search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்படும் மஞ்சள் திருமாங்கல்யம்.
    X
    ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்படும் மஞ்சள் திருமாங்கல்யம்.

    கொரோனா வைரஸ் தாக்குதலை முன்பே உணர்த்திய சிவன்மலை ஆண்டவன்

    ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மஞ்சள் திருமாங்கல்யம் இருந்து வருவதால் கொரோனா வைரஸ் தாக்குதலை முன்பே உணர்த்திய சிவன்மலை ஆண்டவன் என்று பக்தர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது.

    சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சுவாமியிடம் பூ போட்டு கேட்டு வெள்ளை பூ வந்தால் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது.

    அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம்.

    இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மஞ்சள் தாலிக்கயிற்றில் மஞ்சள் கட்டையால் ஆன திருமாங்கல்யம் வைத்து பூஜிக்கப்படுகிறது. இது கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காமராஜர் நகரைச் சேர்ந்த காமராஜ்(வயது 46) என்ற பக்தரின் கனவில் உத்தரவான பொருள் ஆகும்.

    மஞ்சள் திருமாங்கல்யம் வைத்து பூஜிக்கப்படுவதால் சுப காரியங்கள் அதிகரிக்கும் என்று பக்தர்கள் நம்பினர். இந்த நிலையில் தற்போது சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் தன் கோரக்கரங்களால் பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்த வைரசை வரவிடாமல் செய்ய பல்வேறு ஆலோசனை டாக்டர்களால் கூறப்பட்டு வருகின்றன. அதில் உணவில் தவறாமல் மஞ்சள் சேர்க்க வேண்டும் என்பதும் ஒன்றாகும். இதையடுத்து கடைகளில் அதிகளவில் பெண்கள் மஞ்சள் தூள் வாங்குவதையும் காண முடிகிறது. அது மட்டுமின்றி மஞ்சள் பொடியை தண்ணீரில் கலந்து கிருமிநாசினியாக கைகழுவவும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுபற்றி காங்கேயம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பெரியசாமி, சீனிவாசன் ஆகியோர் கூறியதாவது:-

    சிவன்மலை ஆண்டவன் உத்தரவான பொருட்கள் ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற்று விடும். தற்போது இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதில் இருந்து தற்காத்து கொள்ள மஞ்சளை பயன்படுத்தலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் உத்தரவு பெட்டியில் வைத்த மஞ்சள் மகத்துவம் பெற்று உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலை முன்பே சிவன்மலை சுப்பிரமணியசாமி உணர்த்தியுள்ளார் என கருதுகிறோம். தற்போது சமையலுக்கு மஞ்சளை அதிகம் பயன்படுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    Next Story
    ×