search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுதர்சன சக்கரம்
    X
    சுதர்சன சக்கரம்

    சுகபோக வாழ்வு தரும் சுதர்சன சக்கரம்

    மகாவிஷ்ணுவின் வலது கரத்தை அலங்கரிப்பது சுதர்சன சக்கரம். அவரது ஆயுதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சுதர்சன சக்கரம் திகழ்கிறது.
    * மகாவிஷ்ணுவின் வலது கரத்தை அலங்கரிப்பது சுதர்சன சக்கரம். அவரது ஆயுதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சுதர்சன சக்கரம் திகழ்கிறது. இந்த சுதர்சனருக்கு, தனியாக வழிபாடும் இருக்கிறது.

    * சுதர்சனரை வழிபடச் சித்திரை நட்சத்திர தினங்கள் சிறப்பானவை என்று சொல்லப்படுகிறது.

    * கும்பகோணம் சக்ர படித்துறையில் உள்ள சக்கர தீர்த்தத்தில்தான், பிரம்மா ‘அவப்ருத நீராடல்’ செய்து யாகம் செய்தார். இதையடுத்து பாதாளத்திலிருந்து சக்கரம் வெளிக்கிளம்பி மேலே வந்தது. அந்த சக்கரத்தின் நடுவில் பிரம்மனுக்கு காட்சி தந்த நாராயணன்தான், இன்று நமக்கு சக்கரபாணியாக காட்சி தந்து கொண்டிருக்கிறார்.

    * சாளக்ராமங்களில், சுதர்சன சாளக்ராமம் மிகச் சிறந்தது. ஒரு சக்கரம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சாளக்ராமம் சுதர்சனமாகும். திருமாலின் சக்ராயுதத்தின் பூர்ண சக்தி இதற்கு உண்டு.

    * சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள நரசிம்மரையும் சுற்றி வந்து வழிபட்டால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும், அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும்.

    * நரசிம்ம அவதாரத்தில் இரண்யகசிபுவின் வரத்தின்படி, எந்த ஆயுதமும் இல்லாமல் அவனை நரசிம்மர் அழித்தார். அப்போது நரசிம்மரின் நகங்களாக விளங்கியவர் சுதர்சனர் என்று புராணங்கள் சொல்கின்றன.

    * வாமன அவதாரத்தில், சுக்ராச்சாரியாரின் கட்டளையை மீறி வாமனருக்குத் தானம் கொடுக்க மகாபலி சக்கரவர்த்தி முன்வந்தான். அப்போது சுக்ராச்சாரியார் வண்டாக வந்து கமண்டல நீர்ப்பாதையை அடைத்தார். உடனே வாமனர் தர்ப்பைப் புல் கொண்டு கிளற, சுக்ராச்சாரியார் தன் கண்ணை இழந்தார். அங்கு தர்ப்பையாக வந்தவர் சுதர்சனர் என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

    * சக்கரத்தாழ்வார் பல பழமையான திருக்கோவில்களில் தனிச்சன்னிதி கொண்டு காட்சியளிப்பதைக் காணலாம். குறிப்பாக திருவரங்கம், காஞ்சி வரதர்கோவில், திருமாலிருஞ்சோலை என்னும் மதுரை கள்ளழகர் கோவில், திருமோகூர், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்றவை. தற்போது சக்கரத்தாழ்வாரின் மகிமை யைப் புரிந்துகொண்டு பல திருத்தலங்களில் இவருக்குத் தனிச்சன்னிதி அமைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    * சக்கரத்தாழ்வாரை, புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது சிறப்பானது. இயன்ற அளவு தினமும் அவரை வழிபாடு செய்து வரலாம்.

    * பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில், மூலவரின் வலது கரத்தில் பிரயோகிக்கும் நிலையில் சக்கரம் காட்சி தருகிறது. இங்குள்ள சுதர்சனர் சன்னிதியில் நெய் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்வில் சுபிட்சம் காணலாம். திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
    Next Story
    ×