என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • இந்தத் திட்டத்தின் செலவு ரூ.757.18 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
    • இதன்மூலம் பயணிகளின் கூட்ட நெரிசலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலான நான்காவது ரெயில் பாதை திட்டத்துக்கு மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் 757.18 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ளது.

    இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

    தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலான 30.2 கிலோமீட்டர் தூரத்திலான 4-வது ரெயில் பாதை திட்டத்திற்கு மத்திய ரெயில்வே அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

    இந்த திட்டத்தின் செலவு ரூ.757.18 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

    தற்போது இந்த வழித்தடத்தில் பயணிகளின் பயன்பாடு 87 சதவீதமாக இருக்கிறது. புதிய பாதை செயல்படுத்தப்படும் போது அது 136 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பயணிகளின் கூட்ட நெரிசலும் குறையும். செங்கல்பட்டு வரையில் மின்சார ரெயில் சேவையை நீட்டிக்கவும் இது உதவும்.

    தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என தெரிவித்துள்ளது.

    • வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
    • ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர் ஸ்வரேவ் வெற்றி பெற்றார்.

    வியன்னா:

    வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் டேனியல் அல்டைமர்

    உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக விளையாடிய சின்னர் 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் மெத்வதேவ் 6-4, 6-7 (7-9), 6-2 என்ற செட் கணக்கில் போர்ர்சுகலின் நியூனோ போர்ஜசை வீழ்த்தி

    அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 244 ரன்கள் எடுத்தது.

    இந்தூர்:

    13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்தூரில் இன்று நடைபெற்ற 23வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது. டாமி பியூமாண்ட் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்து 78 ரன்களில் அவுட் ஆனார். அலைஸ் காப்சி 38 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் அன்னபெல் சதர்லேண்ட் 3 விக்கெட்டும், ஆஷ்லே கார்ட்னர், சோபி மொலினுக்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் வெளியேறினர். இதனால் 64 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.

    5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அன்னபெல் சதர்லேண்ட், ஆஷ்லே கார்ட்னர் ஜோடி அதிரடியாக ஆடியது. ஆஷ்லே கார்ட்னர் சதமடித்து அசத்தினார். அவர் 73 பந்தில் 104 ரன்கள் குவித்தார்.

    சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அன்னபெல் சதர்லேண்ட் 98 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி 40.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 248 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.

    • நெற்பயிர்களை திமுக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால், எதற்கு இந்த அரசு இருக்கிறது?
    • விவசாயிகளை முற்றிலுமாக புறக்கணித்துள்ள அரசாக தான் இன்றைய விடியா திமுக அரசு இருக்கிறது.

    2020-21 அதிமுக ஆட்சி காலத்தில் 4.5% ஆக இருந்த விவசாய வளர்ச்சி 2024-25 திமுக ஆட்சியில் 0.09% ஆக குறைந்தது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் தஞ்சையில் உள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்த உடன் தஞ்சை விரைந்தேன். பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்ததுடன், நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டேன்.

    "திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்கனவே உள்ள நெல் மூட்டைகளை, குடோனுக்கு எடுத்து செல்லாததால், புதிய கொள்முதல்களை வைக்க இடமில்லை" என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இதனை சட்டப்பேரவையில் நான் குறிப்பிட்டால், அதனை மறுத்த திமுக அரசின் உணவுத்துறை அமைச்சர், தாங்கள் வேகமாக, துரிதமாக செயல்படுவதாக குறிப்பிட்டார். ஒரு நாளுக்கு 2,000 மூட்டைகள் எடை போடப்படுவதாகவும் கூறினார்.

    ஆனால், நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வுசெய்த போது, அங்கு இருக்கும் Loadman, ஒரு நாளுக்கு வெறும் 800-900 மூட்டைகள் தான் எடை போடப்படுவதாக சொல்கிறார்.

    திமுக அமைச்சர் தவறான கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது விவசாயத்திற்கு விரோதமான செயல். அஇஅதிமுக ஆட்சியில், ஒரு நாளுக்கு 1,000 நெல் மூட்டைகள் எடை போடப்பட்டன.

    இரவு பகலெனப் பாராமல் 100 நாட்கள் போராடி விளைவித்த நெற்பயிர்களை இந்த திமுக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால், எதற்கு இந்த அரசு இருக்கிறது?

    செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்றும், அதனை நான் கேட்டுப் பெறவேண்டும் எனவும் உணவுத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் சொன்னார். ஆனால், கடந்த 18.08.2025 அன்றே மத்திய அரசு அதற்கான அனுமதியை வழங்கிவிட்டது. இது கூடத் தெரியாமல், சட்டமன்றத்தில் தவறான தகவலை தெரிவித்துள்ளார் திமுக அரசின் அமைச்சர்.

