search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாளத்தில் மீட்கப்பட்ட தமிழர்கள் இன்று சென்னை திரும்புகிறார்கள்- முதலமைச்சர்
    X

    நேபாளத்தில் மீட்கப்பட்ட தமிழர்கள் இன்று சென்னை திரும்புகிறார்கள்- முதலமைச்சர்

    நேபாளத்தில் மீட்கப்பட்ட தமிழக பக்தர்கள் இன்று சென்னை திரும்புகிறார்கள் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    நேபாளம்-திபெத் எல்லையில் உள்ள மானசரோவருக்கு யாத்திரை சென்று நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் மீட்கப்பட்டது பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று பேசியதாவது:-

    இமயமலையில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவருக்கு ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில், நாடு முழுவதிலிருந்தும் பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர்.

    இந்தியாவிலிருந்து புனித யாத்திரை சென்றவர்கள், அங்கு நிலவும் மோசமான பருவநிலை காரணமாக, 629 பேர் சிமிகோட் என்ற இடத்திலும், 451 பேர் ஹில்சா என்ற இடத்திலும், மேலும் 500 பேர் சீனாவின் திபெத் எல்லையிலும் சிக்கியுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானவுடன், தமிழ்நாட்டைச் சேர்ந்த யாத்திரிகர் அங்குள்ளனரா என கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்.

    இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலிருந்து புனித யாத்திரை சென்றவர்களின் நிலை குறித்து, தமிழ்நாடு அரசு அதிகாரிகள், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் அமைந்துள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு, விவரங்கள் கேட்டறிந்தனர்.

    சென்னையிலிருந்து 19 பேர் கொண்ட குழுவினர், நேபாளத்தில் சிமிகோட் பகுதியில் இருப்பதாகவும், அவர்கள் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தகவல் பெறப்பட்டது. நேற்று பருவநிலை மேம்பட்ட காரணத்தால், சிமிகோட் பகுதியிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 யாத்திரிகர்கள் நேபாள்கஞ்ச் என்ற இடத்திற்கு விமானம் மூலம் வந்தடைந்தனர்.



    அங்கிருந்து யாத்திரிகர்களை தமிழ்நாட்டிற்கு உரிய முறையில் அனுப்பி வைப்பதற்கு, புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்திலிருந்து இரண்டு அதிகாரிகளை நேபாள்கஞ்ச் செல்ல நான் உத்தரவிட்டேன். அவர்கள், இந்திய தூதரகம் மற்றும் நேபாள அரசின் ஒத்துழைப்போடு, நம் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து யாத்திரிகர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து, தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இக்குழுவைச் சார்ந்த 18 பேர் இன்று காலை லக்னோ வந்தடைந்துள்ளனர். இக்குழுவைச் சார்ந்த மற்றொரு நபர் இன்று மாலைக்குள் லக்னோ வந்தடைவார். இவர்கள் அனைவரும் இன்று இரவு சென்னைக்கு வந்தடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து நான்கு பேர் யாத்திரை சென்றுள்ளனர். அவர்கள் நேற்று சிமிகோட் பகுதிக்கு திரும்பியுள்ளனர். அவர்களை, நேபாள் கஞ்ச் வழியாக இந்தியாவிற்கு அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இது தவிர, தேனி மாவட்டத்திலிருந்து தனியே சென்ற 6 பேர் கொண்ட குழுவில், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த 69 வயதான ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், புனித யாத்திரை செல்லும் வழியில், உடல்நிலை காரணமாக யாத்திரையை முடிக்க முடியாமல் திரும்பி வரும்போது, மூச்சுத் திணறி இறந்ததாக தகவல் பெறப்பட்டது.

    தற்போது அவரது உடல் நேபாள தலைநகர் காட்மண்டு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தகவல் தெரிந்த அவரது மகனும், மகளும் அங்கே சென்றுள்ளனர். அவரது உடலை இன்று அல்லது நாளைக்குள் அவரது சொந்த ஊருக்கு எடுத்துவர, நேபாள நாட்டின் காட்மண்டுவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    நேபாள நாட்டிற்கு, தமிழ்நாட்டிலிருந்து சென்றுள்ள அனைத்து யாத்திரிகர்களும் பாதுகாப்பாக அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அம்மாவின் அரசு எடுத்து வருகிறது என்பதை இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy #MansarovarYatra
    Next Story
    ×