என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • வார இறுதி நாளான கடந்த சனிக்கிழமை தங்கம் விலை உயர்ந்தது.
    • தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,525 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்தில் காணப்படுகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. கடந்த வாரம் விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. அடுத்த 2 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை குறைந்தது.

    வார இறுதி நாளான கடந்த சனிக்கிழமை தங்கம் விலை உயர்ந்தது. காலையில் தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,425 ரூபாய்க்கும் சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையான நிலையில் மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது.

    மாலையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.75 அதிகரித்து, கிராம் ரூ.11,500க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,000க்கு விற்பனையானது. நேற்றும் தங்கம் இதே விலையில் விற்கப்பட்டது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,525 ரூபாய்க்கும் சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,200-க்கும் விற்பனையாகிறது.

    தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உச்சம் அடைந்து வருகிறது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 195 ரூபாய்க்கும் கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    12-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

    11-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

    10-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,720

    09-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,400

    08-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,080

     

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    12-10-2025- ஒரு கிராம் ரூ.190

    11-10-2025- ஒரு கிராம் ரூ.190

    10-10-2025- ஒரு கிராம் ரூ.184

    09-10-2025- ஒரு கிராம் ரூ.177

    08-10-2025- ஒரு கிராம் ரூ.170

    • பைசன் படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
    • இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.

    இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    இன்று இப்படத்தில் டிரெய்லர் வெளியாகும் நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், "திருநெல்வேலி மாவட்டம் குறித்து என்ன மாதிரியான படம் எடுக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்தபோது எனக்கு கிடைத்த tool தான் மணத்தி கணேசன் அண்ணா. அவரை உதாரணமாக வைத்து என்னுடைய அரசியலை கலந்து உருவாக்கப்பட்ட படம் தான் பைசன்.

    பைசன் படத்திற்குள் தென் மாவட்டத்திற்குள் வாழ்க்கையை தொலைத்த நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். தென் தமிழ்நாட்டின் அரசியலை மையப்படுத்திய படம்தான் பைசன்

    பைசன் படத்தின் வெற்றியை விட இப்படம் இந்த சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார். 

    • இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
    • இந்த புகாரை அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆணையம் விசாரித்து வருகிறது.

    மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி குழுமம் தவறாக வழிநடத்தி சுமார் 750 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதாக அமெரிக்காவின் FCPA சட்டத்தின் கீழ் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

    இதனிடையே கெளதம் அதானிக்கு சொந்தமான அதானி க்ரீன் நிறுவனம், டெல்லியை தலைமையிடமாக கொண்ட அஷ்யூா் பவா் நிறுவனம் மீது அமெரிக்க பங்கு பரிவா்த்தனை பாதுகாப்பு அமைப்பு இரு வழக்குகளை தொடுத்துள்ளது.

    இந்த வழக்கில் கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மோசடி செய்து அதானி குழுமம் நிதி திரட்டிய புகாரை விசாரித்து வரும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆணையம், இந்திய அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நியூயார்க் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

    • இஸ்லாமியர்கள் அதிகரிப்புக்கு ஊடுருவல்களே காரணம் என்றார் உள்துறை மந்திரி அமித்ஷா.
    • யோகியை மீண்டும் உத்தரகாண்ட்டிற்கு அனுப்பவேண்டும் என விரும்புவதாக அகிலேஷ் கூறினார்.

    லக்னோ:

    சமாஜ்வாடி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    பொய்யான புள்ளிவிவரங்களைக் கூறுவதில் கைதேர்ந்தவர்கள் பாஜகவினர்.

    அண்டை நாட்டவர் குறித்து பாஜகவினர் கூறுவது அவர்களின் புனைவுக் கதைகள் தான்.

    உத்தர பிரதேசத்திலும் ஊடுருவல்காரர்கள் உள்ளனர். முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தும் ஊடுருவல்காரர் தான்.

