search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனி
    X
    பழனி

    தரிசன கட்டுப்பாடு, முழு ஊரடங்கு அறிவிப்பால் பழனி கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்தது

    தரிசன கட்டுப்பாடு, முழு ஊரடங்கு அறிவிப்பால் பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்தது. இதனால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடாக பழனி திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

    தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவை பழனி முருகன் கோவிலில் வெகுசிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்கள் ஆகும். இந்த திருவிழாக்களின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.

    இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா, பழனி முருகன் கோவிலில் வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    இவ்வாறு வருகை தரும் பக்தர்கள், பழனியில் சாமி தரிசனம் செய்துவிட்டு அடிவார பகுதியில் உள்ள கடைகளில் சாமி படங்கள், விளையாட்டு பொருட்கள், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றை வாங்கி செல்கின்றனர்.

    இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களில் தரிசன தடை, ஞாயிறு முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. இந்த திடீர் அறிவிப்பால், பழனி பாதயாத்திரை பக்தர்கள் குழப்பம் அடைந்தனர்.

    கடந்த 7-ந்தேதி பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் பலர், பஸ் ஏறி பழனிக்கு வந்து தரிசனம் செய்தனர். இதனால் பழனி நகரே பக்தர்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது. அதன்பிறகு கடந்த 2 நாட்கள் தரிசன தடையால் பழனிக்கு பக்தர்கள் வருகை குறைந்து காணப்பட்டது.

    மேலும் பழனிக்கு வந்த பக்தர்கள், அடிவாரம் பாதவிநாயகர் கோவில் வாசல் முன்பு நின்றபடி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை குறைந்ததால், பழனி அடிவார பகுதியில் உள்ள தங்கும்விடுதி, ஓட்டல்கள் மற்றும் அலங்கார பொருள் கடைகளில் வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து வணிகர் சங்க பேரமைப்பு கவுரவத்தலைவர் ஹரிகரமுத்து கூறுகையில், பழனி என்பது ஆன்மிகம் சார்ந்த நகரம் ஆகும். இங்கு பக்தர்களை நம்பியே வியாபாரம் நடைபெறுகிறது. குறிப்பாக நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய 4 மாதங்கள் தான் பழனியில் வியாபாரம் களைகட்டும்.

    கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக பழனியில் தங்கும் விடுதி, ஓட்டல் உள்ளிட்ட தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. சபரிமலை சீசன் தொடங்கியதால் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து 40 சதவீத அளவில் பழனியில் வியாபாரம் நடைபெற்று வந்தது. மேலும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தற்போதே பல கடைகளில் முதலீடு போட்டு பொருட்களை வாங்கி வைத்துள்ளனர்.

    இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. பரவலை கட்டுப்படுத்த இந்த கட்டுப்பாடுகள் வரவேற்கத்தக்கது என்றாலும், பழனிக்கு பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. இதே நிலை தைப்பூசம் வரை நீடித்தால் பல கோடி ரூபாய் வியாபாரம் பாதிக்கப்படும். எனவே தைப்பூச திருவிழாவில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்றார்.
    Next Story
    ×