search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சயன கோலத்தில் நிகரில்முகில்வண்ணன்.
    X
    சயன கோலத்தில் நிகரில்முகில்வண்ணன்.

    நவதிருப்பதி கோவில்களில் உற்சவர்கள் சயன கோலத்தில் எழுந்தருளினர்

    வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, நவதிருப்பதி கோவில்களில் உற்சவர்கள் சயன கோலத்தில் எழுந்தருளினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில், நத்தம் விஜயாசன பெருமாள் கோவில், திருப்புளியங்குடி காய்சினவேந்த பெருமாள் கோவில், இரட்டை திருப்பதி தேவர்பிரான் கோவில், அரவிந்தலோசனர் பெருமாள் கோவில், பெருங்குளம் மாயக்கூத்தர் கோவில், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் ஆகியவற்றில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி கோவில்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் முன்மண்டபங்களில் உற்சவர்கள் சயன கோலத்தில் எழுந்தருளினர்.

    ஸ்ரீவைகுண்டம் கோவிலில் உற்சவர் கள்ளபிரானும், நத்தம் கோவிலில் உற்சவர் விஜயாசனரும், திருப்புளியங்குடி கோவிலில் உற்சவர் எம்இடர்கடிவானும், இரட்டை திருப்பதி கோவிலில் உற்சவர்கள் தேவர்பிரானும், அரவிந்தலோசனரும், பெருங்குளம் கோவிலில் உற்சவர் மாயக்கூத்தரும், தென்திருப்பேரை கோவிலில் உற்சவர் நிகரில் முகில்வண்ணனும், திருக்கோளூர் கோவிலில் உற்சவர் வைத்தமாநிதி பெருமாளும், ஆழ்வார்திருநகரி கோவிலில் உற்சவர் பொலிந்து நின்ற பிரானும் சயன கோலத்தில் தாயார்களுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    விழாவையொட்டி அதிகாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் குடும்பத்தினருடன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவில்களில் பக்தர்கள் எளிதில் சாமி தரிசனம் செய்யும் வகையில் தடுப்பு கம்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. கோவில் வளாகங்களில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. சாமி தரிசனம் செய்த பக்தர்கள் அகத்திக்கீரை, நெல்லிக்கனி போன்றவற்றை தங்களது வீடுகளுக்கு வாங்கி சென்றனர்.

    ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி கோவில்களில் பகல்பத்து திருவிழா நேற்று முன்தினம் நிறைவடைந்து, வைகுண்ட ஏகாதசி விழாவான நேற்று இராப்பத்து திருவிழா தொடங்கியது. இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான நேற்று இரவில் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி இரவில் சுவாமிக்கு விசுவரூபம், திருப்பாவை சாத்துமுறை நடந்தது.

    ஸ்ரீவைகுண்டம் கோவிலில் இரவு 8 மணிக்கும், ஆழ்வார்திருநகரி கோவிலில் இரவு 11 மணிக்கும், தென்திருப்பேரை கோவிலில் நள்ளிரவு 2 மணிக்கும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசலில் எழுந்தருளிய உற்சவர்களை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் கற்பூரசேவை, கொட்டகை உலாவுதல், உற்சவர் மண்டபத்துக்கு எழுந்தருளல் நடைபெற்றது. 
    Next Story
    ×