search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இதயநோய் வரும்முன் கண்டுபிடிக்கும் முறைகள்
    X

    இதயநோய் வரும்முன் கண்டுபிடிக்கும் முறைகள்

    இதயத்தில் வலி என்றவுடன் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வதே சாலச்சிறந்தது. இதயநோய் வரும்முன் கண்டுபிடிக்கும் முறைகளை அறிந்து கொள்ளலாம்.
    எல்லா நெஞ்சு வலிக்கும் பயப்பட வேண்டாம். எல்லா நெஞ்சு வலியும் மாரடைப்பு இல்லை. நெஞ்சை சுற்றிலும் நுரையீரல், வயிறு, உணவுக் குழல் உள்ளது. மேலும் அதை சுற்றி தசைகள் இருக்கிறது. அதில் வலி ஏற்பட்டாலோ அது நெஞ்சு வலி மாதிரியாகத்தான் இருக்கும். இதில் சில விஷயங்களை வைத்துத் தான் இந்த வலி இருதயத்திலிருந்து வருகிறதா, இல்லை நுறையீரல், உணவுக் குழலிருந்து வருகிறதா என்று கண்டுபிடிப்போம்.

    எந்தமாதிரியான வலி இருதய வலி என்றால் ஒரு யானை நெஞ்சின்மேல் நிற்கும் மாதிரியான வலி, தேவையில்லாமல் மூச்சுத்திணறல், தேவையில்லாமல் அதிக வியர்வை இருந்தாலோ அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

    யாரை தாக்கும்?

    மனச்சோர்வு, உடற்சோர்வு, மூச்சுத்திணறல் இதெல்லாம் ஏற்பட்டால் இருதய நல மருத்துவரிடம் பரிசோதனை செய்யுங்கள். இப்பொழுது இருக்கிற காலக்கட்டத்தில் சிறிய வயதினருக்குக் கூட மாரடைப்பு வருகிறது என்கிறார்கள். அது உண்மைதான். ஏனெனில் இந்த உலகில் தொழில் ரீதியான போட்டிகள், மனஅழுத்தம் மற்றும் தீய பழக்கங்கள் (மது, புகைப்பழக்கம்) அதிகரித்து இருப்பதே ஒரு முக்கிய காரணம். சிறிய வயதினருக்கும், பெரியவர்களுக்கும் வரும் மாரடைப்பில் வித்தியாசம் உள்ளது. அது என்னவென்று பார்ப்போம். சிறிய வயதினருக்கு வரும் இதயப்பிரச்சனையில் அந்த நேரத்தில் ஏற்படுகிற இரத்த உறைவு (Blood Clots) ஒரு நாள் இல்லை இரண்டு நாளில் ஏற்பட்டதாக இருக்கும். 50-60 வயது உள்ளவர்களுக்கு பார்த்தோம் என்றால் கொலஸ்ட்ராலினால் வரும். இது ஒருநாள் இரண்டு நாளில் வருவது இல்லை.

    ECG எடுத்த பிறகு 2 விதமான சிகிச்சைகள் உள்ளன. உடனே மருந்து கொடுத்து கரைக்கலாம் அல்லது ஆஞ்சியோகிராம் பார்த்துவிட்டு பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்ட் செய்யலாம். நோயாளியை Cathlab அறுவை சிகிச்சை அரங்குக்கு கூட்டி கொண்டு சென்று பலூன் மூலமா அந்த அடைப்பினை எடுத்துவிட்டு இரத்த ஓட்டத்தைச் சரி செய்துவிடலாம். இதை எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்ய வேண்டும். இதை சரிசெய்து விட்டால் ரத்த ஓட்டம் சீராகும். இதனால் அவரது ஆயுள் காலத்திற்கும் எந்தவிதப் பிரச்சனையும் வராது.

    ஒருவேளை தாமதமாக மருத்துவமனைக்கு வந்தால் அதாவது ஒரு 6 (or) 12 மணி நேரம் அல்லது ஒரு நாள் கழித்தோ தாமதமாக சிகிச்சையைத் தொடங்கினால் அந்த இரத்த ஓட்டம் இல்லாத தசைகள் செயலிழந்து விடும். ஒருமுறை செயலிழந்த தசைகள் திருப்பி செயல்பாட்டிற்கு வராது. அந்த சமயத்தில் அந்த மாரடைப்பு வந்த நோயாளர்களுக்கு எதிர் காலத்தில் இதய வலுவல் ஏற்படலாம். இவர்கள் காலம் முழுவதும் நடக்கும் போது மூச்சு வாங்குவதோ இல்லை. நெஞ்சுவலி வந்தோ கஷ்டப்பட வேண்டியிருக்கும். இந்த மாதிரியான பிரச்சனை வராமல் இருப்பதற்கே தாமதிக்காத சிக்சைகள் உடனடியாக செய்யப்படவேண்டும் என்கிறோம்.

    இருதய நோய் வரும்முன் கண்டுபிடிக்கும் முறைகள்

    முன்கூட்டியே கண்டுபிடிக்கிறதுக்கு இரத்தப் பரிசோதனை செய்து கொலஸ்ட்ரால் அளவினைக் கண்டறிந்தும், டிரெட்மில்லில் நடக்கும் போது ECG பார்த்து கண்டு பிடிக்கலாம். அல்லது இதயத்திற்கான எக்கோ பரிசோதனையின் மூலமோ கண்டறியலாம். இந்த மாதிரி கண்டுபிடிக்கும் போது ஒரு இரத்தக்குழாய் மட்டும் அடைப்பு ஏற்பட்டிருந்தால் பலூன் ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்து சரிசெய்யலாம். சில சமயம் நிறைய இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் ஒவ்வொரு இரத்தக்குழாய்க்கும் போய் பலூன் வைத்து பண்ண முடியாது. அவர்களுக்குத்தான் பைபாஸ் சிகிச்சை அவசியமாகிறது. பைபாஸ் சிகிச்சையில் அடைப்பு இருக்கிற இரத்த குழாய்களை அப்படியே வைத்துவிட்டு புதிய ரத்தக் குழாய்களை எடுத்து அடைப்பு இருக்கிற மீதிப் பகுதியில் போய் இணைத்து விடவேண்டும். இதுதான் பைபாஸ்.

    இதயத்தில் வலி என்றவுடன் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வதே சாலச்சிறந்தது. சிகிச்சைக்கு பிறகு சோர்ந்து போகாமல் தினமும் நடைபயிற்சி, மருத்துவர் பரிந்துரை செய்த உடற்பயிற்சிகள் செய்தல் மற்றும் கொழுப்பு உணவுகள், எண்ணை பலகாரங்கள் தவிர்த்தல், ஆரோக்கியமான, சத்தான ஆகாரங்கள் எடுத்துக்கொள்ளுதல், மருந்து மாத்திரைகள் தவறாமல் எடுத்துக் கொள்வது. மருத்துவர் பரிந்துரைத்த காலகட்டங்களில் தவறாது பரிசோதனைகள் செய்து கொள்வது இவற்றினால் நீடித்த ஆயுள்காலம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமில்லை.

    நாராயணா இருதய மையம், பாளையங்கோட்டை
    Next Story
    ×