search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நடந்த தீர்த்தவாரியின்போது பக்தர்கள் புனிதநீராடிய காட்சி.
    X
    மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நடந்த தீர்த்தவாரியின்போது பக்தர்கள் புனிதநீராடிய காட்சி.

    மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி

    ஐப்பசி மாத பிறப்பையொட்டி மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
    நாகை மாவட்டம், மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் துலா மாதம் என்று அழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட நதிகளும், அரிப்பிரம்மாதி தேவர்களும் புனித நீராடி தத்தம் பாவங்களில் இருந்து விடுதலை பெற்றார்கள் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.அதன்படி நேற்று ஐப்பசி மாத பிறப்பையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி மயூரநாதர் கோவிலில் இருந்து மயூரநாதர்-அபயாம்பிகையும், ஐயாறப்பர் கோவிலில் இருந்து ஐயாறப்பர்-அறம்வளர்த்த நாயகியும், காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து காசி விஸ்வநாதர்-காசி விசாலாட்சியும் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா சென்று காவிரி துலா கட்டத்தின் தென்கரையை அடைந்தனர்.

    இதேபோல் வள்ளலார் கோவிலில் இருந்து வதாண்யேஸ்வரர்-ஞானாம்பிகை வீதி உலாவாக சென்று துலா கட்டத்தின் வடகரையை அடைந்தனர். பின்னர் இருகரைகளிலும் அஸ்திர தேவர்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதனையடுத்து அஸ்திர தேவர்களுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

    அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடி சாமி தரிசனம் செய்தனர். இதில் தருமபுரம் ஆதீன இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக கட்டளை தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு புனித நீராடி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.

    இதற்கான ஏற்பாடுகளை சிவபுரம் வேதசிவாகம பாடசாலை முதல்வர் சாமிநாத சிவாச்சாரியார், ஸ்ரீகண்ட குருக்கள் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×