என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அ.தி.மு.க. தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
    சென்னை:

    பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் நாளை சட்ட ஆணைய கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழக அரசின் சார்பில் துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சட்ட ஆணையத்திற்கு கடந்த மாதம் 29-ம் தேதி கடிதம் எழுதி உள்ளனர்.

    அதில், தற்போதைய சட்டமன்றத்தின் ஆயுள் காலத்தை குறைக்கும் வகையில் எந்த மாற்றமும் கொண்டு வரக்கூடாது என கூறப்பட்டுள்ளது. #OneNationOneElection
    தமிழகத்தில் ராணுவ ஆட்சி நடப்பதாக திருவண்ணாமலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் டி.டி.வி.தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை-சேலம் 8 வழி பசுமை விரைவு சாலைக்கு மத்திய அரசு மும்முரம் காட்டுகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த சாலை திட்டத்தை போராடி பெற்றதாகவும், இச்சாலை அமைந்தால் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழிற் வளர்ச்சி பெருகும் என ஒரு முறை கூறினார்.

    சேலம் விமான நிலையத்தில் பேட்டி அளிக்கும்போது பசுமை சாலை மத்திய அரசு கொண்டு வந்த திட்டம். மாநில அரசு நிலத்தை ஆர்ஜிதம் மட்டுமே செய்து கொடுக்கிறது என்றார். இப்போது எடப்பாடி பழனிசாமி மாறி மாறி பேசுகிறார்.

    கடந்த பிப்ரவரி மாதமே பசுமை சாலை திட்டத்தை செயல்படுத்த எடப்பாடி அரசு மத்திய அரசை வலியுறுத்தியது. அதன்பிறகே மத்திய அரசு சாலை அமைக்கும்பணியை தொடங்கியது. பசுமை சாலை அமைக்க அவசரம் எதற்கு?

    விவசாயிகள் தாங்களாகவே முன் வந்து தான் போராடுகின்றனர். அவர்களை யாரும் தூண்டி விடவில்லை. நீர் நிலைகள், மலைகள், இயற்கையை அழித்து பசுமை சாலையை அமைப்பது என்பது சரியான திட்டமாக தெரியவில்லை.


    1 ஏக்கர், அரை ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகளிடம் போலீசார் கடுமையாக நடந்து கொள்கின்றனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளை சந்தித்து திட்டம் குறித்து விளக்கியிருக்க வேண்டும்.

    பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் நிலத்தை விட்டுக் கொடுக்க யாருக்கும் மனசு வராது. அரை ஏக்கர் நிலத்திற்காக சுப்ரீம் கோர்ட்டு வரை செல்லும் சம்பவங்களையும் பார்த்திருக்கிறோம்.

    பசுமை சாலை அமைக்க மும்முரம் காட்டும் எடப்பாடி அரசு, அதே வேகத்தில் நீட் தேர்வில் விலக்கு கொண்டு வர மத்திய அரசிடம் போராடி இருக்க வேண்டும். விவசாய குடும்பத்தில் பிறந்தவர் என்று எடப்பாடி கூறி கொள்கிறார்.

    ஆனால், விவசாயிகளின் கஷ்டங்களை அவர் அறியவில்லை. சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்தவை. அந்த சாலையை விரிவுப்படுத்தினாலே போதும்.

    பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பேச்சு, கருத்து, எழுத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது. கருத்து தெரிவிப்பவர்கள் மீது வழக்கு போடுகின்றனர். குரல் வளையை நெரிக்கின்றனர். தமிழகத்தில் ராணுவ ஆட்சி நடக்கிறது.

    அம்மாவின் ஆட்சி நடப்பதாக எடப்பாடி கூறுகிறார். இது அம்மாவின் ஆட்சியே கிடையாது.

    18 எம்.எல்.ஏ.க்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த வழக்கால், எடப்பாடி அரசு தப்பித்து கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Edappadipalanisamy
    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதால் மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பி.க்களுக்கு தன் மீது கோபம் உள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
    மதுரை:

    மாமதுரை மக்கள் இயக்கம் மற்றும் மதுரை எய்ம்ஸ் மக்கள் இயக்கம் சார்பில் மதுரை மாவட்டத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையை அளித்ததற்காக மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது.

