search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஓணம் பண்டிகையின் சிறப்புகள்
    X
    ஓணம் பண்டிகையின் சிறப்புகள்

    ஓணம் பண்டிகையின் சிறப்புகள்

    கேரளத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுவது ‘ஓணம்’ பண்டிகையாகும். இந்த ஓணம் பண்டிகையின் சிறப்புகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    மும்மூர்த்திகள் மரம்

    கேரள மாநிலத்தில் உள்ள திருக்காட்கரையப்பன் கோவிலின் பிரகாரத்தை வலம் வரும்போது, பெரிய அளவிலான அரச மரம் ஒன்றை நாம் காணலாம். இந்த மரத்தை ‘மும்மூர்த்திகள் மரம்’ என்று அழைக்கிறார்கள். இம்மரத்தின் வேர்ப்பகுதி பிரம்மா, நடுப்பகுதி விஷ்ணு, உச்சிப்பகுதி சிவபெருமான் என்று நினைத்து வணங்கப்பட்டு வருகிறது. இந்த மரத்தின் அடியில் மேடை கட்டி, மாடவிளக்கு ஒன்றையும் ஏற்றி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆயில்ய நட்சத்திர நாளிலும், இந்த மரத்தடியில் பூஜை செய்யப்படுகிறது. அவ்வேளையில், நாகர் இனத்துப் பழங்குடியினர் இங்கு ‘புல்லுவன்’ பாட்டைப் பாடிச் சிறப்பிக்கின்றனர்.

    பிரம்ம ராட்சசன் சன்னிதி

    ஒரு விவசாயி நிலத்தில் விளைந்த நேந்திரம் வாழைப் பழங்களில் சில தங்கமாக இருந்தன. அந்தத் தங்க வாழைப்பழங்களைக் காட்கரையப்பன் கோவிலுக்கு அவர் காணிக்கையாக வழங்கினார். ஒரு நாள், கோவில் அர்ச்சகர், தங்க வாழைப்பழங்களைச் சன்னிதியில் வைத்துவிட்டு வெளியே சென்றிருந்தார். திரும்பி வந்தபோது, தங்க வாழைப் பழங்களைக் காணவில்லை.

    இந்தச் செய்தி அந்நாட்டு அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. மன்னன், சில அரண்மனைக் காவலர்களை அனுப்பி விசாரிக்கச் சொன்னான். அவர்கள், கோவிலில் தங்கியிருந்த அப்பாவி யோகி ஒருவரை சந்தேகப்பட்டுக் கைது செய்தனர். அரசன் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டான். சிறையில் யோகியை துன்புறுத்தினர்.

    இதற்கிடையில் தங்க வாழைப்பழங்கள் மூலவரின் கருவறையில் பத்திரமாக இருப்பதை அறிந்து, யோகியை மன்னன் விடுதலை செய்தான். ஆனால் செய்யாத தவறுக்காக தண்டனை வழங்கியதை எண்ணி துடித்த யோகி, தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அவர், பிரம்ம ராட்சசனாக மாறி, அரசனுக்கும் மற்றவர்களுக்கும் துன்பம் கொடுத்தார்.

    மன்னன் தன் தவறை நினைத்து வருந்தியதுடன் திருக்காட்கரையப்பனை வணங்கி, யோகிக்கு கோவில் வளாகத்தில் ஒரு சன்னிதியை எழுப்பினான். அங்கு அவருக்கு தினசரி பூஜை செய்து பிரம்ம ராட்சசனாக இருந்த யோகியின் கோபத்தைத் தணித்தான். இந்த சன்னிதி ‘யோகி சன்னிதி’ என்றும், ‘பிரம்மராட்சசன் சன்னிதி’ என்றும் அழைக்கப்படுகிறது. இப்போதும் இங்கு தினசரி பூஜைகள் நடக்கின்றன.

    இறைவனால் தோன்றிய வாழை

    விவசாயி ஒருவர் தன் நிலத்தில் பயிரிட்டிருந்த வாழை சரியான விளைச்சலைக் கொடுக்கவில்லை. இதனால் வருத்தம் அடைந்த அந்த விவசாயி, திருக்காட்கரையப்பன் ஆலயத்திற்கு வந்து, மகாவிஷ்ணுவின் கடைக்கண் தன் நிலத்தில் படவேண்டுமென்று வேண்டினார். மகாவிஷ்ணுவும் தன் பக்தனுடைய நிலத்தைத் தன் நேத்திரத்தினால் (விழியினால்) பார்த்தார். அந்தப் பார்வையின் பலனாக புதியதொரு வாழை அங்கு தோன்றியதுடன் விளைச்சலும் அதிகமானது. அன்று முதல் அந்த வாழைக்கு ‘நேத்திரம் வாழை’ என்ற பெயரும் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். அதுவே பின்னாளில் ‘நேந்திரம் வாழை’ என்று மருவியது. இறைவனின் கண் பார்வையால் வந்த வாழை என்பதால், இதற்கு இப்பெயர் வந்ததாம்.
    Next Story
    ×