்கு பயந்தவன்தான் தன் மேல் படுத்துக்கொள், தன் மேல் படுத்துக்கொள் என்று கூறுவான். எடப்பாடி பழனிசாமி தினமும் ஒன்று பேசிக் கொண்டிருக்கிறார்.
எங்கள் கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி கிடையாது. இந்த கூட்டணிக்கு தலைமை தாங்கும் முதல்வரை கூட்டணி கட்சிகள் நம்புகின்றன. மக்கள் நல பணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றியத்தில் முதன்மையாக இருக்கிறார். 2026-ம் ஆண்டு மீண்டும் கிரீடத்தை சூட மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
1967, 1977 போன்று 2026-ல் மாற்றம் வரும் என்று விஜய் கூறுகிறார். நிச்சயமாக மாற்றம் வரும். இன்றைக்கு அரசியலுக்கு வருகிறோம் என்று சொன்னவர் 2026-க்கு பிறகு, மீண்டும் நான் சினிமாவிற்கு செல்கிறேன் என்ற மாற்றத்தை ஏற்படுத்துவார். த.வெ.க. வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு பிரசாரத்தை தொடங்கட்டும். அந்தர் பல்டி, ஆகாச பல்டி அடித்தால் கூட, எவ்வளவு வித்தை காட்டினாலும் மக்களிடம் காசு பெறுகிற போது இறங்கி வந்துதான் ஆக வேண்டும். ஓட்டு என்ற மகத்தான சக்தி மக்களிடம் உள்ளது. அந்த மகத்தான சக்தி எங்கள் முதலமைச்சரின் பக்கம் உள்ளது. நிச்சயம் வென்று காட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் பிரகாஷ், மாநகராட்சி துணை ஆணையர் கவுசிக் கலந்து கொண்டனர்.
- விஜய் பா.ஜ.க.வை கொள்கை எதிரி என்று கூறினாலும் அவர் எப்போதும் என் தம்பிதான்.
- தி.மு.க. ஆட்சியில் எத்தகைய தவறுகள் நடக்கிறது என்பது விஜய்க்கு நன்றாக தெரியும்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் பட்டியல் நேற்று வெளியானது. இதில் நடிகை குஷ்புவுக்கு துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. துணை தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள குஷ்பு கூறியதாவது:-
இந்தப் பதவி நான் எதிர்பாராதது. எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது. இதற்காக கட்சிக்கு எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ஜ.க.வை பொறுத்தவரை முன்பு சரியான பதவி தரப்படவில்லை என்று சொல்வது ஏற்புடையதல்ல. நான் பா.ஜ.க.வில் இணைந்த உடனேயே சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்கள்.அதன்பிறகும் தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற பதவிகளை எல்லாம் வழங்கினார்கள்.
என்னைப் பொருத்தவரை பா.ஜ.க.வில் கொடுக்கும் பொறுப்பில் இருந்து தனது வேலையை அமைதியாக செய்தாலே போதும் கட்சித் தலைமை மகுடம் சூட்டி மகிழும்.
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி மாநில தலைவர் முறையான பயிற்சிகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்குவார். அதன்படி மக்களிடம் கட்சியை வளர்க்கவும் பிரதமர் மோடி செயல்படுத்தியுள்ள நல்ல திட்டங்கள் பற்றியும், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்திற்கும் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்கள் பற்றியும் மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.
முன்பெல்லாம் வறுமை, ஊழல் மலிந்த தேசமாகவே இந்தியாவை மற்ற நாடுகள் பார்த்தன. ஆனால் இப்போது இந்தியாவின் வளர்ச்சியையும், கட்டமைப்பையும் ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்கின்றன.உலக அளவில் முதலாவது 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா வளர்ந்துள்ளது.
பிரதமர் மோடியை பார்த்து இப்படி ஒரு தலைவரை பார்த்தது இல்லை என்று உலக நாடுகள் எல்லாம் வியக்கின்றன. பிரதமர் மோடி பற்றி நான் தமிழகம் முழுவதும் சென்று பேசுவேன்.
தமிழ்நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக பிரதமர் மோடி நிறைய செய்து இருக்கிறார். இதுபற்றி அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பேசுவேன்.
நடிகர் விஜய் பா.ஜ.க.வை கொள்கை எதிரி என்று கூறினாலும் அவர் எப்போதும் என் தம்பிதான். அரசியல் ரீதியாக அவர் வேறு இடத்தில் இருந்தாலும் அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் தேர்தலில் அவர் வெற்றி பெறுவாரா? என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.
அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கூட்டணிக்கு மேலும் கட்சிகள் வருவது பற்றி அ.தி.மு.க.-பா.ஜ.க. மேலிட தலைவர்கள் பேசி முடிவு செய்வார்கள். மற்றபடி கூட்டணி விவகாரங்கள் பற்றி நான் மேலிட அனுமதி இல்லாமல் பேச இயலாது.
என்றாலும் தம்பி என்ற முறையில் விஜய்க்கு அழைப்பு விடுக்கிறேன். விஜய் கட்சியின் முக்கிய குறிக்கோளே தி.மு.க.வை வருகிற தேர்தலில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான்.
இதே கொள்கையுடன்தான் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியும் இருக்கிறது. நீங்கள் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தால் நாம் அனைவரும் ஒரே அணியில் கைகோர்க்க வேண்டும்.
தி.மு.க. ஆட்சியில் எத்தகைய தவறுகள் நடக்கிறது என்பது விஜய்க்கு நன்றாக தெரியும். தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியை தழுவி இருப்பதும் தெரியும். எனவே அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணிக்கு விஜய் வருவதுதான் சரியான முடிவாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.
இந்த தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும். ஆனால் இப்போதும் முதல்வர் கண்ணை கட்டிக்கொண்டு சுற்றி இருப்பவர்கள் சொல்லிக் கொடுப்பதை கேட்டு எல்லாம் நன்றாக நடக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த 4 ஆண்டுகளில் திமுக செய்த சாதனைகள் என்ன? தினமும் கொலை, கொள்ளை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள், போதை பழக்கங்கள் அதிகரிப்பு என்று தமிழகம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பது போதும் எங்கள் வெற்றிக்கு என்று தி.மு.க.வினர் கூறுகிறார்கள். ஆனால் பெண்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சிக்கு வரும்போது அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் சொன்னபடி செய்தார் களா? பலருக்கு அந்த பணம் கிடைக்கவில்லை.
இப்போது கணக்கெடுக்கும் போது தான் கள நிலவரம் கலவரமாக இருக்கிறதே என்று கலங்கி போய் இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் கணக்கெடுப்பதை ஆட்சிக்கு வந்ததும் முறையாக கணக் கெடுத்து எல்லா பெண்களுக்கும் வழங்கி இருக்கலாமே. ஏன் செய்யவில்லை? இதுதான் தி.மு.க.வின் தேர்தல் ஏமாற்று வேலை. ஆனால் இந்த முறை மக்கள் ஏமாற மாட்டார்கள்
இவ்வாறு அவர் கூறினார்.