    மதுரை அண்ணாநகரில் நடைபெற்ற எய்ம்ஸ் நன்றி அறிவிப்பு பொது கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றனர்.

    பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் பேசியதாவது:-

    மத்தியில் பா.ஜ.க.ஆட்சி வருவதற்கு முன் பல காலம் காங்கிரசும், 10 ஆண்டு காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியும் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு எத்தனை திட்டங்களை கொண்டு வந்தனர்.

    10 மத்திய மந்திரிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இருந்த போதிலும் 10 கோடிக்கான திட்டத்தைக் கூட மதுரைக்கு கொண்டு வராதவர்கள் தி.மு.க.காரர்கள்.

    மத்தியில் நிதி அமைச்சராக உள்துறை அமைச்சராக இருந்தவர்கள் தமிழகத்திற்கு துரோகம் தான் செய்தனர்.

    மத்தியில் பா.ஜ.க.வின் மோடி ஆட்சி முதல் பட்ஜெட்டிலேயே தமிழகத்திற்கு எய்ம்ஸை அறிவித்தது.

    எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டவுடனே நான் யோசித்தது தமிழகத்தில் எந்த பகுதியில் எய்ம்ஸை அமைப்பது என்பது தான்.

    மதுரை தோப்பூரை பற்றி எனக்கு தெரியாது. தென் பகுதியில் உள்ள 12 மாவட்டங்கள் பயன் பெறும் என்று தான் மதுரையில் எய்ம்ஸ் வர பாடுபட்டேன். எந்த மாவட்டத்திற்கும் எய்ம்ஸ் வரக்கூடாது என்று நான் சொல்லவில்லை.

    மதுரைக்கு வர வேண்டும் என்பதில் நான் குறியாக செயல்பட்டேன். இதனால் என் மீது பல எம்.பி.க்களுக்கும் மத்திய மந்திரிகளுக்கும் கோபம் கூட இருக்கும்.

    நான் மத்திய சுகாதார துறை மந்திரி நட்டாவை சந்திக்கும் போதெல்லாம் எய்ம்ஸை பற்றி தான் பேசுவேன். இதனால் என் பெயரேயே எய்ம்ஸ் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


    எய்ம்ஸை தமிழகத்திற்கு அளித்த பிரதமர் மோடிக்கு ஏன் தமிழக அரசு நன்றி தெரிவிக்கவில்லை.

    தமிழகத்திற்கு 6 மாதத்திற்கு உள்ளாக மட்டும் ரூபாய் ஒன்றரை லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டு வந்து உள்ளது மோடி அரசு.

    இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

    பொது கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    தரமான சிகிச்சையை தென் தமிழக மக்கள் பெறவே மதுரைக்கு எய்ம்ஸ் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதற்காக மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

    கர்நாடகாவில் குமாரசாமி பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் இல்லாமலே ஆட்சிக்கு வந்தது திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்ததால் தான். ஆகவே தான் ஸ்டாலினும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று தான் ஸ்ரீரங்கம் வந்து சென்றுள்ளார்.

    காவிரியில் தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர் வந்தே தீரும். எதிர்கட்சிகள் கேட்டதை போல காவிரி ஆணையமும் அமைக்கப்பட்டு விட்டது. அதன் ஒழுங்காற்று கூட்டமும் நடத்தப்பட்டு விட்டது. இனி 50 வருடங்களுக்கு மோடி ஆட்சி தான் இந்தியாவில் நடக்க போகிறது.

    தமிழகத்தில் கூடிய விரைவில் பா.ஜ.க.ஆட்சி மலர இருக்கிறது. தமிழகத்தில் தாமரையை மலர வைக்காமல் என் உயிர் போகாது.