    உண்மையில் அவர் உத்தரகாண்ட்டில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு ஊடுருவியவர். அவரை மீண்டும் உத்தரகாண்ட்டிற்கு அனுப்ப வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்தார்.

    சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, இஸ்லாமியர்கள் அதிகரிப்புக்கு ஊடுருவல்களே காரணம் என தெரிவித்தார்.

    அமித்ஷாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அகிலேஷ் இவ்வாறு கூறியுள்ளார்.

    • முதலில் பேட் செய்த இந்திய அணி 48.5 ஓவரில் 330 ரன்கள் குவித்தது.
    • இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தனா 80 ரன்கள் எடுத்தார்.

    விசாகப்பட்டினம்:

    13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    விசாகப்பட்டினத்தில் நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் அலிசா ஹீலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 48.5 ஓவரில் 330 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தனா 80 ரன்கள் எடுத்தார்.

    இந்நிலையில், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆண்டில் 1000 ரன்கள் அடித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

    நடப்பு ஆண்டில் 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4 சதங்கள் மற்றும் 4 அரைசதங்களுடன் 1,000 ரன்களைக் கடந்துள்ளார் .

    • முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 248 ரன்னில் சுருண்டது.
    • 270 ரன் பின்தங்கியதால் இந்தியா பாலோ-ஆன் கொடுத்தது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஜெய்ஸ்வால், சுப்மன் கில் சதம் அடிக்க இந்தியா 518 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் இன்றைய 3ஆவது நாள் ஆட்டத்தில் 248 ரன்களில் ஆல்அவுட் ஆனது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    முதல் இன்னிங்சில் 270 ரன்கள் பின்தங்கி, வெஸ்ட் இண்டீஸ் பாலோ-ஆன் ஆனது. இந்திய அணி பாலோ-ஆன் கொடுக்க, வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து 2ஆவது இன்னிங்சை தொடங்கியது.

    தொடக்க வீரர் டி.சந்தர்பால் (10), அடுத்து வந்த அலிக் அதானேஸ் (7) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 3ஆவது விக்கெட்டுக்கு ஜான் கேம்பல் உடன் ஷாய் ஹோப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடியை இந்திய பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இருவரும் அரைசதம் விளாசினர். அத்துடன் இன்றைய 3ஆவது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் 3ஆவது நாள் ஆட்ட முடிவில 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. கேம்பல் 87 ரன்களுடனும், ஷாய் ஹோப் 66 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் 97 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

    நாளை காலை உணவு இடைவேளை வரை இருவரும் தாக்குப்பிடித்து விளையாடினால், இந்திய அணிக்கு நெருக்கடி உண்டாகும்.

    • ஒரே வருடத்தில் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
    • 58 ரன்கள் எடுத்தபோது, 5 ஆயிரம் ரன்களை கடந்தார்.

    மகளிர் உலக கோப்பை தொடரில் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியாவின் பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்மிரிதி மந்தனா 66 பந்தில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்தியா 24.3 ஓவரில் 155 ரன்கள் குவித்துள்ளது.

    ஸ்மிரிதி மந்தனா 58 ரன்களை கடக்கும்போது, ஒருநாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை தொட்டார். இதன்மூலம் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை தொட்ட வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த வருடத்தில் மட்டும் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இதன்மூலம் ஒரு காலண்டர் வருடத்தில் ஆயிரம் ரன்களை கடந்த முதல்  வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    112 போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.

    • பெர்ரி கருப்பு நிற நீச்சல் உடையிலும், ட்ரூடோ சட்டை இல்லாமலும் கட்டியணைத்துக் கொண்டிருக்கின்றனர்.
    • கேட்டி பெர்ரி இதற்கு முன்பு நடிகர் ஆர்லாண்டோ ப்ளூமுடன் ஏழு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார்.

    கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (53) மற்றும் உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி கேட்டி பெர்ரி (40) குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    ட்ரூடோவும், கேட்டி பெர்ரியும் டேட்டிங் செய்து வருவதாக அணமைக் காலமாக வந்த கிசுகிச்சுகளை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது அவர்கள் இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பராவில், படகு ஒன்றில் அவர்கள் முத்தமிட்டுக் கொண்டபோது  இவை எடுக்கப்பட்டுள்ளன.

