என் மலர்tooltip icon

    செய்திகள்

    தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கை வாபஸ் பெற எந்த நீதிபதியை அணுகுவது என்பது புரியாமல் குழப்பத்தில் இருப்பதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #18MLAs #ThangaTamilSelvan
    சென்னை:

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 18 பேர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி கவர்னரிடம் மனு கொடுத்ததால் 18 பேரின் எம்.எல்.ஏ. பதவியை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார்.

    இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதில் கடந்த மாதம் தீர்ப்பு கூறப்பட்டது.

    தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு கூறினார். மற்றொரு நீதிபதியான சுந்தர் செல்லாது என்று கூறினார். இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதி விசாரணைக்கு வழக்கு சென்றுள்ளது.

    இதுபற்றி தங்க தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவிக்கையில் வழக்கு முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டே செல்வதால் வழக்கை வாபஸ் பெறப்போவதாக அறிவித்திருந்தார். ஆனால் இன்னும் அவரால் வழக்கை வாபஸ் பெற முடியவில்லை.

    இதுபற்றி தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    எங்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில் நியமிக்கப்பட்டுள்ள 3-வது நீதிபதி தினமும் வழக்கை விசாரிக்க போவதாக கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.

    விசாரணை முடிந்ததும் தீர்ப்பையும் விரைந்து சொன்னால் தொகுதி மக்களுக்கு நல்லது.

    தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெறப் போவதாக ஏற்கனவே நான் கூறி இருந்தேன். ஆனால் எந்த நீதிபதியிடம் இதை கொடுப்பது என்பதில் சிக்கல் நிலவுகிறது.

    இரு நீதிபதிகள் இந்த வழக்கில் தீர்ப்பு கூறி உள்ளதால் அவர்கள் இருவர் முன்னிலையில் மனு கொடுக்க வேண்டுமா? அல்லது 3-வது நீதிபதியிடம் வாபஸ் மனுவை கொடுக்க வேண்டுமா? என்ற சட்ட சிக்கல் ஏற்படுகிறது.

    மனு கொடுத்தாலும் அதை நீதிபதிகள் ஏற்பார்களா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே இதுபற்றி மூத்த வக்கீல்களுடன் ஆலோசித்த பிறகு தான் முடிவு செய்ய முடியும்.

    தலைமை நீதிபதியின் தீர்ப்பை விமர்சனம் செய்ததற்காக எனக்கு அட்வகேட் ஜெனரல் நோட்டீசு அனுப்பி இருந்தார்.

    அந்த கடிதத்துக்கு பதில் அளிக்க நாளை மறுநாள் நான், ஐகோர்ட்டுக்கு நேரில் சென்று அவரிடம் விளக்கம் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #18MLAs #ThangaTamilSelvan
    நீட் தேர்வை கணினிமயம் ஆக்குவதன் மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவையும், சமூக நீதியையும் மத்திய அரசு சீர்குலைக்க முயற்சி செய்வதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். #NEET #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசிய தேர்வு முகமை எனும் “நே‌ஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி” தான், இனிமேல் “நீட்” தேர்வுகளை நடத்தும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய பா.ஜ.க. அரசு, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான குழப்பத்தை ஏற்படுத்தி, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைத் தகர்த்துத் தரைமட்டமாக்கி வருவதற்கு, தி.மு.க. சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நீட் தேர்வுக்குரிய தமிழ் கேள்வித்தாளை மொழி பெயர்ப்பதில் பிழைகளை ஏற்படுத்தி, தமிழ்நாட்டு மாணவர்கள் எல்லாம் டாக்டர் படிப்பில் சேர முடியாத அநீதியான அவல நிலைமையை ஏற்படுத்தியது.


    இந்நிலையில் கணினி மயமான தேர்வை அறிமுகப்படுத்துவது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுத்திடக்கூடும் என்று தெரிந்தே அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    கிராமப்புற மாணவர்கள் அதிலும் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் கணினியே இல்லாத குடும்பங்களில் வாழ்பவர்கள். அது மட்டுமின்றி கணினிப் பயிற்சி ஏதும் பெரிய அளவில் இல்லாதவர்கள்.

