என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாட்டில் 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அரசு பஸ்களால் 6,132 விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதில் 6,729 பேர் உயிரிழந்துள்ளனர்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் நேற்று பஸ் போக்குவரத்து துறை மீதான மானிய கோரிக்கை நடந்தது. அதில் விபத்தில் சிக்கிய அரசு பஸ்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன.

    கடந்த 5 ஆண்டுகளில் அதாவது 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை விபத்தில் சிக்கிய அரசு பஸ்களால் 6,132 விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதில் 6,729 பேர் உயிரிழந்துள்ளனர். இது தமிழ்நாட்டில் நடைபெறும் மொத்த சாலை விபத்துக்களில் 8 சதவீதமாகும்.

    2013-14-ம் ஆண்டில் 1,318 பேரும், 2014-15-ம் ஆண்டில் 1,331 பேரும், 2015-16-ம் ஆண்டில் 1,460 பேரும், 2016-17-ம் ஆண்டில் 1,373 பேரும், 2017-18-ம் ஆண்டில் 1,085 பேரும் பலியாகியுள்ளனர்.

    எனவே, விபத்துக்களை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பஸ் ஓட்டும் போது டிரைவர்கள் செல்போனில் பேசுவது, மது அருந்திவிட்டு ஓட்டுவது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.

    போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மூச்சு பரிசோதனை நடத்தி வருகின்றனர். நீண்டநேரம் இயக்கப்படும் பஸ்களை ஓட்டும் டிரைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. விபத்து நடைபெறும் அபாய பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்துதல், சாலை வசதி மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.


    இந்த தகவலை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டசபையில் தெரிவித்தார். கடுமையான நடவடிக்கைகள் மூலம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விபத்துக்களில் பலியானோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2016-2017-ம் ஆண்டில் அரசு பஸ் விபத்துக்களால் 1,373 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் 2017-2018-ம் ஆண்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,086 ஆக குறைந்துள்ளது.

    விபத்தில் பலியானோருக்கு ரூ.80 கோடி வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் அதிக தொகை. இவை முழுவதையும் அரசால் வழங்க இயலாது. எனவே பயணிகளிடம் இருந்து ஒரு சிறிய தொகை வசூலிக்கப்படுகிறது.

    அதாவது பயணிகளிடம் இருந்து டிக்கெட்டில் ரூ.1 முதல் ரூ.10 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் விபத்து காப்பீடு வழங்கப்படும். கடந்த ஜனவரி முதல் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடு தொகை பெற ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு உடனடியாக இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். #TNAssembly #TNMinister #MRVijayabaskar
    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று அண்ணா அறிவாலயம் சென்று சந்தித்த வைகோ ம.தி.மு.க. முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். #MKStalin #DMK #MDMK #Vaiko
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று அண்ணா அறிவாலயம் சென்று சந்தித்தார்.

    ஈரோட்டில் செப்டம்பர் 15-ந்தேதி நடைபெற இருக்கும் ம.தி.மு.க. முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுமாறு அழைப்பு விடுத்தார். இருவரும் சுமார் 20 நிமிட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

    சந்திப்பு முடிந்ததும் வைகோ நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    செப்டம்பர் 15-ந்தேதி ஈரோட்டில் பெரியார், அண்ணா பிறந்தநாள் விழா, ம.தி.மு.க.வின் வெள்ளி விழா, என்னுடைய பொது வாழ்வு பொன்விழா ஆகிய 3 விழாவையும் இணைத்து மாநில மாநாடாக - முப்பெரும் விழா மாநாடாக நடத்த திட்டமிட்டு இருக்கிறேன்.

    அந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன்.

