search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பகோணம் திருவிசநல்லூரில் உள்ள ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் பக்தர்கள் புனித நீராடிய காட்சி.
    X
    கும்பகோணம் திருவிசநல்லூரில் உள்ள ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் பக்தர்கள் புனித நீராடிய காட்சி.

    திருவிசநல்லூர் அய்யாவாள் மடத்தில் புனித நீராடும் நிகழ்ச்சி

    திருவிசநல்லூர் அய்யாவாள் மடத்தில் புனித நீராடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசநல்லூரில் ஸ்ரீதர அய்யாவாள் என்பவர் வசித்து வந்தார். இவர் கார்த்திகை அமாவாசை அன்று தனது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு முன்னரே பசி என வந்த ஒருவருக்கு உணவு வழங்கி விட்டார்.

    இதனால் அவருக்கு ஏற்பட்ட பாவம் நீங்க அப்பகுதியை சேர்ந்த பெரியவர்கள் கங்கையில் குளிக்க வேண்டும் என அறிவுரை கூறினர். அப்போது ஸ்ரீதரஅய்யாவாள் தனது வீட்டு கிணறு அருகே நின்றபடி கங்கையை நினைத்து பாடல்கள் பாடினார். இதன் காரணமாக அவருடைய கிணற்றில் இருந்து கங்கை நீர் பொங்கி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் அமாவாசை நாளில் திருவிசநல்லூரில் உள்ள ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் புனிதநீராடல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நேற்று கார்த்திகை அமாவாசை நாளையொட்டி புனித நீராடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிணற்றில் புனித நீராடினர்.
    Next Story
    ×