search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்ததையும், பக்தர்கள் தரிசனம் செய்ததையும் காணலாம்.
    X
    புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்ததையும், பக்தர்கள் தரிசனம் செய்ததையும் காணலாம்.

    புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு மலர் அலங்காரம்

    தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மனை மிக அருகில் சென்று தரிசனம் செய்ய அனுமதி அளிக்கவில்லை.
    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆவணி திருவிழா கடந்த மாதம் 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால் கடந்த 2 வாரங்களாக சிறப்பு அலங்காரம் செய்யப்படவில்லை. இந்தநிலையில் முழு ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு, வழிபாட்டு தலங்களை திறக்க தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது.

    இதனால் ஆவணி ஞாயிற்றுக்கிழமையான நேற்று பக்தர்கள் ஏராளமானோர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். இவர்கள் வரிசையாக செல்வதற்கு வசதியாக இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் வரிசையாக கோவிலுக்குள் சென்றனர். மலர்அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மனை மிக அருகில் சென்று தரிசனம் செய்ய அனுமதி அளிக்கவில்லை.

    அம்மனுக்கு அர்ச்சனை, தீபாராதனை எதுவும் நடைபெறவில்லை. பக்தர்கள் அர்ச்சனை செய்வதற்காக தேங்காய், பழங்கள் கொண்டு வந்தனர். ஆனால் அவற்றை கோவிலுக்குள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கவில்லை. இதனால் கோவிலின் நுழைவு வாயிலில் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த தேங்காயை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவிலுக்குள் யாரும் அமருவதற்கு அனுமதி அளிக்கப்படாததால் கோவிலுக்கு வெளியே மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். சேவல், கோழி காணிக்கை செலுத்த வந்த பக்தர்கள் எங்கே கொடுப்பது என்று தெரியாமல் சேவல், கோழிகளை தூக்கி கொண்டு அங்கும், இங்குமாக சுற்றி வந்தனர். பின்னர் கோவிலுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கூண்டில் கோழிகளை விட்டுவிட்டு சென்றனர். வழக்கமாக ஆவணி ஞாயிற்றுக்கிழமை என்றால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் கொரோனா தொற்று காரணமாக எதிர்பார்த்த அளவுக்கு பக்தர்கள் கூட்டம் வரவில்லை.
    Next Story
    ×