search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருஉத்தரகோசமங்கை கோவில்
    X
    திருஉத்தரகோசமங்கை கோவில்

    திருஉத்தரகோசமங்கை கோவிலில் நாளை ஆருத்ரா தரிசன விழா

    திருஉத்தரகோசமங்கை கோவிலில் நடைபெற உள்ள ஆருத்ரா தரிசன விழாவையொட்டி 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
    ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஒரே மரகத கல்லில் ஆன நடராஜர் சிலை உள்ளது. இங்கு நாளை (வியாழக்கிழமை) ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது.

    வருடத்திற்கு ஒரு முறை சந்தனம் களையும் இந்த விழாவின்போது மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் களையப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்படும். அதைத்தொடர்ந்து இரவு முழுவதும் பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று மறுநாள் காலை சிலை மீது மீண்டும் சந்தனம் பூசப்படும்.

    இந்த விழா ஏற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் கூறியதாவது:- ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் ராணி ராஜேசுவரி நாச்சியார் ஆலோசனையின்பேரில் ஆருத்ரா தரிசன விழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாளை காலை 8 மணிக்கு அபூர்வ மரகத நடராஜர் மீது பூசப்பட்டுள்ள சந்தனம் களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும். தொடர்ந்து நடராஜருக்கு 32 வகையான அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும்.

    இந்த ஆண்டு இலவச தரிசனம் தவிர ரூ.10, 100, 250 கட்டண தரிசனங்கள், வி.ஐ.பி தரிசனங்கள் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. ரூ.250 கட்டண தரிசனத்திற்கு அபூர்வ சந்தனம் மற்றும் பிரசாதம் வழங்கப்படும். கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 40 ஆயிரம் பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், அன்னதானம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது.

    இரவில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும்போது குளிரை சமாளிக்கும் வகையில் இரவு நேரத்தில் பக்தர்களுக்கு இந்த ஆண்டு முதல் சூடான பால் வழங்கப்படும். நாளை மாலை 6 மணி முதல் மறுநாள் மாலை 6 மணி வரை இடைவிடாது நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது, விழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பிற்காக இந்த ஆண்டு 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    கோவில் முழுவதும் முக்கிய இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×