    அவரும் இந்த மாநாட்டுக்கு வந்து பொன்விழா மலரை வெளியிட்டு முப்பெரும் விழாவில் பங்கேற்க இசைவு தந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. #MKStalin #DMK #MDMK #Vaiko

    உலக நாடுகள் மத்தியில் வானத்திலேயே உலாவி கொண்டிருக்கக்கூடிய பிரதமருக்கு கஷ்டப்படக் கூடியவர்களின் சிரமங்கள் தெரியவில்லை என வைகோ விமர்சித்துள்ளார். #MDMK #Vaiko #Modi
    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு ஜூலை மாதம் கொடுக்கப்பட வேண்டிய தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆணையத்தின் அறிவிப்பினை ஏற்று தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விடவேண்டிய பொறுப்பும், கடமையும் கர்நாடக அரசுக்கு இருக்கிறது. நல்லதே நடக்கும் என்று எதிர்பார்ப்போம்.



    ஜி.எஸ்.டி.யால் சிறு, குறு தொழில் செய்பவர்கள், வணிகர்கள், பொதுமக்கள், தொழில் முனைவோர்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். உலக நாடுகள் மத்தியில் வானத்திலேயே உலாவி கொண்டிருக்கக்கூடிய பிரதமருக்கு கஷ்டப்படக் கூடியவர்களின் சிரமங்கள் தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #CauveryIssue #MDMK #Vaiko
    மத்திய இணைய தள நூலகத்தில் தமிழ் புத்தகங்கள் விரைவில் இடம்பெறும் என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார். #MKStalin #TNassembly

    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் மத்திய இணைய தள நூலகம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு தொடங்கியுள்ள இணைய தள நூலகத்தில் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருத புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல தென்னக மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளின் நூல்களும் இடம் பெறவில்லை.

    தெற்கு, வடக்கு என்று மாநிலங்களை பிளவு படுத்தும் வகையில் மத்திய அரசு நடந்துள்ளது. தமிழ் நாட்டில் சுமார் 3 லட்சம் எழுத்தாளர்கள் எழுதிய 1 கோடி நூல்கள் உள்ளன. தமிழக வரலாறு உள்ளது.

    இவையெல்லாம் இணைய தள நூலகத்தில் இடம் பெறவில்லை. ஆனால் வேறு நூல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ் உள்ளிட்ட தென் மாநில மொழிகளை புறக்கணித்து மத்திய அரசு சமஸ்கிருத துதி பாடுகிறது.

    தமிழக மக்களை இவ்வாறு புறக்கணித்த மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் பேசி இணைய தள நூலகத்தில் தமிழ்மொழி நூல்கள் இடம் பெற வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

    இதே கருத்தை வலியுறுத்தி சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி பேசினார். இதற்கு தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் அளித்த பதில் வருமாறு:-

     


    மத்திய அரசு இந்திய தேசிய இணைய தளத்தை தொடங்கி 5 நாட்கள் ஆகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழி புத்தகங்களும் இடம் பெற வேண்டும். இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் அறிய வேண்டும் என்பதற்காகவே இதை தொடங்கியிருக்கிறார்கள்.

    தமிழ், குஜராத்தி, கன்னடம் உள்ளிட்ட 8 மாநில மொழி புத்தகங்கள் இதில் விரைவில் இடம் பெற உள்ளன. இந்த இணைய தளம் குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் சவடேகரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது நாட்டில் உள்ள அனைத்து மொழி புத்தகங்களும் இந்த இணைய தள நூலகத்தில் இடம் பெறும் என்று கூறினார்.

    முதல் கட்டமாக இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருத நூல்கள் பரீட்சார்த்த முறையில் இடம் பெற்றுள்ளன. அனைத்து மொழிகளும் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதில் 149 தமிழ் அறிஞர்களின் 2 ஆயிரம் புத்தகங்கள் மற்றும் தமிழக அரசு உரிமம் பெற்றுள்ள 10 ஆயிரம் புத்தகங்கள்இந்த கணினி நூலகத்தில் இடம் பெறுகின்றன. இன்னும் 2 வாரத்துக்குள் இதற்கான வடிவமைப்புகள் நிறைவு செய்யப்பட்டு அனைவரும் படிக்கும் நிலை வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “கன்னி மாரா நூலகத்தில் உள்ள 10 ஆயிரம் புத்தகங்கள் இந்த இணைய தள நூலகத்தில் இடம் பெற செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது” என்றார். #MKStalin #TNassembly

    மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கீழ் கர்நாடக அணைகளை கொண்டு வர வேண்டும் என்று பிஆர் பாண்டியன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #CauveryManagementCommission #PRPandian

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், நிரூபர்களுக்கு பேட்டியளித்தார்.

    காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டத்திலேயே ஜூலை மாதத்திற்கு 31.24 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடக மாநிலம் திறந்து விட உத்தரவிட்டதை பாராட்டுகிறோம். இதனால் இந்த ஆண்டு ஒரு போக சம்பா சாகுபடியாவது மேற்கொள்ள முடியும் என நம்புகிறோம்.

     


    ஆணையத்தின் இந்த உத்தரவை காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழு உடன் நிறைவேற்ற வேண்டும். கர்நாடகாவில் உள்ள அணைகளின் தண்ணீரை அன்றாடம் கணக்கிட்டு பகிர்ந்தளிக்கும் நிர்வாக அதிகாரத்தை ஆணையம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

    சுப்ரீம் கோர்ட்டுக்கு இணையான ஆணைய உத்தரவை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும். இதை யார் மீறினாலும் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பின் கீழ் கர்நாடக அணைகளை கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    90 சதவீத அ.தி.மு.க. தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #ADMK #Dhinakaran

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- 8 வழிச் சாலையை எதிர்த்து பேசிய வைகோ, தொல்.திருமாவளவன், திருநாவுக்கரசர் போன்ற தலைவர்கள் தற்போது மக்களைக் கேட்டு முடிவு செய்வோம் என்று சொல்வதன் மூலம் பின் வாங்குவதாக தெரிகிறதே?

    பதில்:- பின்வாங்குற செயலாக தெரியலை. அரசாங்கத்திடம் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க. மக்களை துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களைப் பார்க்கும் போதே தெரிகிறது. மக்களிடம் கருத்து கேளுங்க. அதுதான் சரி என்று சொல்லி இருக்கலாம்.

    கேள்வி:- 8 வழிச்சாலையின் தலைவர்களின் வீரியம் குறைந்தது போல் தெரிகிறதே?

    பதில்:- வீரியம் எல்லாம் குறையவில்லை. 6-ந்தேதி திருவண்ணாமலையிலும், 9-ந்தேதி அரூரிலும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்காக அனுமதி கேட்டிருக்கிறோம். போலீஸ் அனுமதி கொடுக்க வில்லை என்றால் நீதிமன்றம் செல்வோம். நீதிமன்றத்தின் மூலம் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். போராட்டம் நடக்கும்.


    கேள்வி:- காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டு செல்ல வேண்டும் என்று கர்நாடகத்தில் அனைத்துக் கட்சி சார்பாக முடிவெடுத்திருக்கிறார்கள். தமிழகத்திலும் எதிர்க்கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கோரியும், தமிழக அரசு சார்பாக இதுவரை எந்த ஒரு பதிலும் சொல்லவில்லையே?

    பதில்:- தமிழக அரசு இதுவரை என்னதான் செய்திருக்கிறது? நீதிமன்றம் சரியா முடிவெடுக்கறதால காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கு. தொடர்ந்து பார்ப்போம். தமிழகத்தில் அரசு ஒன்று இருக்கிறதா? நீங்கதான் நினைக்கிறீங்க. மக்கள் யாரும் அரசு ஒன்று இருப்பதாக பொருட்படுத்தவில்லை. இருக்கிற அரசாங்கமும் மக்களை கஷ்டப்படுத்த தான் இருக்கிறது என்பது மக்களோடு எண்ணம். விரைவில் இந்த அரசாங்கத்துக்கு நல்ல முடிவு வரும்.

    கேள்வி:- தொடர்ந்து நீங்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டுவர்றீங்க. போற இடங்களில் எல்லாம் உங்களுக்கு எப்படி வரவேற்பு இருக்கு?

    பதில்:- வரவேற்பை பற்றி நீங்கள்தான் சொல்லணும்?