    இவ்வாறு அவர் பேசினார். #AIIMS #BJP #TamilisaiSoundararajan #PonRadhakrishnan
    அரசு புள்ளி விவரம் மூலம் பெண்கள் வாழ தகுதி அற்ற மாநிலம் தமிழகம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அதற்கு காரணமானவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது பெண்களும், குழந்தைகளும் வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த ஆட்சியாளர்கள் தவறியது கண்டிக்கத்தக்கது.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆணையிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்கில், தமிழக அரசின் தலைமைச் செயலரும், காவல்துறை தலைமை இயக்குனரும் தாக்கல் செய்துள்ள புள்ளி விவரங்களில் மகளிரும், குழந்தைகளும் தமிழகத்தில் எந்த அளவுக்கு ஆபத்தான சூழலில் உள்ளனர் என்பது குறித்த புள்ளி விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருப்பது ஒருபுறமிருக்க, இத்தகைய குற்றங்களைச் செய்தவர்களில் 95 சதவீதக்கும் மேற்பட்டோர் தண்டனை பெறாமல் தப்பி விடுகின்றனர் என்பது தான் அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.

    2016-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக நடந்ததாக பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 11,625 ஆகும். இவற்றில் தண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 257 மட்டும் தான். இது மொத்த வழக்குகளில் எண்ணிக்கையில் வெறும் 2 சதவீதம் மட்டும் தான். அதேநேரத்தில் 1244 வழக்குகளில் குற்றம் செய்தவர்கள் நேரடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    1961 பேர் வேறு காரணங்களால் தண்டிக்கப்படாமல் விடப்பட்டிருக்கின்றனர். அதாவது விசாரணை முடிந்த வழக்குகளில் விடுவிக்கப்பட்டவர்களின் அளவு, தண்டிக்கப்பட்டவர்களின் அளவை விட 12 மடங்குக்கும் அதிகமாகும்.

    தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 27ஆம் தேதி காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,‘‘பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

    பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் குற்றங்களின் விகிதம் குறைவாக உள்ளது. குற்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் விகிதம் அதிகரித்துள்ளது’’ என்று பெருமிதம் தெரிவித்திருந்தார்.

    ஆனால், அவரது கூற்று தவறானது என்பதை அவரது அரசு உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த புள்ளி விவரங்களே நிரூபித்திருக்கின்றன. இத்தகைய இழிநிலைக்கு தமிழகத்தை தள்ளியவர்கள் வெட்கப்பட வேண்டும். மகளிருக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் அனைத்து காவல் உட்கோட்டங்களிலும் மகளிர் காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், அவை மகளிருக்கு எதிரான அனைத்துக் குற்றங்களையும் விசாரிப்பதில்லை.

    இந்த நிலையை மாற்றி, மகளிர் காவல் நிலையங்களை வலுப்படுத்துதல், கூடுதல் அதிகாரங்களை வழங்குதல், அதிக எண்ணிக்கையில் புதிய காவல் நிலையங்களைத்திறத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், தமிழக காவல்துறையில் மகளிர் பாதுகாப்புக்கென தனிப் பிரிவை மகளிர் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் தொடங்க வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    தற்போதைய நிலையில் தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #thirunavukkarasar #dmk #congressparty

    ஈரோடு:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கட்சி ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார்.

    அதன்படி ஈரோடு தெற்கு மாவட்டத்தில் ஆய்வுக்கூட்டம் ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

    தற்போது தமிழகத்தில் 60 கட்சிகள் உள்ளன. ரஜினி கட்சி தொடங்க இருக்கிறார். விஜய் போன்றோர் கட்சி தொடங்க போவதாக தகவல் உள்ளது. ஏற்கனவே கமல் கட்சி தொடங்கி விட்டார். எனவே தேர்தலுக்கு முன்பு இன்னும் 10 கட்சிகள் வரை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. அ.தி.மு.க. பல அணிகளாக இருக்கிறது. எனவே தற்போதைய நிலையில் தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படாததால் மக்கள் நலத்திட்டப்பணிகள் செய்யப்படவில்லை. எனவே உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு விரைந்து முடிக்கப்பட வேண்டும். இந்த தீர்ப்பு வந்தால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழலாம்.

