search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆனி திருமஞ்சன விழாவில் சிதம்பரம் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆனந்த நடனமாடிய காட்சி.
    X
    ஆனி திருமஞ்சன விழாவில் சிதம்பரம் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆனந்த நடனமாடிய காட்சி.

    சிதம்பரம் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆனந்த நடனமாடி தரிசனம்

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் ஆனந்த நடனமாடி அளித்த தரிசனத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திபரவசத்துடன் கண்டுகளித்தனர்.
    பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குவது கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில். உலக புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இக்கோவிலில் ஆனந்த நடராஜருக்கு ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    இதில் ஆனி, மார்கழி மாதம் நடைபெறும் மகாஅபிஷேகம் சிறப்பு வாய்ந்தவையா கும். ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார்.

    மறுநாள் ஆயிரங்கால் மண்டபம் என்னும் ராஜசபையில் மூலவர் ஆனந்த நடராஜர், அம்பாளுடன் எழுந்தருள்வார். அங்கு அவருக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கடந்த 3-ந் தேதி இரவு தெருவடைச்சான் உற்சவமும், நேற்று முன்தினம் தேரோட்டமும் வெகுவிமரிசையாக நடைபெற்றது.இதில் மூலவராகிய ஆனந்த நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி தேரில் எழுந்தருள பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலைக்கு வந்தவுடன் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. ஆனி திருமஞ்சன விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தரிசனவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் நடராஜருக்கும், சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது.

    தரிசன விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.

    தொடர்ந்து சாமிக்கு சித் சபையில் ரகசிய பூஜை நடந்தது. பின்னர், பகல் 2 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்ட பஞ்சமூர்த்திகள் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து 3.05 மணிக்கு கோவிலின் உள்ளே வந்தடைந்தனர். அங்கு, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள நடனப்பந்தல் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    இதையடுத்து, சித்சபையில் மண்டகப்படி பிரசாத படையல் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர், மதியம் 4.20 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் மூலவர் சன்னதிக்கு செல்லும் மகா தரிசன நிகழ்வு நடந்தது. அப்போது, நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் முன்னும் பின்னும் மூன்று முறை ஆனந்த நடனமாடியபடி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர். இந்த கண்கொள்ளா காட்சியை கண்ட அங்கு கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய, சிவாய நம என்ற பக்தி கோஷங்களை விண் அதிர எழுப்பியவாறு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர். மேலும், ஆனி திருமஞ்சன விழாவையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தரிசன விழாவையொட்டி பல்வேறு அமைப்பினர், சங்கத்தினர் சார்பில் பக்தர்களுக்கு நீர்,மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. சிதம்பரம் நகராட்சி சார்பில் நான்கு வீதிகளிலும் குடிநீர், கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தது. 
    Next Story
    ×