search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தெய்வநாயகப் பெருமாள் கோவில் புரட்டாசி கருட சேவை திருவிழா வருகிற 5-ந்தேதி நடக்கிறது
    X

    தெய்வநாயகப் பெருமாள் கோவில் புரட்டாசி கருட சேவை திருவிழா வருகிற 5-ந்தேதி நடக்கிறது

    • 5-ந்தேதி காலை 9.30 மணிக்கு திருமஞ்சனம் நடக்கிறது.
    • திருப்புவனம் அருகே உள்ளது தெய்வநாயகப் பெருமாள் கோவில்.

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலின் உபகோவிலான சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கொந்தகை கிராமத்தில் தெய்வநாயகப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அமைந்துள்ள கிராமமானது மகாபாரத இதிகாசக் கதையில் பாண்டவர்களின் தாயாரான குந்தி தேவி பெயரால் 'குந்தி நகர்' என அழைக்கப்பட்டு உள்ளது.

    பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாரால் அருளப்பட்ட திருவாய்மொழி என்னும் திவ்யப்பிரபந்தத்துக்கு உரை செய்தமையால் திருவாய்மொழிப்பிள்ளை என்று பெயர் பெற்ற திருமலையாழ்வாரின் அவதரித்த திருத்தலம் இந்த கொந்தகை ஆகும்.

    தென்கலை வைணவ மரபின் முதன்மை ஆச்சாரியார் மணவாள மாமுனிகள் தன் குருவான திருவாய் மொழிப் பிள்ளையிடம் உபதேச சாரங்களைக் கற்று தெளிந்தது இத்திருத்தலத்தில் தான். இதனால் இங்கு எழுந்தருளிய பெருமாளை வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை. மேலும் இங்குள்ள பெருமாளை பூர நட்சத்திரத்தன்று வணங்கி வழிபடுவோருக்கு திருமணத்தடைகள் நீங்கும், பதவி உயர்வுகள் கிட்டும் என்பதும் ஐதீகமாகும்.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த கொந்தகை தெய்வநாயக பெருமாள் கோவிலில் புரட்டாசி கருட சேவை திருவிழா அடுத்த மாதம் 5-ந் தேதி (புதன்கிழமை) பெரிய திருவோணம் ஜென்ம நட்சத்திரம் அன்று நடக்கிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு திருமஞ்சனமும், 11.30 மணிக்கு தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத தெய்வநாயகப்பெருமாள் கருட வாகனத்தில் திருவீதிஉலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    Next Story
    ×