search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இறைவன் படைப்பில் எல்லாருமே சமம்
    X

    இறைவன் படைப்பில் எல்லாருமே சமம்

    • இயேசு எளியவரிலும் எளியவராய் வாழ்ந்தார்.
    • தன்னை உயர்த்திக் கொள்ள நினைப்பவர் தாழ்த்தப்படுவார்.

    இயேசு ஒரு முறை விருந்தொன்றிற்குச் சென்றிருந்தார். அங்கே விருந்துக்கு வந்திருந்தவர்கள் முதன்மையான இடங்களுக்காய் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள்.

    அப்போது இயேசு சொன்னார், "உங்களை விருந்துக்கு கூப்பிட்டால் ஓடிப்போய் முதல் இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட முக்கியமான ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். அப்படி இருந்தால், அவர் வந்து, 'கொஞ்சம் பின்னாடி இருக்கையில் அமர முடியுமா?' என்று உங்களைக் கேட்கலாம். அப்போது எல்லா விருந்தினருக்கும் முன்னால் நீங்கள் அவமானமாய் உணர்வீர்கள். அதே நேரம், நீங்களே போய் கடைசி இடத்தில் அமர்ந்து கொண்டால், அவர் வந்து, 'என்ன இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள்... முதன்மையான இடத்துக்கு வாங்க' என அழைக்கலாம். அப்போது எல்லோருக்கும் முன்பாக நீங்கள் பெருமைப்படுத்தப்படுவீர்கள். ஒருவர் தம்மைத் தாழ்த்திக் கொண்டால், அவர் உயர்த்தப்படுவார். தன்னை உயர்த்திக் கொள்ள நினைப்பவர் தாழ்த்தப்படுவார்" என்றார்.

    இயேசுவின் இந்த அறிவுரையானது எல்லா காலத்துக்கும் பொருத்தமான அறிவுரையாய் இருக்கிறது. நாம் ஒரு இடத்துக்குச் செல்லும்போது அங்கே கவுரவத்தையோ, பெருமையையோ எதிர்பாராமல் தாழ்மையான இடங்களை தேர்வு செய்து கொண்டால் அவமானம் நேர்வதே இல்லை.

    நம்மை யாராவது பெருமைப்படுத்தவேண்டும், வார்த்தைகளால் புகழ வேண்டும், முதல் மரியாதையை வழங்க வேண்டும் எனும் அதிகபட்ச எதிர்பார்ப்புகளுக்குக் காரணம், நம்மை நாம் உயர்வாய் நினைப்பது தான்.

    'நான் சாதாரணமானவன், இறைவன் படைப்பில் எல்லாருமே சமம்' எனும் சிந்தனை நம்மில் இருந்தால் பிறருடைய வார்த்தைகளோ, செயல்களோ நம்மை எளிதில் காயப்படுத்துவதில்லை.

    இயேசு தாழ்மையை வெறுமனே வார்த்தைகளில் மட்டும் சொல்லவில்லை. தனது வாழ்க்கையிலும் அதையே செயலாற்றினார். அவரது பிறப்பு ஒரு குடிலில், கந்தையின் நடுவில் நிகழ்ந்தது. அவரது பிறப்பின் செய்தி நிராகரிப்பின் விளிம்பில் இருந்த இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

    அவரது மரணம் அவமானச் சிலுவையின் உச்சியில் நிகழ்ந்தது. ஆடைகள் கூட கிழிக்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட அரை நிர்வாண நிலையில் தான் அவரது மரணம் எல்லோருக்கும் முன்பாக நிகழ்ந்தது. அவரது அடக்கம் இரவல் கல்லறையில் நிகழ்ந்தது.

    அவரது உயிர்ப்பும் கூட மேல்தட்டு மக்களுக்கு முதலில் அறிவிக்கப்படவில்லை. உயிர்ப்பின் செய்தி முதன் முதலில் ஒரு பெண்ணுக்குத் தான் சொல்லப்பட்டது. ஆணாதிக்கச் சமூகத்தில் புறக்கணிப்பின் பக்கத்தில் இருந்த பெண் ஒருவரையே கடவுள் தனது உயிர்ப்பின் முதல் காட்சிக்காய் தேர்ந்தெடுத்தார்.

    இயேசு எளியவரிலும் எளியவராய் வாழ்ந்தார். எளிமையிலும் எளிமையாய் செயலாற்றினார்.

    நமது வாழ்விலும் ஒவ்வோர் நிகழ்விலும் தாழ்மையைத் தேர்ந்தெடுப்போம், நிராகரிக்கப்பட்டவர்களின் சார்பாய் நிற்போம், புறக்கணிக்கப்பட்டவருக்காய் பேசுவோம். அப்போது நாம் இறைவனின் சாயலாய் மாறுவோம்.

    சேவியர், சென்னை.

    Next Story
    ×