search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமயபுரம் மாரியம்மன் கோவில்
    X
    சமயபுரம் மாரியம்மன் கோவில்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா 30-ந்தேதி தொடங்குகிறது

    தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.
    தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா தொடர்ந்து பிப்ரவரி 9-ந்தேதி வரை நடைபெறும்.

    30-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 7.45 மணிமுதல் 8.45 மணிக்குள் கொடி ஏற்றப்படும். இரவு 8 மணிக்கு அம்மன் மர கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். திருவிழாவின் இரண்டாம் நாள் (31-ந்தேதி) காலை 10 மணிக்கு அம்மன் பல்லக்கில் எழுந்தருள்வார். மாலை 5 மணிக்கு அபிஷேகம், 7 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறும். இரவு 8 மணிக்கு அம்மன் மர சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார்.இதேபோல் பிப்ரவரி 1-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை அம்மன் தினமும் காலை 10 மணிக்கு பல்லக்கில் எழுந்தருளி வீதி உலாவும், இரவு 8 மணிக்கு வெவ்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி வீதி உலா வருகிறார். ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெறும்.

    திருவிழாவின் 9-ம் நாளான பிப்ரவரி 7-ந்தேதி இரவு 8 மணிக்கு அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 10-ம் திருநாளன்று (8-2-2020) காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் அம்மன் கோவிலில் இருந்து தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி வழிநடை உபயங்கள் கண்டருளி நொச்சியம் வழியாக வட திருக் காவிரிக்கு (கொள்ளிடம் ஆறு) சென்றடைகிறார். மாலையில் தீர்த்தவாரி கண்டருள்கிறார். இரவு 10 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து சமயபுரம் மாரியம்மனுக்கு மங்கள பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அதிகாலை 1 மணிமுதல் 2 மணிக்குள் மகா அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 3 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    9-ந்தேதி காலை 6 மணிக்கு அம்மன் கொள்ளிடத்தில் இருந்து கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி இரவு 10 மணிக்கு ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். இரவு 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×