search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    சிறுவயதிலேயே பூப்பெய்தினால், மெனோபாஸும் சீக்கிரம் வருமா?
    X

    சிறுவயதிலேயே பூப்பெய்தினால், மெனோபாஸும் சீக்கிரம் வருமா?

    • 12 முதல் 15 வயது என்பதே பெண்கள் பூப்படைய சரியான காலம்.
    • சில குழந்தைகள் 8 முதல் 10 வயதிலேயே பூப்படைந்து விடுகிறார்கள்.

    பெண்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வு பூப்படைதல். 12 முதல் 15 வயது என்பதே பெண்கள் பூப்படைய சரியான காலம். ஆனால், சில குழந்தைகள் 8 முதல் 10 வயதிலேயே பூப்படைந்து விடுகிறார்கள். இவ்வாறு சீக்கிரம் பூப்படையும் பெண்களுக்கு, மெனோபாஸும் சீக்கிரமே வந்துவிடும் என்ற கருத்து பலரிடம் இருக்கிறது. இதன் உண்மைத்தன்மையை விளக்குகிறார் சென்னை, கொட்டிவாக்கத்தில் வசிக்கும் பெண்கள் நல சிறப்பு மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்.

    முன்பெல்லாம் தாய் சிறுவயதிலேயே பூப்படைந்தால், அவரின் பெண் குழந்தையும் அவ்வாறே பூப்படைவார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் இயல்பாகவே சிறுவயதிலேயே பூப்பெய்தும் நிலை உண்டாகிவிட்டது. இதற்கு முக்கியக் காரணம் உணவுப் பழக்கவழக்கமும், வாழ்க்கை முறையும்தான். முன்பெல்லாம் ஏதேனும் திருவிழா, சுப நிகழ்வின்போதே விருந்து சாப்பிடும் பழக்கம் இருந்தது.

    ஆனால், தற்போது தினசரி வாழ்விலேயே பொரித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், வெளியில் விற்கும் உணவுகள் போன்றவற்றை சாப்பிடும் வழக்கம் அதிகரித்துவிட்டது. உணவில் கலக்கப்படும் பதப்படுத்திகள், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டு, உணவு தயாரிக்க பயன்படுத்தும் எண்ணெய் இவை அனைத்தும் பெண்கள் சிறுவயதிலேயே பூப்படைய வழிவகுக்கும். இதுதவிர சுற்றுச்சூழல், மரபியல் மற்றும் வளர்சிதைமாற்றம், மனஅழுத்த ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதால் ஏற்படும் தூக்கமின்மை போன்ற மற்ற காரணங்களாலும் விரைவாகவே பூப்படைதல் நிகழும்.

    இதனால் குழந்தைப் பருவத்திலேயே உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஹார்மோன் சுரப்பியில் மாற்றம் ஏற்படும்போது உடலில் வளர்சிதை மாற்றம் குறைவது, கருப்பை நீர்க்கட்டி, குழந்தையின்மை போன்ற பிரச்சினைகளும் அதிகரிக்கும். இவ்வாறு, 13 வயதுக்கு முன்னர் பூப்படைந்தால் மெனோபாஸும் விரைவாக வரும் என்ற கருத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

    இதில் 11 வயதுக்கு முன்பே பூப்பெய்துபவர்களுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. சிலருக்கு மரபியல், ஹார்மோன் கோளாறு, ஒவ்வாமை மற்றும் கிருமித் தொற்றால் கருப்பையில் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றாலும் மெனோபாஸ் விரைவில் ஏற்படும்.

    இதனால் இதய நோய், சர்க்கரை நோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமில்லாமல் தூக்கமின்மை, பதற்றம், மன உளைச்சல் போன்ற வாழ்வியல் பிரச்சினைகளும் உண்டாகும். சீக்கிரம் பூப்பெய்துவதை தடுக்க பிளாஸ்டிக் பொருட்களில் பரிமாறப்படும் தண்ணீர், பானங்கள் மற்றும் உணவுகளைத் தவிர்ப்பது, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை சரியாக சுத்தம் செய்து பயன்படுத்துவது, ரசாயனம் கலக்கப்பட்ட பால் மற்றும் இறைச்சி போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

    Next Story
    ×