search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவ மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளியபோது எடுத்த படம்.
    X
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவ மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளியபோது எடுத்த படம்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண்டி சேவை

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண்டி சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் நேற்று முன் தினம் தொடங்கியது. உற்சவத்தின் முதல் நாள் யாகசாலையில் நம்பெருமாள் எழுந்தருளினார். அவரைச்சுற்றிலும் பூக்கள் பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதனால் இந்நிகழ்ச்சி பூப்பரத்திய ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் மூலவர், உற்சவர் உள்பட சிறிய, பெரிய மூர்த்திகள் அனைவருக்கும் நூலிலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    பவித்ர உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை எனப்படும் அங்க, உபாங்க சேவை நேற்று மதியம் நடைபெற்றது. பூச்சாண்டி சேவையின் போது மூலவர் ரெங்கநாதரின் திருமுக மண்டலம் உள்பட திருமேணி முழுவதும் நூலிழைகளை சுருள், சுருளாக வைத்து அலங்கரித்திருந்தனர். இந்த காட்சி பார்வைக்கு அச்சமூட்டுவதுபோல் இருக்கும். எனவே இதை பூச்சாண்டி சேவை என்று குறிப்பிடும் பழக்கம் ஏற்பட்டது.

    பவித்ர உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்க கொடிமரத்திற்கு அருகில் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். நேற்றும் அவர் பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். உற்சவத்தின் 7-ம் நாளான வருகிற 15-ந் தேதி உபய நாச்சியார்களுடன் நம்பெருமாள் கோவில் கொட்டாரத்தில் நெல் அளவு கண்டருளுகிறார். 9-ம் நாளான 17-ந் தேதி காலை நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். மறுநாள் பெரிய பெருமாள் ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பு நடைபெறுகிறது.
    Next Story
    ×