    இதில், பெர்ரி கருப்பு நிற நீச்சல் உடையிலும், ட்ரூடோ சட்டை இல்லாமலும் கட்டியணைத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. மேலும், ட்ரூடோ, பெர்ரியின் கன்னத்தில் முத்தமிடும் காட்சி பதிவாகியுள்ளது.

    இந்தச் காட்சியை நேரில் பார்த்த ஒரு சாட்சி, படகில் இருந்தவர்கள் ட்ரூடோ மற்றும் பெர்ரி என்பதை உறுதிப்படுத்திய பின்னர், அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

     முன்னதாக, ஜூலை 28 அன்று மாண்ட்ரீலில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் இருவரும் இரவு உணவு சாப்பிட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் வெளியானதைத் தொடர்ந்தே இவர்கள் டேட்டிங் செய்வதாக முதன்முதலில் செய்திகள் வெளியாகின.

    கேட்டி பெர்ரி இதற்கு முன்பு நடிகர் ஆர்லாண்டோ ப்ளூமுடன் ஏழு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார்.

    அவர்களுக்கு நிச்சயதார்த்தம் கூட நடைபெற்றது. எனினும், சில காரணங்களால் ஜூன் 2025-ல் அவர்களின் நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் கனடா பிரதமர் பதவியில் இருந்து ட்ரூடடோ விலகியது குறிப்பிடத்தக்கது.

    • நீதிபதி கூறிய கருத்தை விமர்சித்து அவதூறு பதிவு வெளியிட்டதாக நடவடிக்கை.
    • சாணார்பட்டி போலீசார் நிர்மல் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழகம் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்உஎம்.நிர்மல் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கில் நீதிபதி கூறிய கருத்தை விமர்சித்து அவதூறு பதிவு வெளியிட்டுள்ளதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் சாணார்பட்டி போலீசார் நிர்மல் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ஒரே ஸ்மார்ட்போன் ஃபைண்ட் X9 சீரிஸ் மட்டுமல்ல.
    • ஃபைண்ட் X9 மற்றும் X9 ப்ரோ ஆகியவை டிமென்சிட்டி 9500 பிராசஸரால் இயக்கப்படுகின்றன.

    ஒப்போ நிறுவனம் வருகிற 16 ஆம் தேதி சீன சந்தையில் தனது ஒப்போ ஃபைண்ட் X9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிவிக்க இருக்கிறது. புதிய ஃபைண்ட் X9 மற்றும் X9 ப்ரோ தவிர, ஒப்போ பேட் 5 டேப்லெட் மற்றும் ஒப்போ வாட்ச் எஸ் ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட சாதனங்களையும் ஒப்போ நிறுவனம் இதே நிகழ்வில் வெளியிட உள்ளது.

    இந்த நிலையில், ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனி வெளியீட்டு நிகழ்வை நடத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில், இந்தியாவில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸில் இந்தியா வெளியீட்டு காலக்கெடுவை நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

    ஒப்போ ஃபைண்ட் X9 வெளியீடு

    இந்திய சந்தையில் டிமென்சிட்டி 9500 சிப்செட் மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன்களாக ஒப்போ ஃபைண்ட் X9 மற்றும் ஃபைண்ட் X9 ப்ரோ ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வெளியீட்டைப் பொறுத்தவரை, இந்த மாடல்கள் நவம்பரில் நடைபெறும்.

    அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ஒரே ஸ்மார்ட்போன் ஃபைண்ட் X9 சீரிஸ் மட்டுமல்ல. சமீபத்திய தகவல்களில் ரியல்மி நிறுவனம் தனது GT 8 ப்ரோ ஸ்மார்ட்போனினை நவம்பர் 11 ஆம் தேதி வெளியிடலாம் என்றும், ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வருகிற நவம்பர் 13 ஆம் தேதி வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    ஃபைண்ட் X9 மற்றும் X9 ப்ரோ ஆகியவை டிமென்சிட்டி 9500 பிராசஸரால் இயக்கப்படுகின்றன. இரு மாடல்களும் அசத்தலான புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    • பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிநடைபெற்றது.
    • இப்போட்டியை காண மாணவர்களும் பெற்றோரும் குவிந்திருந்தனர்.

    அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மிசிசிபி மாகாணத்தில் உள்ளூர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிநடைபெற்றது. இப்போட்டியை காண மாணவர்களும் பெற்றோரும் குவிந்திருந்தனர். கால்பந்து போட்டியின் முடிவில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

    இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 12 பேர் காயமடைந்தனர். அதில் 4 பேரின் நிலைமை சுவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என போலீசார் அச்சம். மைதானத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும்.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 59 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே 59 ரன் வித்தியாசத்தில் இலங்கையையும், 88 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் அடுத்தடுத்து புரட்டியெடுத்தது. முந்தைய ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் போராடி வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் 252 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்காவை 81 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி (19.4 ஓவர்) நல்ல நிலையில் இருந்த இந்திய அணி அதன் பிறகு தனது பிடியை நழுவவிட்டது. இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். இதில் தோல்வியை சந்தித்தால் நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.

    இந்திய அணியில் பேட்டிங்கில் பிரதிகா ராவல், ரிச்சா கோஷ், ஹர்லீன் தியோல் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளனர். ஆனால் தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ் இன்னும் சோபிக்கவில்லை. அவர்கள் போதிய ரன் சேர்த்தால் சவாலான ஸ்கோரை எட்டலாம். பந்து வீச்சில் தீப்தி ஷர்மா, சினே ராணா, கிரந்தி கவுட் சிறப்பாக செயல்படுகிறார்கள். முதல் 3 ஆட்டங்களில் மிடில் வரிசையில் விக்கெட்டுகளை துரிதமாக இழந்தது பின்னடைவாக அமைந்தது. அந்த பலவீனத்தை இந்தியா சரி செய்தாக வேண்டும். அத்துடன் பீல்டிங்கிலும் ஏற்றம் காண வேண்டியது அவசியமாகும்.

    7 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 89 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. அடுத்து நடக்க இருந்த இலங்கைக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. கடந்த ஆட்டத்தில் 107 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது.

    அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக விளங்குகிறது. பேட்டிங்கில் பெத் மூனி, ஆஷ்லி கார்ட்னெர், கேப்டன் அலிசா ஹீலி, எலிஸ் பெர்ரியும், பந்து வீச்சில் அனபெல் சுதர்லாண்ட், கிம் கார்த், அலனா கிங், மேகன் ஸ்கட்டும் மிரட்டுகிறார்கள்.

    நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை தொடரும் ஆவலுடன் உள்ளது. அதே நேரத்தில் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை பதம் பார்த்த இந்திய அணியினர் அந்த நம்பிக்கையுடன் அவர்களை எதிர்கொள்ள ஆயத்தமாகிறார்கள். ஆனால் அசுர பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எல்லா வகையிலும் உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணியால் சாதிக்க முடியும். இல்லாவிட்டால் திண்டாட்டம் தான்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 59 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 48 ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும், 11 ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: பிரதிகா ராவல், ஸ்மிர்தி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், ரிச்சா கோஷ், சினே ராணா, கிரந்தி கவுட், ஸ்ரீ சரனி.

    ஆஸ்திரேலியா: அலிசா ஹீலி (கேப்டன்), போபி லிட்ச்பீல்டு, எலிஸ் பெர்ரி, பெத் மூனி, அனபெல் சுதர்லாண்ட், ஆஷ்லி கார்ட்னெர், தாலியா மெக்ராத், ஜார்ஜியா வேர்ஹாம் அல்லது சோபி மொலினிக்ஸ், கிம் கார்த், அலனா கிங், மேகன் ஸ்கட்.

    பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    ×