    தான் போட்ட நகையை அடமானம் வைத்து விளைவித்த நெற்பயிரை 20 நாட்களாகக் கொள்முதல் செய்யாமல் இழுத்தடித்து, தற்போது மழையில் நனைந்து முளைத்துப் போனதால் என்ன செய்வதென தெரியாமல் கண்ணீருடன் என்னிடம் பெண் விவசாயி ஒருவர் கண்ணீர் விட்டு கதறியது, கலங்கச் செய்தது. இது ஒரு கொடுமையான செயல்.

    அதிமுக ஆட்சியில் 2020-21 காலத்தில் 4.5% ஆக இருந்த விவசாய வளர்ச்சியை, 2024-25 காலத்தில் 0.09% ஆக படுபாதாளத்தில் தள்ளியது தான் திமுக அரசின் சாதனை.

    விவசாயிகளை முற்றிலுமாக புறக்கணித்துள்ள அரசாக தான் இன்றைய விடியா திமுக அரசு இருக்கிறது. விவசாயிகளுடன் எப்போதும் துணை நிற்பது போல், இந்த கடினமான நேரத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களோடு துணைநிற்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ரிஷப் பண்ட் தலைமையில் இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • முகமது சிராஜ், கலீல் அகமது உள்ளிட்டோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் சர்பராஸ் கான். 28 வயதான இவர் முதல்தர போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அதிக உடல் எடையுடன் காணப்பட்டதால் இளம் வயதில் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    ஆனால், தன்னுடைய தொடர் முயற்சியால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார். அதன்பின் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடினார். பிப்ரிவரி முதல் நவம்பர் வரை 6 போட்டிகளில் 11 இன்னிங்சில் பேட்டிங் செய்து 1 சதம், 3 அரைசதங்களுடன் 371 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 37.10 ஆகும்.

    அதன்பின் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சில தினங்களுக்கு முன் ரிஷப் பண்ட் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா ஏ அணிக்கெதிரான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டது. இதில் சர்பராஸ் கானுக்கு இடம் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பெண் செய்தி தொடர்பாளரான ஷமா முகமது, "சர்பராஸ் கான் அவருடைய குடும்ப பெயரால், இந்தியா ஏ கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இந்த விசயத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரின் நிலைப்பாடு எங்கே என்பது எங்களுக்குத் தெரியும்" எனத் தெரிவித்திருந்தார்.

     இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டில் அரசியலை கலப்பதாக பாஜக தலைவர்கள் கடுமையான வகையில் பதிலடி கொடுத்துள்ளனர்.

    பாஜக தலைவர் பூனவல்லா ஷமா முகமதுவுக்கு பதில் கொடுக்கும் வகையில் "இந்தப் பெண்மணியும் அவருடைய கட்சியினரும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். ரோகித் சர்மாவை உருவக் கேலி பிறகு, அவரும் அவருடைய கட்சியினரும் நமது கிரிக்கெட் அணியை வகுப்புவாத அடிப்படையில் பிரிக்க விரும்புகிறார்களா? நாட்டைப் பிரித்த பிறகும் அவர்கள் திருப்தி அடையவில்லையா?).

    இதே அணியில் முகமது சிராஜ் மற்றும் கலீல் அகமதுவும் விளையாடுவார்கள். இந்தியாவை வகுப்புவாத, சாதி அடிப்படையில் பிரிப்பதை நிறுத்துங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    இதே ஷமா மொகமதுதான் ரோகித் சர்மா பருத்த உடல் கொண்டு விளையாட்டு வீரர் எனக் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது பதவியை நீக்கினார்.

    • டியூட் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியானது
    • விரைவில் இப்படம் ரூ.100 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படத்தில் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியானது. தன் மாமன் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய தயாராகும் நாயகனுக்கு, அப்பெண்ணுக்கு வேறொருவர் பிடித்திருப்பது தெரிந்தும் திருமணம் செய்து பின்னர், அப்பெண்ணை அவரது காதலனுடன் சேர்த்து வைக்க நாயகன் பாடுபடுவதும், அதன்பின் நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க நாயகி பாடுபடுவதும் என சாதிக்கு எதிராக படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது.