    இதுபோன்ற இயலாமை நிறைந்த சூழ்நிலையில், கிராமப்புற மாணவர்கள் எப்படி கணினி மூலம் தேர்வு எழுத முடியும் என்ற அடிப்படை சிந்தனை கூட மத்திய பா.ஜ.க. அரசுக்கு வராதது மிகுந்த வேதனையளிக்கிறது. மருத்துவப் பட்டம் பெறுவது கிராமப்புற மாணவனுக்கு நிரந்தரமாக எட்டாக் கனியாகவே இருந்து விட வேண்டும் என்ற சதி ஆலோசனை நிறைந்த உள்நோக்கத்தின் விளைவுதான் இந்த கணினி மூலம் நீட் தேர்வு என்ற மோசமான அறிவிப்பாகும்.

    நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஏழரைக் கோடி மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரிடம் அனுமதி பெறாமல் அலட்சிய மனப்பான்மையுடன் கிடப்பில் போட்டு வைத்து விட்டு, இப்படி ஆண்டுக்கு ஒரு குழப்பத்தை நீட் தேர்வில் புகுத்தி வரும் மத்திய பா.ஜ.க. அரசு கிராமப்புற மாணவர்களுக்கும், சமூக நீதிக் கொள்கைக்கும் முற்றிலும் எதிராகவே தொடர்ந்து செயல்படுகிறது.

    அனைவருக்கும் சம வாய்ப்பு என்பதைக் கருத்தில் கொண்டு, கணினி மூலம் நீட் தேர்வு என்பதை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், ஏற்கனவே தமிழ்நாடு சட்ட மன்றம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை உடனே பெற்றுத் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    “வளர்ச்சி முழக்கத்தை” வெகுளித்தனமாக நம்பி ஏமாந்து வாக்களித்து விட்டார்கள் மக்கள் என்பதை மூலதனமாக்கி, கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கையுடன் “நீட்” தேர்வை வைத்து சித்து விளையாடி, அவர்களின் மருத்துவக் கனவையும், சமூக நீதியையும் அரக்க மனப்பான்மையுடன் சீர் குலைக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு, மாணவர்கள் தக்க நேரத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #NEET #DMK #MKStalin
    டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #GKVasan #TNPSCExam

    மதுரை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிரூபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவியுள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு முதல்-அமைச்சரோ, சம்பந்தப்பட்ட துறையே இதுவரை பதில் அளிக்கவில்லை.

    எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர ஆளும் கட்சிகள் மட்டுமல்ல எதிர்க் கட்சிகளும் இணைந்து குரல் கொடுத்தன. அதன் பயனாகத்தான் நமக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கிடைத்துள்ளது.

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை தனியார் மூலம் நடத்த அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வருகின்றன. இதனால் பல குளறுபடிகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. இது ஏற்புடையதல்ல.

    மாநில அரசு நிதி நெருக்கடி என கூறியுள்ளது. ஆனால் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதாக அறிவித்துள்ளது.

    அதற்கு முன் போக்குவரத்து தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையினை உடனே வழங்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #GKVasan #TNPSCExam

    8 வழிச்சாலைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கருத்து தெரிவிக்க கூட உரிமை இல்லாதது நெருக்கடி நிலையை காட்டுகிறது என்று வைகோ கூறினார். #MDMK #Vaiko
    திருச்சி:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை தி.மு.க. ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. ம.தி.மு.க.வின் நிலைப்பாடும் அதுதான். பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக் கூடாது. பாராளுமன்றத்துக்கு ஒரு அணிக்கு வாக்களித்த மக்கள் மாநில தேர்தல் வரும் போது மாற்றி அளிக்க வாய்ப்பு உள்ளது.

    பல தேசிய இனங்களை கொண்ட இந்திய உப கண்டத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சாத்தியமே கிடையாது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே இனம், ஒரு கலாசாரம் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி ஜனநாயகத்தை புல்டோசர் கொண்டு தகர்க்க பார்க்கிறார். சர்வாதிகார போக்குடன் கூடிய அவருடைய மனோபாவம் ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம், மதச்சார்பின்மைக்கு எதிராக உள்ளது.


