search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வழிபாடு
    X
    வழிபாடு

    ஆன்மிகத்தில் பணிவு தேவை

    இறைவனின் திருவருளானது தற்பெருமையும், கர்வமும் உள்ளவர்களின் உள்ளத்தில் தங்கி நிற்பதில்லை. அது பணிவு உள்ளவர்களின் உள்ளத்தில்தான் தங்கி நிற்கும்
    ஆன்மிகத்தில் ‘பணிவு’க்கு முக்கியமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. பணிவு வாழ்க்கையை உயர்த்துகிறது. பணிவின்மை வாழ்க்கையை அழித்து விடுகிறது. பணிவு இல்லாவிட்டால், கணவன் - மனைவி உறவு, பெற்றோர் - பிள்ளை உறவு, ஆசிரியர் - மாணவர் உறவு, அதிகாரி - பணியாளர் உறவு என அனைத்தும் சிதறிப்போய்விட வாய்ப்பிருக்கிறது. அதன் மூலம் சமுதாயத்திலும், குடும்பத்திலும் குழப்பங்கள், போராட்டங்கள், பிரச்சினைகள் உருவாகும். எனவே எங்கும், எவ்விடத்திலும், எப்போதும் பணிவோடு இருங்கள்.

    ‘சைவ சமயம்’ என்பதற்கு ‘தாழ்வு என்னும் தன்மையோடு சைவமாம் சமயம் சார்தல்’ என்று சைவ சமயத்தினர் இலக்கணம் வகுத்து வைத்திருக்கிறார்கள். தாழ்வு, அடக்கம், பணிவு போன்றவை, சைவ சமயத்திற்கு உரிய சிறப்பு என்று அந்த சமயம் வலியுறுத்துகிறது. பணிவு என்ற ஒன்று அமையும்போதுதான், ஒரு சைவனின் வாழ்க்கை முழுமை பெறுவதாகவும் அந்த சமயம் சுட்டிக்காட்டுகிறது. “புல்லைப் போன்று பணிவுடையவனாக இரு” என்பது கிருஷ்ண சைதன்யரின் முக்கியமான உபதேசமாகும்.

    விவேகானந்தரின் குருவாக இருந்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், பணிவு குறித்து இவ்வாறு சொல்கிறார். “மழைத் தண்ணீர் மேட்டு நிலத்தில் தங்கி நிற்பதில்லை. அது பள்ளமான இடத்துக்கு ஓடிவந்து விடுகிறது. அதுபோல், இறைவனின் திருவருளானது தற்பெருமையும், கர்வமும் உள்ளவர்களின் உள்ளத்தில் தங்கி நிற்பதில்லை. அது பணிவு உள்ளவர்களின் உள்ளத்தில்தான் தங்கி நிற்கும்” என்கிறார்.

    நெற்கதிர்கள் முதிர்ச்சி அடைந்தால், அதுவாகவே தலையை சாய்க்கும். அதுபோல் வாழ்க்கையில் உயர உயர மனிதர்களிடமும் பணிவு வளர வேண்டும். வாழ்க்கையில் உயர்வுபெற விரும்புபவன், பணிவுடையவனாக இருக்க வேண்டியது அவசியம். எல்லோருக்கும் பணிவு இருக்க வேண்டும் என்பதைத்தான், திருவள்ளுவர் தன்னுடைய குறளில், எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து” என்று கூறுகிறார்.
    Next Story
    ×