search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ததை படத்தில் காணலாம்.
    X
    திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ததை படத்தில் காணலாம்.

    பெரியகோவிலில் பெருவுடையார்-பெரியநாயகி அம்மன் திருக்கல்யாணம்

    தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார்- பெரியநாயகி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதோடு, கட்டிடக்கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளை கடந்து விட்டது.

    விரைவில் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்த கோவிலில் நேற்று மாலை பெருவுடையார்-பெரியநாயகி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

    முன்னதாக திருக் கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த பெண்கள் பழங்கள், குங்குமம், மஞ்சள், திருமாங்கல்ய கயிறு, வளையல், சீப்பு, குங்குமசிமிழ், கண்ணாடி, ரிப்பன், இனிப்புகள், பூ, வெற்றிலை, சீவல், ஜாக்கெட் பிட் போன்ற சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்தனர்.

    அவர்கள் நால்வர் பக்கத்தில் உள்ள சொக்கநாதர் சன்னதியில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு நடராஜர் சன்னதி முன் உள்ள மண்டபத்தை வந்தடைந்தனர். பின்னர் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் செல்வம், சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×