    சேலம்-சென்னை எட்டு வழி பசுமை சாலைக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரை கைது செய்து இருப்பது கண்டனத்துக்குரியது. தங்களது தாய் மண்ணை விட்டு கொடுக்க முடியாத சேலம் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க கூட உரிமை இல்லை என்பது நெருக்கடி கால நிலையை தான் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko
    நீட் தேர்வில் எந்த சீர்திருத்தம் கொண்டு வந்தாலும் அதனை ஏற்றுகொள்ளமாட்டோம் என்று கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #NEET
    கரூர்:

    கரூரில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது :-

    தமிழகத்தில் 2021ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சி உள்ளது. 5ஆண்டுக்குத்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். அவர்களுக்கு செய்யவேண்டியது இன்னும் நிறைய உள்ளது. அதனால்தான் 2019 பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கு கொள்கை ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

    2024 முதல் பாராளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒருங்கிணைந்த தேர்தல் என்று முடிவெடுத்தால், முன்கூட்டியே தேர்தல் தேதி அறிவித்து, அதற்கு அனைவரும் உடன்பட்டால் நாங்களும் உடன்படுவோம். எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் இடைத்தேர்தலே இருக்கக்கூடாது என்பதுதான்.


    நீட் தேர்வில் எந்த சீர்திருத்தம் கொண்டு வந்தாலும் அதனை நாங்கள் ஏற்றுகொள்ளமாட்டோம். நீட் தேவையில்லை என்பதுதான் எங்களது கொள்கை முடிவு. அதில் நாங்கள் வெற்றி பெறுவோமா? தோல்வி அடைவோமா? என்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் மாணவர்களை திசை திருப்ப விரும்பவில்லை.

    அனைத்து வி‌ஷயங்களிலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறோம் என்று கூறுவது தவறு. ஜி.எஸ்.டி. விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்தும், பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பும் செய்துள்ளோம். இது போல் பல்வேறு விவகாரங்களில் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். தமிழ் உணர்வு, தமிழர் உரிமை, மாநில சுயாட்சி ஆகியவற்றை கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #NEET #ThambiDurai
    சேலம்- சென்னை பசுமை வழிச்சாலை குறித்து சிலர் மக்களிடம் பொய் பிரசாரம் செய்வதாக திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். #ChennaiSalemgreenexpressway
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்தின் நன்மைகள் குறித்த விளக்க பொதுக்கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துக் கொண்டு பேசியதாவது:-

    இந்தியாவிலேயே 2-வது பசுமை சாலை தமிழகத்தில் தான் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான ஆதரவு இல்லை என்று வதந்தி பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. பொதுக்கூட்டத்தில் திரண்டு இருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது 8 வழிச்சாலைக்கு ஆதரவு அதிகம் இருப்பதை உணர முடிகிறது.

    ஜெயலலிதா வழியில் தொடரும் அ.தி.மு.க. ஆட்சி எவ்வளவு சீக்கிரம் கவிழும் என சிலர் ஜாதகம் பார்க்கின்றனர். அ.தி.மு.க. ஆட்சி ஆயுள் காலம் சில ஆண்டுகள் மட்டுமே எனவும் எதிர்ப்பார்க்கின்றனர். எத்தனை ஆண்டுகளானாலும் அ.தி.மு.க ஆட்சியை அசைக்க முடியாது.

    110-விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அதன் பிறகே, 110 விதியில் திட்டங்களை அறிவிப்பது பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட எதிர்கட்சியினருக்கே விவரம் தெரியும்.

    8 வழி சாலை அமைவதால் 5 மாவட்டங்களிலும் தொழில் வளம், தனிநபர் வருமானம் மற்றும் கட்டுமான வளர்ச்சி பெருகும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பசுமை சாலை அமைக்கப்படும்.

    இதற்கு முன் உதாரணமாகவே ரூ.10 ஆயிரத்து 250 கோடியில் சென்னை- சேலம் பசுமை வழி சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை திட்டத்திற்கு மக்கள், விவசாயிகள் பெரும்பாலும் ஆதரவளித்துள்ளனர்.

