search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் விஜயதசமி விழாவையொட்டி நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய காட்சி.
    X
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் விஜயதசமி விழாவையொட்டி நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய காட்சி.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் அம்பு போடும் நிகழ்ச்சி

    ஸ்ரீரங்கம் ரெங்நாதர் கோவிலில் நம்பெருமாள் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறுகிறது.
    மங்கையர் போற்றும் நவராத்திரி விரதம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முப்பெரும் தேவியர்களான துர்கா, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோரை போற்றி வணங்குவதே இந்த நாளில் சிறப்பாகும். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் அம்பிகை வீற்றிருக்கிறாள் என்பதை உணர்த்துவதற்காகவே கொலு வைக்கப்படுகிறது.

    கொலுவிற்கு வரும் பக்தர்களுக்கு மங்கள பொருட்களான மஞ்சள், குங்குமம் கொடுத்து உபசரிப்பர். இத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரிவிழா ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதியில் கடந்த 17-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. நவராத்திரி விழாவையொட்டி கடந்த 23-ந் தேதி ரெங்கநாச்சியார் திருவடிசேவை நடைபெற்றது.

    ஆண்டுதோறும் விஜயதசமி தினத்தன்று காலை நம்பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு காட்டழகிய சிங்கர் கோவிலுக்கு சென்று ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார் அங்கிருந்து மாலை தங்ககுதிரை வாகனத்தில் புறப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள வன்னிமரத்தில் அம்பு போடுவார். பின்னர் வீதிஉலா வந்து மூலஸ்தானம் சென்றடைவார்.

    இந்தாண்டு ஊரடங்கு உத்தரவு காரணமாக திருவிழாக்கள் கோவில் வளாகத்தில் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறுகிறது. அதனால் அம்பு போடும் நிகழ்ச்சி ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் உள்ள கருடமண்டபத்தில் பக்தர்கள் அனுமதியின்றி நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு கருடமண்டபம் வந்தடைந்தார்.

    அங்கு இரவு 8 மணிக்கு தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளினார். கருடமண்டபத்திலேயே இரவு 8.30 மணியளவில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் தோளுக்கினியாளில் புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், கோவில் இணைஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×