    சேலத்தில் இருந்து சென்னைக்கு 8 வழிச்சாலையில் சென்றால் 30 நிமிடம் குறைவாக இருக்கும் என்கிறார்கள். அது 10 ஆயிரம் கோடி திட்டம் என்றும் கூறுகிறார்கள். நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்றால், ஏற்கனவே இருக்கிற கிராம சாலைகள், நகர சாலைகள், ஒன்றிய சாலைகள், 4 வழி மற்றும் தேசிய சாலைகளை செப்பனிட்டு சரி செய்தாலே அவர்கள் குறிப்பிடும் அளவு நேரத்தை மிச்சப்படுத்த முடியும். எந்த திட்டமாக இருந்தாலும் மக்கள் விருப்பம் இல்லாமல் நிறைவேற்றக்கூடாது. மக்களை மிரட்டி சிறையில் அடைப்பதை அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார். #thirunavukkarasar #dmk #congressparty

    ரஜினியும், கமலும் இணைந்தால் தமிழகத்தில் புரட்சி வெடிக்காது, நிச்சயம் வறட்சி தான் ஏற்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #ministerjayakumar #kamal #rajinikanth
    சென்னை:

    தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கவர்னரின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுகிறது. குறிப்பாக தி.மு.க. செயல்தலைவர் நிறைய விமர்சனங்களை முன்வைக்கிறார். கவர்னர் விவகாரத்தில், மு.க.ஸ்டாலின் மாற்றி மாற்றி கருத்துகள் சொல்லி வருகிறார். தமிழக பொறுப்பு கவர்னராக வித்யாசாகர்ராவ் இருந்த சமயத்தில், ‘நிலையான கவர்னர் தேவை’ என்று கருத்து கூறினார். தற்போது நிலையான கவர்னராக பன்வாரிலால் புரோகித் இருந்தும், அவரின் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறிவருகிறார்.

    கவர்னர் என்பவர் நிர்வாகத்தின் தலைவர் ஆவார். அதன்படி தான் தனது கடமையை ஆற்றுகிறார். அரசியலமைப்பு சட்டம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி தான் கவர்னர் செயல்படுகிறார். அதே அரசியலைப்பு சட்டத்துக்குட்பட்டு தான் அரசும் செயல்படுகிறது.

    ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் இணைந்தால் புரட்சி ஏற்படும் என்று நடிகர் விஷால் கருத்து தெரிவித்திருக்கிறார். நான் ஒன்றுமட்டும் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். ரஜினியும், கமலும் இணைந்தால் தமிழகத்தில் புரட்சி வெடிக்காது, நிச்சயம் வறட்சி தான் ஏற்படும்.

    தமிழகத்தில் நடப்பது அ.தி.மு.க. எனும் மக்களாட்சி. இந்த ஆட்சி என்றும் தொடரும். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும், 2021-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. தான் வெற்றிபெறும். யார் ஒன்று சேர்ந்தாலும் தமிழகத்தில் எதுவும் நடக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #ministerjayakumar #kamal #rajinikanth
    சென்னையில் 9-ந்தேதி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா பேசுகிறார் என தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #tamilisai #AmitShah
    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா 9-ந்தேதி சென்னை வருகிறார். அன்றைய தினம் சென்னை வி.ஜி.பி.யில் நடைபெறும் தேர்தல் தயாரிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இது தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். தமிழகத்தில் தாமரை மலராது என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சி இருக்கும். இன்று இருக்கும் சவாலான சூழ்நிலையில் அடிமட்டத்தில் இருந்து எப்படி கட்சியை எடுத்து சென்று கொண்டு இருக்கிறோம் என்பதை எங்கள் தலைவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.

    எங்கள் கட்சியில் 5 வாக்குச்சாவடியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை மட்டும் தான் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற அழைத்து இருக்கிறோம். கூட்டத்தை கூட்டுவது எங்கள் நோக்கம் அல்ல. இது கட்சி ரீதியான, அமைப்பு ரீதியான கூட்டம் தான். அரசியல் ரீதியான கூட்டம் கிடையாது.

