search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோமாதா
    X
    கோமாதா

    கோமாதா.... குலமாதா...

    வேதகாலம் தொடங்கி, இன்று வரை கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் பெருமையையும், பசுவைப் பராமரிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தாத நூல்களோ சமயங்களோ கிடையாது.
    பசுவைப் போற்றியவர்கள், பராமரித்தவர்கள், காப்பாற்றியவர்கள் அடைந்த நன்மைகளுக்கு நம் புராணங்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன. பசுவை வெறுமனே மாடு என்று அழைக்காமல் கோமாதா, பசுத்தாய் எனப் போற்றுவது நம் வழக்கம். பெற்ற தாய்க்கு ஈடாக போற்றப்படுவது கோமாதா என்றழைக்கப்படும் பசுதான். இன்னும் சொல்லப் போனால் குழந்தைக்கு அமுது அளிப்பதில் பசு தாயைவிட மேலானதே.

    ஆன்மிக நோக்கில் மனிதனாகப் பிறப்பதற்கு ஓர் உயிர் எத்தனை புண்ணியம் செய்ய வேண்டுமோ, அதே அளவு புண்ணியம் பசுவாகப் பிறப்பதற்கும் செய்ய வேண்டும் என்று புராணங்கள் உரைக்கின்றன. பசு இருக்கும் இடத்தில் அன்னம், அழகு, ஐஸ்வர்யம், ஆரோக்கியம் அனைத்தும் வந்து சேர்ந்து விடும். சாணம் மெழுகிய நிலம், சாணிநீர் தெளித்த முற்றம், சாணப்பரிமணமான விபூதிப் புழக்கம், பால் கொதிக்கும் நறுமணம், தயிர் கடையும் மத்தோசை, தாக சாந்தி தரும் மோர் என்பன வீட்டிற்கு அனைத்து விதத்திலும் மகிழ்ச்சியைத் தரும்.

    பசு நமக்குப் பொருட்செல்வத்தையும் அருட்செல்வத்தையும் ஒருசேர அளிக்க வல்லது என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதனை உணர்ந்தே நமது முன்னோர்கள் ஒவ்வொருவரும் பசுவினைத் தங்கள் வீடுகளில் வளர்த்து வந்தனர். இது தவிர பசுக்கள் கூடுகின்ற இடங்களில் பசுக்களின் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர் தொட்டியை அமைத்தனர். அத்தொட்டிகளில் எந்நேரமும் நீர் நிரம்பியிருக்கும்படியும் செய்தார்கள்.

    கூடவே பசுக்களின் உடலில் ஈ, கொசுக்கள், உண்ணிகள் அமர்ந்து அவற்றிற்கு தீங்கு செய்யும் போது, பசுக்கள் தங்கள் உடலைச் சொறிந்து கொள்வதற்காக ஆவுரிஞ்சுக்கற்ககளையும் ஆங்காங்கே நட்டு வைத்தனர். ஒரு பசு குடும்பம் காக்கும். ஒன்பது பசு குலத்தைக் காக்கும் என்பது நம் முன்னோர்கள் சொன்ன மொழியாகும்.

    பசு கேட்டதையெல்லாம் கொடுப்பதால் காமதேனுவாக எல்லாருக்கும் பால் அளிப்பதால் கோமாதாவாக, மங்காத செல்வமுடையதால் மாடு எனும் பெயருடனும் (மாடு- செல்வம்) சிறப்பு பெற்றது. பசு வளர்ப்பது பூர்வஜென்மப் புண்ணியமாகும். திருமந்திரத்தில் இறைவனுக்கு ஒருபச்சிலை சாற்றுவது, உண்ணும் உணவில் ஒருபிடி உணவு தானம் செய்வது, பசுமாட்டுக்கு ஒரு பிடி புல் கொடுப் பது, பிறரிடம் இனிமையாக பைசுவது ஆகிய நான்கும் தர்மமாக கூறப்பட்டுள்ளது.

    பசுவிற்கு ஒரு பிடி புல் கொடுப்பதே தர்மம் என்றால் அந்த பசுவை வளர்த்துப் பைணி காப்பது எந்த அளவிற்கு புண்ணியத்தை கொடுக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். குழந்தை இல்லாதவர்கள் பசு வளர்த்து சேவை செய்தால் உடனடியாக குழந்தை பாக்கியம் உண்டாகும். தீராத நோய் நொடிகளுக்கு பசுஞ்சாணத் திருநீறு மருந்தாகும். குடும்பப் பீடை உள்ள இடங்களில் புண்ணிய அர்ச்சனை செய்து பசுமாட்டை உள்ளே வரவழைத்து பூஜை செய்தால் தோஷங்கள் விலகும்.

    திருமணமாகாதவர்கள் பசுவை வெள்ளிக்கிழமை தோறும் மூன்று முறை வலம் வந்து வழிபாடு செய்தால் தோஷம் விலகித் திருமணமாகும். நோயாளிகள் ஒரே பசுமாட்டின் பாலை தண்ணீர் கலக்காமல் அருந்தினால் நோய் நீங்கும்.

    இதனால்தான் இந்து மதம் வேறு எதற்கும் அளிக்காத ஒரு தனிப் பெருமையை பசுமாட்டிற்கு மட்டும் அளித்து வந்திருக்கிறது. பசுவை, வெறுமனே மாடு என்று விஷயம் தெரிந்தவர்கள் அழைக்க மாட்டார்கள். அதற்கு பதில் பசுவை, பசுத்தாய், கோமாதா என்றே அழைப்பார்கள். மிகச்சிறிய ஆலம் விதை பிரம்மாண்டமான ஆலமரத்தின் தன்மைகளை உள்ளடக்கியிருப்பது போல ஒவ்வொரு பசுவும் அனைத்து தேவரின் ஒரு வடிவாகும்.

    எல்லோருக்கும் தங்கள் வீட்டிலேயே பசு வழிபாடு செய்ய இயலாது. எனவேதான் ஒவ்வொரு ஆலயத்திலும் பசுத்தொழுவம் அமைத்து அன்றாடம் கோபூஜை நடத்தும் மரபு ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆலயத்திலும் கோ சாலை (பசு மடம்) இருந்தால் மக்கள் அனைவரும் பசு பராமரிப்பிலும், பசு வழிபாட்டிலும் கலந்து கொள்ள முடியும்.

    தினமும் பசு மடத்தில் விரிவான பூஜை செய்ய இயலாவிட்டாலும் வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்வது மேன்மை. அதோடு முக்கிய நாட்களில் அல்லது எல்லோரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ள நாட்களில், பெரிய அளவில் 108 கோ பூஜை, 1008 கோ பூஜை செய்யலாம். பசு மாடுகளை சந்தனம், குங்குமம் போன்றவற்றால் அலங் கரித்து, எல்லா மந்திரங்களும் கூறி, மலர்களால் அர்ச்சித்து, தூப, தீப நிவேதனங்களால் ஆராதிப்பது ஒரு முறை. வீட்டில் கோமாதாவின் படத்தை வைத்து வழிபாடு செய்வதும் இந்த வகையிலேயே அடங்கும்.

    பசு உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம்.  எனவே கோமாதா பூஜை செய்யும் போது, முன்நெற்றி மற்றும் வால் பகுதியில் சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்து வழிபட வேண்டும். பசுவின் சாணமும் லட்சுமி அம்சமாகும். எனவேதான் அதிகாலையில் சாணத்தை வீட்டு வாசலில் தெளிக்கிறார்கள். பசுவுக்கு பூஜை செய்வது பரராசக்திக்கு பூஜை செய்வதற்குச் சமமாகும்.
    Next Story
    ×