    சிலர் பொய் பிரசாரம் செய்து விவசாயிகளையும், மக்களையும் குழப்பி வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் தீயசக்திகள் ஊடுருவியுள்ளனர்.


    பசுமை சாலை திட்டத்தால் கிடைக்கும் நன்மை என்னென்ன என்று தெரியாமல் மக்களை ஏமாற்றி குழப்பத்தை விளைவிக்கின்றனர். கையகப்படுத்தும் நிலத்திற்கு 2014 புதிய நில எடுப்பு சட்டத்தின் படி உரிய நிவாரணம் வழங்கப்படும்.

    மேலும் 2½ மடங்கு முதல் 4½ மடங்கு வரை நிலத்திற்கு நிவாரணம் போர்க்கால அடிப்படையில் வழங்கப்படும். நிலத்தை கையகப்படுத்திய பிறகு உடனடியாக விவசாயிகளிடம் காசோலை வழங்கப்படும்.

    தற்போது அளவீடு மற்றும் மதிப்பீடு பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. நிலத்தை கொடுக்கவும், கொடுக்க மறுக்கவும் விவசாயிகளுக்கு உரிமை இருக்கிறது. சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், பசுமை சாலை திட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், அதன் பலன்களை முதலில் அறிந்து கொண்டு பிறகு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

    தமிழகம் சாலை விபத்தில் முதல் மாநிலமாக உள்ளது. பசுமை சாலை திட்டத்தால் விபத்துகள் குறையும். குறுகிய, விபத்துகள் ஏற்படும் மேலும் பல சாலைகள் அகலப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் தூசி மோகன், பன்னீர்செல்வம் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். #ChennaiSalemgreenexpressway
    நீட் தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தும் என கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #NEET #Sengottaiyan
    கோவை:

    பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் வருகிற 12-ந் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரில் இருந்து உதவி கல்வி அலுவலர் வரை அனைத்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. பள்ளிக் கல்வித்துறையின் பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெறவும், ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்வதற்கும், ஒவ்வொரு பள்ளிகளையும் ஆய்வு செய்யும் வகையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    பள்ளிக் கல்வித்துறையின் சிறப்பு திட்ட ஆய்வு கோவை, மதுரை, திருச்சி, சென்னையில் நடைபெற உள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் 20 ஆயிரம் மாணவர்களுக்கு 500 ஆடிட்டர்களை வைத்து கணக்கு தணிக்கை(சி.ஏ.) படிப்பு தொடர்பான பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக ஈரோட்டில் 2700 மாணவர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    12-ம் வகுப்பு மாணவர்கள் படித்தவுடன் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 12 திறன் பயிற்சிகள் அடுத்த ஆண்டு வழங்கப்பட இருக்கிறது. இந்தியா முழுவதும் 8 லட்சம் மாணவர்கள் என்ஜினீயரிங் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள். தமிழகத்தில் அனைவருக்கும் வேலை என்ற உத்திரவாதத்துடன் பிளஸ்-2 படிக்கும் போதே திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    அடுத்த ஆண்டு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். நீட் தேர்வுக்கு 412 மையங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நாட்களில் ஒரு மணி நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் மூன்று மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


    மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது குறித்து தமிழக அரசுக்கு இன்னும் முறையாக கடிதம் வரவில்லை. அப்படி கடிதம் வந்தால் ஆண்டுக்கு ஒரு முறை நீட் தேர்வு நடத்த தமிழக அரசு வலியுறுத்தும்.

    வருகிற 15 -ந் தேதியில் இருந்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் வீதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயோமெட்ரிக் வைப்பது அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு ஒழுங்காக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    100 உயர்நிலைப்பள்ளி மற்றும் 100 மேல்நிலைப் பள்ளிகள் உருவாக்க நாளை ஆணையிடப்பட உள்ளது. கண்பார்வையற்றவர்கள் மற்றும் காது கேளாதவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #NEET #TNMinister #Sengottaiyan
    காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து என்னை மாற்ற நினைப்பவர்களின் கனவு நிறைவேறாது என திருநாவுக்கரசர் பேசினார். #Congress #Thirunavukkarasar
    திருச்சி:

    திருச்சியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகள், பிரதிநிதிகள், செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சி காங்கிரஸ் தான். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது காங்கிரஸ் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு விட்டது.

