என் மலர்tooltip icon

    இந்தியா

    • பாய்லர் வெடித்து தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    • உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் போஜ்பூரில் காகித தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை பாய்லர் வெடித்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். விசாரணையில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக ஏசிபி ஞான பிரகாஷ் கூறினார்.

    பாய்லர் வெடித்து தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
    • நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன் என முதலமைச்சர் பேசினார்.

    சென்னை: 

    தமிழக சட்டசபையில் இன்றைய அலுவல்களள் தொடங்கின. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச தொடங்கினார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    இதை அடுத்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. டிவி பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் சொல்வதற்கு தயாராக இல்லை என்றார்.

    இதனை தொடர்ந்தும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அ.தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    • மாநில நிர்வாகிகள் தேர்வு தாமதமானதால் பா.ஜ.க. தேசிய தலைவரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
    • ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் என்று தெரியவந்துள்ளது.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. தேசிய தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டாவின் பதவி காலம் ஏற்கனவே நிறைவு பெற்று விட்டது. இதற்கிடையே அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தேர்வாகி மத்திய மந்திரியாகவும் பதவி வகித்து வருகிறார்.

    இதன் காரணமாக பா.ஜ.க.வுக்கு புதிய தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

    நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வாகி வருகிறார்கள். சில மாநிலங்களுக்கு மட்டும் மாநில தலைவர்கள் அறிவிக்கப்படாமல் உள்ளனர். புதிய மாநில நிர்வாகிகள் மூலம் தேசிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

    மாநில நிர்வாகிகள் தேர்வு தாமதமானதால் பா.ஜ.க. தேசிய தலைவரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் 2-வது வாரத்துக்குள் பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் 10-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பா.ஜ.க. முதல்-மந்திரிகள், மாநில பா.ஜ.க. தலைவர்கள், மாநில பொதுச்செயலாளர்கள் உள்பட நிர்வாகிகள் டெல்லிக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் ஆலோசிக்கப்படும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. என்றாலும் பா.ஜ.க.வுக்கு புதிய தேசிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக அந்த கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே பிரதமர் மோடி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு செல்ல இருக்கிறார். அங்குள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு அவர் செல்கிறார். அப்போது புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    மேலும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் என்று தெரியவந்துள்ளது. அந்த கூட்டத்தில் பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்பது பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் மோடி விவாதித்து முக்கிய முடிவுகள் எடுப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • ராகேஷ் தற்போது வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
    • புனேவுக்கு தப்பிச் செல்ல முடிவு செய்த ராகேஷ் உள்ளூர் காவல்நிலையத்திற்கு தற்கொலை என தகவல் தெரிவித்துள்ளார்.

    பெங்களூரில் மனைவியைக் கொன்று, அவரது உடலை ஒரு கேட்கேஸில் அடைத்து நடந்ததை மாமியார் வீட்டாருக்கு போன் செய்து கணவர் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் தொட்டகண்ணஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் ராகேஷ். இவர் ஒரு ஐடி நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி உள்ளார். தற்போது வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவரது மனைவி கௌரி அனில் சம்பேகர். இவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்.

    இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறு ஏற்படும் போதெல்லாம் ராகேஷே அவரது மனைவி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்றுமுன்தினம் தம்பதிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ராகேஷ், மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தி கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் முழு உடலையும் மடித்து ஒரு டிராலி பையில் (சூட்கேஸ்) அடைத்து குளியலறையில் வைத்துவிட்டு மாமியார் வீட்டாருக்கு போன் செய்து உங்கள் மகளைக் கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். இதன்பின் புனேவுக்கு தப்பிச் செல்ல முடிவு செய்த ராகேஷ் உள்ளூர் காவல்நிலையத்திற்கு தற்கொலை என தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குளியலறையில் இருந்த கௌரி அனிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இததையடுத்து புனேவுக்கு தப்பி செல்ல முயன்ற ராகேஷையும் கைது செய்தனர்.

    மேலும் இவ்வழக்கு தொடர்பாக போலீசார் கூறுகையில், உடல் துண்டுகளாக வெட்டப்படவில்லை. அது அப்படியே இருந்தது. இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது, மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணையில் தெரியவரும் என்றனர். 

    • சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று உள்ளனர்.
    • கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை வகித்தார்.

