என் மலர்
ஆசிரியர் தேர்வு
- வாகன சந்தையில் ஏற்பட்ட மந்தமான சூழலால் வாகன உற்பத்தி வெகுவாக சரிந்தது.
- டெஸ்லா, பி.ஒய்.டி. போன்றவை ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின.
பெர்லின்:
உலகின் முன்னணி வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று போஸ்.
ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர்.
இதற்கிடையே, உலகளாவிய வாகன சந்தையில் ஏற்பட்ட மந்தமான சூழலால் வாகன உற்பத்தி வெகுவாக சரிந்தது.
இதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான டெஸ்லா, பி.ஒய்.டி. போன்றவை ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின.
இந்நிலையில், போஸ் நிறுவனமும் தற்போது ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
அதன்படி, உலகம் முழுவதிலும் உள்ள அதன் கிளையில் இருந்து சுமார் 13,000 பேரை பணிநீக்கம் செய்ய போஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள கட்டணங்களால் ஏற்பட்ட செலவு அதிகரிப்பும் ஒரு காரணம் என போஸ் நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது.
- சட்டப்பூர்வ குடியேற்றம் குறித்து நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
- வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களின் நலன்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.
புதுடெல்லி:
இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை எதிர்ப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதேநேரம், சட்டபூர்வமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை அரசு ஊக்குவிக்கிறது.
கடந்த ஜனவரியில் இருந்து அமெரிக்கா 2,417 இந்தியர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தி இருக்கிறது அல்லது திருப்பி அனுப்பி இருக்கிறது.
சட்டவிரோதமாக இந்தியர்கள் தங்கள் நாட்டில் இருப்பதாக ஒரு நாடு கூறுமேயானால், நாங்கள் அத்தகைய நபர்களின் ஆவணங்களைச் சரிபார்க்கிறோம்.
சட்டபூர்வமற்ற முறையில் இந்தியர்கள் வெளிநாடுகளில் தங்கி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களை திரும்ப அழைத்துக் கொள்கிறோம்.
சட்டவிரோத இடப்பெயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. சட்டப்பூர்வ குடியேற்றம் குறித்து நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வேலைவாய்ப்புகளில் இருந்து விலகி இருக்குமாறு இந்தியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.
வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களின் நலன்களுக்கு மத்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் புதுப்பிக்கப்பட்ட விசா முறைகள் குறித்து நாங்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இந்திய மாணவர்களின் விண்ணப்பம் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் சரியான நேரத்தில் தங்கள் கல்வி நிலையங்களில் சேரமுடியும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.
- இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அபிஷேக் சர்மா 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- இதன்மூலம் ரிஸ்வான், விராட் கோலி சாதனை அபிஷேக் சர்மா முறியடித்துள்ளார்.
ஆசிய கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கில்- அபிஷேக் சர்மா களமிறங்கினர். கில் 2-வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா வழக்கம் போல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 22 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார்.
இதன்மூலம் ஆசிய கோப்பை டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ரிஸ்வான், விராட் கோலியின் சாதனையை அபிஷேக் சர்மா முறியடித்துள்ளார்.
டி20 ஆசிய கோப்பைப் பதிப்பில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்:-
289* - 2025-ல் அபிஷேக் சர்மா (6 இன்னிங்ஸ்)
281 - 2022-ல் முகமது ரிஸ்வான் (6 இன்னிங்ஸ்)
276 - 2022-ல் விராட் கோலி (5 இன்னிங்ஸ்)
196 - 2022-ல் இப்ராஹிம் ஜத்ரான் (5 இன்னிங்ஸ்)
- பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது முட்டாள்தனம்.
- பிணைக்கைதிகளை மீட்கும் வரை இஸ்ரேல் ஓயாது.
ஐ.நா. ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள். மேலும், பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்திய நேரப்படி இன்று இரவு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பேச அழைக்கப்பட்டார். அப்போது, அரங்கத்தில் இருந்த பிரதிநிதிகள் எழுந்து வெளியேறினர். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினர்.
