search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் பகுதி பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டதை படத்தில் காணலாம்.
    X
    காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் பகுதி பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டதை படத்தில் காணலாம்.

    ஆடி அமாவாசை திருவிழா ரத்து: காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் வெறிச்சோடியது

    ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்பட்டதால் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில், பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பாபநாசத்தில் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டது.
    நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் காரையாறு காணிக்குடியிருப்பில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அவர்கள் திருவிழா நடக்கும் சில நாட்களுக்கு முன்பாகவே கோவில் அருகே கொட்டகை அமைத்து தங்கி இருந்து சாமி தரிசனம் செய்தும், அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் புனித நீராடியும் செல்வார்கள்.

    ஆனால், இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. எனினும் கோவிலை திறந்து பூஜைகள் நடக்கும் என்றும், பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் ஆடி அமாவாசையான நேற்று கோவிலில் ஆகம விதிகளின் படி மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வரன், பட்டர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோவில் சுற்றுப்புற பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை கோவிலில் சுவாமியை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்காமல் போனது பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே இருந்தது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு தங்களது முன்னோர்களுக்கு பொதுமக்கள் நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆண்டு தோறும் இந்த நாளில் தர்ப்பணம் கொடுப்பதற்காக பாபநாசம் தாமிரபரணி ஆறு படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் கூடுவார்கள்.

    ஆனால், இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதனால் நேற்று பாபநாசம் படித்துறையில் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க வரவில்லை. இதன் காரணமாக அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
    Next Story
    ×