    சென்னை:

    கடந்த ஆண்டு கட்சியை தொடங்கிய விஜய் அதனை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என விதிமுறை உள்ளது.

    அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் தொடங்கியது. இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று உள்ளனர்.

    முன்னதாக 10 மணி அளவில் கூட்டம் நடைபெறும் மையத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய், கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் டாஸ்மாக் ஊழல் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் விஜயின் பெற்றோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

    • தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது.
    • திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இன்று தொடங்கும் தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்த தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 பள்ளி மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதுகிறார்கள்.

    இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பாக தேர்வு எழுதும் மாணவச் செல்வங்களைச் சந்தித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்தார்.

    சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுத தயாராக இருந்த மாணவச் செல்வங்களைச் சந்தித்து பதற்றம் இல்லாமல், மன உறுதியோடும் மகிழ்ச்சியோடும் தேர்வினை எதிர்கொள்ளுமாறு அவர் நம்பிக்கையூட்டினார்.

    • பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
    • தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சியை அரசு ஏற்படுத்தி வருகிறது.

    சென்னை கிண்டியில் நடைபெற்ற சிஐஐ தென்னிந்திய மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாட்டின் தொழில்துறை, பொருளாதாரம் உயர சிஐஐ ஆற்றும் பணியை பாராட்டுகிறேன்.

    * தமிழக அரசும், இந்திய தொழிற் கூட்டமைப்பும் பல ஆண்டுகளாக இணைந்து செயல்படுகிறது.

    * இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது தமிழ்நாடு.

    * பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

    * இந்தியாவின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குகிறது.

    * இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக தொழிற்சாலைகள் உள்ளன.

    * மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் தனித்துவமாக காணப்படுகிறது.

    * அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே இலக்கு.

    * தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சியை அரசு ஏற்படுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்று தொடங்கும் தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
    • மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

    சென்னை:

    பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த 3-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதேபோல், பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 5-ந்தேதி தொடங்கிய நிலையில், அவர்களுக்கு நேற்றுடன் முடிவடைந்தது.

    இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இன்று தொடங்கும் தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்த தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 பள்ளி மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதுகிறார்கள்.

    இதற்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 48 ஆயிரத்து 426 பேரும், தேர்வு கண்காணிக்கும் பணியில் 4 ஆயிரத்து 858 பேரும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    முதல் நாளான இன்று தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற உள்ளது. தேர்வின் முதல் 10 நிமிடம் வினாத்தாளை வாசிப்பதற்கும், அடுத்த 5 நிமிடம் சுய விவரங்களை விடைத்தாளில் பதிவு செய்வதற்கும், 10.15 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    • மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
    • தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை குறைந்த தங்கம் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.80, நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்தும் விற்பனையானது.

    இதனை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,340-க்கும் சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,720-க்கும் விற்பனையானது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு மூன்று ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும், கிலோவுக்கு மூவாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    27-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,880

    26-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,560

    25-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,480

    24-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,720

    23-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    27-03-2025- ஒரு கிராம் ரூ.111

    26-03-2025- ஒரு கிராம் ரூ.111

    25-03-2025- ஒரு கிராம் ரூ.110

    24-03-2025- ஒரு கிராம் ரூ.110

    23-03-2025- ஒரு கிராம் ரூ.110

    • தொழுகைகளை உள்ளூர் மசூதிகளில் நடத்த வேண்டும்.
    • நீதிமன்றத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை பெறுவது கடினமாகிவிடும்.

    உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன்னதாக, சாலைகளில் தொழுகை நடத்துபவர்களுக்கு எதிராக காவல்துறை கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. எச்சரிக்கையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக மீரட் எஸ்.பி. ஆயுஷ் விக்ரம் சிங் கூறுகையில், தொழுகைகளை உள்ளூர் மசூதிகளில் நடத்த வேண்டும் என்றும், யாரும் சாலைகளில் தொழுகை நடத்தக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். எச்சரிக்கையை மீறுபவர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    மத்திய அமைச்சரும் ராஷ்டிரிய லோக் தளம் தலைவருமான ஜெயந்த் சிங் சவுத்ரி கூறுகையில்,

    தனிநபர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், அவர்களின் பாஸ்போர்ட்டுகள் மற்றும் உரிமங்கள் ரத்து செய்யப்படும். நீதிமன்றத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை பெறுவது கடினமாகிவிடும்.

