search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மருதமலை முருகன் கோவிலில் அமைக்கப்பட உள்ள லிப்ட் வசதியின் மாதிரிதோற்றம்
    X
    மருதமலை முருகன் கோவிலில் அமைக்கப்பட உள்ள லிப்ட் வசதியின் மாதிரிதோற்றம்

    மருதமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல ‘லிப்ட்’ வசதி

    கோவை மருதமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல லிப்ட் வசதி செய்யப்படுகிறது. இதுபோல் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரோப்கார் அமைக்க வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
    கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் முருக பக்தர்களால் ஏழாவது படை வீடு என போற்றப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இந்த கோவில் மலைமீது உள்ளதால், அடிவாரத்திலிருந்து மினி பஸ்கள் மற்றும் கார்கள் மூலம் பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் நடந்து செல்கிறவர்களுக்கு மலைப்பாதை வழியாக படிக்கட்டுகள் உள்ளன.

    இந்தநிலையில் மருதமலை முருகன் கோவிலுக்கு ரோப்கார் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் வல்லுனர்கள் குழுவினர் மருதமலையில் ரோப்கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் அதற்கு பதிலாக லிப்ட் அமைக்கலாம் என்றும் அறிக்கை அளித்தனர்.

    இந்நிலையில் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ., மருதமலை முருகன் கோவிலுக்கு லிப்ட் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். மேலும் இது தொடர்பாக அவர், முதல்-அமைச்சரிடமும், உள்ளாச்சித்துறை அமைச்சரிடமும், அறநிலையத் துறை அமைச்சரிடமும் கோரிக்கை மனு அளித்தார்.

    இதையடுத்து மருதமலை முருகன் கோவிலுக்கு லிப்ட் அமைக்கப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து லிப்ட் அமைக்கும் பணிகள் குறித்து 10 பேர் கொண்ட வல்லுநர் குழு ஆய்வு செய்தது.

    ராஜகோபுரத்தின் இடதுபுறம் புதிதாக லிப்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டு இதற்கான மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டது.மாதிரி திட்டத்திற்கு ஒப்புதல் கோரி அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பப்பட்டது.ஆணையர் அனுமதி அளித்ததை தொடர்ந்து வல்லுனர் குழுவின் ஆலோசனை கூட்டம் மருதமலை மலைக்கோவில் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் பழனியில் ரோப்கார் அமைத்த பொறியாளர்கள் ரங்கசாமி, நாச்சிமுத்து, இந்து சமய அறநிலைய துறை பொறியாளர்கள்செந்தில்குமார், ஜமுனா தேவி, கோபாலகிருஷ்ணன் மற்றும் அரசினர் பொறியியல் கல்லூரி துறை தலைவர் பொறியாளர் பழனி, மருதமலை கோவில் உதவி ஆணையர் (பொறுப்பு) விமலா ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து மருதமலைகோவில் உதவி ஆணையர் (பொறுப்பு) விமலா கூறியதாவது:-

    மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ராஜகோபுரத்தின் இடதுபுறம் புதிதாக லிப்ட் அமைக்கும் பணிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 3 கோடியே 36 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பில் லிப்ட் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. அதாவது ராஜகோபுரத்தின் கீழ்பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில் இருந்து ராஜகோபுரம் வரை செல்ல ஒருலிப்ட்டும், அங்கிருந்து நடந்து சென்று மீண்டும், மலை மீது உள்ள கோவிலுக்கு செல்வதற்கு ஒரு லிப்ட்டும், சாமி தரிசனம் செய்து விட்டு கீழே வருவதற்கு இரண்டு லிப்ட்களும் என மொத்தம் நான்கு லிப்ட் கள் அமைக்கப்படுகின்றன.இந்த லிப்டில் 5 நிமிடத்திற்கு 40 பேர் செல்லலாம். கார் பார்க்கிங்கில் இருந்து ஐந்து நிமிடத்தில் மலைக் கோவிலை அடைந்து விடலாம். ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பேர் வரை இந்த லிப்ட்டில் செல்ல முடியும். இந்த பணிக்கான டெண்டர் அடுத்த வாரத்தில் விடப்பட்டு, பணிகள் அடுத்த மாதங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து வல்லுனர்கள் குழு கோவை அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று அங்கு ரோப்கார் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அங்கு மலைமீது உள்ள முருகனை தரிசனம் செய்வதற்கு 500 படிக்கட்டுகளுக்கு மேல் சென்று தான் சாமி தரிசனம் செய்ய இயலும். எனவே அங்கும் பக்தர்கள் ரோப்கார் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதை தொடர்ந்து அங்கு ரோப்கார் அமைக்கும் பணிகள் குறித்து வல்லுனர் குழு ஆய்வு செய்தது. இதில் ரோப் கார் அமைக்க ஆகும் திட்டச் செலவுகள் மற்றும் பணிகள் குறித்து அரசுக்கு இந்த குழு அறிக்கை அளிக்க உள்ளது. இந்த ஆய்வின் போது அனுவாவி கோவில் அறங்காவலர் இராம் குமார் மற்றும் பெஸ்ட் குழும தலைவர் ஸ்ரீ பிரியா கவுரி சங்கர், தலைமை நிர்வாகி இராம.ரமணன் மற்றும் அனுவாவி ஊர் பொதுமக்கள் இருந்தனர்.
    Next Story
    ×