    தினகரன் ஒரு பக்கம் தனியாக கட்சி நடத்துகிறார். அவரது மாமா திவாகரன் மன்னார்குடியில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். இப்படி அ.தி.மு.க.வில் ஏற்பட்டு உள்ள பிளவினால் இரண்டாவது பெரிய கட்சி காங்கிரஸ் தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


    50 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லை என்றாலும் காங்கிரஸ் கட்சி இன்னமும் தமிழகத்தில் இருக்கிறது என்றால் அதற்கு காமராஜர் போட்ட பலமான அஸ்திவாரம் தான் காரணம். தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்த ஆட்சியை காங்கிரஸ் துணை இல்லாமல் வீழ்த்த முடியாது. தமிழகத்தில் என்றாவது ஒரு நாள் காமராஜர் தொண்டன் முதல்-அமைச்சர் ஆவார், இது உறுதி.

    நான் ராகுல் காந்தியால் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறேன். என்னை தலைவர் பதவியில் இருந்து மாற்ற நினைப்பவர்களின் கனவு நிறைவேறாது. தேசிய அளவில் மோடிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் ஒரே தலைவர் ராகுல் மட்டுமே. அவரது தலைமையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சிறப்பான வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Congress #Thirunavukkarasar

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் பேராசிரியர், துணை பேராசிரியர் நியமனத்தில் பல கோடி ஊழல் நடந்துள்ளதாக திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருநெல்வேலி பகுதியில் உள்ள ஏழைஎளிய மாணவர்களுக்கு கல்வியை வழங்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்தோடு, தொன்னூறுகளில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம். தொடக்க காலத்தில் துணை வேந்தர்களின் நேர்மையான நிர்வாகத்தினால் கல்விப் பணி சிறப்பாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் ஆட்சியாளர்களின் தலையீடு காரணமாக பல்வேறு குளறுபடிகள் ஏற்பட ஆரம்பித்தன.

    தமிழக பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர் நியமனம் என்பது தகுதி அடிப்படையில் இல்லாமல் அரசியல் சார்பான முடிவாக மாறி, பின் ‘கோடிகள்‘ மட்டுமே தகுதியை தீர்மானிப்பதாக அமைந்து விட்டது. அதன் காரணமாக பின்பகுதியில் வந்த துணை வேந்தர்கள் பல்கலைக் கழக வளர்ச்சியைப் பற்றி கவலைப்படாமல் முதலீட்டு பணத்திற்கு லாபம் சம்பாதிக்கிற நோக்கத்தில் முனைப்பு காட்ட ஆரம்பித்தார்கள்.

    பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர் நியமனங்களில் ஊழல் கரை புரண்டு ஓடத் தொடங்கியது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பது பல்கலைக் கழகத்தின் தாரக மந்திரமாக மாறியது. இதனால் கல்வியின் தரம் அதளபாதாளத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் சமீபகாலமாக பல்கலைக் கழக மானியக் குழு பரிந்துரைத்த அடிப்படை தகுதிகளை காற்றில் பறக்க விட்டு பேராசிரியர், இணை பேராசிரியருக்கான பணி நியமனங்கள் நடைபெற்றுள்ளன. 27 பணி நியமனங்களில் பல கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவு தொடங்க அங்கீகாரம் வழங்குவதில் அப்பட்டமான விதிமுறை மீறல்கள் நடைபெற்று ஊழலுக்கு வழிவகுத்துள்ளன.

    பல்கலைக் கழக மானியக் குழு விதிகளின்படி ஒருவர் துணை வேந்தர் ஆவதற்கு 10 வருடங்கள் பேராசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது துணை வேந்தராக உள்ளவர் 7 வருடங்கள் தான் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். எனவே, இவரது நியமனம் செல்லாது என்பதை கூறுவதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.