என்றாலும், நேதன்யாகு வெறிச்சோடிய ஐ.நா. சபை பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது முட்டாள்தனம். பிணைக்கைதிகளை மீட்கும் வரை இஸ்ரேல் ஓயாது. ஹமாஸை அழிக்கும் வரை காசாவில் போர் தொடரும். காசாவில் பஞ்சத்திற்கு ஹமாஸ் உணவை திருடுவதே காரணம்.
உலகின் பெரும்பகுதியினர் அக்டோபர் 7ஆம் தேதியை நினைவு கொள்வதில்லை. ஆனால் நாங்கள் நினைவில் வைத்துள்ளோம். இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதைவிட, தீமையை ஏற்றுக் கொள்கின்றனர். பொது வெளியில் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் பல தலைவர்கள், ரகசியமாக (மூடிய அறைக்குள்) நன்றி தெரிவிக்கின்றனர்.
பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் சில நாடுகளின் முடிவு, அப்பாவி யூத மக்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும். எங்களுடைய தொண்டையில் ஒரு பயங்கரவாத அரசை திணிக்க அனுமதிக்கமாட்டோம்.
இவ்வாறு நேதன்யாகு தெரிவித்தார்.
- செந்தில் பாலாஜி தேர்தலின்போது மக்களுக்கு வெள்ளி கொலுசு கொடுத்துள்ளார்.
- செந்தில் பாலாஜிக்கு அளவுக்கு அதிகமான அதிகாரம் தரப்பட்டுள்ளது.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எந்த போராட்டமாக இருந்தாலும் எங்களது ஆட்சியில் அனுமதி கொடுத்தோம். சிவாஜி கணேசனை விட மிகவும் சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி.
செந்தில் பாலாஜி தேர்தலின்போது மக்களுக்கு வெள்ளி கொலுசு கொடுத்துள்ளார். செந்தில் பாலாஜிக்கு அளவுக்கு அதிகமான அதிகாரம் தரப்பட்டுள்ளது.
தேர்தல் முடியும் வரை தான் செந்தில் பாலாஜி திமுகவில் இருப்பார், தேர்தல் முடிந்த பின் எந்த கட்சியில் இருப்பார் என தெரியாது.
கரூரில் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புக்கு மணல் திருட்டு நடைபெறுகிறது. செந்தில் பாலாஜியால் அவரையே காப்பாற்றிக் கொள்ள முடியாது, அவரை நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
- அசாம் முதல்வர் ஹிமந்த பிச்வவா சர்மா அமைத்திருந்தார்.
பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.
கவுஹாத்தி அருகே கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை(செப். 23) தகனம் செய்யப்பட்டது.
மறுபுறம் கார்க்கின் மரணம் விபத்து தானா என்பது குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.
ஜூபின் கார்க் மரண வழக்கை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி எம். பி. குப்தா தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அசாம் முதல்வர் ஹிமந்த பிச்வவா சர்மா அமைத்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஜூபினின் நண்பரும் இசைக்கலைஞருமான சேகர் ஜோதி கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். ஜுபீனின் இசைக்குழுவில் டிரம்மராக சேகர் இருந்து வந்தார்.
சிங்கப்பூரில் ஜுபீனின் yacht படகு பயணத்தின்போது சேகர் அவருடன் இருந்தார். விசாரணைக்காக அழைக்கப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக விசாரணைக் குழு சிங்கப்பூரில் ஜூபின் பங்கேற்ற விழா ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தா மற்றும் சுபீனின் மேலாளர் சித்தார்த் சர்மா ஆகியோரின் வீடுகளில் ஆய்வு செய்தது.
- வாகனத்திற்கான அனைத்து ஆவணங்களையும் மனுவுடன் இணைதுள்ளார் துல்கர் சல்மான்.
