
பின்னர் பல்வேறு அபிஷேக ஆராதனைகளுக்கு பின்னர் பச்சை மரகத நடராஜர் பக்தர்களுக்கு நாள் முழுவதும் காட்சி அளித்தார். ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் நடராஜருக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி நடைபெற்றது. இதன்பின்னர் நேற்று அதிகாலை 4 மணி அளவில் அருணோதய காலத்தில் பச்சை மரகத நடராஜர் திருமேனிக்கு புதிய சுத்தமான சந்தனகாப்பு பூசப்பட்டது.
பச்சை மரகத நடராஜர் சிலை முழுவதும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நன்கு அரைக்கப்பட்ட சந்தனம் மென்மையாக பூசி வைக்கப்பட்டது. பின்னர் மரகத நடராஜருக்கு ஆருத்ரா சிறப்பு தீபாராதனை நடைபெற்று, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிவகாமி அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று நடராஜரை தரிசனம் செய்தனர்.
காலை 10 மணிக்கு மேல் கோவிலில் கூத்தர் பெருமாள் திருவீதி உலாவும், மாலை 5 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இரவு 8 மணிக்கு மாணிக்கவாச சுவாமிகளுக்கு காட்சி கொடுத்த பின்பு பஞ்சமூர்த்தி புறப்பாடு, வெள்ளி ரிஷப சேவை நடைபெற்றது.
சிவனுக்கு உகந்த நாளாக கருதப்படும் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜரை தரிசிப்பது விஷேசம் என்பதால் ராமநாதபுரம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன், சரக பொறுப்பாளர் சங்கர் உள்ளிட்டோர் செய்திருந்தனர். விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.