    நீதிமன்றத்தால் தனிநபர்கள் விடுவிக்கப்படும் வரை அத்தகைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

    மீரட் மூத்த காவல் கண்காணிப்பாளர் விபின் தடா கூறுகையில், மாவட்ட மற்றும் காவல் நிலையங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடியதன் அடிப்படையில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பதட்டம் மிக்க பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அமைதியைப் பேணுவதற்கும், வரவிருக்கும் பண்டிகைகளை சீராகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கும், நிர்வாகம் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மதத் தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    • இறுதி மரியாதை சடங்குகள் இன்று மாலை ஹார்விபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சு.வெங்கடேசனின் தந்தை மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மதுரை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருப்பவர் சு.வெங்கடேசன். இவர் ஒரு எழுத்தாளரும் ஆவார். மாணவப் பருவத்தில் இருந்து இந்திய மார்க்சிஸ்ட் கட்சியில் பணியாற்றி வரும் இவர் 2-வது முறையாக எம்.பி. பதவி வகித்து வருகிறார். இதனிடையே மத்திய அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறார்.

    இவர் எழுதிய 'காவல் கோட்டம்' என்ற நாவலின் முக்கிய பகுதிகளை தழுவியே 2012-ம் ஆண்டு 'அரவான்' படம் வெளியானது. இதனை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் எழுத்தாளராக பணியாற்றி உள்ளார்.

    இந்த நிலையில், மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் தந்தை இரா.சுப்புராம் (79) இன்று அதிகாலை காலமானார். இறுதி மரியாதை சடங்குகள் இன்று மாலை ஹார்விபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சு.வெங்கடேசனின் தந்தை மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    • பிரதமர் மோடி மாதவ் நேத்ராலயா பிரீமியம் மையத்தின் விரிவாக்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவார்.
    • பதவியில் இருக்கும் பிரதமர் ஒருவர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திர் வளாகத்திற்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

    நாக்பூர்:

    ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவர் மற்றும் மறைந்த ஆா்.எஸ்.எஸ். தலைவர் எம்.எஸ். கோல்வால்கரின் நினைவிடங்கள் நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் பகுதியில் உள்ள டாக்டர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திரில் அமைந்துள்ளன. நாளை மறுதினம்(30-ந்தேதி) நாக்பூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும் பிரதமர் நரேந்திர மோடி இந்த நினைவுச்சின்னங்களுக்கு வருகை தருவார் என்று மகாராஷ்டிர பா.ஜ.க. தலைவரும், வருவாய் துறை மந்திரியுமான சந்திரசேகர் பவன்குலே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி 30-ந்தேதி காலை 9.30 மணிக்கு நாக்பூர் வருகை தருகிறார். அவா் மாதவ் நேத்ராலயா பிரீமியம் மையத்தின் விரிவாக்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவார். பின்னர் ரெஷிம்பாக்கில் உள்ள ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திருக்கு பிரதமர் வருகை தருகிறார். இதைத்தொடர்ந்து 1956-ம் ஆண்டு அம்பேத்கர் தனது ஆயிரக்கணக்கான சீடர்களுடன் புத்த மதத்தை தழுவிய தீக்ஷா பூமிக்கும் பிரதமர் மோடி செல்வார். பின்னர் அங்குள்ள சூரிய வெடிபொருள் ஆலையையும் அவர் பார்வையிடுவார். நாக்பூர் வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க பா.ஜ.க. பெரிய அளவிலான ஏற்பாடுகளை செய்துள்ளது".

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தும் மாதவ் நேத்ராலயா பிரீமியம் மைய நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து ஆஸ்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவர் கூறுகையில், "பதவியில் இருக்கும் பிரதமர் ஒருவர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திர் வளாகத்திற்கு வருவது இதுவே முதல் முறையாகும். மறைந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் 2007-ம் ஆண்டு நினைவிடத்திற்கு வருகை தந்தார். ஆனால் அப்போது அவர் பிரதமராக இல்லை. பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக பிரசாரகராக நினைவிடத்திற்கு வருகை தந்தார். ஆனால் பிரதமரான பிறகு முதல் முறையாக அந்த இடத்திற்கு வருகை தருகிறார்" என்றார்.

    ×