    கேள்வி:- போற இடங்களில் எல்லாம் அ.தி.மு.க.வோட அடிமட்ட தொண்டர்கள் எல்லாம் உங்கள் பக்கம் இருப்பதாக சொல்லப்படுதே?

    பதில்:- உண்மைதான். தொன்னூறு சதவீதத்துக்கு மேலே அம்மாவோட தொண்டர்கள் எங்கக் கூட தான் இருக்காங்க. ஆட்சி அதிகாரத்துல இருக்கிற தால அ.தி.மு.க. என்கிற கட்சி ஓடிக்கிட்டு இருக்கு. ஆட்சியை விட்டு இறங்கினால் அது முழுவதும் எங்களிடம் வந்து விடும்.

    இவ்வாறு தினகரன் கூறினார். #ADMK #Dhinakaran

    ஆட்சியை காப்பாற்ற ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். அமைதியாக இருக்கிறார்கள் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். #Kushboo #ADMK

    சென்னை:

    பெப்சி அலுவலகத்தில் நடிகை குஷ்பு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்து ஒரு ஆண்டு முடிவடைந்தது பற்றி?

    பதில்:- வரி கட்டினால் தான் நாடு நன்றாக இருக்கும். ஆனால் ஜி.எஸ்.டி. வி‌ஷயத்தில் அருண் ஜெட்லி, அமித்ஷாவுக்கு தெளிவு இல்லை. தவறுதலாக பல வி‌ஷயங்களை செயல்படுத்தி விட்டார்கள். மன்மோகன் சிங் ஜி.எஸ்.டி.யால் ஜி.டி.பி. குறையும் என்று முன்பே கூறினார். அப்போது அவரை பா.ஜ.க.வினர் திட்டினார்கள். இப்போது அதுதானே நடக்கிறது. வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து விட்டது. ஜிஎஸ்டியால் ஏகப்பட்ட பொருளாதார பிரச்சினைகள்.

    கே:- பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பது பற்றி?

    ப:- தாமசன்ராய்ட்டர் என்ற நிறுவனம் கூறியிருக்கிறது. அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சில பிரச்சினைகள் இருந்தாலும் இந்தியாவில் பெண்கள் பெரிய அளவில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். அதே சமயம் நாட்டில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் அதிகரித்து வருகிறது. 2015- 2016 காலகட்டத்தில் இது தொடர்பாக 39 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

    2013 -ல் இதே நிறுவனம் இதே வி‌ஷயத்தில் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாக சொன்னபோது மோடி ஒரு பெண் தலைவியாக இருக்கும் நாட்டில் இப்படியா? என்று சோனியா காந்தியை பார்த்து கேள்வி கேட்டார். இப்போது நாங்கள் கேள்வி கேட்கிறோம். அவர்கள் மழுப்பலாக பதில் சொல்கிறார்கள்.

    கே:- சேலம் சென்னை 8 வழி சாலை பற்றி?

     


    ப:- நாட்டுக்கு வளர்ச்சி தேவை. ஆனால் விவசாயம் பாதிக்க கூடாது. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நியாயமான பதில் இல்லை. ஸ்டெர்லைட் வி‌ஷயத்திலும் மாநில அரசிடம் சரியான பதில் இல்லை.

    கே:- சர்கார் படத்தில் விஜய் சிகரெட் பிடித்ததற்காக பா.ம.க. எதிர்ப்பு தெரிவிக்கிறதே?

    ப:- எல்லாவற்றிற்கும் கருத்து சொல்லிக்கொண்டே இருந்தால் நம் வேலையை நாம் செய்ய முடியாது.

    கே:- தமிழகத்தில் கவர்னர் ஆய்வு தொடர்கிறதே?

    ப:- ராமர்-லட்சுமணர் போல இருக்கும் முதல்வரும் துணை முதல்வரும் எங்கள் வேலையை நீங்கள் ஏன் செய்கிறீர்கள்? என்று கேட்கட்டுமே... தம்பி நீங்க இப்ப பேசக்கூடாது என்று டெல்லியில் இருந்து சொல்லி இருக்கிறார்கள். தங்கள் ஆட்சியை 3 ஆண்டுகள் காப்பாற்றுவதற்காக இருவரும் அமைதியாக இருக்கிறார்கள்.

