
திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்ட பாண்டிய மன்னனான முருகப்பெருமானை மதுரையில் வழி நெடுகிலும் ஏராளமான திருக்கண்கள் அமைத்து பக்தர்கள் வழிபட்டனர். ஒவ்வொரு திருக்கண்களுக்கும் சென்ற சுப்பிரமணியசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றடைந்த முருகப்பெருமான்-தெய்வானைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்தநிலையில் இன்று மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சியின்போது சுப்பிரமணியசுவாமி பாண்டிய மன்னனாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின்னர் வருகிற 13-ந்தேதி வரை முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதன்பின்பு அன்றைய தினம் மதியம் 4 மணிக்கு மதுரையில் இருந்து முருகப்பெருமான் புறப்பட்டு தனது இருப்பிடமான திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தடைகிறார். வரும் வழி நெடுகிலுமாக 100-க்கும் மேற்பட்ட திருக்கண்களில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.