சொகுசு கார்களை பூடான் வழியாக இந்தியாவிற்குள் கடத்தி கொண்டு வரப்பட்டதாக எழுந்த புகாரின் அப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் துல்கர் சல்மான் வீட்டில் சோதனை நடத்தினர்.
ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கேரளாவில் மட்டும் கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் இச்சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பூடான் வழியாக இந்தியாவுக்கு வரி செலுத்தாமல் காரை கொண்டு வந்ததாக குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் சுங்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் நடிகர் துல்கர் சல்மான் மனு தாக்கல் செய்துள்ளா். அந்த மனுவில் "சட்டத்திற்கு உட்பட்டு சுங்க வரி செலுத்தி கார் வாங்கிய நிலையில், பறிமுதல் செய்த காரை திருப்பி தர உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
2004 மாடல் லேண்ட் லோவர் சொகுசு வாங்கியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆவணங்களை மனுவுடன் இணைத்துள்ளார்.
துல்கர் சல்மான் மனு தொடர்பாக, விளக்கம் அளிக்க சுங்சுத்துறைக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், வருகிற 30ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
- ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
- கார்கள் விற்பனை இதுவரை இந்தியாவில் இல்லாத அளவிற்கு நடந்து உள்ளது.
சென்னை:
கடந்த 22-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் ஏற்கனவே இருந்த நான்கு அடுக்கு வரி 5, 18 என்ற 2 விகிதங்களுக்குள் வந்துள்ளது. அதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்து உள்ளது. குறிப்பாக கார்கள் விற்பனை இதுவரை இந்தியாவில் இல்லாத அளவிற்கு நடந்து உள்ளது.
அதே நேரத்தில் சில பொருட்களின் விலை சற்று அதிகரித்து இருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்கது நெய்த மற்றும் நெசவு செய்யப்பட்ட ஆடைகள். ஏற்கனவே அதற்கு 12 சதவீத வரி இருந்தது. ஆனால் அதில் தற்போது ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது ரூ.2,500-க்கு மேல் ஒரு ஆடையின் விலை இருந்தால் அதற்கு வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் இந்த உண்மை நிலையை அறியாமல் பலரும் மொத்தமாக ஜவுளி வாங்கும்போது ரூ.2,500-க்கு மேல் பில் வந்தால் பிரித்து, பிரித்து பில் போட சொல்கின்றனர். அதாவது ரூ.2,500 விலை வருவதால் ஜி.எஸ்.டி.யை குறைக்க இதுபோல் செய்கின்றனர்.
தற்போது தீபாவளி பண்டிகைக்கு எல்லோரும் துணி எடுக்கும் வேளையில் கடைக்காரர்களுக்கு சிக்கலை தருகிறது.
இதுகுறித்து துறை அதிகாரிகள் கூறும்போது, ஒரு ஆடையின் விலை மட்டும் ரூ.2,500 மேல் இருந்தால் ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதம். மற்றப்படி அதற்கு கீழ் உள்ள தொகையில் மொத்தமாக எவ்வளவு மதிப்புக்கு ஆடை வாங்கினாலும் அதற்கு 18 சதவீதம் கிடையாது என்றனர்.
அதே போலபஞ்சை இடையில் வைத்து தைக்கப்படும் குயில்ட் மெத்தைகள், கம்பளிகள் ஆகியவையும் பொருள் ஒன்று ரூ.2,500-க்கு மேல் இருந்தால் 18 சதவீதம் தான் வரி.
- "ஸ்கந்த" என்பது போர் கடவுளான முருகனின் மற்றொரு பெயர்.
- சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்தவர் ஸ்கந்தன்.
நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
நவராத்திரியின் 5-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் ஸ்கந்தமாதா. ஸ்கந்தமாதா என்பவர் நவதுர்கைகளில் ஐந்தாவது வடிவம். இவர் முருகனின் தாயார், சிம்மத்தின் மீது அமர்ந்திருப்பவர். இவர் நான்கு கரங்களைக் கொண்டவர்.