    கே:- தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் என்று கூறினீர்களே?

    ப:- அதுபற்றி பேச வேண்டாம். அது முடிந்து போன வி‌ஷயம். மீண்டும் மீண்டும் அரைத்தால் புளித்துவிடும். மாற்றுவார்களா என பார்ப்போம்.

    கே:- தமிழக மகிளா காங்கிரசில் இருந்து நடிகை நக்மா நீக்கப்பட்டு இருக்கிறாரே?

    ப:- எனக்கும் மகிளா காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை. அது மேலிடம் எடுத்த முடிவு.

    கே:- கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு காவிரி வி‌ஷயத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்யப்போகிறதே?

    ப:- இது குறித்து கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் சிவகுமார் தான் பதில் கூற வேண்டும்.

    கே:- பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?

    ப:- இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. என்ன நடக்கும் என்று தெரியாது. எனக்கு சீட் கிடைக்கா விட்டால் எனக்கும் தலைமைக்கும் பிரச்சினை என்பார்கள். கிடைத்து விட்டால் அந்த தைரியத்தில் பேசுகிறார் என்பார்கள். நான் வீடு செல்வதற்குள் என்னவெல்லாமோ நடந்து விடும். அதெல்லாம் வரும் போது பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kushboo #ADMK

    ஜெயலலிதா இருந்திருந்தால் கவர்னர் ஆய்வை அனுமதித்து இருக்கமாட்டார் என்று தனியரசு எம்.எல்.ஏ. நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Jayalalitha

    கரூர்:

    தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. கரூரில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் அவசியம் தேவை. சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தால் பாதிக்கக்கூடிய விவசாயிகளின் நிலம், மற்றும் வீடுகளுக்கு சந்தை மதிப்பை விட 4 மடங்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும்.

    பாதிக்கப்படும் மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மாற்று இடம் போன்றவற்றினை உறுதி செய்த பின்னர் நிலத்தை அளந்து எடுக்க வேண்டும். அதற்கு முன்பாக நிலத்தை அளப்பது, எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மக்களுடம் இணைந்து கொங்கு இளைஞர் பேரவை போராடும். அந்த வகையில் சாலையே வேண்டாம் என அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள் நிராகரிக்ககூடாது.

     


    மத்திய மோடி அரசு தங்களின் ஆட்சி இல்லாத மாநிலங்களில் கவர்னரை வைத்து கொண்டு உரிமையை பறிக்கும் விதத்தில் செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. அந்த வகையில் மாநில சுயாட்சியை காக்கும் வகையில் தமிழக கவர்னருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தி வரும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை வரவேற்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவே இதற்கு காரணமாகிவிட்டது.

    கவர்னர் ஆய்வினை எதிர்க்க முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு உள்ளூர எண்ணம் உள்ளது. சட்டசபையில் தாங்கள் பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் இதில் ஒரு முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்திருந்தால் கவர்னர் ஆய்வு செய்ய அனுமதித்து இருக்க மாட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Jayalalitha

    கவர்னர் கிரண்பேடியால் புதுவை மாநில வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறினார். #Kanimozhi #GovernorKiranBedi

    புதுச்சேரி:

    தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கருத்தரங்கம் புதுவை கம்பன் கலையரங்கில் நடந்தது.

    கருத்தரங்கிற்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். மாற்று திறணாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    ஜனாதிபதி, கவர்னர் பதவிகள் நியமன பதவிகளாகும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக அவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே மக்கள் பிரதிநிதிகள் பரிந்துரைகள் படி அவர்கள் செயல்பட வேண்டும்.

    தமிழகத்தில் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல் புதுவை கவர்னர் கிரண்பேடியால் புதுவை மாநில வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா இந்து, இந்தி, இந்துஸ்தாகளை உருவாக்க முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி நடந்தால் சிறு பான்மையின மக்கள், தலித் மக்கள், பெண்கள் ஆகியோர் அடிமைகள் ஆக்கப்படுவார்கள்.