    அமைப்பு ரீதியான விவாதங்களும், கலந்துரையாடல்களும் மட்டும் தான் இதில் இருக்கும். அமைப்பு ரீதியாக கட்சியை பலப்படுத்தி இருக்கிறோம். அதன் வெளிப்பாடு தான் இந்த நிகழ்ச்சி.

    நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒரு வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அதில் 11 பேர் இடம் பெற்று இருக்கின்றனர். வழிகாட்டுவதற்கும், கொள்கை ரீதியாக முடிவை எடுப்பதற்கும், ஆலோசிப்பதற்கும் இந்த குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த குழுவுடன் அமித்ஷா 2 மணி நேரம் கலந்து பேசுகிறார். அதன்பின்னர், சகோதர அமைப்புகளை சார்ந்த சில தலைவர்களுடன் சின்ன சந்திப்பு இருக்கிறது.

    நாடாளுமன்ற தேர்தல் வழிகாட்டுதல் குழு தமிழக அரசியலை ஆராய்ந்து அறிக்கை கொடுப்பார்கள். எதிர்க்கட்சிகளின் நிலை எப்படி இருக்கிறது? என்ற கலந்துரையாடலுக்கு பின்பு வியூகங்கள் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #tamilisai #AmitShah
    உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் டி.ஜி.பி. நியமனம் நடைபெறும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNAssembly #Edappadipalanisamy
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி. நியமனம் குறித்து ஒரு பிரச்சனையை கிளப்பினார். அப்போது அவர் பேசியதாவது:-

    உச்சநீதிமன்றத்தில் கடந்த 3-ந்தேதி வழங்கப்பட்ட பிரகாஷ்சிங் வழக்கு தீர்ப்பில் டி.ஜி.பி. நியமனத்துக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

    அதன்படி ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யை தொடர்ந்து 2 வருடங்கள் பணியாற்ற அனுமதிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ஓய்வு பெற்ற டி.ஜி.பி. சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக 2 வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்புக்கு எதிரானது. இது போன்ற நியமனங்களால் மூத்த அதிகாரிகள் பலர் டி.ஜி.பி. பதவியை பெற முடியாமலேயே ஓய்வு பெறும் நிலை உள்ளது.

    டி.ஜி.பி.யாகும் இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் கனவும் நிறைவேறாமல் போகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தற்போதைய டி.ஜி.பி. 2 வருடங்கள் பதவி வகிப்பது தவறு. எனவே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும். இனி இது போன்ற தவறுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதே கருத்தை வலியுறுத்தி சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமியும் பேசினார்.

    இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    காவல் துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம், பிரகாஷ் சிங் மற்றும் பலர் தாக்கல் செய்த வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு 3.7.2018 அன்று தன்னுடைய இடைக்கால உத்தரவினை வழங்கியுள்ளது.

    உச்ச நீதிமன்றம், மேற்கண்ட இடைக்கால உத்தரவில், மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிடும் போது 29 மாநிலங்களில், இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றும், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்கள் மட்டுமே காவல் துறை தலைமை இயக்குநர் நியமனத்திற்கு தேர்வுப் பட்டியலை தயாரிக்க மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு கருத்துருக்களை அனுப்பி வைத்துள்ளன எனவும் தெளிவாகக் குறிப்பிட்டார்.

    ஏற்கனவே நடைமுறையில் இருந்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றித் தான் தமிழ்நாட்டில் காவல்துறை தலைமை இயக்குநர் நியமனம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, அதோடு, 3.7.2018 அன்று மேற்படி வழக்கில், உச்சநீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் சில வழிமுறைகளை புதியதாக வழங்கியுள்ளது.