"ஸ்கந்த" என்பது போர் கடவுளான முருகனின் மற்றொரு பெயர். தேவர்களின் சேனாபதியே முருகன்! முருகனின் ஒரு பெயர் 'ஸ்கந்தன்' ஆகும். 'ஸ்கந்த மாதா என்றால் 'முருகனின் அன்னை' என்று பொருள்.
நவராத்திரியின் பஞ்சமி திதியில் ஆதிசக்தியின் 'ஸ்கந்தமாதா' ரூபத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. இந்த ரூபத்தில் அம்பாளின் மடியில் குழந்தை முருகன் அமர்ந்துள்ளான். நான்கு கரங்களுடைய ஸ்கந்தமாதா சிம்மத்தின் மீது அமர்ந்திருக்கிறாள்.
ஸ்கந்தமாதா
ஒருகாலத்தில் தாரகாசுரன் என்னும் அசுரன், கடுமையான தவம் செய்து "சிவபெருமான் மகன் தவிர வேறு யாராலும் என்னை வதம் செய்ய முடியாது" என்ற வரத்தைப் பெற்றான். இந்த வரத்தால் அவன் தேவர்களையே துன்புறுத்த ஆரம்பித்தான்.
ஆனால் அப்போது சிவபெருமான் யாருடனும் திருமணம் செய்து கொள்ளாமல் தவம் செய்து கொண்டிருந்தார். இதனால் தேவர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.
சிவனைத் திருமணம் செய்ய பார்வதி (சதீயின் மறுபிறப்பு) கடுமையான தவம் செய்தார். அவருடைய தவத்தால் சிவபெருமான் சம்மதித்து திருமணம் நடந்தது.
சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்தவர் ஸ்கந்தன் (கார்த்திகேயன், முருகன், சுப்பிரமணியன்). இவர் பிறந்ததும், தேவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஏனெனில் இவர் தான் தாரகாசுரனை அழிக்கக் கூடியவன்.
தன் தாயின் அருளும், சக்தியையும் பெற்று ஸ்கந்தன் (முருகன்) தாரகாசுரனை வதம் செய்து தேவர்களை காத்தார்.
பார்வதி, தன் மகனை மடியில் அமர்த்திக் கொண்டு உலக நலனுக்காக பிரார்த்தனை செய்தார். அந்த நிலையிலேயே இவர் ஸ்கந்தமாதா எனப் போற்றப்பட்டார்.
பின்னர் ஸ்கந்தன் (முருகன்) தனது வீரத்தால் தாரகாசுரனை வதம் செய்து, தேவர்களுக்கு அமைதி கொண்டுவந்தார். இதன் மூலம் தாய் ஸ்கந்தமாதா மகிமை உலகம் முழுவதும் பரவியது.
ஸ்கந்தமாதாவை 5-வது நாளில் வழிபடுவதால் தனது அருள் மற்றும் நலத்தை வேண்டுபவர்களுக்கு வழங்குகிறார்.
ஸ்லோகம்:
"ஓம் தேவி ஸ்கந்தமாதாயை நமஹ" என்று ஜபித்தால் ஸ்கந்தமாதாவின் அருள் கிடைக்கும்.
- என்னுடைய அப்பா கிடைத்த படிப்பை படித்து ஒரு டிகிரி வாங்கினார்.
- அவரது மகனான என்னை பி.இ., எம்.பி.ஏ.., என 2 டிகிரி படிக்க வைத்தார்.
சென்னை:
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தமிழக அரசின் கல்வி விழாவில், நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
திரைப்பட விழா என்றால் எதையாவது பேசிவிட்டுப் போய்விடலாம். இங்கே அப்படி பேச முடியாது.
உலகத்தில் எதுவெல்லாம் பெரிய செல்வம் என்று நினைக்கிறோமோ, அதையெல்லாம் விட பெரிய செல்வம் கல்விதான்.