    எனவே மத்தியில் ஆளும் மதவாதிகளை தூக்கி எறிய வேண்டும், நமது உரிமைகள் நிலைபெற மத்தியில் ஆட்சி மாற்றம் வரவேண்டும்.

    கருத்தரங்கில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தி.மு.க. செயல் திட்டகுழு உறுப்பினர் ஜெகத்ரட்சகன், திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கருத்தரங்கை தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகத்திற்கு 31.24 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். இது நடைமுறைக்கு வந்தால் விவசாயிகள் பயனடைவார்கள். சென்னை-சேலம் பசுமை வழிசாலை திட்டத்தில் மக்களின் கருத்தை கேட்காமல் அரசு செயல்பட்டு வருகிறது என்றார். #Kanimozhi #GovernorKiranBedi

    தமிழகத்தில் முதல்-அமைச்சராக வேண்டும் என்ற ஆசை, தகுதி தனக்கு உள்ளதாக நெய்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில் திருநாவுக்கரசர் பேசினார். #congress #Thirunavukkarasar
    பண்ருட்டி:

    கடலூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நெய்வேலி இந்திராநகரில் உள்ள எஸ்.பி.டி.யார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

    தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். எனவே காங்கிரஸ் கட்சியின் சத்தியமூர்த்தி பவன் உங்களை நோக்கி வந்திருக்கிறது. இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த செயல்வீரர்கள் கூட்டம் மாநாடு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் இருந்தது தற்போது அண்ணா தி.மு.க பிளவு பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் தொண்டர்கள் ஒன்றாக இருக்கின்றார்கள். ஆனால் தலைவர்கள் வேறுபட்டு நிற்கிறார்கள். இந்த நிலை மாறி அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும்.

    தமிழகத்தில் காமராஜர் ஆட்சி விரைவில் அமைய வேண்டும். யார் முதல்-அமைச்சர் என்பது முக்கியமல்ல. தலைவர் ராகுல் விட்ட பணியை சிறப்பாக செய்து வருகிறேன். முதல்-அமைச்சராக வேண்டும் என்ற ஆசை, தகுதி எனக்கு உள்ளது.

    தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஆந்திராவில் என்.டி.ஆர் ஆகியோர் நடிகர்களாக இருந்து கட்சி தொடங்கி முதல்-அமைச்சர்களாக ஆனார்கள். ஆனால் அதன் பிறகு கட்சி ஆரம்பித்த நடிகர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டனர். தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி இல்லை, எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆட்சி நடைபெறுகிறது.


    இந்த ஆட்சி விரைவில் அகற்றப்பட வேண்டும். காங்கிரஸ் நிர்வாகிகள் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும். மக்கள் பிரச்சனைக்காக அதிகாரிகளை சந்திக்க வேண்டும். கட்சியில் அதிகளவு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

    மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பு இழப்பால் ஏழைகளுக்கு எந்த பயனும் இல்லை. இந்த அரசு ஏழைகளுக்கான அரசு அல்ல. கடந்த நான்கு ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை.

    மத்திய அரசை மாற்ற காங்கிரசால் மட்டுமே முடியும். நாடு முழுவதும் ராகுல் அலை வீசுகிறது. வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் பிரதமராக வருவார்.

    இவ்வாறு அவர் பேசினார். #congress #Thirunavukkarasar
    தமிழக சட்டசபைக்கு இன்று வந்த கருணாஸ் முதல்-அமைச்சர் இருக்கை அருகே சென்று அவரிடம் தனக்கு சட்டசபையில் பேச அனுமதி தாருங்கள் என்று கேட்டார்.
    சென்னை:

    அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. சமீப காலமாக அரசுக்கு எதிராக குற்றம் சாட்டி வந்தார். தி.மு.க. நடத்திய மாதிரி சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டு கூவத்தூர் பேரம் பற்றி எனக்கு தெரியும் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

    அவரது இந்த நிலையால் சட்டசபையில் பேச முன்பு போல் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதுபற்றி அவர் சபாநாயகரிடம் முறையிட்டபோது அரசு கொறடாவை சந்திக்குமாறு கூறினார்.