    தமிழ்நாடு அரசு வரும் காலங்களில், இந்த வழிமுறைகளை பின்பற்றும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் இரண்டு ஆண்டுக்கு மேல் காவல்துறை தலைமை இயக்குநர் பணியாற்றக் கூடாது என்ற ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றார். அது அவ்வாறு அல்ல. ஒரு காவல்துறை தலைமை இயக்குநர் நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்ந்து 2 ஆண்டு காலம் இருக்க வேண்டும் என்பது தான், என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, ஏற்கனவே, டிஜிபி நியமனத்தை பொறுத்தவரைக்கும், சட்டத்திட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #Edappadipalanisamy
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றம் மூலம் வென்று மீண்டும் சட்டசபைக்கு வருவார்கள் என்று நாமக்கலில் டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #18MLACase
    நாமக்கல்:

    நாமக்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருவருடைய நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடக்கிறது. உங்கள் கருத்து என்ன?

    அரசுக்கு முட்டை எல்லாம் சப்ளை செய்கிறார்கள். அதுமட்டுமல்ல சத்துணவு துறைக்கு நிறைய பொருள் சப்ளை செய்கிறார்கள். அவர்களது நிறுவனம் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடப்பதை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

    உங்களுக்கே தெரியும். அது திருச்செங்கோடு, நாமக்கல் போன்ற பகுதிகளில் அதிக இடங்களில் சோதனை நடக்கிறது. இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்? யார்? யாரை நோக்கி இது குறி வைத்து இருக்கிறார்கள் என்பது நாமக்கல் மாவட்ட மக்களுக்கு குறிப்பாக குமாரபாளையம் பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும்.

    2006-ல் சட்டமன்ற உறுப்பினராக ஆனவர்கள் அன்றைக்கு சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை கொடுத்து இருப்பார்கள். இன்றைக்கு அவர்களது சொத்து மதிப்பு என்ன? தமிழ்நாடு மட்டுமல்ல, வெளி மாநிலங்களிலும் ஆக்டோபஸ் மாதிரி அவர்களுடைய பினாமி பெயரில் பரவி இருக்கிறதாக வந்த தகவலின் அடிப்படையில் தான் இந்த சோதனை நடைபெறுவதாக சொல்கிறார்கள்.

    பார்ப்போம்.. பொறுத்து இருந்து பார்ப்போம்... இன்னும் இதைபோல் நிறைய வேடிக்கைள் எல்லாம் நடக்கும் என தகவல்கள் வருகிறது.

    கடந்த 2 வருடங்களாக தமிழ்நாட்டை பலர் சுரண்டி உள்ளார்கள். சுரண்டியவர்களிடம் சோதனை நடப்பதாக தகவல் வந்து இருக்கிறது.

    இந்த சோதனை மத்திய அரசின் அழுத்தமா?

    யாருடைய அழுத்தமும் இல்லை. நிறைய பேருடைய பினாமிகளை நோக்கி இந்த சோதனை நடப்பதாக சொல்கிறார்கள். சோதனை முடிந்ததும் என்ன வெளி வருகிறது என்று பார்ப்போம்.

    தமிழ்நாட்டில் இரண்டு பக்கமும் நிறைய கொள்ளையடித்தவர்கள் யார்? யார்? என்று உங்களுக்கே தெரியும். அவர்களுடைய பினாமி என்று சொல்கிறேன்.

    பாராளுமன்ற தேர்தல் கூடிய விரைவில் வர உள்ளதே?

    2019-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் வரும். அதற்குள் இந்த சட்டமன்ற தேர்தல் வரவேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களுடைய எதிர்ப்பார்ப்பு.

    இந்த மக்கள் விரோத ஆட்சி விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பது தான் மக்களுடைய எதிர்ப்பார்ப்பு. மீண்டும் அம்மா அவர்களின் ஆட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் வந்தால் தான் ஏழை, எளிய மக்கள், விவசாய பெருங்குடிமக்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் போன்ற சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர் பயன்பெறுவார்கள்.


    பா.ஜ.க. தலைவர் அமித்ஷா 9-ந்தேதி தமிழகம் வருகிறார். இதனால் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா?