    மேற்சொன்ன அப்பட்டமான விதிமீறல்கள் அனைத்தையும் ஆதாரங்களோடு அறிக்கையாக தொகுத்து தமிழக ஆளுநரிடம் 18.4.2018 அன்று நேரிடையாக மதுரை காமராஜ், மனோன்மணியம் சுந்தரனார், மதுரை தெரசா, அழகப்பா பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் வழங்கியிருக்கிறார்கள்.

    ஆளுநர் அறிக்கையை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தும் இது வரை எந்த நடவடிக்கையும் கடந்த இரண்டு மாதங்களாக எடுக்கப்படவில்லை.

    எனவே, பல்கலைக் கழக மானியக்குழுவின் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வருகிற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக நிர்வாகம் குறித்து விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.  #Thirunavukkarasar

    அ.தி.மு.க. தேர்தலை கண்டு பயப்படும் இயக்கம் அல்ல என்றும் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #ADMK #TNMinister #SellurRaju
    மதுரை:

    மதுரையில் இருந்து கோவை, ஓசூர், சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்களின் தொடக்க விழா ஆரப்பாளையத்தில் இன்று நடைபெற்றது.

    அமைச்சர் செல்லூர் ராஜூ நிகழ்ச்சியில் பங்கேற்று, புதிய பஸ்கள் இயக்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுமைக்கும் 2 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு தற்போது 550 பஸ்கள் வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்படுகிறது.

    அதில் மதுரையில் இருந்து 17 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்வதற்காக நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வர உள்ளது எங்களுக்கு எல்லாம் பெருமையாகும்.

    மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சியினர் தாங்கள் தான், எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்தோம் என சொல்லலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது.

    ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைய, மத்திய அரசுக்கு அ.தி.மு.க. கொடுத்த அழுத்தமே காரணம்.

    சட்டமன்றம், பாராளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.


    இது தொடர்பாக அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை கழக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தேர்தல் ஆணையத்தில் தெரியப்படுத்தி இருக்கின்றனர்.

    தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டத்தில், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்று கருத்துக்களை தெரிவிப்பார்கள்.

    என்னை பொறுத்தவரை அ.தி.மு.க. தேர்தலை கண்டு பயப்படும் இயக்கம் அல்ல. எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்.

    ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும். அப்படி பார்த்தால் அ.தி.மு.க. ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் தான் ஆகிறது. இடையில் தேர்தல் நடத்தப்பட்டால் மக்களின் வரிப்பணம் வீணாவதோடு, தேவையற்ற சிரமமும் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #SellurRaju
    ஜெயலலிதா குறித்து சர்ச்சை கருத்துக்கள் தெரிவித்த அமைச்சர் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வேடசந்தூர் போலீசில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார். #DindugalSrinivasan

    வேடசந்தூர்:

    மதுரை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளராக இருப்பவர் ராஜா எஸ்.சீனிவாசன். இவர் மதுரை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரும் ஆவார். கடந்த மாதம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருநதார்.

    வேடசந்தூரில் கடந்த 19.6.2018-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது கொள்ளையடித்த பணத்தைதான் டி.டி.வி. தினகரன் மூலம் பெற்றுக் கொண்டு அந்த பணத்தால் வெற்றி பெற்ற 18 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்து வருகிறார்கள் என பேசினார்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் திண்டுக்கல சீனிவாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேடசந்தூர் போலீசில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நீதிமன்றம் தலையிட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு தனது மனுவில் கூறியிருந்தார்.


    வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி ராஜா எஸ்.சீனிவாசன் தனது வக்கீலுடன் வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு தனி அறையில் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் வீரகாந்தி ஆகியோர் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார். அவர் அளித்த வாக்குமூலம் அனைத்தும் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டது.

    மேலும் வெள்ளை பேப்பரிலும் டைப் செய்து புகார் மனு வாங்கப்பட்டு ராஜா எஸ்.சீனிவாசனிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. அமைச்சர் மீது புகார் தெரிவிக்க வந்ததால் பொதுமக்கள் யாரையும் 3 மணி நேரம் போலீஸ் நிலையத்துக்குள் அனுமதிக்கவில்லை. வேறு யாரிடமும் புகார் வாங்கவும் இல்லை.

    மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தேன். என்னிடம் நாளிதழ்களில் வந்த செய்தி மட்டுமே ஆதாரமாக உள்ளது. வீடியோ ஆதாரம் இல்லை. எனவே எனது புகார் மீது வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு வழக்கு பதிவு செய்யாவிட்டால் மீண்டும் நீதிமன்றத்தில் புகார் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து இன்ஸ்பெக்டர் வீரகாந்தி கூறுகையில், ராஜா எஸ்.சீனிவாசன் அளித்த புகார் மீது விசாரணை நடத்தப்படும். அது குறித்த விபரங்களை அறிக்கையாக ஐகோர்ட்டில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றார். #DindugalSrinivasan

    தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #PonRadhakrishnan

    சென்னை:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் பயங்கரவாதிகள் தங்களை மூளைச்சலவை செய்ததாக மக்கள் கூறி இருக்கிறார்கள். இங்குள்ள தி.மு.க. உள்ளிட்ட கட்சி தலைவர்களின் மூளை டிரைகிளீனருக்கா போய்விட்டது? மக்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

    முந்தைய காலங்களில் மத்திய ஆட்சியை கேள்வி கேட்டது உண்டா? மாநில அரசு செயல்பட தவறும் போது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பயங்கரவாதிகளுக்கு சமூக விரோதிகள் என்ற கவுரவம் வேண்டாம். தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக நான் வெளிப்படையாகவே சொல்லி வருகிறேன்.

    அவர்கள் ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை. நடவடிக்கை எடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் மகிழ்ச்சி. தேவைப்பட்டால் பயங்கரவாதிகள் மீது மத்திய அரசே நடவடிக்கை எடுக்கும்.


    சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் சென்னையில் இருந்து மேற்கு மாவட்டங்களுக்கு வளர்ச்சியை கொடுப்பது. இந்த திட்டம் சேலம், கோவையை தாண்டி இருக்கும் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

    இந்த திட்டத்தை எதிர்ப்பதற்கான அடிப்படை நோக்கம் என்பது தமிழகத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும். தொழிலாளர்கள் வேலை இழக்க வேண்டும். புது தொழிற்சாலைகள் வரக்கூடாது என்ற எண்ணம் தான்.

    தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் 60 சதவீதம் மேற்கு மாவட்டங்களில் உள்ளது. அந்த மாவட்ட மக்களின் முயற்சியில் இந்த திட்டம் வருகிறது. அதை கெடுக்கும் வகையில் செயல்படுகிறார்கள்.

    சில திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற முடியும். சில திட்டங்கள் தாமதமாகலாம். கன்னியாகுமரியில் நாலு வழிச்சாலைக்கு 2003-ல் திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போதுதான் செயல்படுத்தப்படுகிறது.

    மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் கிடப்பில் கிடப்பதற்கு யார் காரணம்? இதைப்பற்றி தி.மு.க.வோ மற்ற கட்சிகளோ பேசுகிறதா? நான் அந்த துறை பொறுப்பில் இருந்தபோது பிரச்சினைகளை அறிந்து மீண்டும் பணிகளை தொடங்கும் நிலைக்கு கொண்டு வந்தேன்.

    பா.ஜனதா ஆளும் மாநிலத்தில் 2 தொகுதிகளில் தோற்றதால் கட்சி செல்வாக்கை இழந்து விட்டதாக கூறுவது தவறு. இதுதான் ஜனநாயகத்தை பா.ஜனதா எப்படி கடை பிடிக்கிறது என்பதற்கு அடையாளம். மற்ற மாநிலங்களில் இடைத்தேர்தல் எப்படி நடக்கிறது?

    வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் எத்தனை கட்சிகள், எத்தனை வியூகங்கள் அமைத்தாலும் கடந்த தேர்தலைவிட கூடுதலான இடங்களை பெற்று மீண்டும் மோடி பிரதமராக வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan

    ×