    அதன்படி, 'டியூட்' படம் வெளியான நாள் முதல் வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில் படம் வெளியான ஐந்து நாட்களில் உலகளவில் ரூ.95 கோடி வசூலை குவித்துள்ளது. விரைவில் இப்படம் ரூ.100 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் டியூட் படம் வெற்றி அடைந்ததற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய பிரதீப் ரங்கநாதன், "இந்தப் படம் நிறைய விவாதத்தை உருவாக்கி இருக்கிறது. ஒரு சிலருக்கு படம் குறித்து மாற்று கருத்துகள் உள்ளது. ஆனாலும் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் போது படம் அவர்களுக்கும் பிடித்துவிடும். இந்த படம் பல ஆண்டுகளுக்கு பார்க்கப்பட்டு கொண்டே இருக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

    • இஸ்ரேல்- ஹமாஸ் இடையே இரண்டு வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்றது.
    • இஸ்ரேல்- ஹமாஸ் சண்டை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்துள்ளது.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக நடைபெற்ற சண்டை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பல நாட்டின் தலைவர்கள் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    இந்நிலையில், காசாவில் பிறந்த பெண் குழந்தைக்கு 'சிங்கப்பூர்' என அவரின் தந்தை ஹம்தன் பெயர் சூட்டியுள்ளார்.

    போர் காலத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த அறக்கட்டளை ஒன்று மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவிகளுக்காக அவர்களை கௌரவிக்கும் விதமாக அந்நாட்டின் பெயரை அவர் சூட்டியுள்ளார்.

    • கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் சராசரியாக 5.6 செ.மீ மழை பதிவு.
    • கட்டுப்பாட்டு மையத்திற்கு வரும் புகார்கள் குறித்து கேட்டறிந்தார்.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் சராசரியாக 5.6 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும், அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 8.6 செ.மீ, அம்பத்தூரில் 7 செ.மீ மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, இன்று அதிகாலை முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பணிக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    இந்த நிலையில், சென்னையில் பருவமழை மீட்பு நடவடிக்கை தொடர்பான கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

    சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்டுப்பாட்டு மையத்திற்கு வரும் புகார்கள் குறித்து கேட்டறிந்தார்.

    • சென்னை, புதுக்கோட்டை, சேலம், பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.
    • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, புதுக்கோட்டை, சேலம், பெரம்பலூர், நாமக்கல், திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 12 மாவட்டங்கள் விவரம்:-

    கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சிவகங்கை, காஞ்சிபுரம், திருச்சி.

    கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. 

    • இதுகுறித்த வழக்கு விசாரணை இன்வெர்னஸ் கோர்ட்டில் நடைபெற்றது.
    • விசாரணை முடிந்த நிலையில் காப்பகத்துக்கு ரூ.22 கோடி அபராதம் விதித்தது.

    எடின்பர்க்:

    ஸ்காட்லாந்தின் இன்வெர்னஸ் நகரில் தனியார் முதியோர் காப்பகம் அமைந்துள்ளது. இது நாடு முழுவதும் சுமார் 200 கிளைகளைக் கொண்டுள்ளது.

    இந்தக் காப்பகத்தில் இருந்த கேம்பல் என்ற மூதாட்டி கடந்த 2022-ம் ஆண்டு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஆனால் காப்பக ஊழியர்கள் யாரும் அவருடன் இல்லை. இதனால் சில மணி நேரம் கழித்து அவர் உயிரிழந்தார்.

    இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்வெர்னஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் அந்தக் காப்பகத்துக்கு சுமார் 22 கோடி ரூபாய் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    • பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
    • என்.டி.ஏ. கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.

    ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணிக்கும், லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி-காங்கிரஸ் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருகிறது.

    இதற்கிடையே, ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட முடிவு செய்து 6 இடங்களில் போட்டியிடும் என அறிவித்தது.

    இந்நிலையில், இந்தியா கூட்டணியில் அதிருப்தியில் இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பீகார் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது. கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் ஜே.எம்.எம். இந்த முடிவை எடுத்துள்ளது.

    • தரவரிசைப் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • பந்துவீச்சில் இந்தியாவின் தீப்தி சர்மா 3வது இடத்துக்கு முன்னேறினார்.

    லண்டன்:

    மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசைப் பட்டியல் வெளியாகியது. அதில், இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 809 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

    தற்போது நடந்து வரும் மகளிர் உலகக்கோப்பை ஒரு நாள் போட்டிகளில் கடைசி இரு ஆட்டங்களிலும் மந்தனா அசத்தலாக ஆடி அரை சதங்கள் விளாசினார்.

    2வது இடத்தில் இங்கிலாந்து கேப்டன் நாட் சீவர்பிரன்ட் உள்ளார். ஆஸ்திரேலியா வீராங்கனை ஆலிசா ஹீலி ஒரு நிலை உயர்ந்து 3ம் இடம் பிடித்துள்ளார்.

    இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 3 நிலை உயர்ந்து 15-ம் இடத்தை பிடித்துள்ளார்.

    பந்து வீச்சில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 3 நிலை உயர்ந்து 669 புள்ளிகளுடன் 3ம் இடத்துக்கு சென்றுள்ளார். இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் 778 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். ஆஸி வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் 686 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் நீடிக்கிறார்.

    இந்திய வீராங்கனை ஸ்நே ராணா 20-வது இடத்தில் உள்ளார்.

    ×