    அதுபற்றி எனக்கு தெரியாது.

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு குறித்து எப்படி பார்க்கிறீர்கள்?

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு நிச்சயம் நீதிமன்றத்தின் மூலம் வென்று மீண்டும் சட்டமன்றத்திற்கு வருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #18MLACase
    தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில், மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் வரும் 23-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளார். #MLAsDisqualificationCase
    சென்னை:

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை சுப்ரீம் கோர்ட்டு மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்தது.

    புதிய நீதிபதி சத்ய நாராயணன் இன்று மாலை 4 மணிக்கு விசாரணையை தொடங்கினார். முதலில் இரு தரப்பு வக்கீல்களையும் அழைத்து விசாரணையை நடத்துவது குறித்து ஆலோசித்தார். இந்த வழக்கை எப்போது தொடங்கி நடத்துவது என்பது குறித்து வக்கீல்களின் கருத்தை கேட்டறிந்தார். 

    அதன்பின்னர் வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தார். 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி சத்தியநாராயணன் அறிவித்தார்.

    நீதிபதி சத்யநாராயணன் தனது விசாரணையை ஒரு வாரத்திற்குள் முடிக்கும்பட்சத்தில், அதிலிருந்து ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. #MLAsDisqualificationCase
    மத்திய அரசின் உயர் கல்வி ஆணையம் தொடர்பான மு.க.ஸ்டாலின் கேள்விக்கு தமிழகத்தின் கல்வி உரிமையை விட்டு கொடுக்கமாட்டோம் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் பதில் அளித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    மத்திய அரசு பல்கலை கழக மானிய குழுவை மாற்றி விட்டு உயர் கல்வி ஆணையம் என்று தொடங்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

    தற்போது உயர் கல்விக்கு பல்கலைக்கழக மானிய குழு மூலம் தான் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த உரிமையை மத்திய அரசு பறித்து விட்டு உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை தொடங்க உள்ளது.

    இதன் மூலம் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும். கல்வி நிதி ஒதுக்கீடு இல்லாமல் போய்விடும். இதன் மூலம் மத்திய பா.ஜனதா அரசு இதில் புகுந்து விளையாட பார்க்கிறது. தமிழ்நாட்டில் 13 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் 12 ஆயிரம் பேர் பி.எச்.டி.யும், 600 பேர் எம்.எஸ்.சும் படிக்கின்றனர்.

    இவர்களுக்கிடையே உயர் கல்விக்கான சலுகைகள் பாதிக்கப்படும். எனவே மாநில அரசு, மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு தகுந்த வகையில் எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் கல்வி உரிமையை விட்டு கொடுக்காமல் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முதல்-அமைச்சரும் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதிலளித்து உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

    மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உயர் கல்வி ஆணையம் அமைப்பதற்கான சட்டமுன் வடிவை கொண்டு வந்துஇருக்கிறார். இதற்கு முன்பு மாநிலங்கள் சார்பில் தங்களின் கருத்துகளையும், பரிந்துரைகளையும் வருகிற 7-ந் தேதிக்குள் டெல்லிக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழக வேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள் ஆகியோரின் ஆலோசனைகளை பெற்று 7-ந் தேதிக்குள் தமிழகத்தில் இருந்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழகத்தின் உரிமைகளை விட்டு கொடுக்க மாட்டோம். நமது தேவைகளை வலியுறுத்துவோம்.

    எந்த சூழ்நிலையிலும் நமது உரிமைகள் பறிபோகாத அளவில் தமிழக அரசு செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    துரைமுருகன் (தி.மு.க.):-

    பல்கலைகழக மானிய குழுவை கலைத்து விட்டு உயர் கல்வி ஆணையம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?