    என்றாலும் அவருக்கு சட்டசபையில் பேச அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று சட்டசபைக்கு வந்த கருணாஸ் முதல்- அமைச்சர் இருக்கை அருகே சென்று அவரிடம் தனக்கு சட்டசபையில் பேச அனுமதி தாருங்கள் என்று மெதுவாக கேட்டார். அதற்கு முதல்- அமைச்சர் பார்க்கலாம் என்று கூறிவிட்டார்.

    பின்னர் கருணாஸ் நிருபர்களிடம் கூறும்போது, வரலாற்று பாடப்புத்தகத்தில் பசும்பொன்தேவர் வரலாறு நீக்கம் பற்றி விளக்கம் கேட்டு சட்டசபையில் பேசவே அனுமதி கேட்டேன் என்றார். இந்த பிரச்சனைக்கு ஏற்கனவே அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளிக்கையில் மீண்டும் பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #TNAssembly #Karunas
    அயனாவரம் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு ரூ.73 லட்சம் செலவில் நவீன மருத்துவ சிகிச்சை கருவிகள் வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்த அமைச்சர் நிலோபர் கபில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை வருமாறு:-

    பணியின் போது விபத்து ஏற்பட்டு பணியிடத்தில் மரணம் அடையும் கட்டுமான தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.5 லட்சம் உதவித் தொகை, பணியின் போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைபவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும்.

    அயனாவரம் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு ரூ.13 லட்சம் செலவில் மூக்கு, தொண்டையை கேமரா மூலம் கண்காணித்து அறுவை சிகிச்சை செய்ய ரிஜிட், நாசல், எண்டோஸ் கோப், கேமரா, டி.வி. யூனிட்டுடன் வழங்கப்படும்.


    இந்த ஆஸ்பத்திரிக்கு ரூ.60 லட்சம் செலவில் ஆர்த்தோஸ்கோப் (மூட்டு அறுவை சிகிச்சை) வழங்கப்படும். இவை மதுரை, சேலம் ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்படும். ரூ.1.93 கோடி செலவில் எளிய முறையில் தொழிலாளர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அயனாவரம், மதுரை, சிவகாசியில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு லேப்ராஸ்கோப் கருவிகள் வழங்கப்படும்.

    தமிழ்நாட்டில் உள்ள அரசு ஐ.டி.ஐ.க்களில் பயிற்சியாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதற்காக 88 பணியமர்த்தும் பயிற்சி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர் பணிக்காலத்தில் இறக்க நேர்ந்தால் வழங்கப்படும் ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.2,000 லிருந்து ரூ5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

    18 மாவட்டங்களில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு பிரிவுகள் உருவாக்கப்படும்.

    இணையதளம் வாயிலாக தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய தொழிற்தேர்வு நடத்தப்படும்.

    தொழிற்பயிற்சி நிலையங்களுக்கிடையே மண்டல மற்றும் மாநில விளையாட்டு போட்டிகள் மாநில அரசின் பங்களிப்புடன் நடத்தப்படும்.

    அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் அழைப்பின் பேரில் சேவை பொதுமக்களுக்கு வழங்கிட கைபேசி செயலி உருவாக்கப்படும்.

    அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் பயிற்சியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

    தமிழகத்தில் உள்ள மதுரை, சேலம், வேலூர், திருச்சி, ஓசூர், சிவகாசி ஆகிய 6 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளுக்கு புறஒலி கருவி வழங்கப்படும்.

    7 புதிய அவசர மருத்துவ ஊர்திகள் மற்றும் 4 மருந்து இடம் மாற்றும் ஊர்திகள் வழங்கப்படும்.

    தமிழகத்தில் உள்ள சேலம், வேலூர், திருச்சி, ஓசூர், சிவகாசி ஆகிய 5 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவ மனைகளுக்கு முழுவதும் தானியங்கி அனலைசர் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #TNMinister #Niloferkafeel
    ×