என்னுடைய அப்பா ஒரு வேளை சாப்பிட்டு பள்ளிக்குச் சென்று படித்ததால், நான் 3 வேளையும் சாப்பிட்டு பள்ளிக்கு சென்றேன். என்னுடைய அப்பா நடந்து பள்ளிக்கூடத்துக்குச் சென்றதால், நான் ஆட்டோ, ரிக்ஷா, பஸ், ரெயில் மூலம் பள்ளிக்கூடத்துக்கு சென்றேன். ஒரு தலைமுறையில் ஒருவர் படித்தால் அதற்கு அடுத்து வரும் தலைமுறைகள் நன்றாக இருக்கும். இதை என்னுடைய குடும்பத்தில் இருந்து பார்த்து இருக்கிறேன்.
என்னுடைய அப்பாவுடைய வீட்டில் இருந்த வசதியால் அவர் நினைத்த படிப்பை படிக்க முடிக்கவில்லை, கிடைத்த படிப்பைதான் படித்தார். அவர் ஒரு டிகிரி வாங்கினார். அவருடைய மகனான என்னை பி.இ., எம்.பி.ஏ.., என்று இரண்டு டிகிரி படிக்க வைத்தார். என்னுடைய அக்கா எம்.பி.பி.எஸ்., எம்.டி., எப்.ஆர்.சி.பி. என 3 டிகிரி முடித்துவிட்டார்.
சினிமா துறை மிகவும் சவாலானது. அங்கு சவால்கள் வரும் போதெல்லாம் எனக்கு வரும் ஒரு தைரியம் என்னவென்றால் என்னிடம் 2 டிகிரி இருக்கிறது. இங்கிருந்து என்னை அனுப்பினால் ஏதாவது வேலை செய்தாவது பிழைத்துக் கொள்ள முடியும். நான் நன்றாக படித்தேன். ஆனால் சினிமா மீதான ஆர்வத்தால் இங்கே வந்துவிட்டேன்.
தற்போது அரசின் திட்டங்களால் பயன் பெறும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளையும், இத்தனை பேரின் வாழ்க்கையை மாற்றிக் கொண்டிருக்கும் அரசுக்கும், முதலமைச்சருக்கும் என்னுடைய நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கையில் வெற்றி பெற, கை நிறைய சம்பாதிக்க, வீடு, கார் வாங்க, எல்லாருடைய முன்பு கவுரவமாக வாழ ஒரே தீர்வு நன்றாக படிப்பதுதான். மதிப்பெண்ணுக்காக கொஞ்சம் படியுங்கள். வாழ்க்கைக்காக நிறைய படியுங்கள்.
தமிழக அரசின் இதுபோன்ற திட்டங்கள் நிறைய சாதனையாளர்களை உருவாக்கும் என தெரிவித்தார்.
- ரகசா புயல் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தையும் தாக்கியது.
- அந்த மாகாணத்தில் 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
பீஜிங்:
தென் சீனக்கடலில் உருவான புயலுக்கு ரகசா என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. தைவானைப் பந்தாடிய இந்தப் புயல் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தையும் தாக்கியது. அப்போது மணிக்கு 265 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
மணிக்கு 200-லிருந்து 230 கிமீ வேகத்தில் கடுமையான காற்று வீசியது. குவாங்டாங் மாகாணத்தில் 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் அங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சுமார் 5 லட்சம் வீடுகள் இருளில் சிக்கித் தவித்தன.
இதனை தொடர்ந்து கனமழையும் கொட்டித் தீர்த்ததால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக் காடாக மாறின. எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதற்காக பல இடங்களில் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனையடுத்து அந்தப் புயல் வியட்நாம் நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
- இதனால் இறுதிப்போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோத உள்ளன.
துபாய்:
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் நேற்று மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய வங்கதேசம் 20 ஓவரில் 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும் வாய்ப்பை பாகிஸ்தான் பெற்றது.
ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. எனவே ஆசிய கோப்பை இறுதிப்போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.