    அமைச்சர் அன்பழகன்:- மத்திய அரசு இந்த முடிவை எடுத்து இருக்கிறது. இதில் நமது உரிமை எந்த அளவிலும் பாதிக்கப்படாத அளவுக்கு உரிய முயற்சிகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது. #TNAssembly
    நேபாளத்தில் மீட்கப்பட்ட தமிழக பக்தர்கள் இன்று சென்னை திரும்புகிறார்கள் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    நேபாளம்-திபெத் எல்லையில் உள்ள மானசரோவருக்கு யாத்திரை சென்று நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் மீட்கப்பட்டது பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று பேசியதாவது:-

    இமயமலையில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவருக்கு ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில், நாடு முழுவதிலிருந்தும் பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர்.

    இந்தியாவிலிருந்து புனித யாத்திரை சென்றவர்கள், அங்கு நிலவும் மோசமான பருவநிலை காரணமாக, 629 பேர் சிமிகோட் என்ற இடத்திலும், 451 பேர் ஹில்சா என்ற இடத்திலும், மேலும் 500 பேர் சீனாவின் திபெத் எல்லையிலும் சிக்கியுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானவுடன், தமிழ்நாட்டைச் சேர்ந்த யாத்திரிகர் அங்குள்ளனரா என கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்.

    இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலிருந்து புனித யாத்திரை சென்றவர்களின் நிலை குறித்து, தமிழ்நாடு அரசு அதிகாரிகள், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் அமைந்துள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு, விவரங்கள் கேட்டறிந்தனர்.

    சென்னையிலிருந்து 19 பேர் கொண்ட குழுவினர், நேபாளத்தில் சிமிகோட் பகுதியில் இருப்பதாகவும், அவர்கள் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தகவல் பெறப்பட்டது. நேற்று பருவநிலை மேம்பட்ட காரணத்தால், சிமிகோட் பகுதியிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 யாத்திரிகர்கள் நேபாள்கஞ்ச் என்ற இடத்திற்கு விமானம் மூலம் வந்தடைந்தனர்.



    அங்கிருந்து யாத்திரிகர்களை தமிழ்நாட்டிற்கு உரிய முறையில் அனுப்பி வைப்பதற்கு, புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்திலிருந்து இரண்டு அதிகாரிகளை நேபாள்கஞ்ச் செல்ல நான் உத்தரவிட்டேன். அவர்கள், இந்திய தூதரகம் மற்றும் நேபாள அரசின் ஒத்துழைப்போடு, நம் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து யாத்திரிகர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து, தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இக்குழுவைச் சார்ந்த 18 பேர் இன்று காலை லக்னோ வந்தடைந்துள்ளனர். இக்குழுவைச் சார்ந்த மற்றொரு நபர் இன்று மாலைக்குள் லக்னோ வந்தடைவார். இவர்கள் அனைவரும் இன்று இரவு சென்னைக்கு வந்தடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து நான்கு பேர் யாத்திரை சென்றுள்ளனர். அவர்கள் நேற்று சிமிகோட் பகுதிக்கு திரும்பியுள்ளனர். அவர்களை, நேபாள் கஞ்ச் வழியாக இந்தியாவிற்கு அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இது தவிர, தேனி மாவட்டத்திலிருந்து தனியே சென்ற 6 பேர் கொண்ட குழுவில், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த 69 வயதான ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், புனித யாத்திரை செல்லும் வழியில், உடல்நிலை காரணமாக யாத்திரையை முடிக்க முடியாமல் திரும்பி வரும்போது, மூச்சுத் திணறி இறந்ததாக தகவல் பெறப்பட்டது.

    தற்போது அவரது உடல் நேபாள தலைநகர் காட்மண்டு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தகவல் தெரிந்த அவரது மகனும், மகளும் அங்கே சென்றுள்ளனர். அவரது உடலை இன்று அல்லது நாளைக்குள் அவரது சொந்த ஊருக்கு எடுத்துவர, நேபாள நாட்டின் காட்மண்டுவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    நேபாள நாட்டிற்கு, தமிழ்நாட்டிலிருந்து சென்றுள்ள அனைத்து யாத்திரிகர்களும் பாதுகாப்பாக அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அம்மாவின் அரசு எடுத்து வருகிறது என்பதை இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy #MansarovarYatra
    ×