
அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால் கிரிவீதிகள், சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
இதனால் ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர்.
குறிப்பாக தரிசன வழிகளிலும், மலைக்கோவில் வெளிப்பிரகாரத்திலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக சுமார் 3 மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். கடந்த சில நாட்களாக மழை பெய்த நிலையில் நேற்று பகல் முழுவதும் பழனியில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இதனால் வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் நடந்து செல்ல வசதியாக கயிற்றால் ஆன விரிப்புகள் போடப்பட்டு, அதில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.